பல்வேறு கரைசல்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான ஒரு புதிய முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள். சிலவகை பாசிகள், நீர்க்கரைசல் களில் இருந்து தங்க அணுக்களை உட் கவருகின்றன என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. இருந்தாலும் இயற்கை நீர், தொழிற்சாலைக் கழிவுநீர், கைவிடப்பட்ட சுரங்கக் குப்பைகள் ஆகியவற்றில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க பாசிகளைப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அந்த ஆய்வாளர்கள் நிமெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். முன்னொரு காலத்தில் அந்த மாநிலத்தில் பெருமளவு தங்கம் இருப்பதாகத் தெரியவந்தபோது தங்க வேட்டைக்காக மக்கள் மந்தை மந்தையாகப் படையெடுத்தனர். அவர்களால் தங்கம் எடுக்கப்பட்டு, பின் கைவிடப்பட்ட பல சுரங்கங்கள் இன்று அப் பகுதியில் உள்ளன. அங்கு தண்ணீரில் கரைந்திருக்கும் தங்கத்தை பாசியைப் பயன்படுத்திப் பிரித்தெடுப்பது லாபகரமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.