Sunday, December 19, 2010

பைசா கோபுரம் சாய்விலிருந்து தடுத்து நிறுத்தப்படுகிறது



உலக அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம், வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது.

 மேலும் மத்திய தரை கடலிலிருந்து வரும் உப்புக்காற்றும் மழைகாலங்களில் ஏற்படும் மண் அரிப்பும் கேட்டினை அதிகப்படுத்தி வருகின்றன. கோபுரம் சரிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் இந்த கோபுரத்தை பாதுகாக்கும் பணியை கடந்த 1989 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. சுமார் 6 மில்லியன் பவுண்டு செலவில் கோபுரம் சாய்விலிருந்து மீட்கப்படுகிறது. கோபுரத்திற்கடியில் சேர்ந்துள்ள மண் மற்றும் கழிவுப்பொருட்களை லேசர், உளி மற்றும் சிறிய வகை ஊசிகளை பயன்படுத்தி நீக்கி வருகின்றனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 5.5 டிகிரி சாய்ந்திருந்த கோபுரம் மீட்கப்பட்டு தற்போது 3.9 டிகிரி சாய்வு நிலைக்கு நேர் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி இன்னும் 200 வருடங்களுக்கு போதுமானது என்று இதன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொறியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF