கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.
கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம்.
நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம். நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.
நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.