இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஐயாயிரம் ரூபா நோட்டுகள் அச்சிடப்படவுள்ளன. அதேநேரம் தற்போது புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை அச்சிடுவது நிறுத்தப்படவுள்ளன. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. |
இலங்கையின் நாளாந்தம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்திற்கொண்டு குறைந்த பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய பணத்தை காவி செல்வது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற காரணத்துக்காகவே ஐயாயிரம் ரூபா அச்சிடப்பட்டு, இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் வைர விழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 1950.08.28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி 2010.08.28 ஆம் திகதியன்று 60 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தமையைக் குறிக்கும் வகையிலேயே இந்த நாணயக் குற்றி வெளியிடப்படுகின்றது. பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதான காரியாலயத்திலும் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அதன் கிளை அலுவலகங்களிலும் இந்த நாணயக் குற்றியைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவிததுள்ளது. |