Thursday, December 23, 2010

தென்கொரியா - வடகொரியா போர் ஒத்திகை துவங்கியதால் உலக நாடுகள் பதட்டம்


மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைத்திருந்த போர் ஒத்திகையை, தென்கொரியா நேற்று மீண்டும் துவக்கியது. இதையடுத்து, இரு கொரிய நாடுகளும் போருக்குத் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தைத் தணிக்கும் முயற்சியில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
வடகொரியாவின் கடல் எல்லைக்கருகில் உள்ள இயான்பியாங் தீவில், கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை போர் ஒத்திகை நடத்தப் போவதாக தென்கொரியா அறிவித்திருந்தது. சீனாவும், ரஷ்யாவும் இதை எதிர்த்தன. அதேநேரம், மோசமான வானிலை காரணமாக அந்தப் போர் ஒத்திகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இயான்பியாங் தீவில் திட்டமிட்டபடி தனது போர் ஒத்திகையை தென்கொரியா துவக்கியுள்ளது.
இயான்பியாங் தீவில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பீரங்கிப் பயிற்சி மற்றும் எப்.15 ஜெட் ரக போர் விமானப் பயிற்சிகள் அத்தீவில் மேற்கொள்ளப்பட்டன. தென்கொரியாவின் இந்த பயிற்சியை அடுத்து வடகொரியா தனது போர் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. எந்நேரமும் வடகொரியா பதிலடி கொடுக்கலாம் என்பதால், வடகொரியா எல்லையை ஒட்டி வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி தென்கொரியா உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது வழக்கமான பயிற்சி தான், போர் ஒத்திகை அல்ல என்று தென்கொரியா விளக்கம் அளித்துள்ளது.
ஐ.நா., கூட்டம் தோல்வி: இந்நிலையில், ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., தலைமையகத்தில் நடந்த பாதுகாப்புக் கவுன்சிலின் அவசர ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. "வடகொரியா கடந்த நவம்பர் 23ம் தேதி நடத்திய தாக்குதல், 1953ல் போடப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை மீறி நடந்த செயல்' என்று குறிப்பிடப்பட்ட ஐ.நா.,வின் ஆவணம் ஒன்றின் பிரதிகள், கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளிடம் அளிக்கப்பட்டன.
ஆனால், அதை ஏற்காத உறுப்பு நாடுகள் இரு அணியாகப் பிரிந்து வாதிட்டதால், எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. ஒட்டுமொத்த பழியையும் வடகொரியா மீது போடுவதை சீனாவும், ரஷ்யாவும் எதிர்த்தன. போர் நடந்தால், தென்கொரியாவுக்கு ஆதரவளிப்போம் என்று அமெரிக்காவும், ஜப்பானும் உறுதியாகக் கூறியுள்ளன.
அமெரிக்காவின் சமரச முயற்சி
இந்நிலையில், அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தின் கவர்னர் பில் ரிச்சர்ட்சன், சிறப்புத் தூதராக கடந்த ஐந்து நாட்களாக வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆறு நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்த பேச்சு வார்த்தை நடந்தது. அதில், ரிச்சர்ட்சன் முன்வைத்த சில கோரிக்கைகளை வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, வடகொரியா, அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டுகிறதா, இல்லையா என்பதை, ஐ.நா., பிரதிநிதிகள் நேரில் பரிசோதனையிடுவர். அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான 12 ஆயிரம் புளூட்டோனியம் கம்பிகளை வடகொரியா, தென்கொரியாவிடம் விற்று விட வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இரு கொரிய நாடுகள் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் ராணுவக் கமிஷன் அமைக்கப்படும். இரு கொரிய நாடுகளின் ராணுவமும் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி தொடர்பு உருவாக்கப்படும். இந்தக் கோரிக்கைகளை வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளது, மிக அபாயகரமான போர்ச் சூழலில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF