Sunday, December 19, 2010

போர் குற்றத்தில் ஆதாரத்தை பார்வையிட ஐ.நா. நிபுணர்கள் குழு கொழும்பு வர அனுமதி



இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான புகார் மீது அந்நாட்டு அரசு நியமித்த விசாரணை கமிஷன் திரட்டிய ஆதாரங்களை பார்வையிட கொழும்பு வர லாம் என ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் & ராணுவம் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. கடைசி கட்ட போரின்போது குடியிருப்பு பகுதிகள்  மீது ராணுவத்தினர் ஏவுகணைகள் வீசியதில் 7,000 பேர் வரை கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. 

எனவே, இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த 3 நபர் குழுவை கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்தார். 

அதை கடுமையாக எதிர்த்த இலங்கை அரசு, ‘இது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல்’ என்று கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க முடி யாது என்று கூறியது.போரின்போது ராணுவத்தினரின் அத்துமீறல் இருந்ததா என நாங்களே விசாரிப்போம் என்று கூறி ஒரு குழுவை இலங்கை அரசு நியமித்தது. இந்த நிலையில், போரின் போது  பிடிபட்ட கைதிகள் சிலரையும், பெண் நிருபர் ஒருவரையும் கொடூரமான முறையில் ராணுவத்தினர் கொன்ற வீடியோ காட்சிகள் இங்கிலாந்தின் சேனல் 4 டிவியில் கடந்த மாதம்  ஒளிபரப்பானது.

இதையடுத்து, இலங்கைக்கு சென்று போர் குற்ற விசாரணை நடத்துமாறு ஐ.நா.வுக்கு மேலும் கோரிக்கைகள் குவிந்தன. மனித உரிமை அமைப்பு (எச்ஆர்டபிள்யூ), சர்வதேச  பொது மன்னிப்பு அமைப்பு (ஆம்னிஸ்டி இன்டர்நேஷனல்) ஆகியவை ஐ.நா.வை வற்புறுத்தின. இலங்கையில் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து  விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கில்லாரி கிளிண்டனிடம் அந்த நாட்டின் இரு சபைகளையும் சேர்ந்த 47 எம்.பி.க்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளும் வகையில், ஐ.நா. குழு கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி இலங்கை அரசின் செய்தி துறை அமைச்சர் கெகிலியா ரம்புக்வல்லா நேற்று கூறுகையில், ‘‘இறுதிக் கட்ட போரின் போது ராணுவத்தினரின் அத்துமீறல் மீதான புகார்  குறித்து இலங்கை அரசின் குழு விசாரணையை முடித்துள்ளது.

அந்த குழுவிடம் உள்ள ஆதாரங்களை பார்வையிட ஐ.நா. குழு வரலாம் என அதிபர் மகிந்த ராஜபக்சே அழைத்துள்ளார். இது ஐ.நா.வுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும், ஐ.நா. குழு தனியாக விசாரணை நடத்த அனுமதியில்லை’’ என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF