Thursday, December 30, 2010

இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து


குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள
குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது.

ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.

"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர்.

இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF