
காலையில் எழும்போது தேநீருக்கு பதில் தேனும், சுடுநீரும், காலை உணவாக பாலில் ஊறிய அவல், காரட் மற்றும் துளசி, மதிய உணவாக இஞ்சி சூப்புடன், ஆவியில் வெந்த
பச்சை காய்கறிகளுடன் சுட்ட சப்பாத்தி மற்றும் பருப்புக்கூட்டு, மாலையில் பாகற்காய் சூப் அல்லது எலுமிச்சை சர்பத், இரவில் முளைவிட்ட தானியங்களுடன் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாதுளை, அன்னாசி, திராட்சை பழக்கலவைகள் என, ஒருநாள் உணவில் இடையிடையே போதுமான அளவு, தண்ணீருடன் கூடிய இயற்கையான வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கக் கூடியது தான்.
ஆனால், பலவகையான பணி, மாறுபட்ட பழக்க வழக்கம், இயற்கை உணவு கிடைப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் வேகவைத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளின் ஆதிக்கம், நம் வாழ்க்கை சூழலை மாற்றியமைத்து விட்டது. இதனால், பல உணவுகள் தன் இயற்கை குணத்தை இழந்து விடுகின்றன. ஆனால், எளிதில் கிடைக்கக்கூடிய சில பழங்களில் கூட ஏராளமான இயற்கை ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.
"சிட்ரஸ் மேக்சிமா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட, "ரூட்டேசியே' குடும்பத்தைச் சார்ந்த சுளைகள் உள்ள, பம்ப்ளிமாஸ் பழம் மட்டுமின்றி அனைத்து பாகங்களும் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளன. பழச்சுளைகள் இதயத்தை வலுப்படுத்தி உடல் வீக்கத்தை குறைக்கும். இலைகள் நரம்பு மண்டலம் மற்றும் ரத்தக்குழாய் களை பாதுகாக்கும்.
வேர் மற்றும் பட்டைகளிலுள்ள கவமாரின்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பல வகையான ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையன. பம்ப்ளிமாஸ் பழங்களை கழுவி, சாறெடுத்து, எட்டு பங்கு நீருடன் கலந்து, தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்துவர, உடல் குளிர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கால் வீக்கம் வற்றும். எலுமிச்சம் பழத்தை ஜூஸ், ஊறுகாய், சாதம் செய்து சாப்பிடுவதை போல் பம்ப்ளிமாஸ் பழத்தையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பருமனும் குறையும்.