Monday, December 13, 2010

சத்திரசிகிச்சையால் உயிர் பிழைத்த எட்டு அவயவங்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!


நேபாளத்தில் ஒரு வருடத்துக்கு முன் பிறந்தது தான் இந்த அதிசயக் குழந்தை. பெயர் றிஷாப் கிமிறே. இந்த குழந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவரும் உள்ளனர்.

இந்தக் குழந்தைப் பிறந்தது முதல் இதன் வயிற்றுப் பகுதியோடு ஒட்டியதாக மேலதிகமாக இரண்டு கால்களும் இரண்டு கைகளும் காணப்பட்டன.

ஒட்டிப் பிறக்கும் இன்னொரு குழந்தைக்கான உறுப்புக்களாகத் தான் இவை தென்பட்டன. இந்த மேலதிக உறுப்புக்கள் காரணமாக குழந்தையின் வழமையான இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதன் உயிருக்கும் ஆபத்து ஏறபடும் நிலை தோன்றியது.

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இந்த மேலதிக உறுப்புக்களை அகற்றவேண்டும் என வைத்தியர்கள் தீர்மானித்தனர். இதற்கென இவ்வாண்டு ஆரம்பப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியளித்து. இப்போது குழந்தை தப்பியுள்ளது.

இவ்வாறான இயல்புக்கு மாறான பிரச்சினைகளோடு வருடாந்தம் சுமார் 200000 குழந்தைகள் பிறப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கருவில் இரட்டைக் குழந்தைகள் உருவாகின்ற போது அவை சரியான முறையில் பிரிவடையாமல், குறைந்த வளரியடைகின்ற கரு பூரண வளர்ச்சியடையும் பிரிவில் ஒட்டிக் கொள்கின்ற போதே இவ்வாறான மேலதிக அவயவங்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன என்று விஞ்ஞானம் விளக்கம் கூறுகின்றது.

ஆனால் இந்தியாவில் இன்னமும் இந்த மேலதிக உறுப்புக்களோடு வாழும் ஒரு பிள்ளையை அங்குள்ளவர்கள் கடவுளின் அவதாரமாகக் கருதுகின்றனர். நேபாளக் குழந்தை றிஷாப் கிமிறேக்கு சரியான நேரத்தில் சத்திர சிகிச்சை செய்திருக்காவிட்டால் நிச்சயம் அது மரணமடைந்திருக்கும் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் சிறுவர் வைத்திய சாலையின் டொக்டர்.ஜேம்ஸ் ஸ்டீன் தான் இந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர்.

மென்டங் கிட்ஸ் இன்டர்நேஷனல் என்ற தர்ம நிதியம்தான் இதற்கான செலவுகளைப் பொறுப்பேற்றது. இந்த குழந்தையைப் பார்த்துப் பார்த்து தினசரி தான் கண்ணீர் வடித்ததாக அதன் தாய் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF