Monday, December 27, 2010

ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு(ஹால்புரூக் மரணம் அடைந்தார்)


ஒரு ஐம்பது ஆண்டு காலம் உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரத்த வெறியாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதில் முனைப்பு டன் பணியாற்றிய அமெரிக்க அரசின் விசுவாசமிக்க தூதர் இவர்.
இவருக்கு மேற்குலக முற்போக்கு பத்திரிகையாளர்கள் வைத்த பெயர் ‘புல்டோசர்’. இப்பூவுலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட, விடுதலைக்கு போராடிய மக்களை மண்ணோடு மண்ணாக அழித்தொழித்ததில் ஒரு முக்கிய அதிகாரியாக சுற்றிச் சுழன்றவர் என்பதாலேயே இந்தப் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
1962ம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஒரு அதிகாரியாக பணி சேர்ந்த போது இவருக்கு வயது 22. சேர்ந்தவுடனேயே வியட்நாமில் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டார். பின்நாட்களில் அமெரிக்கப் படையினரை ஓட ஓட விரட்டியடித்த வீர வியட்நாமை, அமெரிக்கா கொடூரமாக தாக்கி குதறிக் கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமின் மேகாங் டெல்டா பகுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உளவுப்பிரிவு அதிகாரியாக பணியேற்றார். அப்பகுதி முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சூறையாடியதில் ஹால்புரூக் முன்னணி பங்கு வகித்தார். இதைத் தொடர்ந்து சிஐஏ மூலம் நடத்தப்பட்ட ஆப்ரேசன் பீனிக்ஸ் என்ற கொலைவெறித் தாக்குதல்களில் வியட்நாம் விடுதலைப்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான வியட்நாமிய மக்கள் ரத்தவெள்ளத்தில் வீழ்த்தப்பட்டனர். இதன் பின்னர் வியட்நாமின் சைகோன் நகரில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தில் தூதர்களாக பணிபுரிந்த மேக்ஸ்வல் டைலர் மற்றும் ஹென்றி காபோர்ட் ஆகியோரின் விசுவாசமிக்க ஊழியராக பணியாற்றிய ஹால்ப்ரூக், வியட்நாமின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்தார்.
வியட்நாமில் பணி முடித்தபின் 1970களில் கிழக்கு தைமூரில் தூதரகப் பணியை ஏற்றார். அச்சமயம் புதிதாக விடுதலையடைந்திருந்த கிழக்கு தைமூர் மீது இந்தோனேசிய ராணுவ சர் வாதிகாரி சுகார்த்தோ தாக்குதல் நடத் தினார். இந்த தாக்குதலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து தைமூர் மக்களில் மூன்றில் ஒரு பகுதி யினரை கொன்றுகுவிக்க காரணமாக இருந்தவர் ஹால்ப்ரூக்.
தைமூரில் வெறியாட்டத்தைத் தொடர்ந்து தென்கொரியாவில் தூதரகப் பணியேற்ற ஹால்ப்ரூக், 1980ல் அந்நாட்டில் குவாங்ஜூ அரசுக்கு எதிராக நடைபெற்ற மகத்தான மக்கள் எழுச்சியை ஒடுக்குவதில் அந்த அரசின் ராணுவத்திற்கு உறுதுணையாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். கிளர்ச்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தென் கொரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் ஹால்ப்ரூக்கின் மிக முக்கியமான பணி - இன்றைக்கும் அமெரிக்க நிர்வாகத்தால் புகழப்படுகிற - யுகோஸ்லேவிய பிரதேசத்தில் ஆற்றிய தூதரகப் பணி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரம் செறிந்த கொரில்லா போர் நடத்தி, பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து உதயமான சோசலிச யுகோஸ்லேவியாவை குறிவைத்து தாக்கி பல துண்டுகளாக உடைத்து நொறுக்கி எறிந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். 1990களில் யுகோஸ்லேவியா மீது வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்களை அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்டது. இப்பிராந்தியத்தில் உள்ள செர்பியாவின் கொசோவா மாகாணத்தில் இருக்கும் அல்பேனிய மக்களை பாதுகாக்கப்போவதாக கூறி, 1999ல் யுகோஸ் லேவியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மிகப்பெரும் போரை நடத்தின. பில்கிளிண்டனின் ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தப் போர் 78 நாட்கள் நீடித்தது. யுகோஸ்லேவியா தலைநகர் பெல்கிரேடு எரிந்தது. ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் ஆட்சி வீழ்த்தப்பட்டது. நாட்டை விட்டே துரத்தப்பட்டார் மிலோசெவிக். பின்னர் அவர் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே மரணமடைந்தார்.
இந்தப் போரின்போது பல்லாயிரக்கணக்கான யுகோஸ்லேவிய மக்கள் கொல்லப்பட்டனர். எந்த அல்பேனிய மக்களை பாதுகாக்கப் போவதாக கூறினார்களோ, அந்த மக்களையும் கொன்று குவித்தது நேட்டோ படை. கொசோவாவில் நேட்டோ படையின் ஆதரவோடு ஆயிரக்கணக்கான செர்பியர்கள், ரோமர்கள், யூதர்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதற்கு முன்பும் போஸ்னியாவில், ஹெர்ஜேகோவினாவில், செர்பியாவில் என பால்கன் குடியரசு நாடுகள் அனைத்திலும் உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டு, அப்பிரதேசம் முழுவதும் எரியச் செய்தார்கள். இந்த ஒட்டுமொத்த கொடிய நிகழ்வுகளிலும் சூத்திரதாரியாக செயல்பட்டது ரிச்சர்ட் ஹால்ப்ரூக் என்ற அமெரிக்க தூதரே.
இந்த புல்டோசரின் மரணத்தைத்தான், அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர்ணித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF