Saturday, December 18, 2010

அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை



அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது ஏ.டி.எம். எந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருகிறது. அதே முறையில் தங்க கட்டிகளும் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஐக்கிய அரபு நாடுகளின் ஒன்றான அபுதாபியில் உள்ள எமிரேட் ஓட்டலில் தங்கம் விற்பனை செய்யும் ஏ.எடி.எம். எந்திரத்தை நிறுவியது. கடந்த மே மாதம் நிறுவப்பட்ட இந்த எந்திரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் இது தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ராடன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. “சென்டர் மால் ஒர்க்ஸ்” கட்டித்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. அவற்றில் பணம் அல்லது கிரீடிட் கார்டை சொருகினால் போதும் அதற்கு தகுந்த எடையில் சீலுடன் கூடிய தங்க கட்டிகள் மற்றும் தங்க காசுகளை எந்திரம் வெளியேற்றும். இந்த எந்திரங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை. 320 வகையான தங்க கட்டிகள் மற்றும் காசுகள் இதில் வைக்கப்பட்டுள்ளன.

தங்கத்தின் விலை நிர்ணயம் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஏ.டி.எம். எந்திரத்தை அடுத்த ஆண்டு (2011) உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக ஜெர்மனி நிறுவன அதிகாரி தாமஸ் கெய்ஸ்லர் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF