Saturday, December 4, 2010

20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் வான்வெளியில் கண்டுபிடிப்பு



வாஷிங்டன்: விண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை தெரிவித்திருந்தனர். ஆனால், யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர் பீட்டர் வான் டோக்கும் தலைமையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி சார்லி கான்ராய் இணைந்து நட்சத்திர கூட்டங்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். பால்வெளி பாதையில் நட்சத்திர கூட்டங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ படம் எடுத்து 2006ல் வெளியிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் பிரகாசமான நட்சத்திரங்கள் எண்ணிக்கையை வைத்து நட்சத்திர தொகுப்புகளை பீட்டர் தலைமையிலான குழு ஆராய்ந்தது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்ற கணக்கை அது தவிடுபொடியாக்கியது. அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

அதாவது, 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் வரக்கூடிய எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உலவிக் கொண்டிருப்பதாக பீட்டர் தெரிவித்துள்ளார். இதை ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ்டிலியன் என்று கூறுகின்றனர். அதாவது, 10,000 கோடியில் 3 லட்சம் மடங்குகள் செக்ஸ்டிலியன் என்று அழைக்கப்படுகிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF