Monday, June 27, 2011

இன்றைய செய்திகள்.

பயங்கரவாதிகளின் முகவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே இன்றுள்ள சவால்: ஜனாதிபதி மஹிந்த.

பல்வேறு குழப்பகரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் முகவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மாநாட்டின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுகொண்டதுடன், பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகளும்  இதில் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதிகளுக்கு மிகவும் நெருக்கமான முகவர்களால் முன்னெடுக்கப்படும் நாட்டை பாதிக்கும் செயற்பாடுகளில் இருந்து தேசத்தினை பாதுகாப்பதே தற்போதுள்ள முக்கியமான விடயம். அவர்களது முன்னெடுப்புக்கள் தற்போது சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளாக மாற்றம் பெற்றிருக்கின்னறன என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.கடந்த கால காயங்களை குணப்படுத்த நாடு முயற்சிக்கும் போது, அதன் மீது அனைத்து சாதகமான வழிகளிலும் அவர்கள் அழுத்தத்தினை பிரயோகிக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நாட்டின் கலாச்சாரத்தினையும் பாதுகாத்து, முழுநாட்டிலும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை பாதிப்புறச் செய்வதற்கு பயங்காரவாதிகளின் முகவர்கள் முனைவதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அலுவலகம் தீப்பற்றியது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற தீவிபத்தின் காரணமாக அமைச்சு அலுவலகத்தின் நான்காம் மாடி  முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.தீயின் அகோரம் காரணமாக தீயணைப்புப் படையின் மூன்று வண்டிகள் பயன்படுத்தப்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்தின் பின்பே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்தின் காரணமாக நான்காம் மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தின் தளபாடங்கள்,  முக்கியமான ஆவணங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் அறியப்படவில்லை.பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் ஏற்பட்ட தீ விபத்துக்குறித்து பொலிசார் விசேட விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அமெரிக்கா குற்றப்பத்திரம் தயாரித்தது: பஷில் ராஜபக்ஷ.
இலங்கைக்கு எதிராக சில உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக சதி செய்து வருவதாக கூறியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றையும்  தயாரித்திருந்ததாக கூறியுள்ளார்.எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இலங்கையில் தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர், வெளிநாட்டுச் சக்திகள் சிலவற்றின் உதவியுடன் நாட்டை சீர்குலைக்க ஒன்றுதிரண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
' சில அரச சார்பற்ற நிறுவன்களும் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. அச்சக்திகள் அடுத்தடுத்து சதிகளை மேற்கொண்டு வருகின்றன.தருஸ்மன் அறிக்கையின் பின்னர் ஒரு தடவை ராஜபக்ஷ குடும்பத்தை குறிப்பிட்டுக் காட்டி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றப்பத்திரமொன்றையும் தயாரித்தது' என அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்கு துரோகமிழைத்ததாகவும் ரணில்- பிரபா ஒப்பந்தம் என்ற பெயரில் பிரபலமான ஒப்பந்தமொன்றின் மூலம் 8 மாவட்டங்களை எல்.ரி.ரி.ஈயினருக்கு கொடுத்ததாகவும் பஷில் ராஜபக்ஷ கூறினார்.
கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் மகனது திருமணம் எதிர்வரும் 30 ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்காக நெதர்லாந்தில் இருந்து பாரிய இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூக்கள் தருவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்த திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த திருமணத்தில் உயர் விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளமையால் தற்போது முதலே ஹோட்டல் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் திருமண நிகழ்வு இடம்பெறும் போது ஹோட்டலில் இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.இந்தத் திருமணத்துக்காக நெதர்லாந்தில் இருந்து பாரிய இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூக்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இலங்கையின் விவசாய சட்டத்தின்கீழ் அனுமதியின்றி பூக்களை இறக்குமதி செய்யமுடியாது.எனினும் கோத்தபாயவின் மகனது திருமணத்துக்கான இந்த ரோஜாப்பூக்கள் முன் அனுமதியின்றியே தருவிக்கப்பட்டுள்ளன.இதேவேளை இந்தத் திருமணம் இலங்கை வரலாற்றில் சிறப்பான திருமணமாக அமையவேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச தமது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய அபயாம் - இந்தியன் எக்ஸ்பிரஸ்.
இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.பொதுமக்கள் முன்னிலையில் ரிசானாவின் தலை துண்டிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.2005ம் மே மாதம் ரிசானா நாபீக் நான்கு மாத குழந்தை ஒன்றை படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், தாம் இந்தக் குற்றச் செயலை மேற்கொள்ளவில்லை எனவும், குழந்தையை பாதுகாப்பதற்கு முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பெண் பணியாளர்கள் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் 18 வயதுக்கும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ரிசானாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மனிதாபிமானம் அற்றது என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதேவேளை, ரீசானாவிற்கு சவூதி அரேபிய மன்னர் மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், பெற்றோரில் ஒருவர் மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சவூதி அரேபிய சட்டத்தின் படி உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே தண்டனையிலிருந்து மீள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.ரிசானாவை விடுதலை செய்வதற்காக நட்டஈட்டுத் தொகையை வழங்கத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் இலங்கைக்கு துரோகம் செய்தார் ரணில் - பசில்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து, இலங்கைக்கு துரோகம் செய்தவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்று அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
ரணில்-பிரபா ஒப்பந்தம் என்ற பெயரில் 8 மாவட்டங்களை விடுதலைப் புலிகள் வசம் ரணில் கொடுத்திருந்தார். அதை நாங்கள்தான் மீட்டோம்.

ராஜபக்ச குடும்பத்தை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றப்பத்திரிகை ஒன்றை தயாரித்துள்ளது.
இவர்களின் நோக்கம் ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுதானே தவிர, தமிழர்களுக்கு உரிமைகள் பெறுவதல்ல என்றார்.


இலங்கையின் கல்வித்துறையை சீரழிப்பதில் அரசாங்கம் சூழ்ச்சி: அனுர குமார திசாநாயக்க.


இலங்கையின் கல்வித்துறையை சீரழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.நேற்று மலையகத்தின் ஹட்டனில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பி. கட்சியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கல்வித்துறையை முன்னேற்றி, ஆசியாவின் கல்வித்துறை மையமாக இலங்கையை மாற்றுவதாக வாக்களித்தே கல்வித்துறை ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.ஆனால் இன்றைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக கல்வித்துறை நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழக கல்விக்கும் அதே நிலைதான். வெளிநாடுளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து கல்வித்துறையை சீரழிக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இன்றைய நிலையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது தவிர கல்வித்துறைக்கு அரசாங்கம் எந்தவொரு பங்களிப்பையும் வழங்குவதில்லை. அப்படியான நி்லையில் கல்வியறிவு கொண்ட சமுதாயமொன்றை நம் நாட்டில் உருவாக்குவது என்பது கனவாகவே போய் விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கை தொடர்பில் சர்வதேசத்தை அதிருப்தி கொள்ளச் செய்துள்ளது: கரு ஜயசூரிய.
அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான அதிருப்தி வலுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கம்பஹா அத்தனகல்லைப் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ஐ.தே.க. பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கத்துக்கு நாட்டுக்கு நன்மை தரும் விதமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆற்றல் அறவே கிடையாது. அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
மறு புறத்தில் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கத்துக்கு நற்பெயர் இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் பரவலான அதிருப்தியொன்றையே கொண்டுள்ளன.எங்கள் நாட்டைப் பொறுத்தவரை அணிசேராக் கொள்கையொன்றையே நாங்கள் வெளியுறவுக் கொள்கையாக வைத்திருக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் அதனை உதாசீனம் செய்து நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கி, சர்வதேசத்தின் அதிருப்தியை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்: கிறிஸ்டோபர் ஹைன்ஸ்.
லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐ.நா. சபையின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசாரணை அதிகாரி கிறிஸ்டோபர் ஹைன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான லக்பிம நியூஸ் இணையத்தளத்துக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.லிபியா தொடர்பிலான சர்வதேசத் தலையீடு ஒன்று இருப்பது போன்று இலங்கை மீதும் சர்வதேசத் தலையீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது.
திட்டமிடப்பட்ட ரீதியில் வேண்டுமென்றே சிவிலியன்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்திருப்பதன் காரணமாக இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதற்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன.அவ்வாறு நடக்கவில்லை என்று இலங்கை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு சாட்சியங்களும், தடயங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய பிரேசிலுக்கான தூதுவராக நியமனம்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திசாநாயக்க அதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதற்கான முன்மொழிவை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தற்போது அவரது நியமனம் தொடர்பான விடயம் பாராளுமன்றத்தின் உயர்பதவிகளுக்கான குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் இலங்கை ராஜதந்திர சேவையிலிந்து தெரிவு செய்யப்பட்டவர்களை விட வெளியிலிருந்து நியமனம் செய்யப்பட்டவர்களே அதிகம் என்ற குற்றச்சாட்டு பலமாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே மஹிந்த பாலசூரியவும் தூதுவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்துக்குள் மட்டும் சுமார் பதினைந்து வரையான படை அதிகாரிகள் ராஜதந்திர சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கையடக்க தொலைபேசி பாவனைக் கட்டணம் குறைப்பு.

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன. தொலைத் தோடர்பு சீராக்கல் ஆணைக் குழு இதற்கான தீர்மானத்தை எடுத்து உள்ளது. இத்தீர்மானத்தின்படி எந்தவொரு வலையமைப்பில் இருந்தும் இன்னொரு வலையமைப்புக்கு வெளிச் செல்கின்ற அழைப்புக்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 1.50 ரூபாய் அறவிடப்பட உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இக்கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது 2.00 ரூபாய் அறவிடப்படுகின்றது.

நக்கிள்ஸ் மலைத் தொடரில் தீ விபத்து! தீயணைப்பில் விமானப்படை.

இன்று காலை நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள காட்டில் தீயை அணைப்பதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இத் தீயை அணைப்பதற்கு விமானப்படையின் உதவியை கேட்டதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் அன்டி விஜய சூரிய தெரிவித்தார். சனிக்கிழமை இரவு நக்கிள்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 50 ஏக்கர் முற்றாக அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 15 மணித்தியாலங்களின் பின்னரே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மாலைதீவு இடையிலான பாரிய போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த கும்பல் கைது!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு குழுவினரை மாலைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு ஒபரேஷன் செலேனஜ் (Operation Challenge) என்ற பெயரில் முடுக்கிவிடப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமே இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து மாலைதீவிற்கு ஆகாயமார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டமை இந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவரென சந்தேகிக்கப்படும் இப்ராஹிம் சப்ராஸ் மற்றும் மூவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இக்குழுவினர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இப்போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் நாணயமாற்று முகவர் நிலைய ஒன்றின் உதவியின் ஊடாக பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலைதீவு பொலிஸார் சந்தேகநபர்கள் நால்வரையும் ஜூலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட தலிபான் தீவிரவாத கணவன் மனைவி!

பாகிஸ்தானில் உள்ள தெற்கு வசிரிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இப் பகுதியில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அங்கு பயிற்சி பெறும் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தற்போது தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தேரா இஸ் மாயில்கான் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று தலிபான் தீவிரவாதகிள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.பின்னர் தற்கொலை தாக்குதலிலும் ஈடுபட்டனர். அதில் 12 பொலிசார் உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்குதலில் தலிபான் தீவிரவாதியும், அவரது மனைவியும் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்தார்.

ஒரு செய்தி நிறுவனத்துக்கு டெலிபோனில் இதை அவர் தெரிவித்தார். பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டதற்கு பழிவாங்க இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இதுவரை நடந்த தற்கொலை தாக்குதல்களில் பெண்களை தலிபான்கள் பயன்படுத்தியது இல்லை.தற்போது தான் முதன் முறையாக ஒரு பெண் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் முல்தான் நகரில் உள்ள மற்றொரு பொலிஸ் நிலையம் மீது நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதில் 4 போலீசார் காயம் அடைந்தனர்.
தேம்ஸ் நதியின் மேல் நடந்து சாகசம் புரிந்த மாயாஜால நிபுணர்.
பிரிட்டனை சேர்ந்த பிரபல மாயாஜால நிபுணர் ஸ்டீவ் பிரையானே தேம்ஸ் நிதியின் மீது நடந்து சாகசம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.டைனமோ என்று அழைக்கப்படும் இவர் மிகச்சிறந்த மாயாஜால நிபுணராக அறியப்படுகிறார். பல்வேறு சாகசங்களை செய்து காட்டி வியப்பில் ஆழ்த்துவது இவரது வழக்கம்.மாயாஜால சாகசங்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள புகழ் பெற்ற தேம்ஸ் நதியில் அவர் தண்ணீர் மீது நடக்கும் சாகசத்தை நிகழ்த்தி காட்டினார்.

இதைப்பார்த்து பார்வையாளர்கள் பிரமித்து போயினர். பின்னர் அவர் படகில் வந்த காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். தண்ணீரில் நடந்து காட்டினாரா? அல்லது தண்ணீரில் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் காட்டினாரா? என்று தெரியாமல் அனைவரும் வியந்து போனார்கள்.

சீனாவில் பிரபல மனித உரிமை ஆர்வலர் விடுதலை.
சீனாவின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஹூ ஜியா மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். எதிர்காலத்தில் தாம் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் எனது பெற்றோர், எனது மனைவி மற்றும் எனது குழந்தை ஆகியோருக்காக நிறைய செய்ய வேண்டி உள்ளதை உணர்ந்தேன். எனது குடும்பத்தினருக்காக ஒன்றுமே செய்யவில்லை என நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
சீனாவின் நல்ல குடிமகனாக நிர்வாக முறையுடன் மோதல் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். அரசு அதிகாரத்தில் மக்களின் கௌரவ நிலை மீறப்படுகிறது.எனது பெற்றோருக்கு நான் சொல்வது எல்லாம் எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன் என்பது தான் என்று அந்த இளம் மனித உரிமை ஆர்வலர் உறுதி மிக்க குரலில் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை சீன நிர்வாகத்தினர் இவரை விடுதலை செய்தனர். சீன அரசுடன் சர்ச்சை ஏற்படுத்திய சீனக் கலைஞர் அய்வெய் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இவர் விடுதலை ஆகி உள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு முன்பாக சீனாவின் மனித உரிமைகள் குறித்து 37 வயது ஹூ தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினார். நாட்டில் பிரிவினையைத் தூண்டுவதாக சீன அரசு அவரை கைது செய்து மூன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தது.
உடலில் 150 குண்டுகள் புதைந்துள்ள நிலையில் வாழும் அதிசய மனிதன்.
இங்கிலாந்தின் டரம் கவுன்டியில் உள்ள பேர்வேஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோ கிளார்க்(33). இவரது முகம், கழுத்தில் அம்மை தழும்பு போல சில புள்ளிகள் இருக்கின்றன.இது என்ன என்று கேட்டால் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார். 2007ம் ஆண்டு டிசம்பர் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. வெளியே வந்தேன். முகவரி கேட்பது போல 2 பேர் நின்றிருந்தார்கள்.
திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்கள். படபடவென சுட்டார்கள். முகம், கழுத்து, மார்பு, முதுகு என சரமாரியாக குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் விழுந்தேன். பக்கத்து வீட்டுக்காரர் உடனே ஓடிவந்து என்னை அவரது வீட்டுக்குள் இழுத்துச் சென்று விட்டார்.அவர் வராவிட்டால் அப்போதே இறந்திருப்பேன். என்னை கொல்லும் திட்டத்துடன் வந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது. 5 பேர் இந்த வழக்கில் சிக்கினார்கள். பொலிஸ் விசாரணையில் ஒரு குழப்பம் நடந்து விட்டது.
குற்றவாளிகள் தரப்பு வக்கீல் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தி சில ஆவணங்களை சோதனை செய்தார்கள். மனித உரிமை மீறல் பிரச்னை எழுந்ததால் பொலிசார் புகார் கமிஷன் இப்போது இதை விசாரித்து வருகிறது.அந்த 5 பேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். உடல் வலியை தாங்கிக் கொள்வது பெரும் தண்டனை. மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு அதைவிட கொடுமை. உண்மையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து நான் தான் தண்டனை அனுபவித்து வருகிறேன்.
உடல் முழுவதும் ஊசி வைத்து குத்துவது போல இருக்கிறது. உடலுக்குள் நன்கு புதைந்திருப்பதால் ஓபரேஷன் செய்து எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். மொத்தம் 150 குண்டுகள் என் உடம்பில் இருக்கின்றன.இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில்,"வெளி பொருட்களை உடம்பு அதிக காலம் ஏற்றுக் கொள்ளாது. பல்வேறு பாதிப்புகள் வரலாம். முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது. கிளார்க் 25 ஆண்டுகள் முன்கூட்டியே இறந்துவிட வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு.
கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மற்றும் நான்கரார் மாகாணங்களில் இருந்து நேட்டோ படைகள் வாபஸ் ஆகி உள்ளன. அந்த இடங்களை நோக்கி பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதலை நடத்துவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆப்கானிஸ்தான் எல்லை அதிகாரிகள் கூறுகையில்,"பாகிஸ்தானிய தலிபான்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் ஊடுருவி உள்ளனர்" என்றும் தெரிவித்தனர்.சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெகரானில் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியிடம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தான் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் கர்சாய் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கன் நேட்டோ கமாண்டரிடம் கர்சாய் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.பாகிஸ்தான் தாக்குதலால் ஆப்கன் எல்லை பகுதியில் வசித்த 2 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் குடியிருப்பை விட்டு தப்பி ஓடி உள்ளனர் என ஆப்கன் அதிகாரிகள் கூறினர்.
அமைதி பேச்சு வார்த்தை குழுவில் கடாபி இடம்பெற மாட்டார்: ஆப்பிரிக்க ஒன்றியம் அறிவிப்பு.
போரால் உருக்குலைந்து போன லிபிய தேசம் குறித்த அமைதி பேச்சு வார்த்தை குழுவில் லிபிய தலைவர் மோமர் கடாபி இடம்பெற மாட்டார் என ஆப்பிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடாபி பங்கேற்காத நிலையில் லிபியா தரப்பில் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமைதிப் பேச்சு வார்த்தை குழுவில் கடாபி பங்கேற்க போவதில்லை என்ற முடிவை வரவேற்பதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் குறிப்பிட்ட விவகார கொமிட்டி வரவேற்று உள்ளது.தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியா ஒன்றியத்தின் சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்ட விவரம் குறித்து பத்திரிகைகள் கேட்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தும் தலைவர்களை ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறப்பு கொமிட்டி கடந்த 3 மாதத்தில் சந்தித்து உள்ளது. அதே போன்று கடாபியையும் உறுப்பினர்கள் சந்தித்தார்கள்.
லிபியாவில் நேட்டோ படைகள் நடவடிக்கையில் பொது மக்கள் பலியாவதை முக்கியமாக கவனிக்க வேண்டி உள்ளது என தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜாகப் சுமா கொமிட்டியில் தெரிவித்தார்.கடாபி ராணுவத்தினரும் போராட்டக்காரர்களும் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கொமிட்டி வலியுறுத்தியது. இந்த நிலையில் சனிக்கிழமை லிபியாவின் மேற்கு நகரமான காரயான் பகுதியில் நேட்டோ படைகள் தாக்கியதாக லிபிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.இந்த பகுதி லிபியா ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியாகும். நேட்டோ தாக்குதலில் சில நபர்கள் இறந்தனர் என்றும் பலர் காயம் அடைந்தனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு.
கடந்த 1980க்குப் பின் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின.
இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜீத் எஸ்ஸாடி தலைமையில் நடந்த இவ்வாய்வில் தெரியவந்துள்ளதாவது: கடந்த 1980ம் ஆண்டுகளில் வயது வந்தவர்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 கோடியே 30 லட்சமாக இருந்தது. 2009ல் இந்த எண்ணிக்கை 28 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது.தற்போது இது 34 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 கோடியே 80 லட்சம் பேர் இந்தியா மற்றும் சீனாவில் வசிப்பவர்கள். மூன்று கோடியே 60 லட்சம் பேர் ரஷ்யாவில் உள்ளனர். வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைவாக உள்ளது.உலகின் ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களையும் நீரிழிவு நோய் பாதிப்பது பொதுவானதாக உள்ளது. அதற்கு காரணம் இந்த நோய் வராமல் தடுக்க முடியாது என்பதே ஆகும்.
பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த 1000 தலிபான்கள் விடுதலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களின் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.அங்கு எப்போதும் பதட்ட நிலையின் பிடியிலேயே மக்கள் உள்ளனர். அவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மிக மோசமாக உள்ளது.
உலக நாடுகளில் மோசமாக பெண்கள் நடத்தப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மிகவும் வேதனைத்தரக்கூடிய வகையில் சட்ட நிர்வாகம் உள்ளது.இந்த நீதித்துறை அவலத்தை பயன்படுத்தி கொலை குற்றம் செய்யும் தலிபான் தீவிரவாதிகள் மிக சந்தோஷமாக விடுதலை ஆகி வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த ஆயிரக்கணக்கான தலிபான் தீவிரவாதிகளை மோசமான நீதி நிர்வாகம் காரணமாக ஆப்கானிஸ்தான் நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.
கொலை குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதிகளில் 20ல் ஒருவருக்கு மட்டுமே உரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இதர நபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை போல நீதிமன்றத்தில் பொழுதை போக்கி விட்டு விடுதலை ஆகி வருகிறார்கள்.இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு 1175 தலிபான் தீவிரவாதிகளை பிரிட்டன் துருப்புகள் பிடித்து ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.இதில் 82 பேர் மட்டுமே குற்றவாளி என ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இதர தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரிட்டன் - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இரு நாட்டு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு.
சீனா மற்றும் பிரிட்டன் இடையே 100 கோடி வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படுகிறது.பிரிட்டனுக்கு வருகை தந்த சீன பிரதமர் வென்ஜியா பவ் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இடையே திங்கட்கிழமை சந்திப்பின் போது இந்த வர்த்தக ஒப்பந்த முடிவு எடுக்கப்படுகிறது.பிரிட்டிஷ் தயாரிப்பு பொருட்களுக்கு சீன சந்தை திறந்து விடப்படும் என வென்ஜியா பவ் உறுதி அளித்துள்ளார். பிரிட்டிஷ் தலைவருடன் லண்டனில் சீனப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அவர் 3 நாள் பயணமாக பிரிட்டன் வந்துள்ளார். அவர் 2வது நாள் பயணத்தின் போது பிரிட்டன் பொருட்களுக்கு சீன சந்தை திறந்து விடப்படும் என உறுதி அளித்தார். ஐரோப்பாவின் 3 நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தில் முதல்கட்டமாக ஹங்கேரி வந்த சீனப்பிரதமர் ஐரோப்பிய பொருளாதார மீட்சிக்கு சீனா பெருமளவு உதவும் என உறுதி அளித்தார்.எந்த நேரத்திலும் ஹங்கேரிக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். சீனா-பிரிட்டிஷ் உறவின் முக்கியத்துவம் அதிகரித்து உள்ளது என பிரிட்டிஷ் கலாசாரத் துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் தெரிவித்தார்.
ஆசிய தேசமான சீனா முக்கிய பொருளாதார சக்தியாக திகழ்கிறது. அதே போன்று பிரிட்டனில் அது பெருமளவு முதலீடு செய்யும் நாடாகவும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இன்று நடைபெறும் சந்திப்பின் போது சீனாவில் பிரிட்டன் நிறுவனங்கள் வணிகம் செய்ய விருப்பம் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறார்.
அபாயம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம்: மக்களுக்கு பிரான்ஸ் வேண்டுகோள்.
பிரான்சில் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் இ.கோலி பக்டீரியா பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த இ.கோலி பக்டீரியா பிரிட்டன் நிறுவனம் மூலமாக வந்துள்ளது என பிரான்ஸ் கூறிய நிலையில் பிரிட்டன் உணவு தர முகமை(எப்.எஸ்.ஏ) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீன்ஸ் காய்கறியை பச்சையாக சாப்பிட வேண்டாம். காய்கறியை நன்றாக வேக வைத்தே சாப்பிடவும் என அறிவுறுத்தி உள்ளது. பிரான்சின் போர்டெக்ஸ் மருத்துவமனையில் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு உள்ளான 78 வயது பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண் மிக மோசமான நிலையில் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பிரிட்டனின் நிறுவனமான தாம்சன் மற்றும் மார்கன் மூலமாக பெறப்பட்ட காய்கறியால் இ.கோலி பாதிப்பு ஏற்பட்டது என பிரான்ஸ் தெரிவித்து உள்ளது. இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை. இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வழியாக ஐரோப்பிய சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இ.கோலி பக்டீரியா எதன் மூலம் பரவி உள்ளது என கண்டறிய விவாதிக்கப்பட்டது.பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் சேவியர் பெர்ட்ராண்ட் கூறுகையில்,"சந்தேகத்துக்குரிய காய்கறியை தவிர்க்கவும்" என்றார். வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்படுவோர் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு படையெடுக்கும் சீன மாணவர்கள்.
ஆங்கிலம் கற்பதற்காக அமெரிக்காவுக்கு சீன மாணவர்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.சீனாவைப் பொறுத்தமட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாய்மொழியான சீன மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.ஆங்கில அறிவு இல்லாமல் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு மேல்படிப்பு படிக்கச் செல்வோருக்கும், வேலை தேடிச் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது.
இதனால் தங்களது குழந்தைகள் உள்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று சீனப் பெற்றோர்கள் இப்போது நினைக்கத் தொடங்கி விட்டனர். லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி தங்களது குழந்தைகளை அமெரிக்காவுக்கு ஆங்கிலம் கற்க அனுப்பி வருகின்றனர்.
பெரும்பாலும் அமெரிக்காவில் நடைபெறும் கோடைகால ஆங்கிலப் பயிற்சி மையங்களில் தான் சீன மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் உள்ள இந்தக் கோடைகால ஆங்கிலப் பயிற்சி மையங்களில் சீன மாணவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.இந்த ஆண்டு மட்டும் சுமார் 60,000 மாணவர்கள் ஆங்கிலம் கற்க அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சீனர்கள் ஆங்கிலம் கற்கப் படையெடுத்து வருவதை மையமாக வைத்து சமீபகாலமாக அமெரிக்காவில் காளான்களாய் ஆங்கிலப் பயிற்சி மையங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்தப் பயிற்சி மையங்கள் அனைத்துமே சீனக் கல்வி முறையை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தைப் போதிக்கின்றன என்பது தான். இதனால் இவை சீனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.இந்தப் பயிற்சி மையங்கள் அனைத்துமே குறுகிய கால ஆங்கிலப் பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் 2 லட்சத்துக்கு மேலான கட்டணத்தைக் வசூலிப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிரியாவில் கடும் போராட்டம்: லெபனானுக்கு ஓடும் மக்கள்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படைகள் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்தை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அரசு படைகள் நடத்தும் அதிரடி தாக்குதலில் இதுவரை 1,300 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியா எல்லை பகுதியில் அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த இரண்டு நாட்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கிளர்ச்சியாளர்களை வீடு வீடாக தேடும் பணியில் அரசு படையினர் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானவர்கள் லெபனான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
லிபியாவில் ஒரு மூலையில் கடாபி தங்கி கொள்ளலாம்: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு.
லிபியாவில் எதிர்காலத்தில் அமையும் அரசில் கடாபிக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படாது. மாறாக லிபியாவில் ஒரு மூலையில் அவர் தங்கலாம் என அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் வீட்டை குறிவைத்து கடந்த சில நாட்களாக நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை எதிர்கொள்ளாமல் விரைவில் கடாபி திரிபோலியை விட்டு ஓட்டம் பிடிப்பார் என நேட்டோ படைகள் கூறி வருகின்றன.இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கான தேசிய ஆட்சி மாற்றக் கவுன்சில் செய்தி தொடர்பாளர் மஹ்மவ்த் ஷம்மம் பாரீசில் இருந்து வெளியாகும் "லீ பிகாரோ" பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: லிபிய தலைவர் கடாபியுடன் மத்தியஸ்தர்கள் சிலர் மூலம் பேச்சு நடத்தப்படுகிறது. தென் ஆப்ரிக்காவிலும், பாரீஸ் நகரத்திலும் கடாபி அனுப்பிய மத்தியஸ்தர்களுடன் இந்தப் பேச்சு நடந்தது.அப்போது லிபிய தலைவர் பதவியை கடாபி ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டின் ஏதாவது ஒரு பகுதிக்கு செல்ல அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என எங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடாபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் லிபியாவில் எதிர்காலத்தில் அமையும் அரசில் எவ்வித பொறுப்பும் வகிக்க முடியாது. தேர்தல் மூலம் இடைக்கால அரசை அமைக்க லிபியா நாட்டு அதிகாரிகள் யார் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் நாங்கள் பேச தயாராக இருக்கிறோம்.லிபியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துர் ரஹ்மான் ஷல்காம் கூறுகையில்,"ஆப்ரிக்காவில் அல்லது பெலாரஸ்சில் தஞ்சமடைய கடாபி ஒப்புக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. சில வாரங்களில் லிபியாவை விட்டு கடாபி வெளியேறலாம்" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF