Tuesday, June 7, 2011

இன்றைய செய்திகள்.


மஹிந்தருக்கு கடிதம் எழுதியுள்ள ஈரான் ஜனாதிபதி!

ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹ்மதி நிஜாத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு அந்நாட்டு சிரேஸ்ட வெளிவிவகார அமைச்சை சேர்ந்த ஒருவரின் மூலம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஈரான் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படமாட்டாது என்று ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கை ஜனாதிபதிக்கும் ஈரானின் சிரேஸ்ட வெளிவிவகார அமைச்சிற்கும் இடையிலான சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுமத்துவது தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் பிரஸ் டீவி தெரிவித்துள்ளது. ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் மொஹமட் அலி பதோலாஹிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போதே ஈரான் பிரதி வெளிவிவகார ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் ஈரான் ஜனாதிபதியின் கடிதத்தை கையளித்துள்ளார்.

கட்டாரில் சக ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கையர்!

கட்டாரில் வேலை பார்க்கின்ற இலங்கையர் ஒருவர் சக ஊழியரான இந்திய இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார். கடந்த இரு வருடமாக கட்டாரில் வேலை பார்த்து வந்த அரிஃப்( வயது - 24 ) என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். சொந்த சகோதரருடன் அரிஃப் டோஹாவில் உள்ள சஃபா நகரில் தங்கி வசித்து வந்தார். அரிஃபின் தங்குமிடத்துக்கு கடந்த சனிக்கிழமை சக ஊழியரான இலங்கையர் வந்து இருக்கின்றார். அரிஃப் கதவைத் திறந்தமையுடன் கத்தியால் பலமாக இலங்கையர் குத்தி விட்டார். 

கத்தியால் குத்திய பின் இலங்கையர் தப்பி ஓடுகின்றமையை அரிஃபின் சகோதரர் நேரில் கண்டார். அரிஃபை காப்பாற்றுகின்றமைக்கு முயன்றார். கத்தியை அரிஃப்ஃபின் உடலில் இருந்து அகற்றினார். அரிஃபை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றமைக்கு ஏற்பாடு செய்தார். ஆயினும் பாதி வழியில் அரிஃப் இறந்து போனார்.
காவல்துறையைச் சேர்ந்த பெருமளவானவர்களுக்கு இடமாற்ற உத்தரவு.

காவல்துறையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.இடமாற்றம் குறித்த உத்தரவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 81 உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.இடமாற்றம் செய்யப்பட உள்ள உத்தியோகத்தர்கள், கம்பஹா மற்றும் களனி பிரதேச காவல் நிலையங்களில் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளே இவ்வாறு அதிகளவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அமர்வில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அமர்வில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன.இலங்கையில்  இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம் என்று ஸ்விட்சர்லாந்து, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கவுன்சில் அமர்வில் வலியுறுத்தி வரும் நிலையிலேயே நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன.
ரஷ்யா, சீனா, பாக்கிஸ்தான் மற்றும் மாலைத்தீவு என்பன ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அமர்வில் பகிரங்கமாகவே இலங்கைக்கு ஆதரவளித்திருப்பதுடன், இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வைக்காண இடமளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன.
மனித உரிமைக்கவுன்சில் அமர்வுகளில் பங்கேற்றுள்ள போதும் இந்தியா இதுவரை தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.இதற்கிடையே இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகளில் பங்கேற்றுள்ள மேற்குலக ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் முகமாக பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கும் பான் கீ மூன்.
இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என கடந்த மாதம் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.அவர் இந்த கருத்தை தெரிவித்து 40 நாட்களின் பின்னர் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த நிலையில், கடந்த நாற்பது நாட்களில் இலங்கை தொடர்பில் ஏதேனும் வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொண்டீர்களா? என இன்னர் சிட்டி பிரஸின் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, தனியான குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலும் பான் கீ மூனின் கருத்து கோரப்பட்டது.எனினும் இவற்றுக்கு பதில் வழங்காத பான் கீ மூன், குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களே அதிகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை தாண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த கால செயற்பாடுகளை மீளாய்வு செய்வதை மாத்திரமே தம்மால் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் உறுதியான செயற்பாடு ஒன்றையே சர்வதேசம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தாருஷ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் தாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த அறிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தாம் நாளாந்தம், வாராந்தம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையிலேயே தமது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
காவல்துறையினருக்கு பதிலாக இராணுவத்தினரை பயன்படுத்துவதற்கு சரத் பொன்சேகா எதிர்ப்பு.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, மக்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதற்கு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.அதுகாவற்துறையினரின் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது மக்களை கட்டுப்படுத்த காவற்துறையினருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.இதனை தொடர்ந்தே சரத் பொன்சேகா இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
மக்கள் ஆட்சி உள்ள ஒரு நாட்டில், காவற்துறையினரின் கடமைகளுக்கு அவர்களுக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பொன்சேகா தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் தனியார் துறையின் நிதியை சூறையாட முயற்சிப்பதாகவும், தற்போது வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற நிதியை அரசாங்கம் சூறையாடி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் ரஷ்ய பயணம் ஒரு வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் ரஷ்ய விஜயம் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக லங்கா வெப் நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.ஏற்கனவே அவர் நேற்றைய தினம் ரஷ்யாவின், மொஷ்கோ நகருக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் இந்த விஜயம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவரது விஜயம் ஒரு வார காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இந்தியாவின் உயர்மட்டக்குழு இலங்கை வருவதாக தெரிவித்துள்ள நிலையில் அந்தக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்காகவே ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக மற்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இந்திய உயர்மட்டக்குழுவினர் இலங்கை வரும் போது தாம் நாட்டில் இல்லாமை புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்ற அடிப்படையிலேயே அவரின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்: பான் கி மூன்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவிருப்பதாக பான் கி மூன் அறிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூன் இருக்கிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் திகதியுடன் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக பான் கீ மூன் அறிவித்து இருக்கிறார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பதவிக்கு இரண்டாவது முறையாக என்னை பரிசீலிக்குமாறு பொதுச்சபையின் உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன்.உறுப்பு நாடுகள் ஆதரித்தால் மீண்டும் ஒருமுறை இந்தப் பணியைச் செய்வதில் பெருமை அடைவேன்.
டென்மார்க்கில் கோழி இறைச்சிகளிலும் பக்டீரியா பரவல்.
மரக்கறி வகைகளில் மோசமான இ.கோலி பக்டீரியா பரவியுள்ளதால் ஏற்பட்ட பாதிப்பு அடங்கும் முன்னர் டென்மார்க்கில் கோழி இறைச்சியிலும் இந்த வகை பக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாரிய அதிர்வுகள் இன்னும் ஏற்படவில்லை என்றாலும் இத்தகவல் குறித்த எச்சரிக்கை வேண்டும் என்று டியுரி ஆய்வகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோழிகளிலும் கோழி இறைச்சிகளிலும் சுமார் 200 வகையான பரிசோதனைகளை செய்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் கோழி இறைச்சிகளிலேயே பக்டீரியா தாக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது.இப்போது தான் டெனிஸ் இறைச்சியில் இ.கோலி பக்டீரியா இருப்பதாக பரிசோதனையாளர்கள் கூறுகிறார்கள். 27 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்ட பின்னரே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி.
சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார்.அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம்(பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் நாளை(புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா(ஜப்பான்), செர்ஜி வல்கோவ்(ரஷியா), மைக்கேல் போசும்(அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர்.
அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்.
இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார். மேலும் அவர் கூறும் போது,"விண்வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை" என்று நகைச்சுவையுடன் கூறினார்.ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ் கூறும் போது,"விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும்" என்று கூறினார்.
மைக்கேல் ஜாக்சன் அணிந்த கோட் ஏலம்.
பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு தனது 50வது வயதில் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் பயன்படுத்திய ஆடைகள், கையுறை, தொப்பி போன்றவை ஏலத்துக்கு விடப்பட்டன.இந்த நிலையில் அவர் அணிந்திருந்த கோட் அமெரிக்காவில் பெவர்லிஹில்ஸ் பகுதியில் உள்ள லியன் நிறுவனத்தில் வருகிற 25 மற்றும் 26ந் திகதிகளில் ஏலம் விடப்பட்டுள்ளது.அந்த கோட் சுமார் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் திரில்லர் என்ற வீடியோ ஆல்பம் தயாரித்துள்ளார்.
அதில் இந்த சிவப்பு மற்றும் கறுப்பு நிற கோட் அணிந்திருப்பார். புகழ்பெற்ற இந்த கோட் ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் டென்னிஸ் தாம்ப்கின்ஸ், மைக்கேல் புஷ் ஆகியோருக்கு மைக்கேல் ஜாக்சனால் வழங்கப்பட்டது.அதில் அவர் தனது கையெழுத்திட்டு ஆட்டோகிராப் வழங்கியுள்ளார். இந்த தகவலை ஜூலியன் ஏல நிறுவனத்தின் நிர்வாகி டார்ரன் ஜூலியன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்: பதிலடி தரப்படும் என அரசு எச்சரிக்கை.
சிரியாவின் வடக்கு நகரமான ஜிர் அல் சுகோரில் 120 பாதுகாப்பு படைவீரர்கள் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்வோம் என சிரியா அரசு எச்சரித்துள்ளது. அந்த நாட்டு ஜனாதிபதி ஆட்சியை கண்டித்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க அரசு துருப்புகளை பயன்படுத்துகிறது.
சிரியா உள்துறை அமைச்சர் இப்ராகிம் ஷார் கூறுகையில்,"தமது அரசு உரிய படைப்பிரிவுடன் தாக்குதலை நடத்தும் என்றார். தங்கள் பகுதியில் படைதுருப்புகள் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றால் ரத்த ஆறு ஓடும் என அங்குள்ள மக்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.துருக்கி எல்லை பகுதியில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் உள் ஜிர் அல் சுகோர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினார்கள்.பொலிசார் மீது நடந்த இந்த தாக்குதலில் 120 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டார்கள். இதற்கிடையே டாமஸ்கஸ் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கேட்பதற்கு தயாராக இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்தது.
வாஷிங்டனில் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜீபே கூறுகையில்,"15 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை மாற்ற முடியும்" என நம்பிக்கை தெரிவித்தார்.சிரியா மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு 11 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. இந்த நிலையில் ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம் என்று அவர் கூறினார்.
சிரியாவில் பஷார் அல் அசாத் ஜனாதிபதி ஆட்சியினர் வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். பொது மக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ், போர்ச்சுகல், ஜேர்மனி, பிரிட்டன் ஆகியவை கண்டன தீர்மான வரைவை உருவாக்கி உள்ளன.சிரியாவில் மனிதநேயக் குழுக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் விரைவில் வலியுறுத்தப்படவுள்ளது.
சீனாவில் வெள்ளம்: 14 பேர் பலி.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
குய்ஸோ மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 500 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஜிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
குய்ஸோ மாகாணத்தின் வாங்மோ மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்களில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.ஜூன் 3ம் திகதியில் இருந்து பெய்து வரும் மழையால் குய்ஸோ மாகாணத்தில் 11 நகரங்களும், மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் சென்ற நபர் திடீர் ரகளை: அவசரமாக தரையிறக்கம்.
கியூபா நோக்கி சென்ற பிரிட்டிஷ் விமானத்தில் இருந்த பயணி திடீர் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் ஹாலிபாக்சில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.இது குறித்து ஆர்.சி.எம்.பி பொலிசார் கூறியதாவது: தாமஸ் குக் ஏர்லைன்ஸ் விமானம் வாரடெரோ நகரை நோக்கி சென்ற கொண்டிருந்தது. ஒரு பயணி ரகளை செய்ததால் அந்த விமானம் திடீரென மதிய நேரத்தில் ஹாலிபாக்சில் அவசரமாக தரை இறங்கியது.
விமான பயணத்தில் தடை ஏற்படுத்திய 38 வயது பிரிட்டிஷ் நபர் மன நல சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விமானம் தரை இறங்கும் போது பொலிசார் தயாராக இறுக்குமாறு விமான ஓட்டி வேண்டுகோள் விடுத்து இருந்தார் என சார்ஜண்ட் பிரிக்டிட் லேகர் கூறினார்.குறிப்பிட்ட பயணி மீது எந்த வித குற்ற நிகழ்வும் கூறப்படவில்லை. அந்த பயணியின் மனநலனை கண்டறிய அவர் ஹாலிபாக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விமானத்தில் என்ன நடந்தது என்பதை அவர் விவரிக்க மறுத்தார். விமானத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே பயணி மீது பயங்கரக் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை மட்டும் தெரிவித்தார். பயணியை தரை இறக்கிய பிரிட்டிஷ் விமானம் சிறிய கால தாமதத்திற்கு பின்னர் புறப்பட்டு சென்றது.
இலியாஸ் கொலையின் எதிரொலி: உஷார் நிலையில் பாகிஸ்தான்.
அமெரிக்க படைகளுக்குச் சொந்தமான ஆளில்லா விமானங்கள் மூலமாக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து பாகிஸ்தானில் உஷார் நிலையில் உள்ளனர் பாதுகாப்புப் படையினர். அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவரான இலியாஸ் கொல்லப்பட்டதால் அதற்கு பழிவாங்க அல்கொய்தா இயக்கத் தலைவர் தகுந்த வேளையை பார்த்து காத்திருப்பார்கள் என இஸ்லாமாபாத் மற்றும் கைபர்-பக்துன்குவா, பஞ்சாப் மாகாண நிர்வாகங்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் தேசிய நெருக்கடிநிலை மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.உஷார் நிலையில் இருக்கும்படி சட்ட அமலாக்கப்பிரிவு அமைப்புகளும் எச்சரிக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் இருப்பதாக உளவு அமைப்புகளும் ரகசிய தகவலை அனுப்பியுள்ளன.
ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி என்கிற பயங்கரவாத இயக்கப் பிரிவைச் சேர்ந்த தலைவரான காஷ்மீரி, தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.இவர் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் மூளையாக செயல்பட்டவர் என்கிற புகார் உள்ளது. இவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க பல வழிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூசிலாந்தில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்.
நியூசிலாந்தில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.0 ஆக பதிவானது.கிறிஸ்ட்சர்ச்சில் நிலநடுக்கம் நிகழ்ந்த போது கட்டடங்கள் குலுங்கின. அவற்றிலிருந்த பொருட்களும் குலுங்கியதாகவும், பொருட்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஒன்றும் அங்கு ஏற்பட்டது. நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 181 பேர் பலியானார்கள்.ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. இதைதொடர்ந்து செப்டம்பர் மாதம் 7.0 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஓராண்டுக்குள் ரிக்டர் அளவுகோலில் 6.0 லிருந்து 7.0 வரையிலான நிலநடுக்கம் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அணுசக்தி நிலையங்களை நிரந்தரமாக மூட அரசு அனுமதி.
ஜேர்மனியில் அணுசக்தி நிலையங்களை மூடும் மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இதனால் தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை மூட ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முடிவு செய்தார். இதற்கான மசோதாவுக்கு ஜேர்மன் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.ஜேர்மனியில் ஏற்கனவே ஏழு பழமையான அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. சமீபத்தில் ஒரு அணுமின் நிலையம் தொழில்நுட்பக் கோளாறால் மூடப்பட்டது.
2022ம் ஆண்டுக்குள் ஒன்பது அணுமின் நிலையங்களையும் மூடி விடுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதாக ஜேர்மன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்பர்ட் ராட்ஜன் தெரிவித்துள்ளார்.வரும் 2030ம் ஆண்டு வரை 17 அணு உலைகள் பயன்பாட்டில் இருக்கும். அணு உலைகள் மூடப்படுவதால் ஏற்படும் மின் பற்றாக்குறையைப் போக்க நிலக்கரி, எரிவாயு மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை அதிகரிக்க ஜேர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.
சிகிச்சைக்காக சவுதி சென்றவர் நாடு திரும்புவாரா: அச்சத்தில் மக்கள்.
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்துக்குச் சிகிச்சைக்காகச் சென்ற ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு நடந்த இரு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்தது.இதையடுத்து அவர் அங்கு இரு வாரங்கள் ஓய்வெடுப்பார். எனினும் அவர் நாடு திரும்புவது பற்றி பல குழப்பங்கள் நிலவுகின்றன. ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே 33 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். துனிஷியா, எகிப்து புரட்சியை அடுத்து ஏமனில் சலேவுக்கு எதிராகவும் புரட்சி வெடித்தது.
கடந்த 3ம் திகதி தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தினுள் அல் நஹ்டியான் மசூதியில் அதிபர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டு வீசப்பட்டது. இதில் குண்டுகளின் சிதறல்கள் அதிபரின் இதயப் பகுதிக்குக் கீழே புகுந்தன. அவரது கழுத்து மற்றும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து கடந்த 4ம் திகதி இரவில் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்துக்குச் சிகிச்சைக்காக சலே கொண்டு செல்லப்பட்டார். அவரது மனைவி உள்ளிட்ட 35 உறவினர்கள் உடன் சென்றனர். அவரது மூத்த மகனும், அதிபர் மாளிகையைக் காக்கும் "பிரசிடென்சியல் கார்டு" படைப்பிரிவின் தலைவருமான அகமது சனாவில் உள்ளார்.ரியாத்தில் சலேவுக்கு இரு அறுவை சிகிச்சைகள் நடந்தன. முதல் சிகிச்சையில் இதயத்திற்குக் கீழ்ப்பகுதியில் புகுந்த குண்டுகளின் சிதறல்கள் நீக்கப்பட்டன. இரண்டாவதாக கழுத்துப் பகுதியில் நரம்பியல் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், இருவாரங்கள் ஓய்வெடுப்பார் என்றும் சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் வாரம் ஓய்வெடுப்பார் என்றும், அடுத்த வாரம் முழுவதும் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் வருவாரா? இந்த ஓய்வுக்குப் பின் அவர் நாடு திரும்புவாரா மாட்டாரா என்பது குறித்துப் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.ஏமன் தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் அப்து அல் ஜனாடி நேற்று அளித்த பேட்டியில்,"சலே நலமுடன் உள்ளார். அவர் தனது அதிகாரத்தை சட்டப்படி ஒருநாளில் ஒப்படைப்பார். அதற்காக விரைவில் நாடு திரும்புவார்" என்று கூறினார்.
தற்போது அதிபர் பொறுப்பை வகிக்கும் துணை அதிபர் மன்சூர் ஹாடி, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றிருந்தாலும் அவற்றில் சிறிதளவு மட்டுமே அதிகாரம் உடையவராக உள்ளார். பாதுகாப்புப் பிரிவின் முக்கியப் பொறுப்புகளில் அதிபரின் மகன் அகமது உள்ளிட்ட உறவினர்கள் பலர் இருப்பதால் ஹாடியால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது.இதனால் ஏமனில் அடுத்து என்ன நடக்கும் என்று பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. அதிபரின் வெளியேற்றத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மக்கள் மத்தியில் ஒருவேளை சலே மீண்டும் திரும்பி வந்து விடுவாரோ என்ற அச்சமும் பீதியும் நிலவுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF