நாமலைத் தலைமைத்துவத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஜனாதிபதி நாட்டை மறந்துவிட்டார்: அமைச்சர்கள் குற்றச்சாட்டு.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நாமல் ராஜபக்ஷவைத் தலைமைத்துவத்துக்குக் கொண்டு வரும் முயற்சிக்கு முக்கியத்துவமளித்துச் செயற்படும் காரணமாக ஜனாதிபதி நாட்டை மறந்துவிட்டுள்ளதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போதைய நிலையில் தனக்குப்பின் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் தலைமைத்துவப் பதவிக்குக் கொண்டுவருவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும், அதன் காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சர்வதேச நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதி அசிரத்தையாக செயற்படுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.அதுமட்டுமன்றி இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் பிரயோகிக்கும் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதி போதுமான தெளிவின்மையுடன் நடந்து கொள்வதாகவும் அமைச்சர்களில் பலர் குற்றம் சாட்டுகி்ன்றனர்.
தற்போதைய நிலையில் அமைச்சர்கள் யாராவது சர்வதேச நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதியுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள முயன்றால் "அதை நாமலும், சஜின் வாஸ் குணவர்த்தனவும் பார்த்துக் கொள்வார்கள்" என்று தட்டிக்கழித்துவிடும் போக்கை ஜனாதிபதி கடைப்பிடிக்கின்றாராம்.மேலும் அமைச்சர்களின் சந்திப்புகளின்போதும் நாமலின் சர்வதேசத் தொடர்புகள் மற்றும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுடன் நாமல் ஏற்படுத்திக் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்தே ஜனாதிபதி கூடுதலாகப் பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் : அமெரிக்கா கோரிக்கை.
இலங்கை உட்பட்ட 14 நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.இலங்கை, சீனா, ஈரான், லிபியா, வடகொரியா, சூடான், சிரியா, வெனிசூலா, யேமன், ஸிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், பஹ்ரெய்ன், மியன்மார் ஆகிய நாடுகளிலேயே மனித உரிமைமீறல் இடம்பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் Eileen Chamberlain Donahoe இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மகாவம்சத்தில் இன்னும் பல புதிய அத்தியாயங்களை இணைக்க வேண்டும்: சரத் பொன்சேகா.
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் புதிய பதிப்பு எழுதப்படும் போது இன்னும் பல புதிய அத்தியாயங்கள் அதில் இணைக்கப்பட வேண்டுமென சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து மீண்டும் சிறைச்சாலைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளியிடும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது கோலோச்சும் வன்முறைக் கலாசாரம், கற்பழிப்புக் கலாசாரம், தடிகளைக் கொண்டு அச்சுறுத்தும் கலாசாரம், மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் போன்ற விடயங்கள் மகாவம்சத்தின் புதிய பதிப்பில் உள்ளடக்கப்பட வேண்டியுள்ளன.மஹிந்த ராஜபக்ஷவின் வரலாறு மகாவம்சத்தில் உள்ளடக்கப்படுவதற்காக மகாவம்சத்தின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மேற்குறித்த விடயங்களும் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழு இலங்கை மண்ணில் காலடி வைத்தால் நாடு திரும்ப முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினர் இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்கக் கூடாது. மீறி வைத்தால் அவர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பான் கீ மூனுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்ததாவது:
இலங்கையில் போர்க் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை யுத்தத்தின்போது புலிப் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டனர்.தற்போது உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடன் ஒரு அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில் நடை பெறாத சம்பவங்களுக்கு விசாரணைக் குழு அமைத்து அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்க ஐ.நா. முற்படுகின்றது. பான் கீ மூனின் நிபுணர் குழு எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு வரக்கூடாது.
அவர்களது வருகையைத் தடுத்து நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள மக்களை தொடரணிப்படுத்துவோம். இது தொடர்பாக பல முக்கிய தீர்மானங்களும் அறிவிப்புக்களும் இன்று வெளியிடப்படும்.இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஐ.நா.குழு இலங்கை வருவது எமக்கு உதவி ஒத்தாசைகள் வழங்க அல்ல எமது இராணுவத்தை பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிடப்படுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
உள்நாட்டில் பல சூத்திரதாரிகள் நாட்டுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் அவர்களை காலதாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.புலிகளின் தலைமைத்துவங்களை பாதுகாக்க முடியாமல் போன ஐ.நா.உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தற்போது ஏதோ ஒரு வகையில் இலங்கையை சிறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.இதனை தோல்வியடையச் செய்ய வேண்டும். எனவே பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு வர அனுமதிக்கக் கூடாது.
கிரேக்கத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.யுத்த களமாக மாறிய ஏதன்ஸ் நகரம்.
கிரேக்க நாட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் நடந்த கைகலப்பால் நேற்று தலைநகர் ஏதன்ஸின் வீதிகள் யுத்தளமாக மாறின.
புகைக் குண்டுகளைப் பாவித்தும் தண்ணீரைப் பாய்ச்சியும்,தடியடி நடத்தியும் பொலிஸார் அர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோதே வன்முறைகள் தலை தூக்கின.பல இடங்களில் கைகளில் பொல்லுகள் மற்றும் இரும்புப் பொல்லுகளுடன் இருந்த அர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் நேரடியாக மோதிக் கொண்டனர்.
கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள்,அரசின் செலவுக் குறைப்புத் திட்டம் என்பனவே பாரிய அளவிலான அரச எதிர்ப்பு நடவடிக்ககைகளுக்கு முக்கிய காரணங்களாகும்.இந்த எதிர்ப்புக்களை அடுத்து ராஜினாமாச செய்ய கிரேக்க பிரதமர் முன்வந்துள்ளார்.அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்யப்படும் என்றும்.அதனைத் தொடரந்து புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கோரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
புகைக் குண்டுகளைப் பாவித்தும் தண்ணீரைப் பாய்ச்சியும்,தடியடி நடத்தியும் பொலிஸார் அர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோதே வன்முறைகள் தலை தூக்கின.பல இடங்களில் கைகளில் பொல்லுகள் மற்றும் இரும்புப் பொல்லுகளுடன் இருந்த அர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் நேரடியாக மோதிக் கொண்டனர்.
கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள்,அரசின் செலவுக் குறைப்புத் திட்டம் என்பனவே பாரிய அளவிலான அரச எதிர்ப்பு நடவடிக்ககைகளுக்கு முக்கிய காரணங்களாகும்.இந்த எதிர்ப்புக்களை அடுத்து ராஜினாமாச செய்ய கிரேக்க பிரதமர் முன்வந்துள்ளார்.அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்யப்படும் என்றும்.அதனைத் தொடரந்து புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கோரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
கிரேக்கம் இறுக்கமான பொருளாதாரக் கொள்கைகளை அமுல் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனும்,சர்வதேச நாணய நிதியமும் அழுத்தங்களைப் பிரயோகிக் அரம்பித்துள்ளன. அரசாங்கம் சிக்கன பொருளாதாரப் போக்கின் ஒரு அங்கமாக 25 பில்லியன் பவுண் செலவுக் குறைப்புத் திட்டத்தை அமுல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பின் ஒரு கட்டமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த அர்ப்பாட்ங்களின்போதே காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சுமார் ஐயாயிரம் பொலிஸாருடன் அவர்கள் நேரடியாக மோதிக் கொண்டனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கு பெற்றோர்களே காரணம்: அதிர்ச்சித் தகவல்.
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் உலகில் பெரும்பாலனவர்கள் அவதிப்படுவதாக மருத்துவ சான்றுகள் கூறுகின்றன.ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி, மருத்துவ பராமரிப்பின்மை ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.இந்நிலையில் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஹார்ட் ஸ்ட்ரோக்கால் அதிகம் தாக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் டயடிக் அசோசியேஷனும் உடல் பருமன் குறித்து ஆய்வு செய்யும் மென்ட் தனியார் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து பால் சாசெர் தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்புக்கு பெற்றோர்தான் முழு முதற்காரணம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் அவர்களை தேவையற்ற உணவுப் பழக்கங்களுக்கு பெற்றோர் அடிமைப்படுத்தி விடுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயல் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆய்வில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது ஹார்ட் ஸ்ட்ரோக். உடல் பருமன், ஜங்க் புட் உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் தாய்ப்பால் இன்மை, பால் மற்றும் சரிவிகித உணவின்மை, உணவில் உப்பின் அளவு அதிகரிப்பது, மேற்கத்திய உணவுகளான பீட்சா, பர்கர் மீது அதிகரித்து வரும் மோகம், சிப்ஸ் போன்ற உணவுகளால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிப்பது போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணமாகின்றன.குழந்தைகளுக்கு போதிய விளையாட்டு, உடற்பயிற்சி இல்லாவிட்டால் அதிக கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் கொழுப்பாக தங்கி உடலை பருமனாக்கி விடுகிறது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு நோய்த் தாக்குதல்களை சமாளிக்க வேண்டி உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 16 வயதுக்கு உட்பட்ட சுமார் 5,500 சிறார்களுக்கு உடல் பருமன் குறைப்பு சிகிச்சையை அளித்துள்ளது.சராசரியாக மூன்றில் ஒரு குழந்தை என்ற அளவில் குழந்தைகளின் உடல் பருமன் பாதிப்பு உள்ளது. இவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய சிக்கல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்த தலிபான் தளபதி திடீர் மிரட்டல்.
ஆப்கானிஸ்தான் அரசை ஆதரித்து கலவரத்தை கைவிட்ட தலிபான் தளபதி மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ளார்.ஆப்கானிஸ்தான் அரசு தமது பிரிவைச் சார்ந்த தலிபான்களுக்கு பாதுகாப்பு, பயிற்சி, வேலை போன்ற உத்தரவாதத்தை அளித்தது. ஆனால் அவை செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆப்கானிஸ்தான் அரசு எங்களை ஏமாற்றி விட்டது. எனவே தாக்குதல் நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட போகின்றோம் என தலிபான் மெஹலவி அசிசுல்லா அசா தெரிவித்து உள்ளார்.
அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட மிகச் சிறிய அளவிலேயே தரப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். அசிசுல்லா அசா தனது படையின் 80 நபர்களுடன் அணி வகுத்து வந்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதே தனது நோக்கம் என அவர் முழங்கினார்.இதனால் தலிபான்கள் பணத்திற்காகவும், உள்ளூர் பிரச்சினைக்காகவும் சண்டை போடுகிறார்கள் என நேட்டோ படைகள் கருதின. ஆப்கானிஸ்தான் கிராமங்களுக்கு உதவி, பாதுகாப்பு, வேலை உறுதி போன்றவை அளிப்பதாக உறுதி அளித்தது.
ஆனால் ஆப்கானிஸ்தான் அரசு ஒன்றும் செய்யவில்லை. இது குறித்து 30 வயது அசிசுல்லா டெய்லி டெலிகிராமுக்கு அளித்த பேட்டியில்,"ஆப்கானிஸ்தான் அரசுடன் சேர்ந்தது எனது மிகப்பெரிய தவறு. மீண்டும் தலிபான்களுடன் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 8 மாதமாக எனது செலவுக்கு 120 பவுண்ட் தரப்பட்டது. எனது சேமிப்பு கரைந்து விட்டது" என்றார்.18 மாதங்களுக்கு முன்னர் மறு ஒருங்கிணைப்பு திட்டம் ஆப்கான் மீதான லண்டன் மாநாட்டில் கொண்டு வரப்பட்டது. இதற்கு 88 மில்லியன் பவுண்டில் டிரஸ்ட் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் 6 மில்லியன் பவுண்ட் அளித்தது. இத்திட்டத்தில் ஆப்கான் கலவரப்பகுதியான தெற்குபகுதியினர் சேரவில்லை.
டென்மார்க்கின் சுங்க சோதனை திட்டத்திற்கு ஜேர்மனி எதிர்ப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது உள் எல்லைப்பகுதியில் நிரந்தர சுங்க சோதனைத் திட்டத்தை மேற்கொள்ள டென்மார்க் முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்திற்கு ஜேர்மனியின் எதிர்ப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே புதன்கிழமை பதிவு செய்தார். டென்மார்க் நிரந்நர சுங்க சோதனை மேற்கொள்வதை ஜேர்மனி தீவிரமாக பார்க்கிறது என குய்டோ வெஸ்டர்வெலே தெரிவித்தார்.
டென்மார்க்கின் எஸ்பெர்சன் டெர்லினினை சந்தித்த பின்னர் குய்டோ இவ்வாறு தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எங்களது பேச்சு வார்த்தை தொடரும். நாம் இது குறித்து கட்டாயமாக விவாதிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று வெஸ்டர்வெலே தெரிவித்தார்.ஜேர்மனியை சார்ந்த எல்லைப்பகுதியில் கடவுச்சீட்டு நடைமுறையை அமல்படுத்த மாட்டோம் என தம்மிடம் எஸ்பெர்சன் உறுதி அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
புதிய எல்லைச் சோதனை முறை செனகன் ஒப்பந்தத்தில் உள்ள 26 நாடுகளின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படும். முறைகேடாக ஊருடுவதை தடுக்கவும் போதை மருந்துகளை தடுப்பதற்கே டென்மார்க விரும்புகிறது.உலகிற்கு டென்மார்க் திறந்த வெளியாகவே உள்ளது என்று டென்மார்க் அமைச்சர் எஸ்பெர்சன் தெரிவித்தார். வெஸ்டர்வெலே சந்திப்புக்கு பின்னர் ஸ்வீடன் வெளியுறவுத் துறை அமைச்சரையும், போலந்து அமைச்சரையும் எஸ்பெர்சன் சந்தித்து பேசுகிறார்.
அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக ஜவாஹிரி தெரிவு.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக அல்கொய்தா வெளியிட்டுள்ள அறிக்கை அந்த இயக்கத்தின் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில்,"ஜவாஹிரி தலைமையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு உதவும் நாடுகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும். இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறும் வரை எங்கள் போர் தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மே 2ம் திகதி அல்கொய்தாவின் தலைவரான பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த இயக்கத்தில் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வந்த அல் ஜவாஹிரி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உறைய வைக்கும் நீரில் பெண் விஞ்ஞானியின் சாகசம்.
திமிங்கலங்கள் பொதுவாகவே அமைதியானவையாக கருதப்படுகிறது. அதில் பெலுகாஸ் எனப்படுபவை ரொம்பவே சாது. நீருக்குள் மனிதரை பார்த்து விட்டால் பூனைக்குட்டி போல வந்து ஒட்டிக்கொள்ளும்."சிரித்த முகம்" அதன் தனிச்சிறப்பு. முகம், தாடையை ஒட்டியுள்ள சதைகள் ஒத்துழைப்பதால் பரதநாட்டிய கலைஞர் போல விதவிதமான முகபாவனைகள் காட்டும்.மகிழ்ச்சியை வெளிப்படுத்த நன்கு இதழ் விரித்து சிரிக்கும். உலகின் பல பகுதிகளிலும் சுமார் ஒரு லட்சம் பெலுகாஸ் திமிங்கலங்கள் உள்ளன. பல நாடுகளில் இவை நீர் காட்சியகங்களில் வளர்க்கப்படுகின்றன.
கடலில் இருந்து இவற்றை பிடித்து காட்சியகங்களுக்கு கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான வேலை. ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் முர்மன்ஸ்க் ஆப்லஸ்ட் என்ற இடத்தில் 2 பெலுகாஸ்களை அடக்கும் பணி சமீபத்தில் நடந்தது.ஆர்க்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஒயிட் கடலில் இருந்து இவை இரண்டையும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு கொண்டு வருவதற்கான வேலை தொடங்கியது. ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை நடாலியா அசீன்கோ(36) தயாரானார். பெலிகாஸ் திமிங்கலங்கள் பெரும்பாலும் செயற்கை பொருட்களை விரும்புவதில்லை.
துருவத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் உறைபனி அளவுக்கு சில்லென்று இருந்தது நீர். மனிதன் இறங்கினால் ஐந்தே நிமிடத்தில் இறந்துவிடக்கூடிய அபாயம். ஆனால் யோகா மற்றும் தியானத்தில் நடாலியா திறமைசாலி என்பதால் மூச்சை அடக்கி இறங்கினார்.10 நிமிடம், 40 வினாடியில் கடல் பகுதியில் இருந்து 2 திமிங்கலங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கொண்டு வந்தார். அந்த இரண்டுக்கும் நில்மா, மேட்ரனா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். "நில்மாவும், மேட்ரனாவும் நெருங்கிய நண்பர்கள் போல பழகினார்கள். அவர்களை பிரியவே மனமில்லை" என்றார் நடாலியா.
லிபியாவில் மீண்டும் கடாபி மாளிகை அருகே குண்டு வீச்சு.
லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக் கொண்டதை கடாபி ஏற்கவில்லை.இதையடுத்து புரட்சிக்காரர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரில் இறங்கி உள்ளன. நேட்டோ படைகள் விமானம் மூலம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதன் மூலம் அரசின் படை வசம் இருந்த சில நகரங்கள் புரட்சிக்காரர்களின் வசமாகி உள்ளன. அதிபர் கடாபி தலைநகர் திரிபோலியில் உள்ள பாதுகாப்பான பங்களாவில் பதுங்கி உள்ளார். அவரை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க நேட்டோ படையினர் திட்டமிட்டுள்ளனர்.சில நாட்களாக கடாபி மாளிகையை குறி வைத்து நேட்டோ படையினர் வான் வெளி தாக்குதலை நடத்து வருகின்றனர். இந்த படையினர் பொழியும் குண்டு மழையால் நகரமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
கடாபி பதுங்கி இருக்கும் மாளிகை அருகே இன்றும் நேட்டோ படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை 5 மணி அளவில் நேட்டோ படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர். குண்டுகள் வெடிக்கும் சத்தம் சில மணி நேரம் வரை கேட்டது. அப்போது எழுந்த புகை மண்டலம் நகரையே மறைத்தது. கட்டிடங்களே கண்ணுக்கு தெரியவில்லை.இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. லிபியாவில் போர் நடத்தி வரும் நேட்டோ படைக்கு ஜேர்மனி தலைமை தாங்குகிறது. அந்நாட்டு பிரதமர் அளித்த பேட்டியில்,"கடாபி படைக்கு அழிவு காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. விரைவில் நேட்டோ படைக்கு வெற்றி கிடைக்கும்" என்றார்.
விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்காக நிதி திரட்டும் அசாஞ்ச்.
அமெரிக்கா உள்பட பல நாடுகளின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது.இந்நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசான்ஜுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் விக்கிலீக்ஸ் தொடர்ந்து ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் ஜூலியன் அசான்ஜ் மீது ஸ்வீடன் பெண்கள் இருவர் பாலியல் புகார் கூறினர். இதன் அடிப்படையில் அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தற்போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனம் நிதி திரட்டும் வேலையில் இறங்கியது. ஜூலியன் அசான்ஜுடன் விருந்து சாப்பிட விரும்புபவர்கள் ஓன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
கடந்த திங்கள் அன்று தொடங்கிய ஏலம் நேற்றுடன் முடிந்தது. ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி அதிகபட்சத் தொகையாக ரூ.36 ஆயிரத்தில் முடிந்தது. ஜூலியன் அசான்ஜுடன் 8 பேர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர்.ஜூலை 2ம் திகதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த விருந்தில் ஜூலியன் அசான்ஜுடன் ஸ்லோவேனியாவை சேர்ந்த அறிஞர் ஸ்லாவோஜ் ஸிஸெக் கலந்து கொள்கிறார். விருந்து நிகழ்ச்சிக்கு பின் இருவரும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் பாதிப்பு பற்றி உரை நிகழ்த்துகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக வேண்டும்: ஒபாமாவிடம் வலியுறுத்தல்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என யு.எஸ் செனட்டர்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் வலியுறுத்தினர்.ஏறக்குறைய 25 செனட்டர்கள் இந்த கருத்தை ஒபாமாவிடம் தெரிவித்தார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகளில் குறிப்பிட்ட அளவு வருகிற ஜீலை மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என செனட்டர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அளித்தனர்.கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக ஒபாமா கூறுகையில்,"ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்திய பின்னர் 2011ஆம் ஆண்டு ஜீலை மாதம் அமெரிக்கப் படைகள் பெருமளவு திரும்ப அழைக்கப்படுவார்கள்" என கூறி இருந்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையின் பணி முடிந்து விட்டது என நம்புகிறோம். குறிப்பாக அமெரிக்க கமண்டோக்கள் அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடனை கொன்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் பணி நிறைவு பெறுதாக கருதுகிறோம்.எனவே அமெரிக்க துருப்புகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என ஒரு இடது சாரி மற்றும் 22 கன்சர்வேடிவ் குடியரசு செனட்டர்கள் வலியுறுத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் பெருமளவு ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
அமெரிக்காவின் நிதிப் பணம் வீணடிப்பதை நியாயப்படுத்த முடியாது. எங்களது கருத்தை கடிதத்தில் எழுதி உள்ளோம் என செனட்டர்கள் கூறினர். கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அல்கொய்தா தீவிரவாத அமைப்பை நொறுக்கியது என செனட்டர்கள் பாராட்டினர்.அமெரிக்காவின் உண்மையான இலக்கு எட்டப்பட்டு விட்டது. எனவே படைகள் நாடு திரும்பலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை.
மத்திய அமெரிக்காவின் மாயா பிரிவினர் மக்கள் காலாண்டர் கணிப்புபடி இன்னும் 18 மாதத்தில் உலகம் அழியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.இந்த கணிப்பு குறித்த பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.
உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.ஆனால் அந்த கருத்து பொய் என எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இந்த ஆண்டு மே மாதம் முடிந்து ஜீன் மாதத்தின் மத்தியில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். பழைய பீதி மறைந்த நிலையில் புதிய கணிப்பு மக்களை அச்சபட வைத்து உள்ளது.
தற்போது மாயா மக்கள் அட்டவணைப்படி உலகம் வருகிற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் திகதி அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழியும் என்ற அறிவிப்பை கேட்டு பைரீனிஸ் மலைப்பகுதியல் ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருக்க முயற்சிப்பதாகவும் மாயா தரப்பு மக்கள் கூறுகிறார்கள்.உளவியல் ரீதியாக பயத்திற்கு உள்ளான மக்கள் உலகம் அழியப் போகிறது என்ற கருத்தை பரப்புபவர்களின் செயல்பாட்டுக்கு இரையாவார்கள் என மிஷன் தலைவர் ஜார்ஜ் பினெக் கூறினார்.
ரோமானிய பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டில் 183வது நாளில் உலகம் அழியும் என்ற கணிப்பு உள்ளது. முந்தைய யுகங்களைப் போலவே இந்த புது கணிப்பும் பொய்த்து போகும் என பகுத்தறிவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.ஆனால் உலகம் உடைந்து விடும், நாம் உயிர் பிழைக்க வேண்டும் என கருதும் சிலர் தப்பிக்க மலை போன்ற இடங்களில் இடம் தேடுகிறார்கள்.
இலங்கையில் இருந்து ஆட்களை கடத்திய குற்றத்திற்காக நான்கு நபர்கள் கைது.
இலங்கையில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்களை கடத்தி வந்ததாக கருதப்படும் 4 நபர்களை ஆர்.சி.எம்.பி பொலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தார்கள்.கடந்த 2009ஆம் ஆண்டு கனடாவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏராளமான இலங்கை நாட்டவரை அங்கீகாரம் இல்லாமல் தரை இறக்கியதாக ஓஷன் லேடி கப்பலின் ஊழியர்களை கனடா பொலிசார் கைது செய்தனர்.
கப்பலின் கப்டன், தலைமை பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் மீது ஆள்கடத்தல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கப்பல் ஊழியர்கள் வான்கூவர் அனுப்பப்பட்டு நீதிபதி முன்பாக இந்த வார இறுதியில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.கைது செய்யப்பட்ட அதிகாரிகள் அங்கீகாரம் இல்லாத கப்பல் பயணத்திற்கு முழு பொறுப்பு வகித்துள்ளனர் என்று ஆர்.சி.எம்.பி ஒருங்கிணைந்த எல்லை திட்டப்பணி தலைவர் டாம் ஜோன்ஸ் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து ஆள் கடத்தல் பணிகளை மேற்கொண்ட தென் கிழக்கு ஆசிய ஆள் கடத்தல் நபர்கள் குறித்து ஆர்.சி.எம்.பி பல தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு இருந்தது. இந்த விசாரணையின் போது ஓஷன் லேடியின் கப்பல் அதிகாரிகளை பொலிசார் தற்போது பிடித்துள்ளனர்.ராஜா என்ற விக்ன ராஜா தேவராஜா(33), பிரான்சிஸ் ”மனோ” அந்தோணி முத்து அப்புலோனப்பா(33), ஹமல்ராஜ் கமல்ஹந்த சாமி(39) மற்றும் ஜெயச்சந்திரன் கனகராஜா(32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இலங்கையில் இருந்து கனடாவிற்கு ஓஷன் லேடி கப்பலில் வந்தார்கள். அவர்கள் செவ்வாய்க்கிழமை கிரேட்டர் டொரண்டோ கனடா எல்லை முகமை முன்பாக ஆஜர் ஆக கூறப்பட்டது.அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களது அகதிகள் உரிமை தடுக்கப்பட்டு கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஓஷன் லேடி கப்பலில் அவர்களது பங்கு என்ன என்பது பற்றி பொலிசார் விரிவாக கூற மறுத்தனர்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா கருத்து.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க தளபதி மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் என்ற அச்சம் உள்ளது. அதனால் தனது அண்டை நாட்டை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது என்று கவலை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அமெரிக்கத் தளபதியும், "ஜாயின்ட் சீப் ஆப் ஸ்டாப்ஸ்" குழுவின் தலைவருமான மைக் முல்லன் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு தனது உதவிகளை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அவர்களும் அதற்குப் பதிலாக நல்லவிதமாக செயல்பட்டு வருகின்றனர்.அதனால் அணு ஆயுதங்கள் பற்றிய பிறரின் கவலைகளையும் பாகிஸ்தான் நன்கு உணர்ந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளன.
அனாதை குழந்தைகளுக்கு இனி அதிபர் ஜர்தாரி தான் தந்தை: பாகிஸ்தான் அறிவுப்பு.
பெற்றோர் முகவரி தெரியாத சட்டப்படி பிறந்த அனாதை குழந்தைகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தந்தை என்ற இடத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்திக் கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் அசிப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையத் தலைவர் மாலிக் தேரிக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2005ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், இதையடுத்து கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.
மேலும் சட்டப்படி பிறந்த பல குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு தற்போது நாட்டின் சமூக நலத்துறை மையங்களில் தங்கி வருகின்றனர். இக்குழந்தைகளை அவர்களது பெற்றோர்களே இந்த மையத்தில் அனாதையாக விட்டுச் சென்றனர்.சமீபத்தில் இக்குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இதுபற்றி அதிபருக்கு தெரியவரவே அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் தந்தையின் பெயராக தன்னுடைய பெயரை சேர்க்க அதிபரே முன்வந்து கேட்டுக் கொண்டார்.
சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் உள்ள சில இஸ்லாமிய பள்ளிகளில் இக்குழந்தைகளை சேர்க்க தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையம் தொடர்பு கொண்ட போது "ஆதாம்" மற்றும் "ஏவாள்" பெயராக பெற்றோர் பெயர் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.இந்த விடயத்தை கையாள்வதில் முன்னணி இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளின் மத குருக்களின் ஆலோசனை பெறப்பட்டது. இவ்வாறு மாலிக் தேரிக் கூறினார்.
அரசின் சிக்கன நடவடிக்கையை எதிர்ப்பு கடும் ஆர்ப்பாட்டம்.
கிரீஸ் நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தை அந்நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமான இலியாஸ் இலியோபவ்லஸ் நடத்தியது. இதனால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிரீஸ் நாடு பயங்கர பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இச்சிக்கலில் இருந்து இந்நாட்டை மீட்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்பு 7 லட்சத்து 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது.இந்நாட்டிற்கு இந்நிதி சிறிது சிறிதாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதியுதவியைத் தொடர்ந்து பெற கிரீஸ் நாடு பல்வேறு சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.நடப்பு 2012 முதல் 2015ம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டால் தான் தொடர்ந்து கடனுதவி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட வரிச் சலுகைகளை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜ் பாபண்டிரியஸ் ரத்து செய்தார். மேலும் 3 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நான்கு ஆண்டுகளில் தனியார் உடைமை ஆக்கப்படும் என்று அறிவித்தார்.அரசை எதிர்த்து ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் சங்கங்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் ஆத்திரத்தை எழுப்பியது. இதையடுத்து அரசை எச்சரிக்கும் வகையில் நேற்று நாடு தழுவிய ஸ்டிரைக்கிற்கு அந்நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமான இலியாஸ் இலியோபவ்லஸ் அழைப்பு விடுத்திருந்தது.
நேற்று நடந்த ஸ்டிரைக்கால் நாட்டின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தலைநகரான ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் கூடிய தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். அரசு மருத்துவமனைகளில் அவசரகால ஊழியர்கள் மட்டுமே செயல்பட்டனர்.துறைமுகம் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தடைபட்டன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுச் சங்கம் ஸ்டிரைக்கில் இருந்து விலகியதால் விமானப் போக்குவரத்து தடையின்றி நடைபெற்றது.