Wednesday, June 15, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை போர்க்குற்ற விசாரணை தேவை - பிரித்தானிய பிரதமர்.

இலங்கையின் இறுதி கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தியுள்ளார்.இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றுகையில், அவர் இவ்வாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.
சனல் 4 ஆவணப் படம் குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட் கூறுகையில், "இந்த ஆவணப்படத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதைப் பார்க்கும் போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது," என்றார் அலிஸ்ட்டர் பர்ட்.


இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: விமல், சம்பிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்து.

இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
13வது அரசியல் அமைப்பு திருத்ததில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.ஆயினும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது இந்த அமைச்சர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலக்திற்கு சென்று சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் போது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தீர்மானங்களை எடுத்தால் ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ள தேசப்பற்றுள்ள சக்திகள் விலகிச் செல்லக் கூடும் எனவும் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.
இந்தியாவும் மேற்குலக நாடுகளும் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வரும் நிலையில் அவர்களின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படிந்து செயற்படுவதானது தனிப்பட்ட ரீதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என கூறியுள்ள அமைச்சர்கள் எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்த போதிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுத்தது போன்று இந்த சந்தர்ப்பத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துஇ 13வது அரசியல் அமைப்புத் திருத்;தத்தை அமுல்படுத்தினால், அதனால் ஏற்படப்படப் போகும் சாதக பலன்களை ஜே.வி.பி பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிசானா விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் அதிகரிப்பு.
சவூதியில் சிசுவொன்றைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிசானா நபீக் எனும் யுவதி விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.ரிசானாவினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த ரிசானாவின் மரண தண்டனையை பல்வேறு தரப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கடும் அழுத்தங்கள் காரணமாக அந்நாட்டு மன்னர் ஒத்தி வைத்திருந்தார்.
அத்துடன் கொலை செய்யப்பட்ட சிசுசின் பெற்றோரை சமாதானப்படுத்தி ரிசானாவுக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும்  அரசாங்கமும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த காலங்களில் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.கொலை செய்யப்பட்ட குழந்தையின்  பெற்றோர்  இருவரும் ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்கினால்இ விடுதலை செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதே நேரம் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கும் பட்சத்தில் குறித்த நட்டஈட்டுத் தொகையை வழங்கத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
சனல் 4 'இலங்கையின் படுகொலைக்களம்' படத்தை கவனமாக பரிசோதிப்போம் - ஹெகலிய ரம்புக்வெல்ல.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரில் நிகழ்ந்தவை தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை நிபுணர்களை வைத்து பரிசோதிக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட சனல் 4-ன் 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இப்படம் நேற்று வெளியிடப்பட்டது.  
இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அளித்த பேட்டியில்," இந்த ஆவணப் படத்தை நாங்கள் மிகவும் கவனமாக பரிசோதிப்போம். எங்களது தடயவியல் நிபுணர்களும், வெளிநாட்டு நிபுணர்களும் பரிசோதனையில் ஈடுபடவுள்ளனர். அதற்குப் பிறகு இதுகுறித்து பதில் தெரிவிப்போம். 
அதற்குள்ளாக பதில் கூறுவது காலத்துக்கு முந்தைய செயலாக அமையும். 2009-ம் ஆண்டிலும் சனல் 4 இதுபோன்ற வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அது போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
அதேநேரத்தில், தற்போது வெளியாகியுள்ள ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆவணப் படம், இலங்கை இராணுவத்தின் மீது சர்வதேச அளவிலும், உள்ளூர் மட்டத்திலும் தவறான பார்வையை ஏற்படுத்தாது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சனல் 4 ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் உண்மை என்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீதான குற்றச்சாட்டு உச்சக்கட்டத்தில் - ரஷ்ய, சீன தலைவர்களுடன் ஜனாதிபதி பேசவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கின்ற முக்கிய நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா நாட்டு தலைவர்களுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சேர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.ரஷ்யாவில் நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் உலக பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நாளை ரஷ்யா செல்கிறார்.இந்த மாநாட்டில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஆதரவான பல நாடுகள் பங்குபற்றவுள்ளன.இதன் போது, ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மிட்விடேவ், சீன ஜனாதிபதி ஹ{ ஜிண்டாவோ உள்ளிட்ட தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மீதான யுத்தக் குற்றச்சாட்டுகள் உச்சமடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரவு பூரண சந்திர கிரகணம்!
பெளர்ணமி தினமான இன்று சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால்- கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்- நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின்- அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர்.இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால்- அது மறைக்கப்படுகிறது.அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதியின் அனுமதியுடனேயே சரத் பொன்சேகாவிற்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன: சட்டமா அதிபர் திணைக்களம்.
ஜனாதிபதியின் அனுமதியுடனேயே சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் தண்டனைகளை விதித்துள்ளதால் அதனை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குக் கிடையாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.தனது பட்டம் மற்றும் பதக்கங்கள் பறிக்கப்பட்டதற்கு எதிராக சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்திருந்த முறைப்பாட்டின் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பதவியில் இருப்பவர் எடுக்கும் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் மூலமும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஜனாதிபதி நியமித்த இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை நீதித்துறையினால் கேள்விக்குட்படுத்த முடியாது. எனவே அத்தண்டனையிலிருந்து நிவாரணம் கோருவதாயின் ஜனாதிபதியிடமே அதற்காக கருணை மனுச் செய்ய வேண்டும் என்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வாதாடியுள்ளார்.வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கடும் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது: கயந்த கருணாதிலக எம்.பி.
அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கடும் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.நாடு எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் அரசாங்கம் இரட்டைத் தன்மையுடனான போக்கைக் கடைப்பிடிப்பதே சர்வதேச சமூகத்தின் அதிருப்தியைச் சம்பாதிப்பதற்கான பிரதான காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
அரசாங்கம் தனது எதிராளிகளை அடக்குவதற்காக நாடு முழுவதும் அரச அடக்குமுறை மற்றும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டமும், ஒழுங்கும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின் அனைவரையும் இணைத்துக்கொண்டு பகைமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக முறையில் அமைதியானதும், சட்டத்தை மதிப்பதுமான ஆட்சியொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருந்தால் நாடு இன்று எதிர்நோக்கும் நிலைக்கு முகம் கொடுத்திருக்க நோ்ந்திருக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 கிலோகிராம் அரியவகை கடற்குதிரைகள் மீட்பு!

இலங்கைக்கு கடத்திச் செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் 3 கிலோகிராம் அரியவகை கடற்குதிரைகளை இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை, காயவைக்கப்பட்ட கடற்குதிரைகளை கடத்திச் செல்லமுற்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் இராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் கைது செய்துள்ளனர். 

சிவா, குமரகுரு மற்றும் நவஜீவா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களிடமிருந்து இரண்டாயிரத்து 509 காயவைக்கப்பட்ட கடற்குதிரைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடற்குதிரைகளை பிடிப்பது சட்டவிரோதமாகும். கடற்குதிரை மருத்துவக் குணமுடையதென்பதால் சீனா, தாய்வான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இதற்கு சிறந்த கிராக்கி உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏவுகணைகளை வீசி தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா ரகசிய திட்டம்.
ஏமனில் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்து வருகின்றனர். எனவே அவர்களை அழிக்க அமெரிக்காவின் உளவுத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.பாகிஸ்தானில் வசிரிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா தனது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி அழித்து வருகிறது.அதே போன்று ஏமனிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க ரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் கிடைக்கப் பெற்றது மோனாலிசாவின் எலும்புகள் தானா?
இத்தாலியில் வாழ்ந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி(கி.பி 1452-1519). இவர் வரைந்து உலகப் புகழ் பெற்று ஓவிய வரலாற்றில் அழியாத இடம் பிடித்தது "மோனாலிசா" ஓவியம்.அமைதி, இன்பம், சோகம், உற்சாகம் என்று எந்த மனநிலையில் இருந்து பார்க்கிறோமோ அதே உணர்வை பிரதிபலிப்பதாக புகழப்படும் ஓவியம்.
இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் 1503ல் இந்த ஓவியத்தை வரைய ஆரம்பித்தார் டாவின்சி. இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் லிசா டெல் ஜியோகாண்டோ. இத்தாலியின் டஸ்கனி நகரில் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது கணவரது ஏற்பாட்டின் பேரில் அவரது அழகு ஓவியத்தை டாவின்சி வரைந்தார். ஓவியத்துக்கும் லிசாவின் பெயரே வைக்கப்பட்டது.லிசா டெல் ஜியோகாண்டோ இறந்தது 1542ம் ஆண்டா, 1551ம் ஆண்டா என்பது சரியாக தெரியவில்லை. பிளாரன்ஸ் நகரில் அவர் இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இத்தாலியின் போலக்னா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு துறை பேராசிரியர்கள் சமீபத்தில் பிளாரன்ஸ் நகரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் வயதான பெண் ஒருவரது மண்டை ஓடு, இடுப்பு எலும்புகள் கிடைத்துள்ளன. இவை லிசா ஜியோகாண்டோவின் எலும்புகளாக இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.லிசாவின் பிள்ளைகள் சடலம் இதே பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து டி.என்.ஏ சோதனை நடத்தப்பட உள்ளது. கிடைத்திருப்பது லிசாவின் எலும்புகள் தான் என்பது டி.என்.ஏ சோதனையில் தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அரசு அலுவலகங்களின் மீது துப்பாக்கி சூடு: 8 பேர் பலி.
ஈராக்கில் தியாலா மாகாணத்தில் உள்ள பாகுபா நகரில் அரசு அலுவலகங்கள் உள்ளன. நேற்று அங்கு அல்கொய்தா தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியுடன் புகுந்து சரமாரியாக சுட்டனர்.உடனே ராணுவ வீரர்களும், பொலிசாரும் அங்கு விரைந்து சென்றனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் விரைந்தன. இவர்கள் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
அப்போது அரசு அலுவலகங்கள் மீது வட்டமிட்டபடி பறந்த ஹெலிகாப்டர்களில் இருந்தும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்போது தற்கொலை படை தீவிரவாதிகள் அரசு அலுவலகத்துக்குள் 2 குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தினர்.இதற்கிடையே 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சண்டை ஓய்ந்தது. இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் காயம் அடைந்தான். மேலும் அங்கு நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு அரசு அலுவலகங்கள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தனர். இச்சம்பவம் காலை 9.30 மணிக்கு நடந்தது. அதில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். கார்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.கடந்த மார்ச் மாதம் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் அரசு அலுவலகங்களில் புகுந்து இதுபோன்று தாக்குதல் நடத்தினர். அதில் 56 பேர் பலியாகினர்.
இன்று முழு சந்திரகிரகணம்: மக்கள் பார்த்து ரசிக்கலாம்.
இன்று முழு சந்திரகிரகணம் ஏற்படுகின்றது. கடந்த 10 ஆண்டு காலத்தில் நீண்ட நேரம் நீடிக்கும் கிரகணமாக இது இருக்கும். இந்த கிரகணகத்தின் போது நிலா முழு சிவப்பாக மாறி இருக்கும்.இந்த காட்சி பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். நிலா வான் உச்ச நிலைக்கு வருவதற்கு முன்பே கிரகணம் ஏற்பட தொடங்குவதால் துவக்க நிலை கிரகணத்தை ஐரோப்பியர்கள் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
சந்திர கிரகணம் பிரிட்டன் நேரப்படி மாலை 6.24 மணி முதல் நள்ளிரவு வரை நீடிக்கிறது. பிரிட்டனில் சூரிய அஸ்தமனம் இரவு 9.19 மணி வரை நீடிப்பதால் கிரகண துவக்கத்தை காண முடியாது.
பூமியின் நிழல் நிலவில் படிவதால் கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணத்தை ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதி மக்கள், மத்திய ஆசியா, மேற்கு அவுஸ்திரேலியா மக்கள் முழுமையாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் அங்கு வெளிச்ச நேரத்தில் நடைபெறுவதால் காண முடியாது.பொதுவாக சூரிய ஒளி முலம் நிலா பிரகாசம் பெறுகிறது. சந்திரன் எனப்படும் நிலா, பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. சந்திரகிரகணத்தின் போது பூமி நிழல் முழுவதும் மறைப்பதால் நீலம், சிவப்பு, கறுப்பு, பழுப்பு என ஏதேனும் ஒரு நிலையை பெறுகிறது.

பேஸ்புக்கின் மூலம் உரையாடிய பெண் நீதிபதிக்கு சிறைத் தண்டனை.
60 லட்சம் பவுண்ட் போதை மருந்து வழக்கில் தொடர்புடைய நபருடன் பேஸ்புக்கில் உரையாடிய பெண் நீதிபதிக்கு சிறை தண்டனை கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குற்றச்சாட்டில் சிக்கி உள்ள மான்செஸ்டரை சேர்ந்த 40 வயது பெண் நீதிபதி ஜோனே பிரெயில் நீதிமன்ற அவமதிப்பு மேற்கொண்டதாகவும் ஒப்புக் கொண்டார். வழக்கில் தொடர்புடைய பெண்ணிடம் நீதிபதிக்குழுவில் இருந்த பிரெயில் பேசிய விவரம் தெரிய வந்ததும் நீதிபதி குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பேஸ்புக்கை பயன்படுத்தி நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்ட முதல் பிரிட்டன் பெண் என்ற அவப்பெயரும் அந்த பெண் நீதிபதிக்கு கிடைத்தது. 3 குழந்தைகளுக்கு தாயான நீதிபதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதும் அடக்க முடியாமல் கதறி அழுதார்.
அவருக்கு சிறைத் தண்டனை அபாயமும் உள்ளது. வழக்கு விடயத்தில் நீதிபதிகள் சில தீரப்புகளை இன்னும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் வழக்கு நபருடன் பேசியதை பிரெயில் ஒப்புக்கொண்டார்.நீதிபதிகள் தரப்பில் வழக்கு குறித்து விவாதிக்கப்பட்ட விவரங்களையும் அந்த பெண்ணுடன் பகிர்ந்து கொண்டதை நீதிபதி ஒப்புக்கொண்டார். போதை மருந்து வழக்கில் இடம்பெற்று இருந்த 32 வயது பெண் ஜாமி செவாரட்டுடன் நீதிபதி பிரெயில் பேஸ்புக் மூலமாக பேசினார்.
குறிப்பிட்ட பெண் இந்த வழக்கில் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்ட போதும் வழக்கில் இன்னும் தீர்ப்புகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் பிரெயில் அந்த பெண்ணுடன் பேசிய விவரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.வழக்கு உச்ச கட்ட நிலையில் இருக்கும் போது வழக்கு நபருடன் பேசியது தவறு. எனவே பெண் நீதிபதி பிரெயில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இல்லலை என தலைமை நீதிபதி லார்ட் ஜட்ஜ் தெரிவித்தார்.
அமெரிக்க உளவுத்துறைக்கு உதவியதாக கருதப்படும் நபர் கைது.
அல்கொய்தா தலைவர் பின்லேடன் தங்கி இருந்த மாளிகையை கண்காணிப்பதற்காக அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் உரிமையாளரை பாகிஸ்தானின் உளவுத்துறை கைது செய்துள்ளது.பின்லேடனை அமெரிக்கா கொல்வதற்கு முன்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் பாகிஸ்தானியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர் என அந்த அதிகாரி தெரிவித்தார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
பின்லேடன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக சி.ஐ.ஏ.க்கு தகவல் அளித்தவர்கள் எனக் கருதப்படும் 5 பேர் ஐ.எஸ்.ஐ.யால் கைது செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தானில் உள்ள மேற்கத்திய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக அந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்னவாயிற்று என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க இஸ்லாமாபாத்துக்கு கடந்த வாரம் வந்திருந்த சி.ஐ.ஏ இயக்குநர் லியோன் பெனட்டா இந்த விவகாரத்தை எழுப்பியதாக அமெரிக்க அதிகாரிகள் அந்த பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
பாலஸ்தீனம் தனி நாடாக உருவெடுக்க ஜேர்மனி ஆதரவு: அமைச்சர் தகவல்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் ஒரு தரப்பினரை மட்டும் பாதிக்கும் நடவடிக்கைக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.லிபியாவில் திடீர் பயணம் மேற்கொண்ட ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இஸ்ரேலில் ஒரு நாள் இருந்தனர்.
அப்போது பாலஸ்தீன விடயத்தில் ஒரு சார்பு செயல்பாடு அமைதி நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் மற்றும் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சி குறித்து குய்டோ வெஸ்டர்வெலே கூறுகையில்,"பாலஸ்தீன மக்கள் தனி நாடு பெறுவதை ஜேர்மனி ஆதரிக்கிறது" என்றார்.
அமைதி நடவடிக்கையில் ஒருசார்பு நிலை அமைதிப்பேச்சு வார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே கூறினார். பாலஸ்தீன பிரதமர் சலாம் பயாத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் குய்டோ இவ்வாறு தெரிவித்தார்.குய்டோ வெஸ்டர்வெலே ஜெருசலத்ததின் ஆலிவ்ஸ் மலைப்பகுதியில் முதலில் தனது பயணத்தை துவக்கினார். பின்னர் அவர் பாலஸ்தீனர்கள் உள்ள மேற்குகரைப் பகுதிக்கு சென்றார். ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதற்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பகுதியின் அமைதியை பாதிக்கும் என்றும் ஜேர்மனி மீண்டும் வலியுறுத்தியது. குய்டோ வெஸ்டர்வெலேவுடன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டிரிக் நெபல் சென்றுள்ளார்.அவர்கள் செவ்வாய்க்கிழமை காசா திட்டுப்பகுதிக்கு சென்றார்கள். அங்கு பாலஸ்தீனர்களுக்கு உதவ கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. காசா திட்டுப்பகுதியில் பள்ளிகள் அமைக்க 30 லட்சம் யூரோ உதவி அளிக்கும் அறிவிப்பை நெபல் வெளியிட்டார்.
அவுஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு: ஆய்வில் தகவல்.
அவுஸ்திரேலியாவில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்க உலகளவில் மாணவர்கள் போட்டி போட்டு வந்தனர். இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்கள் பலர் அங்கு சென்று பகுதி நேரமாக ஓட்டல்களிலும், பெட்ரோல் நிலையங்களிலும் வேலை பார்த்து வந்தனர்.
இரவு நேரத்தில் பணி முடித்து வீடு திரும்பும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்தாண்டு அதிகரித்தது. இதனால் அவுஸ்திரேலிய அரசு விசா விதிகளை கடுமையாக்கியது.மாணவர்கள் என்ற போர்வையில் விசா பெற்று வேலைக்காக நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் தங்குவதை தடுக்க மாணவர்களின் வங்கி கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும்.
மருத்துவமனை உதவியாளர், அழகு கலை நிபுணர் போன்ற பயிற்சிகளுக்கு வருபவர் பயிற்சி முடிந்ததும் அவரவர் நாடுகளுக்கு சென்று விட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளால் தற்போது இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதே போல ஆங்கில மொழி பயிற்சிக்கான கல்விக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் பட்டபடிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தொழில் பயிற்சி படிப்புக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால் விசா நடைமுறைகளை தளர்த்தும்படி கல்வி நிறுவனங்கள் அந்நாட்டு அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
போதை மருந்து கும்பலை ஒடுக்க பொலிசார் திடீர் சோதனை.
எல்லைப் பகுதியில் நடைபெறும் தீவிர போதை மருந்து மற்றும் கிரிமினல் ஓபரேஷன்களை முறியடிக்க மோவக் பகுதியில் ஆர்.சி.எம்.பி.யின் 500 பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர்.செவ்வாய்க்கிழமை நடந்த இந்த அதிரடிச் சோதனையில் மாகாண பொலிசாருடன் உள்ளூர் அமைதிப் படைப்பிரிவினரும் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது டஜன் கணக்கில் நபர்கள் மொன்றியலை சுற்றி கைது செய்யப்பட்டார்கள்.கனேசாடேக் சமூக மக்கள் அளித்த தகவலின் பேரில் பொலிஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 40 நபர்கள் வரை கைது செய்யப்பட்டனர்.
மஜீரினா போதை மருந்து பழக்கம் அதிகம் இருப்பதாக கருதிய பொலிசார் சோதனையின் போது கோகைகன் மற்றும் இதர வகை போதை மருந்துகளும் புழக்கத்தில் விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.சோதனை நடந்த மோவக் சமூகத்தினர் வாழும் பகுதி மொன்றியலின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. 50 இடங்களில் 55 பேர் வரை போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பொலிசாரால் குறிவைக்கப்பட்டனர்.
இந்த அதிரடி வேட்டையில் எவ்வளவு போதை மருந்து கைப்பற்றப்பட்டது என்ற தகவலை அதிகாரிகள் தெரவிக்கவில்லை. மோவக் பகுதியில் போதை மருந்து கடத்தல் சோதனையில் அபாயகரமான துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.சில இடங்களில் மஜீரினா போதை மருந்து செடி வளர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. போதை மருந்தை ஒடுக்க ஆர்.சி.எம்.பி பொலிசார் ஹெலிகாப்டரின் துரித சேவை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடித்தனர்.
இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதற்காக புது வித யுக்திகளை கையாளும் தலிபான்கள்.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான தலிபான் இயக்கம் இப்போது இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக பாகிஸ்தான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.இஸ்லாமிய மதத்தலைவர்களான மெளலவிகள் மூலம் இளைஞர்கள் மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் கராச்சியில் நான்கு பயங்கரவாதிகளை பொலிசார் கைது செய்தனர். இவர்களில் இரண்டு பேர் தற்கொலைப்படை தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் தலிபான் அமைப்பு தெஹ்ரீக் இ தலிபான் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க மெளலவிகள் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்கள் தொழுகைக்கு வரும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களிடம் பேச்சு கொடுத்து பின்னர் படிப்படியாக பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்து விடுகின்றனர்.இவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் வஜிரிஸ்தான் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவோர் அனைவருமே தற்கொலைப்படை தீவிரவாதிகளாகின்றனர்.
இது தவிர இளைஞர்கள் சிலர் கட்டாயமாக கடத்தப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்க்கப்படுவதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தெஹ்ரீக் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வக்கார், அர்ஷத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக வெளியான புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து பொலிசார் சோதனை மேற்கொண்டு இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களைக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நான்கு நாள் காவலில் வைக்குமாறு கூறினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை உயரதிகாரி பயாஸ் கான் தெரிவித்தார்.
இவர்களிருவர் கைது செய்யப்பட்ட விவரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸ் உயர் அதிகாரி செளத்ரி அஸ்லாம் பொலிசார் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்க தலிபான் தீவிரம் காட்டி வருவது புலனாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தலிபான் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றிய விவரமும் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து 20 கிலோ எடையுள்ள வெடிமருந்துப் பொருள்கள், 20 அடி நீளமுள்ள டெட்னேட்டர் வயர்கள், 2 கையெறி குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், 200 தோட்டாக்கள், வெடிகுண்டு செய்வதற்குத் தேவையான பொருள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.இந்த ஆண்டு தொடக்கத்தில் சி.ஐ.டி அலுவலக வளாகத்தில் குண்டு வைத்த சம்பவத்தில் இவர்களிருவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக செளத்ரி தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வக்கார் அகமது, அர்ஷத் கான், அப்துல் ரஸாக் மற்றும் இவர்களுக்கு உதவி செய்தவர், ரஷீத் இக்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிராண்டியர் காலனி எனுமிடத்தில் உள்ள இடுகாட்டில் இவர்கள் பதுங்கியிருந்தனர்.வாலி மெஹ்சூத் தலைமையில் தான் செயல்பட்டதாக பொலிசாரிடம் ரஸாக் தெரிவித்தார். தற்கொலைப் படை தாக்குதலை நிறைவேற்றுவதில் முக்கியமானவராகக் கருதப்படும் கியாரி ஹுசேனுக்கு அடுத்த தலைவர்தான் வாலி மெஹ்சூத். இளைஞர்களை இயக்கத்தில் சேர்ப்பதில் அதிக முயற்சியெடுத்தவர் ஹுசேன்.
இளைஞர்களை தற்கொலைப் படை பயங்கரவாதியாக மாற்ற பயிற்சி அளிப்பது, குறிப்பிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்த குறி வைப்பது, மிரட்டி நிதி சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கும் இளைஞர்களை பயன்படுத்தியுள்ளார். 2009ம் ஆண்டில் இவரால் கடத்தப்பட்ட 6 இளைஞர்கள் வஜிரிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.இவர்களில் நான்கு பேரான இபாதுல்லா, ஆரிப், அப்துல் காதிர், ஹஸ்ரத் அலி ஆகியோர் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர். 22 வயதான வக்கார் அகமதுவுடன் பிறந்தவர்கள் 6 பேர். இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது சகோதரர் மருத்துவமனையில் பணி புரிவதாக பொலிசார் தெரிவித்தனர்.
சர்வதேச நிதியமைப்பின் தலைவர்: லகார்ட் - அகஸ்டின் பரிசீலனை.
சர்வதேச நிதியமைப்பின் தலைவர் பதவிக்கு தற்போது பிரான்சின் கிரிஸ்டீன் லகார்ட் மற்றும் மெக்சிகோவின் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ் ஆகிய இருவரிடையே மட்டும் போட்டி நிலவுகிறது.ஐ.எம்.எப்.பின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதன் பின் அந்நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியது.தலைவருக்கான போட்டியில் இந்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் அலுவாலியா சிங் உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் பிரான்ஸ் நிதியமைச்சர் கிரிஸ்டீன் லகார்ட், மெக்சிகோ மத்திய வங்கியின் கவர்னர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், இஸ்ரேல் மத்திய வங்கித் தலைவர் ஸ்டேன்லி பிஸ்சர் ஆகிய மூவருக்கிடையில் கடும் போட்டி நிலவியது.
லகார்டுக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போட்டியில் ஆசிய நாட்டைச் சேர்ந்த நிபுணர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒருமித்து எழவில்லை. அதனால் வழக்கம் போல் ஐ.எம்.எப்.பின் தலைவராக ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் தான் வர வாய்ப்புள்ளது.ஐ.எம்.எப் தலைவருக்கான போட்டியில் மொத்தம் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 10ம் திகதி மனு தாக்கலுக்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தலைவர் போட்டிக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் லகார்ட் மற்றும் கார்ஸ்டென்ஸ் இருவர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இஸ்ரேலின் பிஸ்சர் இடம் பெறாதது குறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தென் ஆப்ரிக்க அமைச்சர் மற்றும் கஜகஸ்தான் மத்திய வங்கித் தலைவர் இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதுகுறித்து ஐ.எம்.எப் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இரு வேட்பாளர்களுடனும் நிர்வாகக் குழு கூடி ஆலோசிக்கும். அதன் பின் தேர்வு நடக்கும்" என்றார். இதில் மெக்சிகோவின் அகஸ்டோ முந்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
காதுகள் இல்லாத முயல்: ஜப்பானில் மக்கள் பீதி.
ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்ட பின் கடந்த மாதம் காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளதாக செய்திகள் படத்துடன் வெளியாயின.இதனால் ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சு குறித்த பீதி அதிகரித்துள்ளது. ஜப்பானின் புகுஷிமா டச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அடுத்து கதிர்வீச்சு உருவானது.அணுமின் நிலையத்தைச் சுற்றி 50 கி.மீ பரப்பளவுக்கு வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் ஒரு சிலர் அந்த பரப்பளவில் இன்னும் வசித்து வருகின்றனர்.
அணுமின் நிலையத்தில் இருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள நாமியீ என்ற சிறிய நகரில் வசித்து வரும் யுகோ சுகிமோட்டோ என்ற பெண்ணின் வீட்டில் கடந்த மே மாதம் 7ம் திகதியன்று காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது.அதோடு அல்பினிசம்(வெண்தோல் நோய்) என்ற நோய் காரணமாக அதன் கண்கள் மிகவும் சிவந்து காணப்படுகின்றன. மரபணுக்களில் சிதைவு ஏற்பட்டால் தான் அல்பினிசம் போன்ற நோய்கள் வரும்.
இதுகுறித்து சுகிமோட்டோ கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக முயல் வளர்த்து வருகிறேன். ஆனால் இப்போது தான் முதன் முறையாக இதுபோன்று காதுகளே இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது. இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகளை அதற்கு நான் கொடுப்பதில்லை. அந்த முயல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது.முயல் குறித்த செய்திகள் படத்துடனும், வீடியோவுடனும் வெளியான பின் ஜப்பானில் கதிர்வீச்சு குறித்த பீதி மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் இதுபோன்ற குறைபாடுகளுடன் மிக அரிதாக விலங்குகள் பிறப்பது இயற்கை தான். கதிர்வீச்சுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அதேநேரம் நேற்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி(டெப்கோ)வெளியிட்ட செய்திக் குறிப்பில் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள கடல் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 240 மடங்கு கதிர்வீச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தின் அருகில் நிலத்தடி நீரில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட "ஸ்ட்ரோன்டியம்" என்ற வேதியியல் தனிமம் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இத்தனிமம் உடலில் கலந்தால் எலும்பு புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தும். டெப்கோவின் இந்த அறிவிப்பும் காதுகள் இல்லாத முயல் பிறந்ததும் தற்போது ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய பீதியைக் கிளப்பி விட்டுள்ளன.
சீனாவின் உதவியுடன் அணு ஆயுதங்களை தயாரிக்கும் பாகிஸ்தான்.
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக வாசிங்டனில் நடைபெற்ற வெளியுறவுத்துறை குறித்த கருத்தரங்கில் அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார். சீனா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் நீண்ட கால நட்புறவே இதற்கு உதாரணமாகும் என தெரிவித்தார்.மேலும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிகாரி ஜான் கெர்ரி பேசுகையில்,"கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் சீனா தலைசிறந்த நட்பு நாடு" என்று பாராட்டியுள்ளதையும் குறிப்பிட்டார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF