Wednesday, June 29, 2011

இன்றைய செய்திகள்.

மன்னாரில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அகழ்வுப் பணிகள் ஆகஸ்டில் ஆரம்பம்!
மன்னாரில் எண்ணெய் அகழ்வுப்பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய எண்ணெய் நிறுவனமான கெயின் இந்தியா (Cairn India) அறிவித்துள்ளது. இலங்கையுடன் இணைந்து கெயின் லங்கா என்ற புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்துள்ள கெயின் இந்தியா, அந்த நிறுவனத்தின் ஊடாக இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. 

மன்னார் கடலுக்கடியில் 30,000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உள்ளதாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சித் தகவல்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த கடற்பரப்பை எட்டாகப் பிரித்துள்ள அரசாங்கம் அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கின்றது. இவ்வாறு எட்டாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றை இந்தியாவிற்கும், மற்றொன்றை சீனாவிற்கும் கடந்த 2007ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்துள்ளது. 

ஏனையவற்றையும் குத்தகையிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள பகுதியில் நான்கு கிணறுகளை அகழவுள்ளதாகவும், ஓகஸ்ட் மாதம் முதல் அடுத்த 4 மாதங்களிற்கு இந்தப் பணி இடம்பெறும் எனவும் கெயின் இந்தியா அறிவித்துள்ளது. இந்த நான்கு மாதங்களில் எண்ணெய் அல்லது எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அடுத்த இரண்டு வருடங்களில் எவ்வளவு தொகை இருக்கின்றது என்பதைக் கண்டறிய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியும்பட்சத்தில், வர்த்தக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிக்க அடுத்த 6 வருடங்கள் தேவைப்படும் என, கெயின் இந்தியா நிறுவனத்தின் வல்லனர் ஸ்ருவட் பேர்லி (Stuart Burley) தெரிவித்தார். 

1960 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவும், ரஸ்யாவும் இவ்வாறான அகழ்வுக்கான ஆராய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த போதிலும், எண்ணெய் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், பின்னர் ஆரம்பித்திருந்த போர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்பொழுது தமிழர் நிலத்திலுள்ள எண்ணையைக் குறிவைத்துள்ள அரசாங்கம், எண்ணெய் அல்லது எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் அதன் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியீட்ட முடியும் என கணக்கிட்டுள்ளது. மன்னாரில் 30000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் ஒரு பில்லியன் கொள்கலன் (Barrels) எண்ணை இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், எண்ணை வளமற்ற இலங்கை கடந்த 2009ஆம் ஆண்டு மட்டும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணையை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களின் கோரிக்கை நியாயமானவை - மன்மோகன் சிங்.

இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானவையே என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் நடப்பவை உள்ளூர் பரிமாணம் எனவும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பொன்றிலேயே இன்று இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இவ்விடயம் குறித்து தான் கலந்துரையாடியதாகவும் ஜெயலலிதா சிறந்த ஒத்துழைப்புடனும் இப்பிரச்சினையின் சிக்கல்தன்மையை உணர்ந்திருப்பதாகவும் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார்

பங்களாதேஷுடனான நல்லறவு குறித்து தெரிவித்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிகளை அடக்குவதற்கு அரசாங்கம் உதவியதாக தெரிவித்ததுடன் பங்களாதேஷுக்கு விஜயம் செய்ய தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்தவாரம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்து முக்கிய இருதரப்பு விவகாரங்கள்குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாது! இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு.

இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாதெனவும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடன்தான் எதையும் அணுக வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் இன்று அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் பாகிஸ்தான்- சீனா- பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளுடனும் அவ்வாறான போக்கினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர்- ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும்- சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என்னையும் சரத்தையும் பிரித்தது இந்திய உளவுத்துறையே: இந்தியாவை சாடும் மஹிந்தர்!

இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பச்சாதாபப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே இராணுவத் தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடத்தி விட்டது. அதன் பின்பு ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும். சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு அதனை நான் ஏற்றுக் கொண்டேன். அவ்வாறின்றி அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும். 


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர். அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். 


இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 17ம் திகதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், சரத் பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவு என்பவற்றுக்கு அருகில் நெருங்கவும் முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர். 


வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்றவாறு கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலையுடன் அசைபோட்டுள்ளார். சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதி இந்தளவுக்கு இறங்கி வரக் காரணம் அரசியல்வாதிகள் சிலர் சரத் பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் என்றவாறாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

மலேசியாவில் இருந்து 300 பேருடன் புறப்படத் தயாராகும் படகு!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுவோரால் கொள்வனவு செய்யப்பட்ட படகு ஒன்றில், 300 பேர் கொண்ட குழுவொன்று மலேசியாவிலிருந்து புறப்படத் தயாராகவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் படகின் இயந்திரம் பழுதுபடாத சந்தர்ப்பத்தில், இந்தக் குழுவினர் அவுஸ்திரேலியா அல்லது கனடாவின் கரையோரத்தைச் சென்றடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தோனேசியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்தப் படகானது யூலை மாதத்தின் நடுப்பகுதியில் தனது பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் படகு ஏற்கனவே பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நாளில் புறப்படவில்லை. வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களாலேயே முன்னைய பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக பயணத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். 


தாய்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த ஆட்கடத்தல் நடவடிக்கையில், தெகிவளையை வசிப்பிடமாகக் முகவரியாகக் கொண்ட வவுனியாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் இவரது உதவியாளரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம், பிரித்தானியக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ள முன்னாள் யாழ்ப்பாண வாசியான சதீஸ் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூவர் தொடர்பாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் குடிவரவு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் படகில் பயணம் மேற்கொள்ளவுள்ள 300 பேரில் அதிகளவானோர் சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல. பயங்கரமானதும் ஆபத்துமிக்கதுமான கடற்பயணத்திற்காகக் காத்திருக்கின்ற இவர்களில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ளனர். 


மேற்குறிப்பிட்ட மூன்று ஆட்கடத்தல்காரர்களிடம் படகில் பயணம் செய்வதற்காக பயணிகள் ஒவ்வொருவரும் 20,000 அமெரிக்க டொலர் வரை கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். இவர்களில் சிலர் தமக்கான கட்டணத்தை சிறிலங்காவிலும், ஏனையோர் சிறிலங்கா மற்றும் மலேசியா ஆகிய இரு இடங்களிலும் செலுத்தியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொக்கோஸ் தீவை அடைந்ததும், அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி கேட்கும் போது படகில் உள்ள அனைவரும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் எனப் பதிலளிக்க வேண்டும் என்றும் இந்தப் பயணிகளிடம் பயண முகவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கோரியுள்ளது.இல்லையேல் சர்வதேச அழுத்தங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் இலங்கை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை அடங்கிய அறிக்கை, நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.இவ்வாறான விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், இலங்கை தமக்கு எதிராக வேறு நடவடிக்கைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் போது இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான காணொளிக் காட்சிகளை அடுத்தே அமெரிக்கா, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி! மக்கள் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும்.போர்க்காலத்திலும் சரி அதற்குப் பிந்திய காலத்திலும் சரி போரின் வலியைத் தாங்குபவர்கள் பொது மக்களே. வடக்கு கிழக்குத் தமிழர்களின் வரலாறு இதைத் தான் எடுத்துக் கூறுகிறது. இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட யேர்மன், யப்பான் மக்கள் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்கள்.
பதினைந்து வருடம் சென்றாலும் இன்னும் அமைதி நிலைக்குத் தமிழர் வாழ்வு திரும்பவில்லை. இதற்கு இராணுவ ஆட்சி முதற் காரணமாக இடம் பெறுகிறது. வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. கிடைத்த சுதந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக இழந்து விட்டார்கள்.இராணுவ ஆட்சியின் முக்கிய அம்சமாக தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள் சர்வ வியாபியாக நுளைந்து விட்டார்கள். தமிழர்களுக்குப் பிரத்தியேக வாழ்வு கிடையாது. பிறர் அறியாமல் அவர்களால் ஒன்றையும் செய்ய முடியவில்லை.
இராணுவப் புலனாய்வாளர்களின் நுளைவு எல்லா மட்டத்திலும் காணப்படுகிறது. பொது வாழ்வில் ஈடுபடும் அனைவரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். அரச ஊழியர்கள் இராணுவக் கட்டுப் பாட்டில் பணியாற்றுகிறார்கள். பள்ளி நிர்வாகங்கள் இராணுவத்திற்குப் பதில் கூறும் நிலையில் இருக்கின்றன.தமிழர்களுக்கு இராணுவத்தை விட இன்னும் சில எசமானர்கள் இருக்கிறார்கள். இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் பாசாங்கு செய்தபடி தமது வயிற்றை வளர்க்கும் ஒட்டுக் குழுக்களின் அழுத்தங்களையும் மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
விடுதலைப்புலிகளை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்து, காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் மக்களைத் தன் பக்கம் இழுக்க அரசை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு மக்களிடம் நெருங்கிப் பழகிச் சேகரிக்கும் தகவல்கள் இராணுவத்திடம் சென்றடைகின்றன.யாரை நம்புவது, எப்படி வாழ்வது என்று தெரியாமல் தமிழர்கள் தவிக்கிறார்கள். உற்றார் உறவினர்களோடு பேசுவதற்கும் அஞ்சுகிறார்கள். உளவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்.
சந்திகள் தோறும் புத்தர்சிலைகள் அமைக்க அஸ்கிரிய பீடாதிபதி எதிர்ப்பு.
இலங்கையின் சந்திகள் தோறும் புத்தர் சிலைகளுடன் கூடிய வழிபாட்டு மையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.சந்திகள் தோறும் புத்தர் சிலைகளுடன் கூடிய வழிபாட்டு மையங்களை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அவர்  பிரதமர் டீ.எம். ஜயரத்தினவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு சந்திகளில் வழிபாட்டு மையங்களை அமைத்து புத்தர் சிலைகளை வைப்பது புத்த மதத்தின் கோட்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.புத்தர்சிலைகள் அதற்குப் பொருத்தமான இடங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடாதிபதி தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதமர் டீ.எம். ஜயரத்தினவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது – சரத் பொன்சேகா.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வடக்கு அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தி மீண்டும் வடக்கில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.வடக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் சுலபமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்களின் சுய அடையாளங்களை புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.வடக்கில் இருப்பவர்கள் தேவையற்ற விடயங்களையும், இந்தியாவில் காணப்படும் சகல விடயங்களையும் கோரக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மக்களுடன் இணைந்து வாழ வடக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதியாக தெரிவிக்கப்பட்டிருந்த முன்னாள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் பெயருக்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையாளரின் பெயரை குறிப்பிடுவதற்கு அனுமதியளிக்குமாறு சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றில் அனுமதி கோரினார்.இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியது. 
தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை: சாரா பாலின்.
அமெரிக்காவில் 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.முன்னாள் அலாஸ்கா கவர்னர் ஷாரா பாலினும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாரா தேர்தலில் போட்டியிடுவார் என அவரது மகள் கூறுகிறார்.
இது குறித்து ஷாரா பாலின் கூறுகையில்,"2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்கிறார்.ஷாராவின் மகள் பிரிஸ்டன் பாலின் கூறுகையில்,"தனது தாயார் தேர்தலில் பங்கேற்பது குறித்து உரிய முடிவு எடுத்து உள்ளார்" என்றார்.
லோவா பகுதியில் ஷாரா பாலின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த வருகை மூலம் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்த யூகங்கள் அதிகரித்து உள்ளன. லோவா பகுதிக்கு ஒபாமா வருகையையொட்டி ஷாரா பாலின் பயணமும் அமைந்துள்ளது.இங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதியில் தடையை மீறி கார் ஓட்டியதாக 5 பெண்கள் கைது.
சவூதியில் கார் ஓட்டியதற்காக 5 பெண்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக சவூதி சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.செங்கடல் கரையில் உள்ள ஜித்தாவில் கார் ஓட்டியதாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்ததாக சவூதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இமான் அல் நப்ஜான் கூறினார்.
அன்று மாலையே மேலும் 4 பெண்கள் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டதாக அல் நப்ஜான் தெரிவித்தார்.சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு சட்டரீதீயாகத் தடை எதுவும் இல்லை. எனினும் பத்வாக்களின் மூலமாகவும், மூத்த மதகுருக்களின் ஆணைப்படியும் அவர்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளி நிலையத்தை தாக்க வந்த விண் கல்: வீரர்கள் அவசரமாக வெளியேற்றம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 உறுப்பினர் கொண்ட குழு உள்ளது. இந்த வீரர்கள் இருந்த விண்வெளி நிலையத்தை பயங்கர கல் ஒன்று தாக்க வந்ததால் அவர்கள் அவசரமாக வெளியேறினர்.அந்த வீரர்கள் ரஷ்யா சோயுஸ் சிறிய கலத்திற்குள் அவசர நடவடிக்கையாக புகுந்தனர். 820 அடி இடைவெளியில் அந்த விண் கல் விண்வெளி நிலையத்தை தாக்காமல் சென்றது.அபாயகரமான வேகத்தில் கல் வருவதை தொடர்ந்து வீரர்கள் சோயுஸ் சிறிய கலத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர் என ரஷ்யா விண்வெளித் துறை தெரிவித்தது. கடந்த காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து உள்ளன.
அவை அவசர நிலையை ஏற்படுத்தியது இல்லை என மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ரஷ்ய விண்வெளி கட்டுப்பாட்டு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வீரர்கள் சோயுஸ் சிறிய கலத்திற்கு வந்தது அவசர நிலை நடவடிக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நிகழ்வின் போது விண்வெளி வீரர்கள் இது போன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு சிறிது நேரம் வெளியேற வேண்டி இருந்தது.
விண் கல் எந்த நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வந்தடையும் என தெரியாததால் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 3 ரஷ்யர், 2 அமெரிக்கர் மற்றும் ஒரு ஜப்பான் விண்வெளி வீரர் என 6 பேர் உள்ளனர்.ரஷ்ய சோயுஸ் கலம் மூன்று உறுப்பினர்களை பாதுகாக்கும் திறன் படைத்தது. கடந்த 2000ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையம் அருகே இரண்டு சோயுஸ் சிறிய கேப்சூல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
சீனாவில் உணவு திருவிழா: 15 ஆயிரம் நாய்கள் படுகொலை.
சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.
நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும் இதனை கொடுமையாக கருதி நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்தால் நன்றாக இருப்போம்: ஜமைக்கா மக்கள் ஏக்கம்.
பிரிட்டிஷ் காலனியில் இருந்திருந்தால் நல்ல நிலையில் இருந்திருப்போம் என ஜமைக்கா மக்கள் கருதுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கிளினர் என்ற ஜமைக்கா நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் 60 சதவீத மக்கள் பிரிட்டிஷ் காலனியை விரும்புபவர்களாக உள்ளனர். 17 சதவீதம் பேர் இந்த கருத்தை ஏற்கவில்லை.அடுத்த ஆண்டு ஜமைக்கா 50வது சுதந்திர பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது. ஜமைக்காவில் தற்போது வறுமையும் குற்ற நிகழ்வுகளும் தீவிரமாகி உள்ளன.
ஜமைக்காவில் பத்தில் 6 பேர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி நாட்களை நினைவு கூர்கிறார்கள். நாட்டின் 50வது சுதந்திர தினத்தின் போது பிரிட்டிஷ் காலனியுடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ள ஜமைக்கா விரும்புகிறது என பிரதமர் ப்ரூஸ் கோல்டிங் கூறுகிறார்.ஜமைக்கா தீவு 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி தனி நாடாக உருவெடுத்தது. ஜமைக்காவில் அரசியலமைப்பு மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கேட்க இது சரியான நேரம் என பிரதமர் கூறுகிறார்.
ஜமைக்காவில் புதிய தலைவரை எப்படி நியமிப்பது என்றும், பிரித்தானிய ஆலோசனை கவுன்சிலை அகற்றுவது குறித்தும் ஜமைக்காவில் அரசு தரப்பில் விவாதிக்கப்படுகிறது.பிரித்தானிய ஆலோசனை கவுன்சிலுக்கு பதில் ஜமைக்காவில் இறுதி முறையீட்டிற்கு கோர்ட் உருவாகும் முறை குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசிக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேரடியாக ஏவுகணைகளை ஏவக்கூடிய செலுத்திகளை அறிமுகப்படுத்தியது ஈரான்.
 ஈரான் முதன் முறையாக உந்து விசையின் மூலம் ஏவுகணைகளை ஏவக்கூடிய நிலக்கீழ் செலுத்திகளை (Silos) நிர்மாணித்துள்ளதாக நேற்று அறிவித்தது.இந்நிலக்கீழ் அமைப்பின் மூலம் (silos) குறுந்தூர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை இலகுவாக செலுத்த முடியுமென ஈரான் அறிவித்துள்ளது. ஏவுகணைகளை செலுத்துவது மாத்திரமன்றி தயார் நிலையில் வைத்திருக்கக் கூடிய இவ்வமைப்பினை செய்மதிகள் கூட இனங்கண்டு கொள்ள முடியதென ஈரான் அறிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF