Tuesday, June 21, 2011

இன்றைய செய்திகள்.

நாம் சொல்வதை மஹிந்த ராஜபக்ச கேட்க மறுக்கிறார் - தலையிலே கைவைக்கும் மன்மோகன்.

நாம் சொல்வதையும் எமது கருத்துக்களையும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்க மறுக்கிறார். இந்த நிலையில் என்னால் என்ன செய்ய முடியும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் புலம்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.புதிதாகப் பதவியேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுடில்லி சென்ற போது இந்தியப் பிரதமரைச் சந்தித்திருந்தார்.இந்தச் சந்திப்பின் போதே இலங்கை விவகாரம் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட போது மன்மோகன்சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போரின் போது உளவுத் தகவல்கள், செய்மதிப் புகைப்படத் தகவல்கள், ஆயுதங்கள் தொழில் நுட்ப உதவிகள் மற்றும் படையினரின் நேரடியான எல்லா உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு தற்போது இலங்கை தனது பேச்சை கேட்பதில்லை எனப் புலம்புவது அதன் இராஜதந்திர தோல்வியையே காட்டுவதாக என்று இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
ஜே.ஆரை விட மஹிந்தர் கொடூரமான சர்வாதிகாரி: அனுர குமார திசாநாயக்க வர்ணிப்பு.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவை விட இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வர்ணித்துள்ளார்.அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரும் தனக்கும் அரசாங்கத்துக்கும் எதிரானவர்களை அடக்க வன்முறையைப் பிரயோகித்தார். ஆனால் இன்றைய ஜனாதிபதி மஹிந்தவோ அதற்காக அடக்குமுறையையே பிரயோகிக்கின்றார்.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் கல்வித்துறையைக் கூட வருமானமீட்டும் ஒரு துறையாக மாற்றியமைக்கவே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன் மூலம் இலவசக் கல்வியை குழிதோண்டிப் புதைக்கவும் முற்பட்டுள்ளார்.
நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்காக வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு நாட்டு மக்களை அடக்கியாள முற்பட்ட போதிலும்,  தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
தேவையேற்படின் சர்வதேசத்துடன் மோதவும் தயார்: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக தேவையேற்படின் சர்வதேசத்துடன் மோதுவதற்கும் அஞ்சப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சூளுரைத்துள்ளார்.போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச அழுத்தங்கள் தேவையற்ற முறையில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சலித்துக் கொண்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்த சில சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஆயினும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும்.
உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன. இலங்கை விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே சீன மற்றும் ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் இறைமைக்கு எதிரான ஆயுத போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. அதே நேரம் பயங்கரவாத இல்லாதொழிப்பு மூலம் நாடு அடையக் கூடிய நன்மைகளை தெளிவுபடுத்தி உலக நாடுகளை அரசாங்கத்தின் பக்கம் திருப்பும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்களில் தொடர்புடைய படையினருக்குத் தண்டனை வழங்குங்கள்: ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் கோரிக்கை.
வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள படையினருக்குத் தண்டனை வழங்குமாறு ஓய்வு பெற்ற படை அதிகாரிகள் சிலர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர்.அவ்வாறு செய்வதன் மூலமே நாட்டின் தலைமைத்துவம்  மற்றும் இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக 80களில் அனுராதபுரத்தில் சிவிலியன்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட ரஜரட்ட ரைபிள் படைப்பிரிவை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன கலைத்தமை,ஜே.வி.பி உறுப்பினர்களுக்கெதிரான படுகொலைப் புரிந்த பாதுகாப்புப் படையினர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டமை, கிருஷாந்தி கொலைச்சம்பவம், மிருசுவில் கூட்டுப் படுகொலை, போன்ற சம்பவங்களில் தொடர்புடைய இராணுத்தினருக்குத் தண்டனை வழங்கப்பட்டமை போன்ற சம்பவங்களை சுட்டிக் காட்டியுள்ளனர்.
அத்துடன் படைத்தரப்பின் கீழ் மட்ட அதிகாரிகள் கட்டளைத் தளபதிகளுக்குத் தெரியாமலேயே இவ்வாறான போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக நிரூபிக்க முற்படுவதன் மூலம் படைத்தரப்பின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்வதுடன், சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் ஓய்வு பெற்ற படையதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.ஆயினும் முன்னைய அரசாங்கங்கள் போன்று தான் எந்தக்கட்டத்திலும் பாதுகாப்புப் படையினரைக் காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லையென்று கோத்தாபய ராஜபக்ஷ முகத்திலடித்தாற்போன்று பதிலளித்துள்ளார்.
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது: திஸ்ஸ அத்தநாயக்க.
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான சூழல் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனநாயக முறையை விடுத்து நாட்டை இராணுவ மயப்படுத்துவதிலேயே அதிக நாட்டம் கொண்டுள்ளது.  அதே நேரம் ஜனநாயக மரபுகளுக்கு அப்பால் சென்று கட்டற்ற அதிகாரங்களையும் ஜனநாயகத்தின் பேரால் உரித்தாக்கிக் கொள்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்கள் கண்ட இடங்களில் எல்லாம் முளைக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் தென்னிலங்கையிலும் அதே போன்று இராணுவ முகாம்களை அதிகரிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான ஆரம்ப செயற்பாடுகளாகவே கருதப்பட வேண்டியுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிரஸ்தாப ஊடகவியலாளர் மகாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

கோலாகலமாக ஆரம்பமான பிரான்ஸ் விமானக் கண்காட்சியில் முதல் நாளிலேயே அசம்பாவிதம்.

உலகளாவிய ரீதியில் விமான உற்பத்திக் கம்பனிகள் கலந்து கொள்ளும் அடுத்த தலைமுறை விமானங்களின் ஒரு வார கால கண்காட்சி பிரான்ஸின் லீ போர்ட் விமான நிலையத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 

ஆனால் தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே கண்காட்சிக்குக் கொண்டுவரப்பட்டிருந்த ஏர் பஸ் 380 சுபர் ஜம்போ விமானம் மேலே பறந்து பார்வையாளர்களுக்கு தனது சிறப்புக்களைக் காட்டிய பின் தரையிறங்கும் போது,விமான நிலையத்தின் தாழ்வான ஒரு கட்டிடத்துடன் மோதியது. ஏர் பஸ் 380 ரகத்தின் புத்தம் புதிய வடிவமே இவ்வாறு பார்வையாளர்கள் முன்னிலையில் மண்ணைக் கவ்வியது. நல்லவேளை இந்த விமானத்தின் வலது பக்க இறக்கைப் பகுதி தான் கட்டிடத்தில் மோதியது.

இதில் விமானத்தின் 80 மீட்டர் நீளம் கொண்ட இறக்கை முற்றாகச் சேதமுற்றது.இந்தச் சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன் நியுயோர்க் நகர ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் ஏர் பஸ் விமானம் ஒன்று தனியார் ஜெட் விமானம் ஒன்றுடன் மோதியதை அங்கிருந்த பலருக்கும் நினைவூட்டியது.கண்காட்சி என்பதால் இந்த விமானம் அதன் வழமையான வேகத்தைவிட குறைவான வேகத்தில் தரையிறங்கியதால் தான் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்று சமாதானம் கூறப்படுகின்றது. இருந்தாலும் இந்தச் சம்பவம் அதன் உற்பத்தி நிறுவனத்தை பாரிய நெருக்குதலுக்கு ஆளாக்கியுள்ளது.ஐரோப்பிய விமான உற்பத்தித்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் பிரதான கண்காட்சியே இந்த பாரிஸ் கண்காட்சி.

இதில் பிரதான பங்கேற்கும் நிறுவனங்களில் ஒன்று தான் ஏர் பஸ் உற்பத்தி நிறுவனம்.மற்றது போயிங் விமான உற்பத்தி நிறுவனம்.வர்த்தக ரீதியாக இவை இரண்டுமே பிரதான போட்டி நிறுவனங்களாகும். உலகம் முழுவதிலும் இருந்து இங்கு வரும் விமானத் துறையினர் இந்த கண்காட்சியில் விமானங்களைப் பார்த்து விட்டுத் தான் தமது நிறுவனங்களுக்கு எதை வாங்குவது எவ்வளவு வாங்குவது என்று முடிவு செய்வர்.அத்தகைய ஒரு நிகழ்வில் விமானம் விபத்தில் மாட்டுவது வர்த்தக ரீதியாக அந்த விமானத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும். விபத்துக்குள்ளான இந்த ஏர்பஸ் ஏ350-900 2013 நடுப்பகுதியில் வர்த்தக ரீதியாக சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருந்த விமானம்.

இதன் விலை 375.3மில்லியன் டொலர்களாகும். மூன்று பிரிவுகளில் 525 பேர் அல்லது ஒரே பிரிவாக 853 பேர் இதில் பயணம் செய்யலாம்.இந்த ஒரு விமானத்தை நிறுத்தி வைக்க 5146 சதுர அடிகள் கொண்ட பரப்பளவு தேவைப்படும் ஏனைய விமானங்களுக்குத் தேவைப்படும் இடத்தை விட இது 49% அதிகமானது. பாரிஸ் விமானக் னண்காட்சியில் இன்று பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார். குறிப்பு:விடியோ காட்சி அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த விபத்து பற்றியது.



உலகம் முழுவதும் சுமார் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.
உலகம் முழுவதும் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா.வின் துணை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அவர்களில் 80 சதவீதத்தினர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரக அலுவலகம் யு.என்.எச்.சி.ஆர். அதன் சார்பில் கடந்த ஆண்டு இறுதி வரை உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு நடந்தது.அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து அகதிகளாக உலகம் முழுவதும் கடந்த ஆண்டு இறுதி வரை 4.37 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகம். உள்நாட்டு கலவரம், இயற்கை சீற்றங்களால் இடம்பெயர்ந்தவர்கள் இவர்கள். இந்த அகதிகளில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகள். அரபு நாடுகள் சிலவற்றில் இப்போது எழுந்துள்ள கலவரங்களால் இடம்பெயர்ந்தவர்கள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறவில்லை.மொத்த அகதிகளில் 2.75 கோடி பேர் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். 8.4 லட்சம் பேர் அகதிகளாக அங்கீகாரம் கேட்டு வெளிநாடுகளில் காத்திருப்பவர்கள்.
பல்வேறு பிரச்னைகளால் அகதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பழைய இடத்துக்கு திரும்புவது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது குறைந்துள்ளது.அகதிகள் எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த அகதிகளில் அங்கு 30 சதவீதத்தினர் உள்ளனர். 17 லட்சம் எண்ணிக்கையுடன் ஈராக் 2வது இடத்தில் உள்ளது.ஆப்ரிக்க நாடுகளில் 12 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். மொத்த அகதிகளில் 80 சதவீதம் பேர் ஏழை மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்க் நாடுகளை சாக்கடைக்குள் வீசியது ஜ.நா.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ்,நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தோல்வியடைந்த நாடுகள் என்று வெளிநாட்டுக் கொள்கை சஞ்சிகையொன்று வரிசைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் பாகிஸ்தான் 12 வது இடத்திலும்,மியன்மார் 18வது இடத்திலும்,பங்களாதேஷ் 25,நேபாள் 27, இலங்கை 29வது இடத்திலும் உள்ளன.60 நாடுகளைக் கொண்ட வரிசையில் பூட்டான் 50வது இடத்தில் உள்ளது.

இந்த வரிசையில் ஆபிரிக்க நாடுகளே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளன.முதல் பத்து நாடுகள் வரிசையில் சாட்,சூடான்,கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஹாய்ட்டி, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு,ஈராக் ஆகிய நாடுகள் உள்ளன

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் மோசமானவை என்றும்,இலங்கை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்க இதுவோர் முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2010ம் ஆண்டின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்.
விஷம் அதிகம் உள்ள பாம்பை தன் உடலில் கொத்தச் செய்து அமெரிக்க பெண் தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் அலிடா ஸ்டாசி(56) என்ற பெண் வசித்து வந்தார். வீட்டிலேயே பண்ணை போல வைத்து பாம்புகளை வளர்த்து வந்தார்.வீட்டின் ஒரு பகுதியில் தனி கூண்டு அமைத்திருந்தார். தினமும் பாம்புகளுக்கு தீனி போடுவார். 70க்கும் அதிகமான பாம்புகள் அங்கு இருந்தன. இந்நிலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கூண்டுக்குள் அவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.
தகவல் கிடைத்து பொலிசார் விரைந்து சென்றனர். தீனி போடுவதற்காக கூண்டுக்குள் சென்ற அவர் பாம்பு கடித்து இறந்ததாக பொலிசார் கூறினர்.அவரது தோழிகளிடம் விசாரித்ததில் கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்தது தெரியவந்தது. "பிளாக் மாம்பா" என்ற பாம்பை தன் உடலில் கொத்தச் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரியவந்தது. அது கடுமையான விஷம் கொண்டது. தீண்டிய 20 நிமிடத்தில் இறந்து விடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலி எரிமலை வெடிப்பு: அவுஸ்திரேலியாவில் விமான சேவை ரத்து.
சிலியில் எரிமலை வெடித்து சாம்பல்கள் வான்பகுதியில் பரவி வருவதால் வர்த்தக விமானங்கள் அவசரமாக தரை இறங்கின. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர்.சிலியின் ஆண்டஸ் மலைப்பகுதியில் ஜுன் 4ம் திகதி எரிமலை வெடித்தது. இதன் எரிமலைச் சாம்பல் பரவி வருவதால் அவுஸ்திரேலியாவின் 10 நகரங்களில் இன்று விமானங்கள் அவசரமாக தரை இறக்கப்பட்டன.எரிமலை சாம்பல் ஆலோசனை மையத்தின் அறிவுரையின் பேரில் விமானங்கள் தரை இறக்கப்பட்டன. சிலி எரிமலை வெடிப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
எரிமலை சாம்பல் புகை தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி வழியாக பரவி உள்ளது. காண்டாஸ் விர்ஜின் நிறுவன விமானங்கள் நாள் முழுவதும் விமானச் சேவையை நிறுத்தி உள்ளது. அடிலைடு, கான்பெர்ரா, மில்டியுரா பகுதிகளில் விமானச் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.விர்ஜின் விமான நிறுவனம் சிட்னி மெல்போர்ன் பகுதிகளின் விமான சேவையை ரத்து செய்தது. ஜுன் 4ம் திகதி சிலி எரிமலை வெடிப்பு சாம்பல் புகை வான் பகுதியில் 6 மைல் வரை பரவி உள்ளது.சிலி பகுதி தீ வளையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு அபாயங்கள் உள்ளன.
மனித வெடி குண்டாக பயன்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி.
பாகிஸ்தானில் பொலிஸ் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலுக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடி தாக்குதல் சம்பவங்களில் 15 வயதுக்கு குறைவான சிறுவர்களே பயன்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்கொலை படை தாக்குதலுக்காக 8 வயது சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெஷாவரைச் சேர்ந்த 8 வயது சிறுமி சுஹானா. 3ம் வகுப்பு மாணவி.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரு பெண்களும், ஒரு ஆணும் சேர்ந்து இவளை கடத்திச் சென்றனர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவளை மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தனர்.வடமேற்கு எல்லை மாகாணமான கைபர் டிக்தூன்கவா பகுதிக்கு அவளை ஒரு காரில் கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமிக்கு தீவிரவாதிகள் 3 பேரும் கட்டாயப்படுத்து வெடிகுண்டு ஜாக்கெட்டை அணிவித்தனர்.
நாங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும் என அவளை மிரட்டிய அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அவளுக்கு சொல்லி கொடுத்தனர். பின்னர் லோயர் டிர் பகுதியில் உள்ள பொலிஸ் செக் போஸ்ட் அருகே கொண்டு போய் அவளை இறக்கி விட்டனர்.அவள் பொலிஸ் செக் போஸ்டை நோக்கி நடக்க தொடங்கியதும், அவளை அங்கு இறக்கி விட்ட தீவிரவாதிகள் 3 பேரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த சிறுமி பொலிசாரை நோக்கி ஓடிச்சென்று தனக்கு வெடிகுண்டு ஜாக்கெட் அணிவிக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாள்.
உடனே பொலிசார் லாவகமாக செயல்பட்டு அவள் உடலில் இருந்து வெடிகுண்டு ஜாக்கெட்டை வெற்றி கரமாக அகற்றினர். இதனால் அவள் காப்பாற்றப்பட்டதுடன் பொலிஸ் செக் போஸ்டில் ஏற்பட இருந்த உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டன. விசாரணைக்காக சுஹானா கைது செய்யப்பட்டாள். அவள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறாள்.இதுபற்றி மலகாந்த் டிவி ஷன் டி.ஐ.ஜி. குவாஸி ஜமீல் கூறியதாவது: சுஹானா 3ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவாள். அவளுக்கு தனது தந்தை மற்றும் தாயின் பெயர் மட்டுமே தெரிகிறது.அவளது சொந்த ஊர் ஹஸ்த்னக்ரி என்ற போதிலும் தனது வீடு எங்கிருக்கிறது என்று அவளால் சரியாக சொல்ல தெரியவில்லை. அவளது வீட்டை கண்டுபிடிக்க பொலிசார் இதுவரை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சிறுமி காணாமல் போனதாக இதுவரை யாரும் பொலிசிலும் புகார் செய்யவில்லை.
வயிற்று புற்றுநோயால் அவதிப்படும் முபாரக்: வழக்கறிஞர் தகவல்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் உடல் நிலை மிக மோசமாகி வருகிறது. அவர் வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்படுகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.முபாரக் மற்றும் அவரது 2 மகன்களிடம் கிரிமினல் விசாரணை நடைபெற 5 வாரம் உள்ள நிலையில் அவரது உடல் நிலை குறித்து செய்தி வந்துள்ளது.
எகிப்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச நெருக்கடி தீவிரமானதை தொடர்ந்து முபாரக் பதவியில் இருந்து விலகினார். ஜனவரி 25ம் திகதி தலைநகர் கொய்ரோ தாகிர் சதுக்கத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக வெடிபொருட்களை பொலிசார் பயன்படுத்த முபாரக் உத்தரவிட்டார். இது தொடர்பான கிரிமினல் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த குற்றங்களில் முபாரக் நிலை உறுதிப்படுத்தபட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் நிலையும் உள்ளது. இது குறித்து எகிப்து நீதி துறை அமைச்சர் முகமது அப்துல்லசிஸ் கூறுகையில்,"முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் வேதனை அளிப்பதாக உள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்போ மன்னிப்போ தெரிவிக்கவில்லை" என்றார்.
குற்றச்சாட்டில் உள்ள முபாரக்கிற்கு கடந்த 2010ம் ஆண்டு ஜீன் மாதம் பெரும் ஓபரேசன் நடந்தது. இந்த ஓபரேஷன் ஜேர்மனியில் நடந்தது. அவரது கணையம், பித்தப்பை ஆகியவற்றை ஜேர்மனி மருத்துவர் மார்கஸ் வோல்ப் அகற்றினார் என முபாரக்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.இந்த ஓபரேஷன் ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார். எகிப்தில் 30 ஆண்டு ஆட்சி செய்த முபாரக் பெப்ரவரி 11ம் திகதி பதவியை விட்டு விலகினார். ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி கொய்ரோ கிரிமினல் கோர்ட்டில் முபாரக் மற்றும் 2 மகன்களிடம் விசாரணை நடக்கிறது.
விண்வெளியில் குப்பைகளை அகற்றும் செயற்கைகோளை அனுப்ப பிரிட்டன் முடிவு.
உலகின் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 6000ற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.தங்களது ஆயுட்காலம் முடிந்ததும் இந்த செயற்கைக் கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.
ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் சுமார் 5 ஆயிரத்து 500 தொன் குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்தக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க பிரித்தானிய விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கினர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைக்கோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் மூலம் விண்வெளிக் குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள்.இந்தக்குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைக் கோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும்.
பிரிட்டன் சார்பில் லிபிய தாக்குதலில் ஈடுபடும் றொயல் விமானம்.
ஆர்.ஏ.எப் எனப்படும் றொயல் விமானப்படை பிரிட்டன் சார்பில் லிபியா தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.இந்த தாக்குதல் பணி செப்டம்பர் மாதத்திற்கு பின்னரும் தொடர வேண்டி இருந்தால் அவசரநிலைகளுக்கு ஆர்.ஏ.எப் சேவையை பெற முடியாது.
கடுமையான பணிச் சூழலில் வீரர்கள் உள்ளனர் என ஆர்.ஏ.எப் போர் ஓபரேசன் தலைவர் ஏர்மார்ஷல் சர்சைமன் பிரையன்ட் எச்சரித்தார். ஓபரேசனைத் தொடர அவசியம் இருக்கும் சூழலில் பிரிட்டனில் பணியை செய்ய வேண்டி உள்ளது என ஆயுதப்படை பிரிவு அமைச்சர் நிக்ஹார்வி தெரிவித்தார்.ஆர்.ஏ.எப் வீரர்களுக்கு தொடர்ந்து பணி நெருக்கடி உள்ளது. ஆயுதப்படை சேவையானது விமானப்படை ஓபரேசன்களை ஆப்கானிஸ்தானிலும், மத்திய கிழக்கு பகுதியிலும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
ஆர்.ஏ.எப் படைபிரிவின் பல பகுதியில் வீரர்கள் கொந்தளிக்கும் நிலை உள்ளது என்றும் அதன் தலைவர் எம்.பி.க்களிடம் எச்சரித்து உள்ளார். வீரர்களுக்கு அளிக்கப்படும் ஊதியச்சலுகை ரத்து நடவடிக்கை மற்றும் ஊதியக் கட்டுப்பாடு நடவடிக்கையில் அதிருப்தி நிலவுகிறது என்றும் ஆர்.ஏ.எப் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆர்.ஏ.எப் படைபிரிவில் அடுத்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் வீரர்கள் குறைக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு அளவு 15 சதவீதம் ஆகும்.
தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்த நபர் கைது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆட்களை திரட்டிய ஜேர்மானிய நபர் ஆஸ்திரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த ஜேர்மனி தீவிரவாதி ஜேர்மனி வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் யுசுப் ஒ என அடையாளம் காட்டப்பட்டு உள்ளது. அவர் மே 31ம் திகதி ஆஸ்திரியாவில் கைதானார்.கடந்த 2009ம் ஆண்டு ஆண்டு மே மாதம் ஜேர்மனியில் இருந்து 26 வயது யுசுப் ஒ ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை இடையே பயணம் செய்து உள்ளார்.
பின்னர் அதே ஆண்டில் டி.டி.எம் ஜேர்மன் தலிபான் முகாகிதீன் அமைப்பில் சேர்ந்துள்ளார். இந்த இனைஞர் முறைகேடாக வெடி குண்டுகள் மற்றும் ஆயுதங்களை இயக்குவதற்கு பயிற்சி பெற்றார்.இவர் சேர்ந்த டி.டி.எம் தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் மீதும், அரச துருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
தீவிரவாத அமைப்புக்காக இளைஞர் வீடியோவிலும் தோன்றி பிரச்சாரம் செய்துள்ளார். 2011ம் ஆண்டு துவக்கத்தில் யுசுப் ஒ ஐரோப்பா டி.டி.எம் தீவிரவாத அமைப்புக்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.கடந்த வாரம் ஆஸ்திரிய பொலிசார் 4 தீவிரவாத நபர்களை கைது செய்தனர். இதில் ஒருவர் யுசுப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என ஆஸ்திரியா நிர்வாகிகள் கூறினர்.
பாரிஸ் விமான கண்காட்சியில் சூரிய ஒளி விமானங்களின் அணிவகுப்பு.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்டுதோறும் விமான கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு விமான கண்காட்சி திங்கட்கிழமை துவங்கியது.உலகின் அதி பழமை வாய்ந்த கண்காட்சியாக பாரிஸ் விமான கண்காட்சி உள்ளது. இதில் சூரிய ஒளியில் இயங்கும் விமானங்களும், உயிரி எரிபொருளில் இயங்கும் விமானங்களும் அணிவகுத்தன.
இந்த விமான கண்காட்சியில் அனைத்து தொழில்நுட்ப விமானங்களும் அணிவகுக்கின்றன. இந்த விமானங்கள் பார்ப்பவர்களை மயங்கச் செய்கின்றன. கடந்த மே மாதம் ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது.இதன் காரணமாக விமான போக்குவரத்துதுறை கடுமையாக பாதிக்கப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து அசோசியேசன் எச்சரிக்கை விடுத்து இருந்தது. உலக நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்ட பின்னர் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் என கருதப்பட்டது.
இந்த நிலையில் எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ளும் விமானங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும் என ஏர் பஸ் எதிர்பார்க்கிறது. ஒரு வார காலம் நடைபெறும் விமான கண்காட்சியில் 45 நாடுகளை சேர்ந்த 2100 கண்காட்சியாளர்கள் பங்கேற்கிறார்கள்.இந்த கண்காட்சியில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விமான வகைகளும் இடம்பெறுகின்றன. ஏர் பஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் ஏ320 புதிய வகை விமானங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய வகை விமானங்களை சப்ளை செய்ய இதுவரை 320 ஆர்டர்களை ஏர் பஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஆர்டர்களை புக் செய்வதில் ஏர் பஸ் நிறுவனத்திற்கும், சிகாகோவை மையமாக கொண்ட போயிங் நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.கடந்த ஆண்டு பர்ன்போரோ சர்வதேச விமான கண்காட்சியில் ஏர் பஸ் நிறுவனம் 13.2 பில்லியன் ஆர்டர்களை பெற்று போயிங் நிறுவனத்தை முந்தியது. போயிங் நிறுவனம் 12.8 பில்லியன் மட்டுமே ஆர்டர்களை பெற்றது.
ரஷ்யாவில் பாரிய விமான விபத்து: 44 பேர் பலி.
வடமேற்கு ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 44 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் கூறினர்.கரேலியா குடியரசின் பெட்ரோவோட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து(0.6 மைல்) ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மோட்டார் பாதையில் தரை இறங்க முயன்ற போது விமானம் தீ பிடித்து நொறுங்கியது.
விபத்துக்கு உள்ளான டியு-134 விமானம் "ரஷ் ஏர்" நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானத்தில் 43 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் இருந்தனர். விபத்தில் உயிர் பிழைத்த பயணிகளும் அபாய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.விமானம் சாலையிலேயே மோதியதால் அருகாமை குடியிருப்புகள் தப்பின. சாலையில் உடல்கள் சிதறி கிடந்தன. நொறுங்கிய விமான பாகங்கள் இடையே தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடினர்.
விபத்தில் ஸ்வீடனை சேர்ந்த நபர் ஒருவரும் இறந்து உள்ளார். நேற்று இரவு 11:40 மணி அளவில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்கு ஆளானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.ரஷ் ஏர் நிறுவனம் தனியாருக்கு சொந்தமானது. மாஸ்கோவில் தலைமையிடம் உள்ளது. மேற்கு ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வாடகை விமானங்களை இயக்குவதில் மிகப் பிரபலமான நிறுவனம் இதுவாகும்.
துனிஷியா முன்னாள் ஜனாதிபதி பென் அலிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை.
முன்னாள் துனிஷியா ஜனாதிபதி பென் அலி மற்றும் அவரது மனைவி லெய்லாவுக்கு துனிஷிய நீதிமன்றம் 35 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.பொது பணத்தை முறைகேடு செய்த குற்றச்சாட்டுக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சவுதி அரேபியாவிற்கு தப்பி ஓடினர்.
துனிஷியாவில் ஏற்பட்ட பெரும் புரட்சியை தொடர்ந்து அவர்கள் தப்பி ஓடினர். அவர்களுக்கு மேலும் 6 கோடியே 60 லட்சம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.அவர்களது அரண்மனை ஒன்றில் 270 லட்சம் டொலர் பணம் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பென் அலியின் மீது மற்றும் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கு போதை மருந்து வைத்திருத்தல் மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகும்.
பென் அலியின் வழக்கறிஞர் இந்த முடிவு குறித்து கூறுகையில்,"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தீர்ப்பு உள்ளது. நகைச்சுவையாகவும் உள்ளது" என்றார். தீர்ப்பு அளிக்கப்படும் போது குற்றவாளிகள் நீதிமன்றத்தில் இல்லை.துனிஷிய நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை சவுதி அரேபியா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றாது என்றே தெரிகிறது. பொது சொத்து முறைகேடு தொடர்பாக துனிஸ் கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இல்லாத நிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. துனிஷியா நாட்டில் முன்னாள் ஜனாதிபதி பென் அலிக்கு எதிராக 5 மாதம் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவாக பென் அலி தம்பதி நாட்டை விட்டு ஓடவேண்டி வந்தது.பென் அலியின் அரண்மனை ஒன்று தலைநகருக்கு வெளியே உள்ளெ சிடி போவில் உள்ளது. அங்கு விலை மதிக்க முடியாத தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர். பென் அலி துனிஷியாவில் 23 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் துவக்கம்.
அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்து பேச உலகளவில் 150 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஐந்து நாள் கூட்டம் நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது.
ஜப்பானில் மார்ச் 11ம் திகதி சுனாமி தாக்கியதில் அந்நாட்டின் புகுஷிமா அணுமின் உலை வெடித்து அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் அணுமின் உற்பத்தியின் அவசியம் குறித்து பரிசீலிக்க துவங்கியுள்ளன.ஜேர்மனியில் உள்ள அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களையும் 2022ல் இழுத்து மூட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இத்தாலியில் அணுமின் நிலையங்களை புதுப்பிக்க அந்நாட்டு பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது அணுமின் நிலையங்களை பாதுகாப்பது தொடர்பாக பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் ஜப்பானில் சுனாமியால் ஏற்பட்ட அணுமின் உலை வெடிப்பு குறித்தும், எதிர் காலத்தில் உலகளவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பேசவும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஐந்து நாள் கூட்டம் நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது. இக்கூட்டத்தில் 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதில் குறிப்பாக ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு குறித்து பேசப்பட்டது. இந்த அணு உலை வெடிப்பு தொடர்பான அறிக்கையும் ஐந்து நாட்கள் நடைபெறும் தொடர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதலில் பொதுமக்கள் பலி: நேட்டோ படைகள் மன்னிப்பு கோரியது.
திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம் நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.
இதற்கு பொறுப்பு ஏற்று நேட்டோ வருத்தம் தெரிவித்து இருப்பதாக லிபியா தூதுக் குழு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவ்சார்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"சம்பவம் குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை. ஆயுதங்களை தவறாகக் கையாண்டதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம்" என்றார்.
நேட்டோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,"லிபியாவில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் மிகவும் கவனத்துடன் கையாளப்படுகிறது. பிரிகா பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் எதிரிகளின் ரோந்து வாகனங்கள் தான் பாதி அளவிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் நேட்டோ படைகளின் ஒட்டு மொத்த ஆதரவு கிடைக்காததால் கிளர்ச்சியாளர்களால் நாட்டின் கிழக்கு பகுதியில் முன்னேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே காரணம்.இதற்கிடையே லிபியா தலைவர் கடாபியின் படைகளை எதிர்த்து போரிட அந்நாட்டு மக்கள் தனிப்பட்ட முறையில் ஆயுதங்களை சேகரித்து வருகின்றனர். இது கடாபி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் படி மக்களுக்கு அதிபர் அழைப்பு.
சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.சிரியா அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது: சிரியா மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்கள் இதை நிறைவேற்ற விடாமல் சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய அளவிலான பேச்சுவார்த்தை சிரியா நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்கும். வன்முறையைத் தொடர்ந்து துருக்கி நாட்டில் அடைக்கலமானவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். வன்முறையில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். இவர்களது பலி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசவேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஸ்திரத்தன்மை இல்லாமல் வளர்ச்சி இல்லை. வன்முறையால் சீர்திருத்தம் ஏற்படாது.சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வர தேசிய அளவில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மற்றொரு குழு ஏற்படுத்தப்படும். ஊழலை ஒழிப்பதில் மூத்த குடிமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளேன். குறிப்பாக ஜிசிர் அல் சுகுர் பகுதி மக்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் முன்வரவேண்டும்.சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் ஆயிரத்து 300க்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF