Monday, June 6, 2011

இன்றைய செய்திகள்.


மஹிந்தரினால் திறந்து வைக்கப்பட்ட கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம்!

கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 174 மீற்றர் உயரமான இந்த பிரமாண்டமான கோபுரத்தை நிர்மாணிக்க 450 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. 

ரூபவாஹினி, சுயாதீனத் தொலைக்காட்சி உள்ளிட்ட அரச, தனியார் தொலைக்காட்சி 
மற்றும் அரச, தனியார் வானொலிச் சேவைகள் ஆகியவற்றுக்கு தனித்தனிப் பிரிவுகள் இக்கோபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்காவில் பகுதியிலேயே இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

25 வருடங்களின் பின்னர் வடக்கு, கிழக்கு மக்களுக்கான ஒளி, ஒலிபரப்பு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் இக்கோபுரம் செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் இராணுவத் தேவைகளுக்கான அஞ்சல் பரிவர்த்தனை உள்ளிட்ட தொலைபேசிச் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கிறது. இக்கோபுரம் இதற்குமுன்னர் 1981 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் 1990 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது.

புலிகள் கேட்டதையே பலரும் கேட்கின்றனர்! கொக்காவிலில் மஹிந்தர்.

விடுதலைப்புலிகள் கேட்டதையே இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அதனை ஒருபோதும் வழங்கத் தயாரில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். கொக்காவில் தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைக் கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக வடக்கிலுள்ள இளைஞர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்தில் நோக்கிய காலம் காணப்பட்டது. 

எனினும் தற்போது அந்நிலையை நாம் மாற்றியமைத்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும். விடுதலைப்புலிகள் அன்று எம்மிடம் கேட்டதையே இன்று பலர் கேட்கின்றனர். அரசாங்கம் இதனை ஒருபோதும் வழங்கத்தயாரில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் அதிகாரப்பகிர்வு வழங்குவது தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்கள் கேட்பதை வழங்கத்தயாராகவுள்ளோம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ருவாண்டா இனப்படுகொலை! அந்நாட்டு இராணுவத்தளபதிக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்த இலங்கை நீதியரசர்.

ருவாண்டாவில் இனப்படுகொலைகளை செய்த அந்த நாட்டின் முன்னாள் இராணுவத்தளபதி அகஸ்டின் பிசிமுங்குவிற்கு, ஐ.நாவின் அனைத்துல குற்றவியல் தீர்ப்பாயத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை நீதியரசர் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். ருவாண்டாவின் முன்னாள் இராணுவத்தளபதி அகஸ்டின் பிசிமுங்குவிற்கு ஐ.நாவின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 30 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 

ருவாண்டாவுக்கான ஐ.நாவின் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வாவே இந்தத் தண்டனையை வழங்கியுள்ளார். 1994ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்காக ருவான்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் மேலும் இரண்டு மேஜர் ஜெனரல்கள், காவல்துறை துணைப்படையின் தலைவர் ஆகியோருக்கு எதிராக 2004ம் ஆண்டு செப்டெம்பர் 20ம் திகதி இந்தத் தீர்ப்பாயத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 
2009 ஜுன் 9ம் திகதி வரை 395 விசாரணை நாட்கள் நடத்தப்பட்ட இதுபற்றிய விசாரணைகளின் பின்னர், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக 250 சாட்சியங்கள் சாட்சியமளித்தனர்.இந்தச் சாட்சியங்களுக்கு மேலதிகமாக 300 தொடக்கம் 400 வரையான ஆவணங்களையும் பரிசீலித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக முன்னாள் நீதியரசர் அசோக டி சில்வா கூறியுள்ளார். 

ருவாண்டாவில் 1994ம் ஆண்டு 100 நாட்களில் சுமார் 8 இலட்சம் ருட்சி மற்றும் ஹுட்டு இனமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ருவாண்டாவின் முன்னாள் அதிபர் பயணம் செய்த விமானம் தலைநகர் கிகாலியில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து இந்த இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய விக்ரமசிங்க!

ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவை அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்து மகிந்த கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விக்ரமசிங்கவின் குடும்பத்தினர் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான ஆதரவாளர்கள் என்பதால் ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் விருப்பம் தெரிவித்துள்ளார் என தெரியவருகிறது.
தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிவரும் இலங்கக்கோன் உட்பட மேலும் மூன்று அதிகாரிகள் விக்ரமசிங்கவைவிட மூத்த நிலையில் இருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளது  என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆறு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு.
தற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள்  மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
2010ல் பிரான்ஸில் அகதி அந்தஸ்து பெற்றவர்களில் இலங்கையரே அதிகம்.
2010 ல் பிரான்சில் அகதி அந்தஸ்து பெற்ற 8447 பேரில் இலங்கையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இலங்கையைச் சேர்ந்த 1529 பேர் 2010ல் அகதி அந்தஸ்து பெற்றுள்ளனர்.இலங்கையை அடுத்து ரூசியாவைச் சேர்ந்த 802 பேரும், கொங்கோ நாட்டைச் சேர்ந்த 498 பேரும் புகலிடம் பெற்றுள்ளனர்.மொத்தமாக 2010ல் 52000 பேர் புகலிடம் கோரிய போது (இதில் 44957 பேர் முதல் தரம்) அதில், 8447 பேருக்குத்தான் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்விக்கான 2010 வருகையில் சீனா மாணவர்களின் எண்ணிக்கை 10359 ஆகும்.இதை அடுத்து மொறக்கன் 5739 பேரும், அமெரிக்கன் 5608 பேரும் ஆவர்.இவர்கள் கல்விக்காக வருடம் 44794 - 65842  யூரோக்களை செலவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவத்தின் பின் பலர் காணாமற்போயுள்ளனர்: ஜயலத் ஜயவர்த்தன பா.உ.
தனியார்துறை ஓய்வூதியத்திற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் அதனையடுத்த வன்முறைச்சம்பவங்களின் பின் கட்டுநாயக்க பிரதேசத்தில் பலர் காணாமற்போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன குற்றஞ்சாட்டுகின்றார்.இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினார் ஜயலத் ஜயவர்த்தன மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டங்களின் பின் பலர் காணாமற்போயுள்ளதாக எமக்குத்தகவல்கள் கிடைத்துள்ளன. அது மாத்திரமன்றி ஜாஎலையை அண்மித்த தண்டுகம ஆற்றிலிருந்து இனந்தெரியாத சடலமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகின்றது.தனியார்துறை  ஓய்வூதியத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்ட இளைஞரின் இறுதிச்சடங்குகளை கடும் இராணுவ நெருக்கடிகளின் மூலம் அரசாங்கம் தனக்கு விரும்பிய முறையில் மேற்கொண்டிருந்தது. அத்துடன் இறுதிச்சடங்கு நடைபெற்ற கத்தோலிக்க தேவாலய வளவிலும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் குவிக்கப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் ரூபா நிதியுதவி அளிப்பதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதுவரை அந்தக்குடும்பத்துக்கு ஒரு சதமேனும் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவ அடக்குமுறையைக் கொண்ட குடும்ப ஆட்சியை நோக்கி நகர்கின்றது: மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பொ்ணான்டோ.
இராணுவ அடக்குமுறையைக் கொண்ட குடும்ப ஆட்சியொன்றை நோக்கி இலங்கை படிப்படியாக நகர்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர் சட்டத்தரணி நிமல்கா பொ்ணான்டோ குறிப்பிடுகின்றார்.யுத்தத்தின் பின்னான இலங்கையில் எங்கு பார்த்தாலும் இராணுவ மயமாக்கமே தீவிரம் பெற்றுக் காணப்படுகின்றது என்றும் சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வலருமான கலாநிதி நிமல்கா பொ்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சிவராம் நினைவுதின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் ஊடக சுதந்திரம் என்பது தற்போது அடியோடு இல்லை. எதில் பார்த்தாலும் இராணுவத் தலையீடு தான் அதிகமாக காணப்படுகின்றது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்திலும் இராணுவ நிகழ்ச்சி நிரலே மேலோங்கிக் காணப்படுகின்றது.தற்போதைய நிலையில் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்டமைப்பிலிருந்து குடும்ப ஆட்சிமுறையொன்றை நோக்கி நாடு படிப்படியாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் என்னவென்று கேட்கும் அளவுக்கு சீர்குலைந்து போயுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சிவராம் மட்டுமல்ல, பாதிப்புகளை எதிர்கொண்ட எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் எதுவிதமான நிவாரணங்களோ சட்டரீதியான உதவிகள் மற்றும் பாதுகாப்போ வழங்கப்படவில்லை. அதன் காரணமாக இன்றைக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே செய்கின்றனர் என்றும் அவர் தனது நினைவுரையின் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் தாயார் காலமானார்!
எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க நேற்று மாலை 6.30 மணியவில் காலமானார்.92 வயதான இவர் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அன்னாரின் பூதவுடல் கொள்ளுபிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இவரது இறுதி கிரியைகள் பொரளை கனத்தை மயானத்தில் இன்று மாலை 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் மூழ்கடித்த கப்பல்களால் சிக்கல்: புதிய உடன்பாடு செய்யவேண்டிய நிலையில் இந்தியா-சிறிலங்கா.
காங்கேசன்துறைத் துறைமுகத்தை புனரமைப்பது தொடர்பாக மற்றொரு புரிந்துணர்வு உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியா செய்து கொள்ளவுள்ளது. இந்த வாரம் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படும் என்றும், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ள நாள் பற்றிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தமாதம் வெளியிடப்பட்ட இந்திய - சிறிலங்கா கூட்டறிக்கையை அடுத்து, சிறிலங்காவில் தனது திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது. இதன்படி, காங்கேசன்துறைத் துறைமுகத்தின் புனர்நிர்மாணப் பணிகளை வேகப்படுத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கேசன்துறைத் துறைமுகப் பகுதியில் போரின் போது விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட பல கப்பல்களின் சிதைவுகளும். கற்பாறைகளும் காணப்படுவதால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கப்பல்களின் சிதைவுகளை அகற்றக் கூடிய நிறுவனங்கள் உலகில் ஒரு சிலவே உள்ளன. இந்த நிறுவனங்களில் ஒன்றின் மூலமே இவற்றை அகற்ற வேண்டியுள்ளது.

புதிதாக சிறிலங்கா அரசுடன் செய்து கொள்ளவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்னர், இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் கப்பல் சிதைவுகளை அகற்றும் நிறுவனங்களுக்கான கேள்விப் பத்திரம் ஒன்றைக் கோரவுள்ளது. அதன்பின்னரே சிதைந்த கப்பல்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளபடும். சிதைந்த கப்பல்களை அகற்றும் ஆரம்பக் கட்டப் பணிகளுக்கான செலவுகளை இந்தியாவே பொறுப்பேற்கவுள்ளது. ஆனால் துறைமுகத்தை தூர்வாருதல், விரிவாக்கம் செய்தல், ஆழப்படுத்துதல் உள்ளிட்ட துறைமுக அபிவிருத்திக்காக செலவிடப்படும் நிதி இந்தியாவின் கடன்திட்டத்தின் கீழேயே பெறப்படவுள்ளது.
பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்: 14 தீவிரவாதிகள் பலி.
அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த மாதம் பாகிஸ்தான் வந்தார். அப்போது தேடப்படும் 5 முக்கிய குற்றவாளிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டது.அதில் இலியாஸ் காஷ்மீரி, அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாகிரி மற்றும் ஆப்கானிஸ்தான், தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஆகியோர் பெயர் இருந்தது.
மேலும் தீவிரவாதிகள் பெருமளவில் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் பாகிஸ்தானுடன் சேர்ந்து அமெரிக்கா இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெற்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதிகளாக இலியாஸ் காஷ்மீரி, அமீர் அம்சா ஆகியோர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று மீண்டும் ஏவுகணைகளை வீசின.
வானா நகரம் அருகேயுள்ள ஷலாம் தானா என்ற இடத்தில் மதரசா மற்றும் வீடுகளில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டதில் அங்கு பதுங்கியிருந்த 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளும் அடங்குவர். இப்பகுதி தலிபான் தீவிரவாதி முல்லா நசீர் பிரிவின் கமாண்டர் மலாங்கட்டுப்பாட்டில் உள்ளது.இது இங்கு கடந்த 4 நாட்கள் நடந்த அமெரிக்காவின் இரண்டாவது ஏவுகணை தாக்குதலாகும். இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் இதுவரை 34 தடவை ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அதில் 250 தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பெண்களால் அதிகளவில் தாக்கப்படும் ஆண்கள்.
பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவதுண்டு.ஆனால் பிரிட்டனில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்களால் தாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்முறைகளால் பெண்களால் தாக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக வழக்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.2005ல் இந்த எண்ணிக்கை அதாவது ஆண்களைத் தாக்கிய பெண்களின் எண்ணிக்கை 1500ஆகத் தான் இருந்தது. ஆண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் சம்பந்தமாகக் குரல் கொடுக்கும் charity man kind என்ற அமைப்பு இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.
பெண்கள் மிகவும் வன்முறை மிக்கவர்களாக மாறி வருகின்றனர். வீட்டு வன்முறை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்தில் இருந்து ஏழு சத வீதமாக அதிகரித்துள்ளது.ஒருவர் மீது மற்றவர் அதிகாரம் செலுத்துவது அல்லது கட்டுப்பாடு செலுத்துவது சம்பந்தமாக ஏற்படுகின்றப் பிரச்சினைகளே இந்த வீட்டு சன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிடுகின்றன.
இதுவே பெண்கள் தமது ஆண்களைத் தாக்கவும் பிரதான காரணமாகின்றது. இந்த விடயத்தை முழுமையாக மூடி மறைக்க முயலாமல் அரசாங்கம் ஆண்களை இலக்குவைத்து இது சம்பந்தமான சில வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று charity man kind அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டப் பெண்களின் எண்ணிக்கை 2004 மற்றும் 2005 காலப்பகுதியில் 806 ஆக இருந்தது.இது 2009-10 காலப் பகுதியில் 3494 ஆக அதிகரித்துள்ளது. இதே காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.இதில் இன்னொரு முக்கிய விடயம் பெரும்பாலான பாதிக்கப்பட்ட ஆண்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
360 ஆண்டுகள் பிரிந்திருந்த ஓவியம் ஒன்று சேர்ந்த அதிசயம்.
சீனாவில் 360 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இரண்டாக பிரிந்த ஓவியம் தற்போது ஒன்று சேர்ந்திருக்கிறது.சீனாவில் யுவான் மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது புகழ்பெற்ற ஓவியராக இருந்தவர் ஹுவாங் காங்வாங்(கி.பி.1269&1354). இலையுதிர் காலத்தில் சீனாவின் சேஜியாங் மாகாணத்தில் உள்ள புகுன் ஆற்றின் அழகை பிரமாண்ட ஓவியமாக வரைந்தார்.
ஓவியத்தின் மொத்த நீளம் 691.3 செ.மீ(சுமார் 23 அடி). 1348ம் ஆண்டு வாக்கில் ஹுவாங் தனது 82வது வயதில் வரைந்த ஓவியம் இது. அவரது மறைவுக்கு பிறகும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. 1650ல் தீ விபத்தில் ஓவியத்தில் தீப்பிடித்தது.அழியாமல் காப்பாற்றப்பட்டாலும் இரு பகுதிகளாக ஓவியம் கிழிந்துவிட்டது. சினிமாவில் இரட்டையர்கள் பிரிவது போல ஓவியத்தின் இரு பகுதிகளும் பிரிந்தன. வெவ்வேறு இடங்களுக்கு சென்றன.
பின்னர் பல கைகள் மாறின. ஓவியத்தின் இடது பகுதி தைவான் தலைநகர் தைபேயில் உள்ள அரண்மனை அருங்காட்சியகத்திலும், வலது பகுதி சீனாவின் சேஜியாங் அருங்காட்சியகத்திலும் இருந்தன.ஓவியத்தின் இரு பகுதிகளும் இணைய வேண்டும் என்று சீன பிரதமர் வென் ஜியாபோ கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இரு அருங்காட்சியகங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து தற்போது ஓவியத்தின் இரு பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு தைபே தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 52 அடி நீள கண்ணாடி பெட்டிக்குள் ஓவியம் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான மக்கள் பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஈரானின் இராணுவ விமானம் நடுவானில் வெடித்துச் சிதறும் காட்சிகள்! 

ஈரான் இராணுவத்துக்குச் சொந்தமான IL76 ரக இராணுவ விமானம் ஒன்று நடு வானில் எரிபொருள் நிரப்பும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து குட்டிக்கரணம் அடித்து நடு வானில் வெடித்துச் சிதறும் காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. 


2009ம் ஆண்டில் டெஹ்ரானுக்கு அருகில் இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவம் குறித்த காட்சிகள் இப்போது தான் வெளியாகியுள்ளன. இன்னொரு விமானத்தில் இருந்து இவை படம் பிடிக்கப்பட்டு உள்ளன. இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்த விமானம் ஒரு ரஷ்யத் தயாரிப்பு.

1970களில் செய்யப்பட்டு சதாம் ஹுசேனின் ஈராக்கியப் படைகளால் பாவிக்கப்பட்ட விமானம்.முதலாவது வளைகுடாப் போரின் போது அமெரிக்கப் படைகளிடம் இருந்து தப்புவதற்காக இது போன்ற நூற்றுக்கணக்கான விமானங்கள் ஈரானுக்குள் தஞ்சம் புகுந்தன.ஆனால் அவற்றை ஈரான் ஈராக்கிற்கு மீண்டும் திருப்பி வழங்கவில்லை.

அமெரிக்காவிற்கு ரகசியமாக உதவிய பாகிஸ்தான் உளவுத்துறை.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை(ஐ.எஸ்.ஐ) உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான செளகத் காதீர் என்பவர் தெரிவித்ததாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று முன்தினம் பாகிஸ்தானி்ல உள்ள தெற்கு வசிரிஸ்தான் நகரில் அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலியாஸ் உட்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறுகையில்,"இத்தாக்குதலில் நிச்சயமாக ஐ.எஸ்.ஐ முக்கியப் பங்கு வகித்துள்ளது. இலியாஸ் காஷ்மீரி இருந்த இடத்தை ஐ.எஸ்.ஐ தான் காட்டிக் கொடுத்துள்ளது" என்று அந்த முன்னாள் ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.இலியாஸ் கொலைக்கு பழிவாங்கப் போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப்பொருட்களில் நோய் கிருமிகளை பரப்ப தீவிரவாதிகள் திட்டம்.
ஜேர்மனியில் இ.கோலி பக்டீரியாக்கள் மூலம் ஒருவித புதிய வயிற்றுபோக்கு நோய் பரவி வருகிறது. அந்த நோய்க்கு பலர் பலியாகி உள்ளனர்.2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த நோய் வெள்ளரிக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள் மூலம் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் அபாயம் உள்ளது.
இ.கோலி நோய் கிருமிகளை அல்கொய்தா போன்ற தீவிரவாதிகள் தாவரங்கள் மூலம் பரப்பி இருக்கலாம் என இங்கிலாந்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே விதைகள் உற்பத்தியாளர்கள், காய்கறி மற்றும் உணவுப்பொருள் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இவை தவிர குளிர்பானங்கள் மூலம் அந்த நோயை பரவ செய்யலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவுப்பொருள், குளிர்பான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
நியூயார்க் கண்காட்சியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் நான்கு வயது ஓவியக்கலைஞர்.
நான்கு வயது சிறுமி அலிடா ஆண்ட்ரே வரைந்த கண்ணைக்கவரும் ஓவியங்கள் நியூயார்க் கண்காட்சியை முதன் முறையாக அலங்கரிக்கத் துவங்கி உள்ளன.மன்ஹட்டனில் உள்ள அகோரா கேலரியில் சிறுமி அலிடாவின் 9 ஓவியங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தக் கண்காட்சியில் இதுவரை இடம் பெற்ற மிக இளவயது ஓவியக் கலைஞராக அலிடா உள்ளார்.
அவரது ஓவியங்கள் அனைத்தும் தலா 6 ஆயிரம் டொலர் மதிப்பில் விற்பனை ஆகி உள்ளன. இந்த கண்காட்சி ஓவிய விற்பனை மூலம் அலிடாவுக்கு 9 ஆயிரத்து 900 டொலர் கிடைத்துள்ளது.கேலரியின் இயக்குநர் ஏங்கலா டி பெலோ கூறுகையில்,"நான்கு வயது சிறுமி ஓவியரான அலிடா தனக்கென்று பிரத்யேக பாணியில் ஓவியம் வரைவதில் கைதேர்ந்து விட்டார்" என புகழாரம் சூட்டினார்.இந்த சிறுமியின் பெற்றோர் நிக்கா கலாஷ்னிகோவா மற்றும் மைக்கேல் ஆண்ட்ரேவும் ஓவியக் கலைஞர்கள் ஆவார்கள். தங்கள் மகளின் ஓவியத்தில் தீங்கு இல்லாத வெகுளித்தனம் வெளிப்படுவதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.



சிரியாவுக்கு உதவி செய்யும் ஈரான்: பிரிட்டன் உளவுத்துறை தகவல்.
சிரியாவில் ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிரியா அரசுக்கு ஈரான் உதவி செய்துள்ள தகவலை பிரிட்டன் உளவுத்துறை கண்டறிந்து உள்ளது. இது குறித்து பிரிட்டன் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் தரப்பு கூறுகையில்,"போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு சிரியா பாதுகாப்பு படையினருக்கு ஈரான் பயிற்சி அளித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படை அமைப்பின் நிபுணர்கள் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் கருவிகளை சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான துருப்புகளுக்கு அளித்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
சிரியாவில் போராட்டக்காரர்களை அரசு படைகள் கொன்று குவித்து வருகின்றன. சனிக்கிழமை 10 பேரும், ஞாயிற்றுக்கிழமை 28 பேரும் கொல்லப்பட்டார்கள் என சிரியா மனித உரிமை குழு குற்றம் சாட்டியது.வெள்ளிக்கிழமை ஹமா நகரில் 65 பேர் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் முதல் சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் முபாரக் போன்ற சர்வாதிகாரிக்கு பிரிட்டனும் அமெரிக்காவும் துணை போகிறது. ஆனால் பக்ரைனில் நடைபெறும் போராட்டத்தில் அவை கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டியது.சிரியாவில் இணையதளம் போன்றவற்றால் போராட்ட செய்திகள் பொதுமக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் மின்னணு கருவிகளை அளித்துள்ளது.
பெல்ஜியத்தில் சூரிய ஒளியில் ஓடும் ரயில்கள்: பிரிட்டனில் செயல்படுத்த நிதி இல்லை.
பெல்ஜியத்தில் ஓடும் ரயில்கள் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கப்பெறும் சக்தியின் மூலம் செயல்படுகிறது. இத்திட்டத்தை பிரிட்டனில் செயல்படுத்த நிதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெல்ஜியத்தில் 3 முதல் 4 கிலோமீற்றர் தொலைவு சுரங்க ரயில் பாதைக்கு மேல் சூரிய ஒளியை சேமிக்கும் 16 ஆயிரம் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சூரி ஒளி தகடுகள் அன்ட்வெர்ப் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தங்கள் இயக்கத்திற்கு டீசலையோ அல்லது மின்சக்தியையோ உபயோகப்படுத்துவது இல்லை. இங்குள்ள ரயில்கள் சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் சேமிக்கப்பட்ட சக்தி மூலம் இயக்கப்படுகின்றன.இயற்கை ஆதார சக்தியான சூரிய ஒளி மூலம் ஆண்டுதோறும் 4 ஆயிரம் ரயில்பயணத்தை இயக்கக்கூடிய சக்தி கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு 14 லட்சம் பவுண்ட் செலவினம் ஆகியுள்ளது. இந்த சூரிய மின் சக்தி திட்டம் பிரிட்டனில் மிகுந்த பயன் அளிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆனால் பிரிட்டன் கூட்டணி அரசு நிதி நெருக்கடி காரணமாக ஊக்கத்தொகையை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. பிரிட்டனின் நிதி குறைப்பு நடவடிக்கை முடிவு கிட்டபார்வை நடவடிக்கை என்று என்பினிட்டி நிறவனத்தின் பார்ட் வான் ரென்ரம் தெரிவித்தார்.இந்த நிறுவனம் பிரிட்டனின் ரயில் பாதையில் சூரிய மின் ஒளி தகடுகளை பதிக்க திட்டமிட்டு இருந்தது. பிரிட்டனின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி இந்த திட்டத்தை கூட்டணி அரசு கை கழுவியது.
இது குறித்து பார்ட் வான் கூறுகையில்,"பிரிட்டன் அரசு கருவூலத்துறையையே கவனத்தில் கொள்கிறது. மத்திய மற்றும் நீண்ட காலத்திற்கான வரி மாத குறைப்பு மற்றும் செலவின குறைப்பை பற்றி கவனம் செலுத்தவில்லை" என்றார்.பிரிட்டனில் மாசு ஏற்படுத்தாத பசுமை திட்டத்தை மேற்கொள் வேண்டும் என்ற விருப்பம் பிரிட்டன் அரசக்கு உள்ளது. வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் சூரிய ஒளி தகடுகளை பொருத்த வேண்டும் என பிரிட்டன் சக்தி மற்றும் பருவநிலை மாற்ற துறை முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் பெரும் சூரிய ஒளி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உயிருக்கு அபாயம் விளைவிக்கும் இ.கோலி பக்டீரியா பீன் காயில் இருந்து பரவியுள்ளது: ஜேர்மனி சந்தேகம்.
ஜேர்மனியில் இ.கோலி என்னும் பக்டீரியா தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் வடக்கு பகுதியில் இந்த பாதிப்பு அதிகமாகி உள்ளது.உயிருக்கு அபாயம் விளைவிக்கும் இ.கோலி பக்டீரியா ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து பரவியதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது.
தற்போது அபாயகரமான பக்டீரியா பீன் காயில் இருந்து பரவி உள்ளது என ஜேர்மனி நிபுணர்கள் ஐயம் கொண்டுள்ளனர். பீன் காய்கறிகள் ஜேர்மனியில் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. இந்த காய்கறிகளில் இருந்து தான் இந்த நுண் உயிரி தாக்கம் இருக்கும் என ஞாயிற்றுக்கிழமை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து ஜேர்மன் லோயர் சக்சோனி மாகாணத்துறை வேளாண் அமைச்சர் கூறுகையில்,"பீன் காயில் இருந்து தான் இ.கோலி பக்டீரியா பரவியுள்ளது என்பதை உறதிபடுத்த முடியவில்லை" என்றார்.இருப்பினும் ஜேர்மானியர்கள் தற்போது பீன் காய்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இ.கோலி பக்டீரியா பரவ என்ன காரணம் என்ற விவரம் ஆய்வக சோதனை மூலம் திங்கட்கிழமை உறுதிபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியாவிற்கு இதுவரை 22 பேர் இறந்துள்ளனர். ஐரோப்பா முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்பட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் இந்த இ.கோலி பக்டீரியா பாதிப்பு வடக்கு ஜேர்மனியில் கண்டறியப்பட்டது.ஜேர்மனியின் புதிய சுகாதாரத்தறை அமைச்சர் டேனியல் பர் ஞாயிற்றுக்கிழமை நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் இ.கோலி பக்டீரியா தாக்கத்தால் ஹம்பர்க்கில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் உரிய வசதி செய்ய முடியாத நிலை உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
தொண்டு நிறுவனத்திற்கு பணியாற்றிய நபர் கொடூர கொலை: தலிபான்களின் வெறிச்செயல்.
பிரான்சை சேர்ந்த தொண்டு நிறுவனம் மதிரா கிராமப்புற உதவி குழு ஆகும். இந்த தொண்டு நிறுவனத்திற்கு பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நபரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் 30ம் திகதி கடத்தினர்.அந்த நபரை தலிபான் தீவிரவாதிகள் சித்ரவதை செய்ததுடன் அவரை தூக்கிலிட்டு கொலை செய்தனர். அப்போதும் அவர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. அந்த நிலையில் அவர்கள் துப்பாக்கியால் அந்த தொண்டு நிறுவன ஊழியரை சரமாரியாக சுட்டு சிதைத்தனர்.
சனிக்கிமை இரவு கோர் மாகாணத்தின் பசாபாண்ட் மாவட்டத்தில் அவர்கள் இந்த கொடூரச் செயலை செய்தனர். அந்த ஊழியரின் சடலத்தை ஒரு மரத்தில் தொங்க விட்டுச் சென்ற தலிபான்கள் உள்ளூர் மக்கள் 3 நாட்களுக்கு அந்த சடலத்தை அகற்றக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து சென்றார்கள்.தலிபான் தளபதி ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த தலிபான் தீவிரவாதிகள் இந்த தொண்டு நிறுவன ஊழியரை கடத்தினர்.
தங்களது கோரிக்கை நிறைவேறாது என தெரிந்ததும் அவர்கள் கடத்திய தொண்டு நிறுவன ஊழியரை கொடூரமாக கொலை செய்தார்கள். தற்கொலை படை பிரிவு நபருக்கு வீட்டில் தங்க இடம் அளித்ததால் தலிபான் தளபதியின் மனைவியை பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.பிரான்சின் தொண்டு நிறுவனமான மதிரா 1988ம் ஆண்டு நிறுவப்பட்டது ஆகும். இந்த தொண்டு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு 600 ஊழியர்கள் உள்ளனர்.இந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை 3 அயல் துருப்பினர் கொல்லப்பட்டார்கள்.
மொன்றியலிலும் கனடா தபால்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.
கனடா தபால்துறை நிர்வாகம் தங்களது கோரிக்கையை ஏற்காத சூழலில் தபால் ஊழியர்கள் மூன்றாவது நகரமாக மொன்றியலிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கினர்.ஹாமில்டன், வின்னிபெக் பகுதியில் வேலை நிறுத்தம் மேற்கொண்ட தபால் துறை ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்தும் வகையில் மொன்றியலிலும் வெளிநடப்பு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்குவதாக கனடா தபால்துறை ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வேலை நிறுத்தப் பணியில் ஈடுபட்ட ஹாமில்டன் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு பணிக்கு திரும்பினர்.ஹாமில்டனில் ஊழியர்களின் வெளிநடப்பால் அந்தப் பிராந்தியத்தில் தபால்களை மக்களுக்கு கொண்டு சேர்பது ஒருநாள் தாமதமாகி உள்ளது என கனடா தபால்துறை நிர்வாகம் தெரிவித்தது.
தபால்துறை ஊழியர்கள் படும் அவதியை வெளிகாட்டுவதற்காக மொன்றியலில் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக தபால் துறை ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது. தபால்துறையில் புதிய தொழில் நுட்பங்களை கையாளுதல் மற்றும் பணி முறையில் ஏற்படும் இடையூறுகளை விளக்குவதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
கனடா தபால்துறையில் 200 கோடி டொலர் புதிய திட்ட முறையால் தபால் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது என ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் கனடா தபால்துறை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மின்னஞ்சல் செய்தியில் ஊழியர்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்து உள்ளது. கனடா ஊழியர்கள் இதற்கு முன்னர் 1997ம் ஆண்டு இரண்டு வாரம் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத் தலைவர் கொலை.
பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் அமீர் அம்சா என்கிற தலிபான் தலைவரும் இறந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஜூலை மாதத்துக்குள் புறப்பட்டுவிடப் போவதால் தீவிரவாதிகளின் முகாம்களை நாசம் செய்யுமாறும் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்த வேலையில் பாகிஸ்தான் முழு மனதுடன் ஈடுபடச் சம்மதம் தெரிவிக்காததால் அமெரிக்காவே பல நேரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அப்படி நடத்திய தாக்குதலில் தான் இலியாஸ் காஷ்மீரியும் வேறு 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த 9 பேரில் ஒருவர்தான் அமீர் அம்சா என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. தெற்கு வஜீரிஸ்தான் பழங்குடிப் பகுதியில் வானா என்ற சிற்றூருக்கு அருகில் லாமான் என்ற கிராமத்தில் தான் இந்த மோதல் நடந்திருக்கிறது.வானாவில் குடியிருந்த அமீர் அம்சா, தலிபான் இயக்கத்திலேயே முல்லா நசீர் தலைமையிலான குழுவில் படைத் தளபதியாகச் செயல்பட்டார். இறந்த இலியாஸ் காஷ்மீரி, அமீர் அம்சா ஆகியோரின் சடலங்கள் அந்தப் பகுதியில் இருந்த ஆப்பிள் மரத் தோப்பிலேயே புதைக்கப்பட்டன.
முல்லா நசீருக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருங்கிய நட்பு உண்டு. அவர் செல்வாக்கு காரணமாகவே பஞ்சாபைச் சேர்ந்த பல தலிபான் தீவிரவாதிகள் அந்தப் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்துவந்தனர். இப்போது நேட்டோ படைகளின் தாக்குதல் அவர்களுக்கு அச்சுறுத்தலாக வந்திருக்கிறது.இலியாஸ் காஷ்மீரி, முல்லா ஒமர், அய்மான் அல் ஜவாஹிரி, சிராஜுதீன் ஹக்கானி, அத்தியா அப்துர் ரெஹ்மான் ஆகியோர் அமெரிக்கா தேடும் தலிபான் தீவிரவாதிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தத் தீவிரவாதிகள் அனைவரும் சமீபத்தில் தான் கைபர் பகுதியிலிருந்து தெற்கு வஜீரிஸ்தான் பகுதிக்கு வந்துள்ளனர் என்று தெரிகிறது.
பனிக்கட்டியை கொண்டு தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முயற்சி.
ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகளை கப்பல் மூலம் கட்டி இழுத்து தேவையான இடங்களுக்குக் கொண்டு சென்று தண்ணீர் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஜார்ஜஸ் மோகின்(86). இவர் கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்கு ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள மலை போன்ற பனிக்கட்டிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த 1977ல் சவுதி அரேபியாவின் அப்போதைய இளவரசர் அல் பைசலுடன் இணைந்து "ஐஸ்பெர்க் டிரான்ஸ்போர்ட் இன்டர்நேஷனல்" என்ற அமைப்பைத் துவக்கினார். அதன் பின் பனிக்கட்டிகளை இழுத்து வருவது குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கினார்.எனினும் அக்கால கட்டத்தில், தொழில்நுட்பம் அவ்வளவாக முன்னேறாததால் அவரது குறிக்கோள் நிறைவேறுவதில் பல தடங்கல்கள் எழுந்தன. தற்போது பிரான்சை சேர்ந்த "டசால்ட் சிஸ்டம்ஸ்" என்ற நிறுவனம் ஜார்ஜசின் குறிக்கோளை முப்பரிமாணப் படங்கள் மூலம் நிறைவேற்றித் தந்துள்ளது. இதில் பனிக்கட்டியின் பயணத்தின் போது ஏற்படக் கூடிய இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ஆராயப்பட்டுள்ளன.
கனடாவின் நியூபவுண்ட்லேண்ட் என்ற இடத்தில் உள்ள 70 லட்சம் டன் எடை கொண்ட பனிக்கட்டியை ஆப்ரிக்காவை ஒட்டியுள்ள ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கேனரி தீவுகளுக்குக் கொண்டு வருவதுதான் ஜார்ஜசின் முதல் திட்டம்.டசால்ட் சிஸ்டம்ஸ் உருவாக்கியுள்ள முப்பரிமாணப் படங்களின்படி பனிக் கட்டியைச் சுற்றி ஒரு பெல்ட் கட்டப்படும். பயண வழியில் பனிக்கட்டி உருகாமல் இருக்க அதன் மேற்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் இருக்கும் பகுதியின் மீது வலை கட்டப்படும்.
இரு இடங்களுக்கிடையிலான 4,726 கி.மீ தூரத்தை 141 நாட்களில் கப்பல் கடக்கும். வழியில் பனிக்கட்டியில் 38 சதவீதம் மட்டும் உருகியிருக்கும். கடல் காற்றின் போக்கிலேயே பனிக்கட்டியை கப்பல் இழுத்துச் செல்லும். செல்லும் வழியில் நீர்ச் சுழிகள், கடல் புயல் போன்றவை நேரிட்டால் அவற்றைச் சமாளிக்கக் கூடிய முன்னேற்பாடுகளும் இந்த முப்பரிமாணப் படங்களில் காட்டப்பட்டுள்ளன.அதோடு குறைந்த எரிபொருள் செலவில் குறைந்த முயற்சியில் அதிகளவு பலனை அடைவதற்கும் இப்படங்கள் வழிகாட்டுகின்றன. விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்கள், பனிக் கட்டியைச் சுற்றி விடப்பட்டுள்ள மிதவைகள், பலூன்கள் இவை மூலம் பனிக்கட்டியின் பயணம் கண்காணிக்கப்படும்.
அதோடு, வானிலை, கடலின் உப்புத் தன்மை, காற்று இவையும் கணிக்கப்பட்டு அதற்கேற்ப பயணம் மாற்றியமைக்கப்படும். அளவில் சிறிய பனிக்கட்டி ஒன்றை இழுத்துக் கொண்டு வர 13 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதால் அதைத் திரட்டும் பணியில் ஜார்ஜஸ் ஈடுபட்டுள்ளார்.மேலும் நிதி திரட்டிய பின் அடுத்தாண்டில் தன் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் முழுவேகத்தில் இருக்கிறார் ஜார்ஜஸ்.
இலியாஸ் கொலை: உறுதி செய்தது பாகிஸ்தான்.
அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சில் இலியாஸ் காஷ்மீரி கொலை செய்யப்பட்டதை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.எனினும் அமெரிக்க அதிகாரிகள் இன்னும் சந்தேகத்தில் உள்ளனர். மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாம்(ஹூஜி) என்ற பயங்கரவாத இயக்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர்.இவரின் தலைமையில் செயல்பட்ட 313 படைப் பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தான் சமீபத்தில் கராச்சி நகரின் கடற்படைத் தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள்.
இத்தகவலை "ஏசியா ஆன்லைன்" இணையதளத்தில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் செய்யது சலீம் ஷாஜத் குறிப்பிட்டிருந்தார். கட்டுரை வெளியான இரண்டாம் நாள் அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து கடந்த 4ம் திகதி பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் உள்ள வானா பஜார் என்ற இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் லமான் என்ற கிராமத்தில் காஷ்மீரி உள்ளிட்ட 20 பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர்.
அந்த வீட்டின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசியதில் காஷ்மீரி உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் காஷ்மீரியும் உண்டு என்பதை அப்பகுதி வாழ் மக்கள் உறுதிப்படுத்தினர்.எனினும் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹூஜி செய்தித் தொடர்பாளர் காஷ்மீரி சாகவில்லை என்றும், பத்திரமாக இருக்கிறார் என்றும் கூறினார்.இதுகுறித்து நேற்று பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்,"புலனாய்வு அதிகாரிகளின் தகவல்படி அவர் இறந்து விட்டார். 98 சதவீதம் இது உறுதி தான்" என்றார்.
இதையடுத்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் ஹூஜி இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த பேட்டியில் காஷ்மீரி கொல்லப்பட்டதை உறுதி செய்தார். அவரது மரணத்துக்கு பழிக்குப் பழி வாங்கப் போவதாகவும் சபதம் இட்டார்.உலகளவில் பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கவனித்து வரும் "சைட்" இணையதளம் காஷ்மீரி பலியானதை ஒப்புக் கொண்ட ஹூஜியின் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
ஏமனில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே மருத்துவ சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சவுதி அரேபியா சென்றார்.அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக வந்த தகவல்களை அடுத்து மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் மூழ்கினர். சலேவுக்குப் பின் யார் அதிபராக வருவது என்ற அதிகாரப் போட்டி துவங்கும் பட்சத்தில் ஏமன் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி கடந்த பெப்பிரவரி மாதம் முதல் மக்கள் போராடி வருகின்றனர். பதவி விலகுவதாக அறிவித்து மூன்று முறை அவர் பின்வாங்கியதை அடுத்து அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
எதிர்ப்பாளர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்து வந்தவரும், நாட்டின் மிகப் பெரிய பழங்குடியினமான "ஹஷீத்" இனத்தின் தலைவருமான ஷேக் சாதிக் அல் அமரின் ஆதரவாளர்கள் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். அதன் பின் காட்சிகள் மாறத் தொடங்கின. மோதல்கள் உள்நாட்டுக் கலவரமாக மாறக் கூடிய அபாய நிலையை எட்டின.தென்பகுதியில் உள்ள ஜின்ஜிபார் நகரை அல்கொய்தாவின் ஆதரவாளர்களான ஆயுதம் ஏந்திய 300 வீரர்கள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அதிபரின் ராணுவம் எதிர்ப்பாளர்கள் மீது பீரங்கி, துப்பாக்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தியது.
கடந்த 10ம் திகதி அதிபர் மாளிகையின் வளாகத்தில் உள்ள அல் நஹ்டியான் மசூதியில் அதிபர், பிரதமர், துணைப் பிரதமர், பாராளுமன்ற இரு சபாநாயகர்கள், அதிபரின் மகன்கள் மற்றும் உயரதிகாரிகள் பலரும் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மசூதியின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிபர், பிரதமர், துணைப் பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர்கள், அதிபரின் மகன்கள் ஆகியோர் காயமடைந்தனர். அதிபரின் இதயத்துக்குக் கீழே ஏவுகணையின் சிதறல்கள் கடும் வேகத்தில் துளைத்து விட்டன.
அவரது கழுத்து, முகம் மற்றும் தலைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர், துணைப் பிரதமர், சபாநாயகர்கள் இருவர், மேலும் ஒரு நபர் என ஐந்து பேர் உடனடியாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.அதிபர் சலேயும் சிகிச்சைக்காக ரியாத்துக்குச் சென்றார் என நேற்று முன்தினம் முதலில் தகவல்கள் வந்தன. உடனடியாக அரசுத் தரப்பில் அவை மறுக்கப்பட்டன. ஆனால் சலே நேற்று முன்தினம் மாலை ரியாத்துக்கு தனி மருத்துவ விமானத்தில் சென்றுவிட்டார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட 35 குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
ரியாத்தில் உள்ள காலித் அரசர் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய தகவலை சவுதி அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின் ஏமனில் பல்வேறு இடங்களில் அதிபரின் வெளியேற்றத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஏமன் மக்கள் புரட்சிக்கு அடித்தளமிட்ட சனா பல்கலைக்கழக மாணவர்கள் "இன்று ஏமன் புதிதாய்ப் பிறந்துள்ளது" என்று கோஷமிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.ஏமன் அரசியல் சாசனப்படி அதிபரின் பொறுப்பை துணை அதிபர் அப்துல் ரப்பு மன்சூர் ஹாடி ஏற்றுக் கொண்டார். அதன்படி ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் அவர் வசம் இருக்கும். அவர் ஏமன் அதிபரின் காயம் அடைந்த மகன்களையும், ராணுவ உயரதிகாரிகளையும் விரைவில் சந்திக்க உள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF