Sunday, June 26, 2011

இன்றைய செய்திகள்.

சிறிலங்காவில் அடையாளம் தெரியாத புதிய பூச்சி இனம்.
அடையாளம் தெரியாத புதிய பூச்சி இனம் ஒன்று சிறிலங்காவின் கலேவெல பகுதியில் உள்ள பன்கொலகொல்ல கிராமத்தில் உள்ள தோட்டமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெள்ளை நிறம் கொண்ட இந்தப் பூச்சியின் உடல் முக்கால் அங்குல நீளமுடையத்தாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் பூச்சிகளின் நகங்கள் பெரிய அளவில் இருப்பதுடன், பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக இவை காணப்படுகின்றன. 
சுமார் ஒரு அடி தூரம் வரை இந்த பூச்சிகள் பாய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தமது பகுதியில் இதுபோன்ற பூச்சிகளை முன்னொரு போதும் பார்த்ததில்லை என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் ஒரு சில பூச்சிகளே காணப்பட்டதாகவும் விரைவாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கைக்கு பொருளாதார தடை! இந்திய லோக்சபாவில் விவாதிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு பொருளதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும், கச்சதீவின் அதிகாரத்தை இந்தியா மீளப்பெற வேண்டும் என்ற இரண்டு சட்டசபை தீர்மானங்களும், இந்திய லோக்சபாவில் முன்வைக்கப்படவுள்ளன.இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா தலைவர் சுஸ்மா சுவராஜிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நேற்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் அண்மையில் தீர்மானம் ஒன்றுநிறைவேற்றப்பட்டது.அத்துடன், கச்சதீவை மீள பெற்றுக் கொள்வது தொடர்பிலான தீர்மானம் ஒன்றும், ஜெயலலிதாவின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பிலான ஆவணங்களை சுஸ்மா சுவராஜ் ஜெயலலிதாவிடம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயங்கள் தொடர்பில், தாம் இந்திய லோக்சபாவில் விவாதிக்கவிருப்பதாக சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை?
ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.அண்மையில் நிறைவுற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை பிரேரிப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்த போதும், பல்வேறு காரணங்களால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போயுள்ளது.அதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள அடுத்த மனித உரிமை அமர்வில் குறித்த பிரேரணையை முன்வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்வரும் செப்டம்பரில் மனித உரிமைக் கவுன்சிலின் ஆரம்பமானவுடன் சனல்4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பான தனது "இலங்கையின் படுகொலைக்களம்" காணொளியை மீண்டுமொரு தடவை ஒளிபரப்பத் தீர்மானித்துள்ளது.இதற்கிடையே இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையொன்றுக்கான பிரேரணையை செப்டம்பரில் நடைபெறும் மனித உரிமைக் கவுன்சி்ல் அமர்வின் போது அமெரிக்கா முன்மொழியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனைகளே சர்வதேச நெருக்கடிகளை உருவாக்குகின்றன: அமைச்சர் பசில் ராஜபக்ஷ.
ஜனாதிபதியைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்களின் தவறான ஆலோசனைகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச நெருக்கடிகள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ள சில ஆலோசகர்கள்  தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக  சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், அவரது அண்மைக்கால அரசியல் மௌனம் குறித்து வினவியபோதே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தனது புதல்விக்கு குழந்தை பிறந்திரு்ந்த காரணத்தினால் வெளிநாடு சென்றிருந்தாகவும்,  ஜனாதிபதியை சூழ அதிகளவான ஆலோசகர்கள் இருப்பதாலும் அவர்களின் நடவடிக்கை காரணமாகவும் தான் அமைதியாக இருப்பதாகவும் அமைச்சர் பசில் கூறியுள்ளார்.
பான்-கீ-மூன் குழுவின் அறிக்கை மற்றும் சனல்4 தொலைக்காட்சி ஆகியவற்றின் குற்றச்சாட்டுகளினால் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலைமை தொடர்பில் சரியான புரிந்துணர்வுடன் பதிலளிப்பதற்கு பதிலாக சிங்கள மக்களை மகிழ்விப்பதற்காக செய்தி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பலனில்லை என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ  இலங்கைக்கு எதிரான எதிர்ப்பின் வலுவான  தன்மையை கடந்த சில நாட்களாக தான் வெளிநாட்டில் இருந்த போது நன்கு உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரொருவரை துவைத்து எடுத்த முச்சக்கரவண்டிச் சாரதிகள்.
மோ்வின் பாணியில் சண்டித்தனத்தைக் காட்டப் போனதால் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரொருவரை அவரது பாதுகாவலர்களையும் மீறி  முச்சக்கரவண்டிச்சாரதிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஆளுங்கட்சியின் வாயாடிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகமவே அவ்வாறு காலியில் முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் அடிவாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
காலி பொது மருத்துவமனையில் இன்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் கலந்து கொண்ட அவர்,  அதன்போது முச்சக்கர வண்டிச் சாரதியொருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து முச்சக்கர வண்டிச் சாரதியை கைநீட்டித் தாக்கியுள்ளார்.அதனையடுத்து தமது சகாவுக்கு ஆதரவாகத் திரண்ட ஏனைய முச்சக்கர வண்டிச் சாரதிகள் மெய்ப்பாதுகாவலர்களையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகமவைத் தாக்கியுள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர்கள் மிகவும் சிரமப்பட்டே அவரை முச்சக்கர  வண்டிச் சாரதிகளிடமிருந்து விடுவித்து அவ்விடத்தை விட்டும் அழைத்துச் சென்றுள்ளதாக காலியிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துக்கெதிராக நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஐ.தே.க. திட்டம்.
அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.அதன்போது அரசாங்கத்தின் அடக்குமுறைகள் குறித்து நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், அத்துடன் அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்குகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விதத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டில் ஊடக சுதந்திரத்தை இல்லாதொழித்து, ஜனநாயகத்தை சீர்குலைத்து, அடக்குமுறைகள் மூலம் தனக்கெதிரான எதிர்ப்புகளை அடக்கியாள அரசாங்கம் முற்படுவதன் காரணமாகவே பிரஸ்தாப எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.ஐக்கிய தேசியக்கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கெதிரான முதலாவது ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 01ம் திகதி எல்பிட்டிய நகரத்திலும், இரண்டாவது ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 04ம் திகதி கண்டியிலும் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்துக்கெதிரான இரகசிய நகர்வுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா?
அரசாங்கத்துக்கெதிரான இரகசிய நகர்வுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.  அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அரசாங்க சார்பு நிலையிலிருந்து மாற்றிக் கொண்டு பொருத்தமான நேரத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கெதிரான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பது அவரது நோக்கமாக இருக்கின்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் ஒரு கட்டமாக அண்மையில் அவர் முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரத்தினசிறி விக்கிரமநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்துள்ளார். அதன் போது இருவரும் ஒருமணித்தியாலம் வரை கருத்துப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவனான தான் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதைப் பற்றி ரத்தினசிறி விக்கிரமநாயக்க அதன் போது மனவருத்தத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கே இந்த நிலையென்றால் உங்களுக்கு அவ்வாறான நிலையேற்படுவதில் ஆச்சரியமென்ன இருக்கின்றது என்று சந்திரிக்கா பதிலுக்கு வினவியுள்ளார்.இவ்வாறாக அரசாங்கத்துடன் அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அணி சோ்த்து வரும் சந்திரிக்கா குமாரதுங்க, மிக விரைவில் தனது வாரிசுகளில் ஒருவரை அரசியலில் களமிறக்கவும், தீவிர அரசியல் ஈடுபாடுகளில் கலந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து செயற்படுவது குறித்து ஜே.வி.பி. இரகசிய முயற்சி?
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து செயற்படுவது குறித்து ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் இரகசிய முயற்சியொன்றை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான கலந்துரையாடல்களை தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக்குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
அவர்களுடைய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள ரவி கருணாநாயக்கவின்  இல்லத்தில் நடைபெறும்  அதே வேளை அங்கு கலந்துரையாடப்படும் விடயங்களை அறிந்து கொள்வதில் அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் கூட்டிணைந்தால் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தோ்தல்களில் அரசாங்கம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பதுடன், நாட்டினுள் அரசாங்கத்துக்கெதிரான பொதுமக்கள் போராட்டங்களும் தீவிரம் பெறும் என்றும் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.
அதன் காரணமாக ஜே.வி.பி.யின் தொழிற்சங்க முக்கியஸ்தர் லால்காந்தவை உசுப்பி, ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டு ஐ.தே.க.-ஜே.வி.பி. கூட்டுக்கு எதிராக களமிறக்க அரசாங்கம் முயன்று வருகின்றது.அதற்காக லால்காந்தவுக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு பெருந்தொகைப் பணம் கைமாறவுள்ளதுடன்,  லால்காந்தவைப் பயன்படுத்தி ஜே.வி.பி.க்குள் மிக விரைவில் குழப்பமொன்றையும் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தெரிவுக்குழு மூலமே இறுதித் தீர்வு! அடித்துக் கூறுகிறார் ஜனாதிபதி!
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தான் சிறப்பானது. அதுவே எனது இறுதி முடிவும். இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.அந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு எவரும் எனக்கு நெருக்குதல் தரமுடியாது. சகல மக்களும் ஏற்கக்கூடிய தீர்வைத்தான் காணவேண்டும். அந்தத் தீர்வு, அறிவிக்கப்போகும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் மட்டுமே காணமுடியும் என்றார் ஜனாதிபதி.இதேவேளை அரசுடன் பேச்சு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந் தத் தெரிவுக் குழுவை நிராகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது தெரிந்ததே.
பேச்சு மூலம் தீர்வை எட்டும் நம்பிக்கை அரசுக்கு இல்லை! மாற்றாக மாகாண சபை தேர்தல் நடத்த முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாம் நடத்திவரும் பேச்சுக்களின் மூலம், தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று அரசதரப்பு தெரிவித்துள்ளது.எனவே விரைவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட 7 சுற்றுப் பேச்சுக்களின் பின்னரும் அதிகாரப் பகிர்வு குறித்து இணக்கம் இது வரை எட்டப்படவில்லை.எதிர்காலத்திலும் எட்டப்படும் என்ற நம்பிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது'' என்று அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். 


"எனவே மாற்றீடாக மாகாண சபைத் தேர்தலை நடத்தித் தமிழ் மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது என்று அரசு ஆலோசித்து வருகின்றது'' எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக 5 விடயங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.


* இடம்பெயர்ந்த மக்களை முழு அளவில் மீளக் குடியமர்த்தல்.
* பொது மன்னிப்பு வழங்கி, புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் அனைவரையும் விடுதலை செய்தல்.
* கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதப் படுத்தல்.
*மீளக்குடியமர்த்த முடியாத நிலையில் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
* 2010ஆம் ஆண்டுக்கான தேர்தல் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
ஆகிய விடயங்களையே உடனடியாகச் செயற்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.வடமாகாணத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக இவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று அரச வட்டாரம் தெரிவித்தது.தனியார் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சித்த போது நாடு முழுவதும் அதற்கு உறுதியான எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை அறிவிப்பதற்கு அரசு தயங்குகிறது என்று மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 
அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது! ஜனாதிபதியின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவர்.
அமெரிக்கா கொலம்பியா நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீது பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பில் அவர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கம் உள்ளுர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது.எனினும் தற்போது அமரிக்க நீதிமன்றத்தில் ஜனாதிபதியின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த சட்டத்தரணியை ஒழுங்கு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை, மூதூரில் 17 அரச சார்ப்பற்ற பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையின் படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் படைகளின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நட்டஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு அமெரிக்க கொலம்பிய நீதிமன்றம் அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளது.
பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த ஆடை ஏலம்.
பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு ரசிகர்கள் இல்லாத நாடுகளே இல்லை. பாடிக் கொண்டே பம்பரமாய் சுழன்று ஆடும் இந்த இசைக் கலைஞர் என்றைக்கும் நினைவில் இருப்பார்.மிக வித்தியாசமான முக அழகுடன் வலம் வரும் மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்து இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அவர் அணிந்த சட்டையை லாஸ் ஏஞ்சல்ஸ் ஏல மையம் ஏலம் விட முடிவு செய்துள்ளது. பெவரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜுலியம் ஏலம் காலிரியில் மைக்கேல் ஜாக்சனின் கறுப்பு சிவப்பு நிற தோல் ஆடை ஏலம் விடப்படுகிறது. இந்த ஜாக்கெட் 4 லட்சம் டொலருக்கு மேல் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1983ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட வீடியோ அல்பத்திற்காக இந்த ஜாக்கெட்டை அணிந்து இருந்தார். 2009ம் ஆண்டு வீடியோ அல்பம் தேசிய பட பதிவகத்தில் சேர்க்கப்பட்டது. மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைவதற்கு முன்பாக தனது ஆடை வடிவமைப்பாளர்களிடம் இந்த சட்டையை அளித்து இருந்தார்.50 வயது மைக்கேல் ஜாக்சன் 2009ம் ஆண்டு ஜுன் மாதம் மரணம் அடைந்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரணி மற்றும் மயக்க நிலை மாத்திரைகளை பயன்படுத்திய நிலையில் அவர் மரணம் அடைந்தார்.
டொரன்டோ நகர வாசிகள் காட்டுமிராண்டித் தனமானவர்கள்: நிபுணர் தகவல்.
டொரன்டோ நகர வாசிகள் கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகளைப் போன்றவர்கள் என்று வர்ணித்திருக்கின்றார் மனிதப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயும் நிபுணர் லிண்டா அலன்.வீதிப் போக்குவரத்து விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. சைக்கிளில் செல்பவர்கள் கூட தங்களுக்கான விதிமுறைகளைப் பேணி நடப்பதில்லை.
வரிசையாக நின்று காரியங்களை முடிக்க வேண்டிய இடத்தில் அந்த ஒழுங்கு பின்பற்றப்படுவதில்லை. ஒரு கட்டிடத்தில் கதவைத் திறந்து கொண்டு பிரவேசிக்கின்ற போது அடுத்து வருபவரைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை.லிப்ட்டுகளுக்குள் பிரவேசிக்கும் போது மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு செல்வது. சமூக ஒழுங்கு என்பது மிகவும் அருகிப் போய்விட்டது. நாகரிகம் அடைந்த சமூகம் என்று கூறிக் கொள்கின்றோம். நவீன கார்களையும், உபகரணங்களையும் பாவிக்கின்றோம்.
வானுயர் கட்டிடங்கள் எழுகின்றன. ஆனால் அடிப்படை பண்பு அற்றுப் போய்விட்டது. டொரன்டோ ஒரு நகரக் காடு. திரும்பிய பக்கம் எல்லாம் அங்கு மிருகங்களின் நடமாட்டம் தான் தென்படுகின்றது. மனிதர்கள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றனர்.அதற்காக பொது நலன்களை பலியிடுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளில் இந்த நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நீண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் லிண்டா அலன்.
டொரன்டோவின் சனத் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பழக்க வழக்கப் பிரச்சினையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒருவகையான மன அழுத்தங்களும், அவசரப் போக்குமே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்லேடனை அழைத்து வந்ததே நவாஸ் செரீப் தான்: ரஹ்மான் மாலிக் குற்றச்சாட்டு.
எகிப்தில் தங்கியிருந்த பின்லேடனை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்ததே நவாஸ் செரீப் தான் என்று ரஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அல்கொய்தா தலைவர் பின்லேடன் அபோதாபாத்தில் பதுங்கியிருந்தது உளவுத் துறையின் கவனத்துக்கு வரவில்லை.
அவர்களுக்கு தெரியாமல் தான் அங்கு அவர் தங்கி உள்ளார். சில நேரங்களில் இதுபோன்ற தவறு நடப்பது சகஜம் தான். அதை விடுத்து அரசு அவருக்கு பாதுகாப்பு கொடுத்ததாக கூறுவது சரியல்ல. எங்கள் அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.அபோதாபாத்தில் பின்லேடன் மீது அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தியது 15 நிமிடங்களுக்கு பிறகு தான் தெரியும். எனவே உளவுத் துறையின் குளறுபாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எகிப்தில் இருந்த பின்லேடனை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்தது நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தான். அந்த கட்சியின் ஆட்சி காலத்தில் தான் அவரிடம் இருந்து நிதி பெறப்பட்டது. அதற்கு கைமாறாக உடல் நலக்கோளாறுக்கு சிகிச்சை பெற அவர் பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டார்.இந்த குற்றச்சாட்டை பிரதான எதிர்க்கட்சி தலைவரும், நவாஸ் செரீப் கட்சியின் தலைவருமான நிசார் மறுத்துள்ளார். பின்லேடன் பாகிஸ்தானில் ரகசியமாக தங்கியிருந்த போது கண்காணிக்காமல் அரசு தூங்கி கொண்டிருந்தது என குற்றம் சாட்டியுள்ளார்.
2022ம் ஆண்டிற்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூட ஜேர்மனி முடிவு.
ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பரவியதை தொடர்ந்து ஜேர்மனியில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் 2022ம் ஆண்டில் மூடி விட ஏங்கலா மார்கெலின் ஜேர்மனி அரசு முடிவு செய்தது.அணு உலைகளை முன்னதாக மூட வேண்டும் என கிறீன் கட்சி முதலில் வலியுறுத்தியது. தற்போது அரசின் முடிவை ஏற்பதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்தது.
பெர்லின் நகரில் அக்கட்சியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 819 பேர் பங்கேற்றனர். இதில் சிலர் 2017ம் ஆண்டிற்கு முன்பாகவே அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தினர்.அணு சக்தியை ஜேர்மனி அரசு கைவிடுவது நமக்கு கிடைத்த வெற்றி என கிறீன் கட்சியின் இணை தலைவர் கிளாடியா ரோத் தெரிவித்தார். அணு உலைகளை மூடுவது தொடர்பாக ஏங்கலா மார்கெல் அமைச்சரவை இந்த மாதம் கையெழுத்திட்டது.
ஜேர்மனியில் தற்போது 9 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை 2015 – 2022ம் ஆண்டு காலகட்டத்தில் மூடப்படும். ஜப்பானில் மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட அணு விபத்தை தொடர்ந்து ஜேர்மனியின் 7 பழைய அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன.அணு உலைகளை மூடுவதற்கு முன்பாக தங்களிடம் அதன் முடிவை தெரிவிக்கவில்லை என சில ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. ஜேர்மனி நடவடிக்கை அருகாமையில் உள்ள பிரான்சை பாதித்தது. ஏனெனில் ஜேர்மனியிடம் இருந்து பிரான்ஸ் மின்சாரம் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மைனாரிட்டியாகும் வெள்ளை இனத்தவர்கள்.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர்.ஆனால் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெள்ளையின குழந்தைகளை விட கறுப்பின குழந்தைகள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதை வைத்து கணக்கிடும் போது 2050ம் ஆண்டுகளில் கறுப்பு இனத்தவர்கள் மெஜாரிட்டியாகவும், வெள்ளையர்கள் மைனாரிட்டியாகவும் மாறும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.மேலும் அமெரிக்காவில் திருமணம் செய்து கொள்பவர்களின் விகிதம் குறைவதால் குடும்பத் தலைவியாக பெண்கள் இருக்கும் ஆப்பிரிக்க குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கணணி போரில் சிக்கி தவிக்கும் சீனா மற்றும் பிரிட்டன்.
இரு நாடுகள் இடையே கணணி யுத்தம் நடைபெற்று வரும் தருணத்தில் சீன பிரதமர் வென்ஜியாபோவ் நாளை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார்.இரு தலைவர்கள் தங்கள் இருநாடுகள் இடையே அறிவிக்கப்படாத நவீன தொழில்நுட்ப யுத்தம் நடந்து வருவதை அறிவார்கள். சீன பிரதமர் தற்போதைய ஐரோப்பிய பயணத்தை ஹங்கேரியில் துவக்கி உள்ளார்.
சீனா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட காலமாக தொழில்நுட்ப பனிப்போர் இருந்த போதும் பிரிட்டனின் உளவு நிறுவனமான எம்15 சீனாவின் உளவு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.பிரிட்டனின் மக்கள் மற்றும் ராணுவ திட்ட விவரங்களை சீனா உளவு பார்ப்பதாக எம்15 தெரிவித்து இருந்தது. கடந்த ஆண்டு ராணுவம், எரிசக்தி, கொம்யூனிகெஷன்ஸ் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் விடயங்களில் சீனா உளவு பார்ப்பதாக தெரிவித்து இருந்தது.சீனாவின் பெரும் நகரங்களான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் வெளிநாட்டவர்கள் தங்கி செல்லும் அறைகளை சீனா சோதனை செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிச்சயம் கடாபியை கொல்வோம்: நேட்டோ படைகள் எச்சரிக்கை.
லிபியாவில் பொது மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் தந்தால் நாங்கள் உங்களை கொல்வோம் என நேட்டோ படைகள் ஓடியோ ஒன்றின் மூலம் எச்சரித்து உள்ளது.சனிக்கிழமை ஒலிபரப்பான இந்த ஓடியோ கர்னல் கடாபிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. லிபியா ரேடியோ ஏர்வேசை மறித்து இந்த ஓடியோ செய்தி வெளியாகி உள்ளது.
அதில் கடாபியை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்ற விவரத்தையும் கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.லிபியா மக்களுக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை நேட்டோ துருப்புகள் பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் நேட்டோ தாக்குதல் தொடரும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் கடாபிக்கு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
நேட்டோவிடம் உங்களை கொல்லும் நோக்கம் இல்லை. இருப்பினும் உங்களது ராணுவ தாக்குதல் மக்கள் மீது தொடரும்பட்சத்தில் உங்கள் மீது விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் முதல் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.லிபியாவில் மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றும் பன்னாட்டு படைகள் முயன்று வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு.
முந்தைய ஆண்டை காட்டிலும் 2011ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து புகலிடம் தேடி வேறு இடம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது.இடம் பெயர்ந்த மக்களுக்கு வழிகாட்டும் அமைப்பான சர்வதேச அகதிகள் அமைப்பு இதனை தெரிவித்து உள்ளது. 2011ஆம் ஆண்டில் முதல் 5 மாதங்களில் 91 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர்.கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 42 ஆயிரம் பேர் மட்டுமே ஆப்கானிஸ்தானில் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி உள்ளனர் என சர்வதேச அகதிகள் வழி நடத்தல் அமைப்பாளர் லின் யோஷிகவா தெரிவித்தார்.
அகதிகளாக வந்த மக்கள் மிக நெரிசலான இடங்களில் இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் கூடாரத்திற்கு வெளியே தங்கள் இடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளது. மருத்துவ வசதிகளும் மிக சிறிய அளவிலேயே உள்ளது என்று யோஷிகோவா தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் பல்வேறு புகலிட கூடாரங்கள் உள்ள பகுதிகளுக்கு யோஷிகோவா இந்த ஆண்டு துவக்கத்தில் சென்றார். அப்போது அகதிகள் வசிக்கும் மோசமான சூழ்நிலைகளை அவர் புகைப்படம் பிடித்தார்.
அவர்களது மோசமான வாழ்விட நிலைகளையும் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை நீடிக்கிறது. இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் விதை நிறுவனத்திற்கு தொடர்பு.
இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நுண் உயிரி மனித உடலுக்கு அபாயத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்த இ.கோலி பக்டீரியா பிரான்சிலும் பரவியது. இந்த பக்டீரியா பரவியதற்கு பிரிட்டனில் உள்ள ஒரு விதை தான் காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள். இது குறித்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரான்சில் போர்டக்ஸ் பகுதியில் 10 பேர் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் ஸ்விச் பகுதியை சார்ந்த தாம்சன் மற்றும் மார்கன் நிறுவனம் விற்ற விதையில் உருவான காய்கறிகளால் இந்த இ.கோலி பக்டீரியா பரவி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.பிரிட்டனின் உணவு தர முகமையான எப்.எஸ்.ஏ இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று சம்பந்தப்பட்ட விதை நிறுவனமும் இ.கோலி பரவலுக்கு நாங்கள் காரணம் இல்லை என தெரிவித்து உள்ளது.
ஆண்டுதோறும் தாம்சன் நிறுவனம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் விதை பாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.தங்களது தயாரிப்புகள் தரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளன என தாம்சன் நிறுவன இயக்குனர் பால் ஹான்ஸ்சார்ட் தெரிவித்தார்.
பாரம்பரிய தலத்தை பாதிக்கும் காற்றாலை திட்டத்தை பிரான்ஸ் நிறுத்த வேண்டும்: ஐ.நா உத்தரவு.
உலக பாரம்பரிய தலத்திற்கான பட்டியலில் உள்ள மான்ட் செயின்ட் மைக்கேல் ஆலயம் நார்மாண்டி கடல் பகுதியின் பாறை தீவில் அமைந்துள்ளது.ஐ.நா.வின் யுனஸ்கோ கலாசார அமைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயத்தின் தர நிலையை பாதிக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளக்கூடாது என ஐ.நா அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.அந்த பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருவதை தொடர்ந்து ஐ.நா இவ்வாறு தெரிவித்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு முதல் இந்த மான்ட் செயின்ட் மைக்கேல் ஆலயம் உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து வருகிறது.
யுனஸ்கோ தனது வருடாந்த கூட்டத்தை ஜீன் 29ஆம் திகதி பாரிசில் நடத்துகிறது. இந்த கூட்டம் நடைபெறும் தருணத்தில் புகழ்பெற்ற நினைவிடத்தை பாதிக்கும் வகையில் காற்றாலை திட்டத்தை பிரான்ஸ் மேற்கொள்ள வேண்டாம் என யுனஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.உலக பாரம்பரிய இடங்களை முடிவு செய்யும் கொமிட்டி பிரான்ஸ் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பாரம்பரிய தலம் குறித்த அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிறது. அதுவரை காற்றாலை போன்ற திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என கூறப்பட்டு உள்ளது.
நார்மான்டி மற்றும் பிரிட்டன் கடலோரப்பகுதிகள் இடையே சில காற்றாலை நிறுவனங்கள் காற்றில் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு உள்ளன. ஒரு காற்றாலை திட்டத்திற்கு உள்ளூர் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.100 மீற்றர் உயரத்தில் 17 கிலோ மீற்றர் தொலைவில் 3 காற்றாலைகள் இந்த பகுதியில் அமைக்க தீவிரம் காட்டப்படுகிறது. மான்ட் செயின்ட் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிக் பகுதியில் மீன் பிடிக்க தடை: கனடா மக்கள் வலியுறுத்தல்.
ஆர்டிக் பனிப்பகுதியில் வர்த்தக ரீதியில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என பெரும்பாலான கனடா மக்கள் சர்வே ஒன்றில் தெரிவித்துள்ளனர்.ஆர்டிக் பகுதியில் கடல் பனிக்கட்டி வெப்பம் காரணமாக அதிகம் உருகுவதாலும், கதகதப்பான தண்ணீராலும் மீன் பிடி கப்பல்கள் வடக்கு பகுதியில் அதிக அளவில் செல்லும் என வடக்கு கடல் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச ஆர்டிக் தண்ணீர் பகுதியில் ஆய்வுகள் முடியும் வரை வர்த்தக ரீதியில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என சர்வேயில் 54 சதவீத மக்கள் தெரிவித்தனர். இதர நாடுகள் மீன் பிடிக்கும் நடவடிக்கையை கனடா அரசு தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.வாக்களித்த நபர்களில் 23 சதவீதம் பேர் கூறியதாவது: ஆர்டிக்கில் மீன் பிடிக்க அனுமதிக்கும் பட்சத்தில் கனடா மீனவர்களை முதலில் அனுமதிக்க வேண்டும் என கோரினர். நானோ ரிசர்ச் அமைப்பு கடந்த மே மாதம் இறுதியில் தொலைபேசி வழியாக இந்த சர்வேயை நடத்தினர்.
பியுபோர்ட் கடல் பகுதியில் மீன்படிக்க அனுமதி கிடையாது என அமெரிக்கா வலியுத்தி உள்ளது. உலக மீன் பிடித் தொழிலில் பெருமளவு ஈடுபட்டு வரும் ஐரோப்பிய ஒன்றியமும் இதே நிலையை பரிசீலனை செய்து வருகிறது.ஆர்டிக் கடல் பகுதியில் மீன்பிடிப்பு மேற்கொள்வதால் குறிப்பிட்ட மீன் இனங்கள் அதிக அளவு வேட்டையாடப்படலாம் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.அனைத்து தரப்பினரும் ஆர்டிக் பகுதியில் ஆழ் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வர்த்தக மீன்பிடிப்பை அனுமதிக்க கூடாது என கூறப்படுகிறது.
இந்திய மாணவியை நாடு கடத்தும் முயற்சி நிறுத்தி வைப்பு.
உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அமெரிக்காவில் தங்கி படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவியையும், அவரது தாயாரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இந்தியாவைச் சேர்ந்தவர் மந்தீப் சகால். கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து வருகிறார். இவரும், இவரது தாயார் ஜகதீஷ் கவுரும் 1997ல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர்.இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததை அறிந்த அமெரிக்க அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி அமெரிக்க அரசிடம் ஜகதீஷ் கவுர் மனு அளித்தார்.
இது தொடர்பான விசாரணை ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. அரசியல் தஞ்சம் அளிக்க முடியாது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜகதீஷ் கவுர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.உடல்நல பிரச்னை காரணமாக பின்னர் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் ஜகதீஷ் கவுரும், மந்தீப் சகாலும் அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இருவரையும் இந்தியாவுக்கு ஜூன் 22க்குள் நாடு கடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே மந்தீப் சகாலின் நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் நாடு கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவை அறிவித்தது.இதன்படி ஜகதீஷ் கவுரையும், மந்தீப் சகாலையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
அமெரிக்கா அளிக்கும் நிதியுதவி பயங்கரவாதிகளுக்கு செல்கிறது: அமெரிக்க அமைச்சர் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதி உதவி அங்குள்ள பயங்கரவாதிகளுக்குச் செல்வதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸ்டிங்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பேசிய அவர் இது குறித்து மேலும் கூறியது: உலகில் இப்போது மிகுந்த குழப்பம் மிகுந்த பகுதியாக பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அதிக நிதியுதவி அளித்து வருகிறது.இது அந்நாட்டு வளர்ச்சிக்காகவும், அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவும் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த நிதி பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்கிறது.
ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்கவே இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. நிதி கொடுத்து உதவுவதுடன் நிறுத்தி விடக் கூடாது. அந்த நிதி எந்த வகையில் எந்த விடயங்களுக்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.பாதுகாப்புக்கும், ராணுவத்துக்கும் பெருமளவில் செலவிடுகிறோம். அதே நேரத்தில் நாம் வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிதியுதவி எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணித்து அறிய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைக்கும் வழிகளை அடைத்து விட்டாலே அவர்களை வேகமாக ஒடுக்கி அழித்து விட முடியும்.
நியூ யார்க்கர் பத்திரிகையில் சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ராணுவமும், அங்குள்ள உளவு நிறுவனங்களும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்றார் அவர்.
ஹேஸ்டிங்ஸின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிச் நுஜெண்ட், பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள தலிபான் பயங்கரவாதிகள் தான் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்புகளும் முனைப்புடன் செயல்படவில்லை. தங்கள் நாட்டில் உள்ள தலிபான்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
முதல் தடவையாக இராணுவ உடையில் வலம் வரும் இளவரசி.
இளவரசர் வில்லியமை மணந்து கொண்ட பின் அரச குடும்ப மரபின் படி கேம்பிரிட்ஜ் கோமகள் என பட்டம் சூட்டப்பட்ட கேட் வில்லியம் முதற் தடவையாக இராணுவ சீருடையுடன் வைபவம் ஒன்றில் இன்று கலந்து கொண்டார்.பிரிட்டிஷ் படைப்பிரிவில் உள்ள ஐரிஷ் காவல் படையணியின் சின்னம் சூட்டும் வைபவத்துக்கே இளவரசர் வில்லியம் சகிதம் கேட் இராணுவ சீருடையில் சமுகமளித்திருந்தார்.ஆப்கானிஸ்தானில் ஆறு மாதங்கள் பணியாற்றிய பின் நாடு திரும்பியுள்ள பிரிட்டிஷ் வீரர்களுக்கு கேட் சின்னங்களை வழங்கிவைத்தார். இளவரசர் வில்லியம் இந்தப் படை அணியின் கேணல் ஆவார்.
தனது கணவனுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படை அணியின் சின்னம் சூட்டும் வைபவத்தில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக கேட் தெரிவித்துள்ளார்.வின்ட்ஸரில் உள்ள விக்டோரியா முகாமில் இந்த வைபவம் இன்று இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு வருகை தந்த வில்லியம்-கேட் தம்பதி வைபவம் தொடங்கு முன் ஆப்கானிஸ்தானில் உயிர்நீத்த சில பிரிட்டிஷ் படை வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்து தமது அனுதாபங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உயரமான மலையில் அமைக்கப்படும் மரப் பாதை.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் வானுயர நிற்கிறது ஷிபோ மலை. எந்த சாய்வும் இன்றி 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாய் காட்சி அளிக்கிறது.தொலைவில் இருந்து பார்த்தாலே கிறுகிறுக்க வைக்கும் இந்த மலை முகட்டில் எதையும் எதிர்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக 3 அடி அகல மரப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.1.8 மைல் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்தப் பாதையை அமைக்கும் பணியில் சீனாவின் ஜியன்ஜி மாகாணத்தை சேர்ந்த தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர்.பல்லாயிரம் அடி உயரத்தில் கயிறுகளை மட்டும் கட்டிக் கொண்டு பாதை அமைத்து வருகிறார்கள். லேசாக கால் இடறி கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சாது.
ஆனால் அந்த பயம் அவர்களிடம் துளியும் இல்லை. இந்த பணியை மேற்கொண்டு வரும் இன்ஜினியர் யு ஜி கூறும் போது,"எனக்கு இந்த பணியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. மற்ற வேலைகளை போலத் தான் இதுவும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல இதில் எந்த ஆபத்தும் இல்லை" என்றார்.இவர் மலைப் பாதைகளில் சாலை அமைக்கும் பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் மருத்துவமனையில் தாக்குதல்: 60 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.இத்தகவலை ஆப்கன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லோகர் மாகாணத்தில் உள்ள அஸ்ரா மாவட்டத்தில் செயல்படும் சிறிய மருத்துவமனை ஒன்றில் இத்தாக்குதல் நிகழ்ந்தது.
இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று மருத்துவமனை நோக்கி ஓட்டி வரப்பட்டது. மருத்துவமனையின் பாதுகாவலர்கள் அதை ஓட்டி வந்த நபரை தடுக்க முயன்றனர்.ஆனால் அதையும் மீறி காரை ஓட்டிச் சென்று மருத்துவமனை கட்டடத்தில் அவர் மோதச் செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதனிடையே இத்தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆப்கனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிக்கு மோனோலிசா ஓவியம் தரப்பட மாட்டாது: பிரான்ஸ்.
உலக புகழ்பெற்ற மோனோலிசா ஓவியம் இத்தாலி நாட்டை சேர்ந்தது. இருப்பினும் அந்த ஒவியம் பிரான்சை விட்டு செல்லாது என பாரிஸ் லாவ்ரே அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.வருகிற 2013ஆம் ஆண்டு இத்தாலியில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு மோனோலிசா ஓவியத்தை அனுப்புவது குறித்து இணையதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்த வேண்டுகோளை பிரான்ஸ் ஏற்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக உலக மக்களை கவர்ந்து வரும் மெல்லிய புன்னகை சிந்தும் மோனோலிசா ஓவியம் 1500 ஆண்டுகள் துவக்கத்தில் வரையப்பட்டது.
இந்த ஓவியத்தை ப்ளோரன் மாகாண அரசு பகுதியில் லியானார்டோ வரைந்தார். இந்த ஓவியத்தை இத்தாலி கண்காட்சிக்கு அனுப்ப வேண்டும் என ஓவியக் கலைஞர் சில்வானோ வின்சென்டி தலைமையிலான இத்தாலி பாரம்பரிய கொமிட்டி வேண்டுகோள் விடுத்தது.இந்த வேண்டுகோள் லாவ்ரேவை முறைப்படி வந்து சேரவில்லை. மோனாலிசா ஓவியம் மிகவும் உடையக்கூடிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அதனை நீண்ட தூரம் கொண்டு செல்வது சரியாக இருக்காது என லாவ்ரே அருங்காட்சியக ஓவிய பொறுப்பு தலைவர் வின்சென்ட் தெரிவித்தார்.
லாவ்ரே அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியத்தை காண காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மோனோலிசா ஓவியம் கடந்த 1911ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த நபர் ஒருவரால் திருடப்பட்டது.பின்னர் 1913ம் ஆண்டு அந்த ஓவியம் மீண்டும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 1963ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் 1974ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் மோனோலிசா ஓவியம் பயணித்தது. அப்போது ஓவியம் மோசமாக பாதிக்கப்பட்டது என லாவ்ரே அருங்காட்சியகம் தெரிவித்தது.
ஈராக்கில் அதிவேக ரயில்: பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் அமைக்கிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து பஸ்ரா வரை அதிவேக ரயில் இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் மேற்கொள்கிறது.இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக அல்ஸ்டோம் மற்றும் ஈராக் ரயில்வே இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பாரிஸ் சர்வதேச விமான கண்காட்சியில் போக்குவரத்து துறை இளநிலை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்தார். ரயில் கட்டுமானம், ரயில் பாதை மற்றும் ரயில் சேவை பணிகளிலும் அல்ஸ்டோம் ஈடுபடுகிறது என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.புதிய அதிவேக ரயில் திட்டம் 650 கிலோ மீற்றர் ரயில் வலையமைப்பை கொண்டது. இதில் மணிக்கு 250 கி.மீ வேகத்தில்(135மைல்) ரயில்கள் இயக்கப்படும். ஈராக்கில் அதிவேக ரயில் திட்டம் மேற்கொள்வது தொடர்பாக இருதரப்பிலும் 12 மாத கால பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அதிவேக ரயில் பாக்தாத், பஸ்ரா, கர்பலா, நஜப், மவுசாயெப் மற்றும் சமாவக் நகரங்களை இணைப்பதாக இருக்கும். பிரான்ஸ் அமைச்சர் மாரியானி செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஈராக் சென்று ஒப்பந்த விவரம் குறித்து பேசுகிறார்.இத்திட்டத்திற்கான நிதி விவரம் அறிவிக்கப்படவில்லை. கடந்த மே மாதம் ஈராக்கில் தரம் உயர்த்தப்பட்ட கணணி ரயில் வலையமைப்பை 25 கி.மீ வரை மேற்கொள்வதாக அல்ஸ்டோம் தெரிவித்தது.
முஷாரப்பின் முன்னாள் உதவியாளர் தற்கொலை.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் மாஜி உதவியாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ சர்வாதிகாரியாகவும், முன்னாள் அதிபராகவும் இருந்தவர் பர்வேஷ் முஷாரப். இவரின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் மேஜர் சையத் தன்வீர் அலி.
இவரும் ராணுவ அதிகாரியாக இருந்து கடந்த 2004ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் முஷாரப்பின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது தனது படுக்கையறையின் கதவினை உட்புறமாக பூட்டிவிட்டு கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொ‌லை செய்து கொண்டார்.சம்பவ இடத்தில் பொலிசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரி‌சோதனைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோ‌தனைக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்‌கொலை செய்து கொண்ட சையத் தன்வீர் அலியின் இடது பக்க தலைப்பகுதியில் குண்டு பாய்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவர் தனியார் செக்கியூரிட்டி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் இவருக்கு ஏராளமான பணம் விரையம் ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மேலும் துப்பாக்கியில் இவரது கைரேகை இருந்ததற்கான அடையாளம் இல்லை. இவரது சாவில் மர்மம் இருப்பதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF