Saturday, June 18, 2011

இன்றைய செய்திகள்.


குவைத்தில் இலங்கைப் பெண்ணின் அழுகிய சடலம்.

குவைத்தில் தொடர்மாடி ஒன்றில் இருந்து இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளது. 

30 வயதுடைய இவ் இலங்கைப் பெண் குருதிக் கசிவினால் இறந்திருப்பதாகத் தெரியவருகிறது.தொடர்மாடியில் இருந்து நாற்றம் எடுத்ததனை அடுத்து, அயலவர்கள் பொலிசிற்கு முறைப்பாட்டை செய்தனர்.இதனை அடுத்து பொலிஸார், அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று தொடர்மாடியை திறந்து சோதனை செய்தனர். இதன் போது குறித்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. பின்னர் தடவியல் பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வொஷிங்டனிலுள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றமொன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.இலங்கையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணைக்காவே அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் ரஜிஹரனின் தகப்பனார்,  மூதூரில் அக்ஷன்  பெய்ம் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கொல்லப்பட்ட  பிரேமாஸ்  ஆனந்தராஜாவின் ஆகியோரின் உறவினர்களும் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தவராஜா குடும்பத்தினர் ஆகிய மூன்று தரப்பினர் கூட்டிணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக முப்பது மில்லியன் நஷ்டஈடு கோரி மேற்குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான மேற்படி படுகொலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் தங்கள் வழக்கின் பிரதிவாதியாக இலங்கை முப்படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட்டுள்ளனர்.
இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் துணையுடன் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான புரூஸ் பெயின் ஊடாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சித்திரவதைகளுக்கெதிரான ஹேக் பிரகடனத்தில் அமெரிக்காவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ள நிலையில் அதே சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் எந்தவொரு நாட்டினருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்ற விதியைப் பயன்படுத்தியே பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. அதற்கான அழைப்பாணை நீதியமைச்சின்  செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
யாழ்.தாக்குதல் சம்பவம் பொலிஸாருக்கு முறையிட முன்னர் அமெரிக்க தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது - கோத்தபாய.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறு சம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய,
நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரள வேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனை துண்டாட முயற்சி செய்தனர். தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையினருக்கு எதிரான வீடியோ கசட்டுக்களைத் தயாரித்து சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளனர். படையினரின் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார்.கட்டுநாயக்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமெங்கும் எமது நாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும், கிழக்கில் பௌத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலிஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்-4காண்பிக்கவில்லை.இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன.
அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த முறை மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் நாம் தயாராகவிருந்தோம். எனினும், எம்மை குற்றஞ்சாட்டுபவர்கள் அம்மாநாட்டுக்கு சமுகமகளிக்கவில்லை. அவர்கள் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு உதவிசெய்பவர்கள்.இவற்றுக்கு எதிராக மீண்டும் நாம் போராடவேண்டியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
மன்னார் எண்ணெய் வள அகழ்வில் உலகின் மிகப்பெரிய கேஸ் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்.
மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் வள ஆய்வினை மேற்கொள்ள உலகின் மிகப் பெரும் கேஸ் நிறுவனமான கேஸ்ப்ரோம் உடன் இலங்கை ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளது.ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க நகரில் உள்ளமஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்த கேஸ்ப்ரோம் நிறுவனத்தின் தலைவர் எலக்சி மீலர் இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியவள அகழ்வில் ஈடுபட தமது நிறுவனத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகில் மிக இலாபமான எல்.என்.ஜி கேஸை பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது  கலந்துரையாடப்பட்டுள்ளதுஇதனை ஆராய்வதற்கென விசேட குழுவொன்றை சிறீலுங்கா அனுப்ப தீர்மானித்துள்ள கேஸ்ப்ரோம் நிறுவனம் சிறீலங்காவில் எண்ணெய் களஞ்சியசாலை ஒன்றை அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக வெள்ளைக்காரர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்: அமைச்சர் விமல் வீரவங்ச.
இலங்கைத் தமிழர்களுக்காக வெள்ளைக்காரர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டுகின்றார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றின் போது மேற்கத்தேய நாடுகள் இலங்கைத் தமிழ் மக்கள் மீது காட்டும் கரிசனை குறித்த விமர்சனக் கருத்துக்களை வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி இராச்சியத்தின் கடைசிக்காலத்தில் சிங்களவர்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு கண்டிக்குச் சென்ற வெள்ளையர்கள் கடைசியில் சிங்கள பிரபுக்கள் மீதான மக்கள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து கடைசியில் கண்டி இராச்சியத்தைத் தங்கள் காலடிக்குள் கொண்டு வந்தனர்.இன்று மீண்டும் அவர்கள் இலங்கை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நாட்டில் மனித உரிமைகள் இல்லையாம். இந்நாட்டில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவாம். அப்பாவித் தமிழ் மக்கள் மீது அநியாயம் இழைக்கப்படுகின்றதாம்.
அதையெல்லாம் வெள்ளைக்காரர்களால் தாங்கிக் கொண்டிருக்க முடியாதாம். அவர்களுக்கு வேதனையாக இருக்கின்றதாம். அன்று கண்டிச் சிங்களவர்களுக்காக வடித்த அதே நீலிக்கண்ணீரை இன்று தமிழ் மக்களுக்காக அவர்கள் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதியமைச்சர் முரளிதரன் மீது போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்: அல்ஜெசீரா.
பிரதியமைச்சர் முரளிதரன் மீது போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அல்ஜெசீரா தொலைக்காட்சி கோரிக்கை விடுத்துள்ளது.நீதிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் டொனல்ட் உடனான நோ்காணல் மற்றும் சனல்4 காணொளிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியொன்றின் போதே அல்ஜெசீரா தொலைக்காட்சி பிரஸ்தாப கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது புலிகளுக்காக சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொண்டமைக்காக விசாரணை செய்ய வேண்டும் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அவர் இலங்கையில் 600 பொலிசாரை கொலை செய்த குற்றச்சாட்டில் பாரிய அழுத்ததை எதிர் நோக்கி வரும் நிலையில் அல்ஜெசீரா இவ்வாறானதோர் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தற்போது கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது தெரிவித்துள்ளது.புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அல்ஜசீரா மேலும் தெரிவிக்கின்றது.புலிகள் இயக்கத்தின் எஞ்சிய முக்கிய பிரமுகர்கள் இன்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மற்றும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர் என்றும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சுட்டிக் காட்டியுள்ளது.
பான் கீ மூன் மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரிவு?
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பான் கீ மூன் ஏகமனதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தென் கொரிய இராஜதந்திரியான பான் கீ மூன் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.192 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பான் கீ மூனை இரண்டாம் தவைணக்காக தெரிவு செய்யவுள்ளது. 67 வயதான பான் கீ மூனின், இரண்டாம் தவணைக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.
முன்னாள் தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூனை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என இலத்தின் அமெரிக்க நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.பொதுச் செயலாளர் பதவிக்காக வேறு நாடுகள் வேட்பாளர்களை நியமிக்காத காரணத்தினால் பான் கீ மூன், மீண்டும் ஐ.நா.வின் செயலாளர் நாயகமாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.

சாய்பாபா அறையில் கோடி கோடியாக பணம், தங்கம்!

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள, சத்ய சாய்பாபாவின் அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. 
அங்கு கோடி கோடியாக பணமும், தங்கம் மற்றும் வைர நகைகள் குவியல் குவியலாக இருந்துள்ளன. 


சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் அவை கணக்கிடப்பட்டு, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன.ஆன்மிக தலைவராக இருந்து, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மார்ச் 28ம் தேதி மோசமடைந்தது. 


அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தும், சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 24ம் தேதி அவர் மரணமடைந்தார்.பிரசாந்தி நிலையத்தில், அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர், அவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நாட்களிலேயே பூட்டப்பட்டது. 


அங்கு ஏராளமான தங்க நகைகளும், பணமும் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து பலவித கருத்துகள் பக்தர்கள் மத்தியில் நிலவியது. இதைத் தொடர்ந்து, சாய்பாபாவின் அறையை திறப்பது என, அறக்கட்டளை உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.இந்நிலையில், ஒன்றரை மாதங்கள் கழித்து, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டது.


சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், சத்யபாபா டிரஸ்ட்டின் உறுப்பினருமான பி.என்.பகவதி, செயலர் சக்ரவர்த்தி, எஸ்.வி.கிரி, வி.சீனிவாசன், சத்யபாபாவின் சீடரும், பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் முன்னிலையில் யஜூர்வேதமந்திர் திறக்கப்பட்டது. இவர்களுடன், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, கர்நாடக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வைத்தியானந்தா ஆகியோரும் அறைக்குள் சென்றனர்.


அவர்கள், அறையின் உள்ளே போனபோது, ஒவ்வொரு அறையிலும் , நகைகளும், பணமும் குவியல் குவியலாக இருந்தது தெரியவந்தது. பணம் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. வைர நகைகளும் அதிகமாக இருந்துள்ளன. தங்க நகைகளை பொறுத்தமட்டில் மோதிரங்கள், சங்கிலிகள் மற்றும் தங்கக் கட்டிகளும் விலை மதிப்பு மிக்க கற்களும் இருந்ததாக கூறப்படுகிறது.


அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனியாக பிரிக்கும் பணியில், சாய்பாபா அறக்கட்டளை கல்விக் கூடத்தில் பயிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்ப்பட்டு, அவர்கள் பணத்தையும், நகைகளையும் மதிப்பீடு செய்தனர். இதற்காக, வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வந்து இருந்தனர். 


பணத்தையும், நகைகளையும் வங்கியில் டெபாசிட் செய்தனர். அறை திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து நிகழ்வுகளும், வீடியோவில் படமாக்கப்பட்டது. பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் நிருபர்களிடம் கூறுகையில், "யஜூர்வேதமந்திர் அறையில் இருந்த பணம், ஸ்டேட் பாங்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 


தங்கம் மற்றும் வைர நகைகளை மதிப்பீடு செய்யும் போது, வருமான வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் உடன் இருந்தார்,'' என்றார்.எவ்வளவு பணம் இருந்தது, நகையின் மதிப்பு பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. நகை மற்றும் பணத்தை மதிப்பீடு செய்வதற்கு இரண்டு நாட்களானது. வங்கி வட்டாரங்களில் கிடைத்த தகவல்படி, 98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும், ரூ.11 கோடியே 56 லட்சம் பணமும் இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஹோட்டல்களை தாக்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதித் திட்டம்.
கடந்த வாரம் சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் அல்கொய்தா தீவிரவாதி பசூல் அப்துல்லா மொகமத் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர் கடந்த 1998ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்க தூதரகத்தை குண்டு வைத்து தகர்த்தவர்.
அவரிடம் இருந்து கணணி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மும்பையை போன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
எனவே அமெரிக்காவின் பெரிய நகரங்களில் உள்ள ஹோட்டல்களிலும் இது போன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். எனவே ஹோட்டல் அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என உளவுத் துறை அதிகாரிகள் உஷார் படுத்தியுள்ளனர்.
சிரியாவில் இருந்து தன் நாட்டு மக்கள் வெளியேற வேண்டும்: பிரிட்டன் தூதரகம் வேண்டுகோள்.
சிரியாவில் வசித்து வரும் பிரிட்டன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.சிரியாவுக்கான பிரிட்டன் தூதரக இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிரியாவில் சட்டம், ஒழுங்கு நிலை மேலும் மோசமடைந்தால் டமாஸ்கஸ் நகரில் உள்ள தூதரகத்தில் வழக்கம் போல் உதவிகளை அளிப்பதில் தொய்வு ஏற்படலாம்.
எனவே சிரியாவில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் விமானப் போக்குவரத்து சேவை தற்போது தொடர்ந்து நடைபெறும் நிலையில் பிரிட்டன் மக்கள் விமானங்கள் மூலம் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேறுவது நல்லது.சிரியா அதிபருக்கு எதிராக அந்நாட்டில் புரட்சியாளர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் அந்நாட்டில் சுமார் 1400 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வரைவுத் தீர்மானம் ஒன்றை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டு வரவுள்ளன. இந்நிலையில் இவ்வாறு பிரிட்டன் தூதரகம் தனது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனடாவுக்கான தபால் சேவைகள் இடை நிறுத்தம்.
கனடாவுக்கான தபால் சேவைகளை அமெரிக்கா தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது. தபால் சேவை மூலம் கனடாவுக்கு அனுப்புவதற்கான கடிதங்களை ஏற்றுக் கொள்வதை அமெரிக்க தபால் சேவை இடை நிறுத்தியுள்ளது.கனடாவின் தபால் சேவைக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையில் பிணக்குகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கனடாவில் தபால் சேவை சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே அமெரிக்கா கனடாவுக்கான தபால்களை ஏற்றுக் கொள்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இன்று நண்பகல் முதல் இது அமுலுக்கு வருவதாக அமெரிக்க தபால் சேவை அறிவித்துள்ளது.தபால்களை ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் தபால் பிரிவினர் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அமெரிக்க தபால் பிரிவு அவதானித்து வருகின்றது.அங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ப தமது முடிவிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது.
தேர்தலில் ஒபாமாவை தோல்வியடையச் செய்ய வேண்டும்: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆளுநர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்யுங்கள் என்று லூசியானா மாகாணத்தின் ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.நியூ ஆர்லியன்ஸ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பாபி ஜிண்டால் கூறியதாவது: அதிபர் பராக் ஒபாமா எங்கிருந்து வந்தார் என்பது குறித்து நான் கேள்வி கேட்க மாட்டேன். ஆனால் அவர் எங்கே செல்கிறார் என்பது பற்றி கேட்பேன்.இந்த நாட்டை ஒபாமா நேசிக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் நாட்டுக்கு சிறந்தது என்று நினைக்கிறார். உண்மையில் அது பெரும் தோல்வியை தான் ஏற்படுத்துகிறது.
குடியரசு கட்சியைச் சேர்ந்த நாம் அனைவரும் முதலில் அமெரிக்கர்கள். எனவே அதிபர் பதவிக்கு மரியாதை தரவேண்டும். ஒபாமாவை வெறுப்பது முட்டாள்தனமானது. ஆனால் அவரை தோற்கடிப்பது மிகவும் அவசியமானது. இவ்வாறு பாபி ஜின்டால் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது,"லூசியானா ஆளுநர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்" என்றார்.
சீன அதிகாரிகள் சுருட்டிய லஞ்ச பணம்: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கல்.
சீனாவில் ஊழல் மலிந்து விட்டது என கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே ஊழல் நடைபெறுவதை சீன அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.இது குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனாவின் மத்திய வங்கி ஒரு குழு அமைத்தது. அந்த குழுவினர் சமீபத்தில் அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர்.அதில் சீன அதிகாரிகள் ரூ.6 லட்சம் கோடி லஞ்ச பணம் சம்பாதித்ததாக கூறப்பட்டுள்ளது. 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1990 முதல் 2008ம் ஆண்டு வரை இந்த மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வர்த்தக ரீதியாக பணபரிமாற்றம் செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து இவற்றை லஞ்சமாக பெற்றுள்ளனர்.இந்த பணத்தை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளில் உலக வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் சீனாவின் பொருளாதாரம் சீரழியும், அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஊழல் அதிகாரிகள் மீது சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
தனக்கு இருக்கும் நோயை வெளியே சொல்ல தயங்கும் இந்தியர்கள்.
பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உட்பட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வந்துள்ள நீரிழிவு நோய் பாதிப்பை வெளியே சொல்லத் தயங்குகின்றனர்.இதனால் உணர்வுப்பூர்வமான மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 12ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 700 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.இவர்களில் இந்தியர்கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்த 41 சதவீதம் பேர் தங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது மற்றவர்களுக்கு தெரியவே கூடாது என ரகசியமாக பாதுகாத்து வருவது தெரிய வந்துள்ளது. மேலை நாட்டவர்களில் 33 சதவீதம் பேர் இதுபோல் ரகசியம் காக்கின்றனர்.
இதுகுறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் வசிக்கும் வெள்ளை இன மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆறு மடங்கு அதிகமாக "டைப் 2" நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களில் வெள்ளை இனத்தவர்களைக் காட்டிலும் ஆசிய நாட்டவர்கள் அதிகளவில் உணர்வுப்பூர்வமான மன அழுத்தத்திற்கு உள்ளாவதுடன் அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
ஆசியாவைச் சேர்ந்தவர்களில் 37 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தங்களை மனதளவில் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் 29 சதவீதம் பேர் நீரிழிவு நோயைப் பற்றி மற்றவர்களிடம் தெரிவிக்காமல் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர். மிகவும் நெருக்கமானவர்களிடம் கூட இதுபற்றி பேசுவதில்லை.குறிப்பாக நண்பர்களிடம் 67 சதவீதம் பேரும், குடும்ப உறுப்பினர்களிடம் 50 சதவீதம் பேரும் இந்த விடயத்தை மறைக்கின்றனர். வெள்ளை இனத்தவர்களில் இந்த அளவு 19 சதவீதமாக உள்ளது.
மற்றவர்களின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களில் பலரும் சர்க்கரை குளூக்கோஸ் தொடர்பான பரிசோதனைக்கு ஆட்படுவதில்லை என்பதுடன் இன்சுலின் ஊசியும் போட்டுக் கொள்வதில்லை.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸ் அளவை சரியாக பரிசோதிக்க வேண்டும். இல்லையென்றால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், கண் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
முதன் முறையாக 20 வயது பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை.
இங்கிலாந்தை சேர்ந்தவர் பெக்கி ஜோன்ஸ். 20 வயது பெண்ணான இவர் கடுமையான மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டார்.இவரை தெற்கு மான்லுஸ்டரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுரையீரலில் பூஞ்சைக்காளான் நோய் பாதித்து இருப்பதை கண்டறிந்தனர்.
எனவே நுரையீரலில் உள்ள பூஞ்சைக்காளானை அகற்ற மருந்து மாத்திரைகளை வழங்கினர். ஆனால் அந்த நோய் குணமாகவில்லை. மாறாக அதிக அளவில் பரவியது. முன்பை விட மூச்சு திணறல் அதிகமானது.எனவே நுரையீரல் மாற்று ஓபரேசன் நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெக்கி ஜோன்ஸ்சுக்கு நுரையீரல் மாற்று ஓபரேசனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது அவர் எந்தவித பிரச்சினையும் இன்றி வழக்கமாக சுவாசிக்கிறார்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்கு செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தினர்.அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது உலகிலேயே முதல் முறையாக நுரையீரல் மாற்று ஓபரேசன் செய்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முதன் முறையாக நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்.
நைஜீரியாவில் முதல் முறையாகத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் வெள்ளிக்கிழமை தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் காவல்துறைத் தலைமையகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் இறந்தார்.
காவல்துறைத் தலைவர் ஹபிஸ் ரிங்கிமைக்கை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. டம்போவா என்ற இடத்தில் நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் இறந்ததாகக் காவல்துறை அதிகாரி முகம்மது அபுபக்கர் தெரிவித்தார்.
பொகோ ஹரம் என்ற முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
கடாபியின் அறிவிப்பை ஏற்க மறுத்த கிளர்ச்சியாளர்கள்.
நாட்டில் பொதுத்தேர்தலை நடத்துகிறேன். அதில் தோல்வி அடைந்து விட்டால் பதவி விலகத் தயார் என லிபியா அதிபர் விடுத்த அழைப்பை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து விட்டனர்.லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடாபி சார்பில் அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில்,"நாட்டில் தேர்தலை நடத்த கடாபி விரும்புகிறார். அந்தத் தேர்தலில் தோற்றுவிட்டால் கடாபி விலகிவிடுவார்" என தெரிவித்தார். கிளர்ச்சியாளர்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர். நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறியுள்ளனர்.இதுதொடர்பாக லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசியில் கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் ஜலால் எல் கல்லால் கூறியதாவது: தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கான தகுதி கடாபி மகன் சயீப் அல் இஸ்லாமிற்கு இல்லை. லிபியாவில் சுதந்திரமான, ஜனநாயக முறைப்படியிலான தேர்தல் நடக்கும்.
இத்தேர்தலில் கடாபியின் குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் இருக்காது. கடாபியின் குடும்பத்தினர் கிரிமினல்கள். மனித இனத்திற்கு பல கொடுமைகளை செய்துள்ளனர். எங்களது நகரங்களில் இருந்து கடாபியின் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மக்களை சென்றடைய வழிவிட வேண்டும். கடாபி தரப்பினர் செய்த குற்றங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
அமெரிக்க உள்துறை அமைச்சக செயலர் விக்டோரியா நுலண்ட் கூறுகையில்,"ஆட்சியில் இருந்து கடாபி செல்வதற்கான காலகட்டம் நெருங்கி விட்டது" என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்கள் வசமுள்ள பிரகா, மிசுரட்டா, டிரிபோலி ஆகிய நகரங்களை மீட்க கிளர்ச்சியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
தடையை மீறி கார் ஓட்டிச் சென்ற பெண்கள்.
சவுதி அரேபியாவில் கார் ஓட்டுவதற்கு காலம் காலமாக இருந்த தடையை பெண்கள் நேற்று மீறினர்.சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. கார் ஓட்டும் உரிமை கோரி கடந்த 20 ஆண்டுகளாக பல போராட்டங்கள் மற்றும் பேரணிகளை பெண்கள் நடத்தினர்.இதை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கியதேயன்றி அனுமதி தரவில்லை. அத்துடன் சவுதியைச் சேர்ந்த பெண்கள் வெளிநாட்டிலும் கார் டிரைவிங் லைசென்ஸ் பெறக்கூடாது என கடும் சட்டமும் பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் கார் ஓட்டுவதற்கு நாடு தழுவிய அளவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தலைநகர் ரியாத்தில் பெண்கள் சுதந்திரமாக கார் ஓட்டிச் சென்றனர்.சில பெண்கள் தங்களது கணவருடன் கடைகளுக்கு காரை ஓட்டிச் சென்று பொருட்கள் வாங்கிச் சென்றனர். சவுதியின் கிழக்கு மாகாணத்தில் கடந்த மாதம் கார் ஓட்டிச் சென்ற பெண் இன்ஜினியர் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.கோலி பக்டீரியா தாக்குதல்: 7 குழந்தைகள் பாதிப்பு.
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் உயிர்க்கொல்லி நோயான இ.கோலி நோய் தாக்குதலுக்கு பிரெஞ்ச் நாட்டு குழந்தைகள் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரெஞ்ச் நாட்டு தனியார் நிறுவனம் ஜேர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் இருந்து பரவியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நோய் தாக்குதல் காரணமாக ஜேர்மனியில் 39 பேரும், சுவீடனில் பெண் ஒருவரும், மேலும் 16 நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.பிரெஞ்ச் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லில்லியில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனையின் மருத்துவர் மிக்கேல்போலார்டு கூறுகையில்,"சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இறைச்சியை விற்பனை செய்த தனியார் நிறுவனம் விற்பனை செய்த பாக்கெட்டுகளை வாபஸ் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல்: 16 பேர் மரணம்.
சிரியா நாட்டில் ஜனநாயக உரிமைகளைக் கோரி அதிபர் பஷார் அசாதுக்கு எதிராக வெள்ளிக்கிழமை திரண்ட பொதுமக்கள் மீது ராணுவம் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் சிறுவன் உள்பட 16 பேர் இறந்தனர்.மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
சிரிய ராணுவம், பொலிசார் மற்றும் அதிபருக்கு விசுவாசிகளான துப்பாக்கி ஏந்திய சமூகவிரோதிகள் சேர்ந்து கொண்டு ஜனநாயக உரிமைக்காகப் போராடும் அப்பாவி மக்களை வேட்டையாடி வரும் நிலையிலும் 3 மாதங்களுக்கும் மேலாக இந்தக் கிளர்ச்சி அடங்காமல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு முக்கியமான நாள் என்றும் பாராமல் அரசு எதிர்ப்பாளர்களை ராணுவம் கொடூரமாக தாக்கியது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது.கடந்த 3 மாதங்களில் மட்டும் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 10,000க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்.
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி இருந்தது.
நிலநடுக்கம் பூமிக்கடியில் 48 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது 80 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு உணரப்பட்டது.இதனால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரமும், காயம் அடைந்தவர்கள் விவரமும் தெரியவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
110 ஆண்டுகளுக்கும் மேல் எரியும் பல்பு: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவில் கடந்த 110 ஆண்டுகளாக பீஸ் போகாமல் எரிந்து வரும் குண்டு பல்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லிவர்மோர் நகரில் தீயணைப்பு அலுவலகம் உள்ளது. இங்கு 1901ம் ஆண்டு 60 வாட் குண்டு பல்பு பொருத்தப்பட்டது. அதற்கு பிறகு கட்டிட பராமரிப்பு வேலைகள், பெயின்ட் அடிக்கும் வேலைகள் பல முறை நடந்த போதும் இந்த பல்பு அகற்றப்படவில்லை.
தற்போதும் எரிந்து வருகிறது. 110 ஆண்டுகளாக பீஸ் போகாமல் எரிவதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.1903ம் ஆண்டில் சில காலமும், 1937ல் ஒரு வாரமும் தொடர்ந்து 1976ம் ஆண்டு வரையில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட நேரங்களில் மட்டும் இந்த பல்பு எரியவில்லை. மற்றபடி 110 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. நூறாண்டு கடந்த மின்விளக்குகளை பாதுகாக்கும் கமிட்டி ஒன்று லிவர்மோர் நகரில் செயல்படுகிறது.
அதன் தலைவர் லின் ஓவன்ஸ் கூறுகையில்,"குண்டு பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை அதிக வெப்பம் தாங்க முடியாமல் சிறிது காலத்தில் வலுவிழந்து உடைந்துவிடும். இதைத்தான் பீஸ் போகிறது என்கிறோம். இந்த பல்பு இத்தனை காலம் எப்படி பீஸ் போகாமல் எரிகிறது என்பது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது" என்றார்.
தவறான ஒளிபரப்புக்காக மன்னிப்பு கேட்கும் பிபிஸி.
பிபிஸி நிறுவனம் தனது பனோரமா நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பிய பிரைமார்க் நிறுவனம் பற்றிய நிகழ்ச்சியில் பாரதூரமான தவறுகள் உள்ளதை பிபிஸியின் ஆளுனர்பீடம் ஏற்றுக் கொண்டுள்ளது.இதற்காக பிபிஸி பிரைமார்க் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரவும் முடிவு செய்துள்ளது. பிரைமார்க் சில்லறை விற்பனை நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஒளிபரப்பப்பட்ட தகவல்களே தவறானவை என்பதை பிபிஸி ஏற்றுக் கொண்டுள்ளது.2008 ஜூனில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பாரதூரமான ஆசிரியபீடத் தவறுகள் உள்ளன என்று இதுபற்றி ஆராய்ந்த குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தைக்கப்பட்ட ஆடைகளைச் சரிபார்ப்பது போலவும் இந்த நிகழ்ச்சியில் காட்சிகள் அமைந்திருந்தன.இவை போதிய ஆதாரமற்றவை அல்லது அதிகாரமற்றவை என்று இப்போது தெரியவந்துள்ளது. இந்தக் காட்சியில் பல முறைகேடுகள் உள்ளதை பிபிஸி ஆளுனர்பீடம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்ட காட்சிகள் புனையப்பட்டவை என்ற ரீதியில் பிபிஸி மன்னிப்பை ஒளிபரப்பத் தீர்மானித்துள்ளது. பனோரமா நிகழ்ச்சி இணையத்தளத்திலும் இந்த மன்னிப்பு பிரசுரமாகும்.இந்த நிகழ்ச்சிக்காக பிபிஸிக்கு றோயல் டெலிவிஷன் சொசயிட்டி ஒரு விருதையும் வழங்கியிருந்தது. அந்த விருதையும் பிபிஸி திருப்பி வழங்கிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்.
முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் ஆனார்கள்.கிழக்கு பாரிசில் உள்ள மாக்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணிந்து அரசு உத்தரவுக்கு எதிப்பு தெரிவித்தவர்கள் ஆவார்கள்.
பிரான்சில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த புதிய சட்டம் அங்கு வசிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கள் மத பண்பாட்டின்படி முகத்தை மறைக்கும் பர்தாக்களை அவர்கள் அணிந்து வருகிறார்கள். அந்த மத நடவடிக்கையை புண்படுத்தும் பிரான்ஸ் அறிவிப்பை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.அப்போது அரசின் விதியை மீறி பர்தா அணிந்த 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரான்சில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பர்தா அணிவதற்கு தடை உள்ளது. அந்த தடை உத்தரவு பிரான்சில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பர்தா அணிந்து வந்த பெண்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்க வேண்டும் என பொது விசாரணையாளர் கூறினார். அந்த பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,"இந்த சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. எனவே அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார். நீதிமன்றம் தனது தீர்ப்பை வருகிற செப்டம்பர் மாதம் அறிவிக்கிறது.

குரங்கை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யும் ஈரான்.
ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23ந் திகதிக்கும், ஆகஸ்டு 23ந் திகதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை கடந்த பெப்பிரவரி மாதம் ஈரான் அதிபர் அறிமுகப்படுத்தினார். 285 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளில் ஆராய்ச்சிக்காக குரங்கை வைத்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு தகுந்தாற்போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2020ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஈரான் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக விலங்குகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு எலி, ஆமைகள், மற்றும் புழு, பூச்சிகளை கவோஸ்கர்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது குரங்கு அனுப்பப்பட உள்ளது.இந்த தகவல் ஈரான் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு டெலிவிஷன் தெரிவித்தது.
பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை: பணிந்தது அரசு.
பாகிஸ்தானில் செய்யது சலீம் ஷாஜத் என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
பாகிஸ்தான் கராச்சி நகரில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து "ஏசியா டைம்ஸ் ஆன்லைன்" என்ற இணையதளத்தில் ஷாஜத் பல உண்மைகளை வெளியிட்டிருந்தார்.இதன்பின் அவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷாஜத் கொலை குறித்து விசாரிக்க குழு அமைக்கக் கோரி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
இதனால் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று முதலில் அமைக்கப்பட்டது. அதை அந்நாட்டு ஊடகங்கள் ஏற்க மறுத்து கடுமையாக விமர்சித்தன."இம்மாதம் 15ம் திகதிக்குள் ஒரு குழு அமைக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டின் மத்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கெடு விதித்திருந்தது. தவறினால் பாராளுமன்றம் முன்பும், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து மற்றொரு குழு அரசால் அறிவிக்கப்பட்டது. மத்திய ஷரியத் கோர்ட் தலைமை நீதிபதி அகா ரபீக் இதன் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்புகள் ஏற்கவில்லை.பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றுபவரை கொண்டு தான் விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் பிரதிநிதிகளுடன் தகவல் துறை அமைச்சர் பிர்தோஸ் ஆசிக் அவான் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றும் சாகிப் நிசார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றும் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்தக் குழுவில் நீதிபதி அகா ரபீக், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்தை சேர்ந்த இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகளும் இடம் பெறுவர். விசாரணை குழு தன் அறிக்கையை ஆறு வாரத்திற்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை தூண்டிய நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
இந்தோனேசியாவில் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டது தொடர்பான வழக்கில் பழமைவாத மதத் தலைவர் ஒருவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் அபு பக்கர் பஷீர்(72). மதத் தலைவரான இவர் மீது இந்தோனேசியாவில் பயங்கரவாதத்தை தூண்டி விட்டதாகவும், பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அமைக்க உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஜகார்த்தா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை தூண்டி விட்ட குற்றத்துக்காக பஷீருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த அபு பக்கரின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF