போர்க்குற்ற காணொளிகள் இராணுவத்தினர் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது குறித்து கோத்தாபய அதிர்ச்சி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை இராணுவத்தினரே விலைபேசி விற்க முற்பட்டிருப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டமை, விடுமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளமை, மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நோ்ந்துள்ள கதி, யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றமை ஆகிய விடயங்களின் காரணமாக இராணுவ சேவையிலிருந்து அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களும் தற்போது தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு தப்பியோடும் அதிகாரிகள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகள் ஒன்றிரண்டை எப்படியேனும் திரட்டிக் கொண்டே தப்பியோடுகின்றனர். அதனை தமிழர்தரப்புகளுக்கு விற்று பெரும் பணத்தொகையொன்றைப் பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வது அவர்களின் நோக்கமாகவுள்ளது.அதில் ஒருசிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புகளும் இருப்பதுடன், இன்னும் சிலர் அவ்வாறான காணொளிகளுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு தப்பிச் சென்றவர்கள் மற்றும் தப்பிச் செல்லத் தயாரானவர்களை அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கும் அரசாங்கத்தின் முன்னைய முக்கியஸ்தர்கள் குழுவொன்று அடிக்கடி தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து வருவதாகவும் நம்பகமான தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குக் கிட்டியுள்ளன.இராணுவத்தினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பது குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள அவர், அதனைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளின் பரிமாற்ற மையமாகப் பயன்படுத்தப்படும் தென்னிந்தியாவிலும் இலங்கைப் புலனாய்வாளர்கள் குழுவொன்று களமிறங்கியிருப்பதாகவும், அவர்கள் கொடுத்த தகவல்களின் பிரகாரம் தென்னிந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பல இலங்கையர் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருவதாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
இலங்கையர்களுக்கு இனிவரும் காலங்களில் இந்திய வீசா ஒரு நாளில் வழங்கப்படும்.
இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்து வரும் கடமை நாளின்போது பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது.அதன் காரணமாக இலங்கையர் ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு ஒரு வாரம் வரையிலான காலதாமதம் ஏற்பட்டது.
இன்று இலங்கையில் யுத்தம் முடிவுற்று நாட்டில் சமாதானமும் அமைதியும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்து வரும் கடமைநாளின்போது சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும்.இப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் 555 இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பு.
பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 555 பேருக்கு அக்கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது என்று பிரித்தானிய எல்லை முகவரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னைய வருடங்களைக்காட்டிலும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.அத்துடன் முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் அனேகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 1360 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் 805 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லை முகவரகம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் கடந்த வருடம் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட 555 பேர் எதிர்காலத்தில் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவதற்கான காத்திருப்போர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விபரத்தில் இருந்து மேலும் தெரிய வருகின்றது.
சீனாவிடம் இருந்து இலங்கை மீண்டும் கடன்பெறுகிறது.
சீனாவிடம் இருந்து கடன்பெறுவதற்கு மீண்டும் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர்கள் கடனாக பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கான உடன்படிக்கை ஒன்ற விரைவில் கைச்சாத்தாகவுள்ளது.இந்த நிதி, பாதை மற்றும் பாலங்கள் நிர்மாணிப்பு, நீர் விநியோகம், மின்சார வழங்கல் உள்ளிட்ட 3 ஆண்டு வேலைத்திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா அறிவித்தார்.
ஏற்கனவே சீனாவிடம் இருந்து யுத்த பிரதேச அபிவிருத்திகாக மாத்திரம் 11 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன்கள் பெறப்பட்டுள்ளன. எனினும் இதுவரையில் அந்த பிரதேசங்களில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என வடமாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றமொன்று நிகழலாம்?
எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றமொன்று நிகழும் வாய்ப்பிருப்பதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போதையை அமைச்சரவையை உடனடியாக மறுசீரமைப்பது குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தியிருப்பதாக பிரஸ்தாப தகவல் வட்டாரங்களிலிருந்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு முக்கியமான அமைச்சுப் பதவியொன்றும், இரண்டு பிரதியமைச்சுப் பதவிகளும் வழங்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.அத்துடன் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சஜின்வாஸ் குணவர்த்தன, மனூச நாணயக்கார, துமிந்த சில்வா, கனக ஹேரத் உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.அதற்கு மேலதிகமாக தற்போதைக்கு உள்ள அமைச்சரவையில் 15 அமைச்சர்களுக்கான பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிய வருகின்றது. அவர்கள் தங்கள் அமைச்சுப் பொறுப்புகளில் சரிவர செயற்படாததே அதற்கான காரணம் என்று அறியப்படுகின்றது.
உயிர்வாழ்வதற்கான உரிமையை விட பெரிதாக வேறென்ன மனித உரிமை இருக்க முடியும்?: ஜனாதிபதி மஹிந்த.
உயிர்வாழ்வதற்கான உரிமையை விட பெரிதாக வேறென்ன மனித உரிமை இருக்க முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினாத் தொடுத்துள்ளார்.அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு வினாவொன்றைத் தொடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் வீ்ட்டை விட்டு வெளியே செல்லும்போது உயிருடன் திரும்பி வரமுடியுமா என்ற அச்சத்துடனேயே மக்கள் காணப்பட்டனர். ஆயினும் இன்று எமது அரசாங்கத்தின் கீழ் அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது.தென்னிலங்கையில் வாழும் மக்களுக்கு மட்டுமன்றி வடக்கில் வாழும் மக்களுக்கும் அச்சமின்றி உயிர்வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனை விட வேறென்ன மனித உரிமை பெரிதாக இருக்கப் போகின்றது?
மனித உரிமைகள் குறித்து கோசமிடுவோர் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பற்றிக் கவனம் செலுத்த மறந்து விடுகின்றார்கள். அத்துடன் அவர்களின் நோக்கம் எல்லாம் அரசாங்கத்தை அச்சுறுத்திப் பணிய வைப்பதுதான்.அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இந்த நாட்டை காட்டிக்கொடுக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செல்வந்தர்களை உருவாக்கும் ஆசிய நாடுகள் வரிசையில் இலங்கைக்கு ஆறாவது இடம்.
செல்வந்தர்களை உருவாக்கும் ஆசிய நாடுகள் வரிசையில் இலங்கை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.மெரில் லிண்ட் மற்றும் கெப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் கூட்டிணைந்து மேற்கொண்ட ஆசியாவில் செல்வந்தர்களை உருவாக்கும் பலம் கொண்ட நாடுகள் தொடர்பிலான ஆய்வுகளின் மூலம் மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது.ஹொங்கொங் மற்றும் வியட்னாம் என்பன நூற்றுக்கு முப்பத்து மூன்று வீதம் வேகமான வளர்ச்சியுடன் கூடுதலான அளவில் செல்வந்தர்களை உருவாக்கிய நாடுகள் தொடர்பான பிரஸ்தாப பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா என்பனவும் இலங்கையை விட முன்னிலையில் அப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.அதே நேரம் முதல் தடவையாக ஐரோப்பிய நாடுகளை விட ஆசியாவில் செல்வந்தர்கள் தொகை அதிகரித்துள்ளமை குறித்தும் பிரஸ்தாப அறிக்கையின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.ஆயினும் அமெரிக்கா, ஜப்பான், ஜொ்மனி என்பன உலகப் பணக்காரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாழும் நாடுகளாகும்.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது: கோத்தாபய ராஜபக்ஷ.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் எக்காரணம் கொண்டும் தேசிய கீதத்தைத் தமிழில் பாடக்கூடாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பு மற்றும் முப்படை, பொலிஸ் திணைக்களங்களின் உயரதிகாரிகள், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கு விடுத்துள்ள பணிப்புரையிலேயே ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் எக்காரணம் கொண்டும் தேசிய கீதத்தைத் தமிழில் பாட இடமளிக்க வேண்டாம் என்று கடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அண்மையில் தமிழ்ப்பாடசாலையொன்றின் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டபோது மாணவர்கள் தேசிய கீதத்தைத் தமிழிலேயே இசைத்திருந்தனர். அதன் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்திருந்ததாக அறியக் கிடைத்துள்ளது.பாதுகாப்புச் செயலாளரின் பிரஸ்தாப உத்தரவு குறித்து தேசிய நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமுல்படுத்துகை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அறிந்து கொண்டுள்ளதுடன், அவர் கடும் அதிருப்தியுற்றுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
அமைச்சர்கள் அதிகாரமற்ற வெறும் பொம்மைகள்: சுஜீவ சேனசிங்க.
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் அதிகாரமற்ற வெறும் பொம்மைகள் என்பதாக ஐ.தே.க. பாரளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.இன்றைய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சருக்கும் சுயமாகச் செயற்படும் அதிகாரம் கிடையாது. நிதியமைச்சின் ஊடாக அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி குடும்பத்தினரிடமே குவிந்துகிடக்கின்றன என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டியு்ளளார்.நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறிக் கொண்டு செல்கின்றன. அதனைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூட அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை. அமைச்சர்கள் அந்தளவுக்கு அதிகாரமற்ற பொம்மைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினருமே தம்வசம் வைத்துக் கொண்டுள்ளனர்.இன்றைக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி என்று விளித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்த பின்பு ஒருவர் கூட எட்டியும் பார்க்க மாட்டார்கள் என்றும் தனது உரையின் போது தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அடக்கி வைக்க முனையும் கோத்தாபய.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தி அடக்கி வைக்க முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையின் பிரகாரம் ஜனாதிபதியை பெயர் குறிப்பிட்டோ பதவியைக் குறிப்பிட்டோ விமர்சிக்க முடியாதே தவிர வேறு எந்தவொரு நபர் குறித்தும் பாராளுமன்றத்தினுள் விமர்சிப்பதற்கான அனுமதியுண்டு. அதன் காரணமாக நீதித்துறையைக்கூட காரசாரமாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிப்பதுண்டு.ஆயினும் அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினரொருவர் சபையினுள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கான ஆதாரத்தை யாரும் கோரமுடியாது. அவரது கருத்துக்கள் குறித்து நீதித்துறை எந்தவொரு துறையும் விசாரணைகளை முன்னெடுக்கவும் முடியாது.
அவ்வாறான சிறப்புரிமை வரப்பிரசாதத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் என்பவற்றையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தினுள் கடுமையான விமர்சனத்துக்குட்படுத்துவதுண்டு. அது அரசாங்கத்துக்கு பல சந்தர்ப்பங்களில் பெரும் நெருக்கடியாக அமைந்து விடுவதுமுண்டு.அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அண்மையில் பாதுகாப்புச் செயலாளரின் ஊழல்,மோசடிகள் குறித்து அவ்வாறான சில கருத்துக்களை சபையினுள் வெளியிட்டிருந்தார்.
தற்போது அவரது கருத்துக்கள் குறித்து பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணையொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமான கருத்து வெளியிடும் உரிமையை மறுத்துரைத்து, அவர்களை அச்சுறுத்தி அடக்கி வைப்பதற்கான முயற்சியொன்றை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ளதாக பலத்த சந்தேகமொன்று தோன்றியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர வெள்ளம்: 50000 பேர் வெளியேற்றம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் மழை, வெள்ளம் காரணமாக 50 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கேடன்டுவான்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதையடுத்து தலைநகர் மணிலா அருகே வசித்து வந்தவர்களில் 5000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வந்தவர்களில் மொத்தம் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே 10 மீனவர்கள் உட்பட பலரைக் காணவில்லை என்று கேடன்டுவான்ஸ் மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.அல்பே மாகாணமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் வெகுவாக முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோகைன் போதை மருந்து பயன்படுத்துவதில் உலக நாடுகளில் ஸ்காட்லாந்து முதலிடம்.
உலக நாடுகளில் கோகைன் போதை மருந்தை பயன்படுத்துவதில் ஸ்காட்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்த புள்ளி விவரத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள 3.9 சதவீத மக்கள் இந்த போதை மருந்தை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் 16 வயது முதல் 64 வயது வயது வரை உள்ளவர்கள் ஆவார்கள்.உலகில் உள்ள எந்த நாடும் இந்த அளவிற்கு போதை மருந்தை பயன்படுத்துவது இல்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் 2.5 சதவீத அளவில் போதை மருந்தை பயன்படுத்துகிறார்கள்.
பிரிட்டனின் இதரப் பகுதியை காட்டிலும் ஹெராயின் போதை மருந்து பயன்படுத்தும் விகிதம் 2 மடங்கு உள்ளது. ஸ்காட்லாந்து பகுதியில் போதை மருந்து பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.போதை மருந்து பழக்கத்தால் அங்கு உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. போதை மருந்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் பாதிப்பு நிலையில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா தீவு பகுதிகளில் 7.4 ரிக்டரில் பெரும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை.
அலாஸ்கா தீவு பகுதிகளில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க நிர்வாகத்தினர் தீவை சுற்றி உள்ள இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரம் மற்றும் காயம் அடைந்தவர்கள் விவரம் தெரியவில்லை. அமெரிக்கா மேற்கு கடலோரம் மற்றும் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் வியாழக்கிழமை பிந்தய நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.இதனை தொடர்ந்த கடலோரப்பகுதிகளில் கடல் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீன்பிடி துறைமுகமான அடகாவிற்கு 101 மைல்(163கி.மீ) தொலைவில் உள்ள பாக்ஸ் ஐஸ்லேண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி மாலை 6.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் சர்வே தெரிவித்தது. நிலநடுக்க பாதிப்பை உணர்ந்தவர்கள் கடல் சீறி பாய்வதை காணும் நிலையில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.சுனாமி பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கிலாந்தில் சுகாதாரமற்ற மருத்துவமனைகள்: நோய்கள் பரவும் அபாயம்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் அங்குள்ள மருத்துவமனைகளில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைகள் மற்றும் தலையணைகள் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் சுத்தமில்லாமல் அழுக்காக இருந்தன.
இந்த தலையணைகளில் நோயாளிகளின் உடலில் இருந்து உரிந்து விழுந்த தோல்பகுதிகள், தலையில் இருந்து உதிர்ந்த பொடுகுகள், வியர்வை துளிகள் போன்றவைகளால் பிசுபிசுப்பான அழுக்கு ஏற்பட்டிருந்தது.இது குறித்து அந்த ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் தலையணையில் உள்ள அழுக்குகளால் 30 வகையான நோய்க்கிருமிகள் உண்டாகின்றன. இவை சின்ன அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
எனவே தலையணைகள் மற்றும் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும். நர்சுகள் தங்கள் கைகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். தலையணையின் ஓரத்தில் ஏற்படும் கிழிசல்களை உடனுக்குடன் தைக்க வேண்டும். அதன் மூலம் தான் நோய்க்கிருமிகள் உள்ளே புகுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல வீடுகளில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாகும். தாங்கள் பயன்படுத்தும் படுக்கைகளையும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துருக்கி எல்லையில் சிரியா துருப்புகள்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை.
துருக்கி எல்லைப்பகுதியில் சிரியா துருப்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த துருப்புகள் வருவதால் மோதல்கள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.சிரியாவின் இந்த நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். சிரியா துருப்புகள் நடமாட்டத்தால் எல்லைப்பகுதியில் மோதல் வெடிக்கும். இதனால் அகதிகளுக்கு அபாய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.சிரிய ராணுவ வீரர்கள் கிர்பெட் அல் கிராமத்தில் ஊடுருவி உள்ளனர். இதனால் அந்த கிராம மக்கள் துருக்கிக் தப்பி ஓடி உள்ளனர். சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து இதுவரை 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாம்ஸ் மற்றம் ஹமா உள்பட சிரியாவின் பல நகரங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.சிரிய துருப்புகளின் தீவிர நடவடிக்கையால் அங்கு மோசமான சூழ்நிலை ஏற்படும் என ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார். ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கிர்பெடல் முகாமில் இருந்து 2130 பேர் தப்பி ஓடி உள்ளனர் என அங்குள்ள ஒருவர் தெரிவித்தார்.
அய் வெய் கைதுக்கான காரணத்தை உடனே அரசு வெளியிட வேண்டும்: ஏங்கலா மார்கெல்.
சர்ச்சைக்குரிய சீனக்கலைஞர் அய் வெய் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை குறித்து ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அய் வெய் கைது நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பதை சீன அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.உலக நாடுகளில் பிரபலமாக உள்ள கலைஞர் அய் வெய். கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி சீன அரசால் கைது செய்யப்பட்டார். அவர் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீன அரசு குற்றம் சுமத்தி இருந்தது.
அய் வெய் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது பிரதான அரங்கத்திற்கு வடிவமைத்த நிபுணர் ஆவார். அவரை சீன அரசு மிகவும் பாராட்டியது. அரசை அய் வெய் விமர்சித்ததை தொடர்ந்து அய் வெய் நடவடிக்கைகைளை சீனா வெறுத்தது.இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 81 நாள் சிறை வாசத்திற்கு பின்னர் அவர் விடுதலை ஆனது குறித்து ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அய் வெய் விடுதலை என்பது முதல் கட்ட நடவடிக்கை ஆகும். அவரை கைது செய்ததற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே கூறுகையில்,"அய் வெய் விடுதலை செய்யப்பட்டு இருப்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நிம்மதி அளிப்பதாக இருக்கும்" என தெரிவித்து உள்ளார்.
பின்லேடனுடன் உளவுத் துறை அதிகாரிகள் தொடர்பு: அமெரிக்கா அதிர்ச்சி.
அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் செல்போன் மூலம் தொடர்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பின்லேடன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய அமெரிக்க அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்புடைய ஹராகட் உல் முஜ்கிதீன் தீவிரவாத அமைப்பின் அழைப்பு விவரங்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இருப்பது சாதாரண விடயமல்ல. இதனை தீவிரமாக கருதுகிறோம். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2ம் திகதி பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க சிறப்பு கமண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது அங்கு இருந்து செல்போன் போன்ற இதர முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.பின்லேடனுக்கு உதவி செய்த ஹராகட் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து உள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு இருந்து வருகிறது.
மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து.
மது அருந்தி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சில தருணங்களில் விமான ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்வதால் விபத்து ஏற்படுகிறது.வான்கூவர் தீவில் கடந்த ஆண்டு ஒரு விமானம் இதுபோன்ற நிகழ்வால் விபத்துக்கு உள்ளானது. மது அருந்திய பயணிகள் விமான ஓட்டியிடம் வாக்குவாதம் செய்ததால் வான்கூவரில் விமானம் நொறுங்கி 4 பேர் பலியானார்கள். இந்த விவரம் சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மே மாதம் 29ஆம் திகதி டோபினோ பகுதியில் செஸ்னா 185 எப் விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் அல்டோ ரிவர் ஏர் சர்வீஸ் விமான ஓட்டி டாமன் யோர்க் மற்றும் பயணிகள் காதரினா இங்கிலீஷ், எட்வர்டு சாம் மற்றும் சமந்தா மாட்ரஸ்டோபர் பலியானார்கள்.கனடா போக்குவரத்து பாதுகாப்பு போர்டு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்திரக் கோளாறு அல்லது வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை. விமான ஓட்டி இயல்பான கட்டுப்பாட்டுடன் விமானத்தை இயக்க முடியவில்லை.
விபத்தில் பலியான 3 பயணிகளும் மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்திற்கு உள்ளானதற்கு முன்பாக அவர்கள் விமான ஓட்டுநரிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.விபத்தில் விமான ஓட்டியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன் வலது மணிக்கட்டு எலும்பு நொறுங்கி கிடந்தது. பயணிகளுக்கு குதிகால் எலும்புகள் உடைந்து இருந்தன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய அவுஸ்திரேலியா முடிவு.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டின் இறுதியில் அவுஸ்திரேலியா விலக்கிக் கொள்ளும் என அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால் சமீப காலமாக பெரிய அளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.இதையடுத்து அவுஸ்திரேலிய இயற்கை வளத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசன் மற்றும் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நட்பாண்டு துவக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டு இறுதியில் அவுஸ்திரேலியா விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.வர்த்தக ரீதியாக சீனா பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால் அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நட்பு அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு தேவை என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆப்கனில் இருந்து வீரர்களை திரும்ப அழைக்க பிரான்ஸ் முடிவு.
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெறப்போவதாக அந்நாட்டு அதிபர் நேற்று தெரிவித்தார்.ஆப்கனில் நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என அதிபர் ஒபாமா அறிவித்தார்.இவர்கள் வாபசுக்குப் பின் அந்நாட்டில் மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில் ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அமெரிக்காவைப் போலவே ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவர். இனி ஆப்கானிஸ்தானை அந்நாட்டு வீரர்களே பாதுகாப்பர்" என்றார்.ஆப்கானில் காபூல், கபீஸா ஆகிய மாகாணத்தில் தான் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்து மட்டும் 10 ஆயிரம் இங்கிலாந்து வீரர்கள் ஆப்கானில்தானில் 2015ம் ஆண்டு வரை இருப்பர் என தெரிவித்தது.
மரணத்தை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்: கடாபி.
நூறாண்டுகள் ஆனாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து சண்டையிடுவோம். சாவுக்கு அஞ்ச மாட்டோம் என லிபியா தலைவர் கடாபி தெரிவித்துள்ளார்.லிபியாவில் அதிபர் கடாபியை பதவி விலகக்கோரி அதிருப்தியாளர்கள் நேட்டோ படைகளின் உதவியுடன் போராடி வருகின்றனர்.
அதிருப்தியாளர்கள் மீது கடாபி ஆதரவு படைகள் தாக்குதல் நடத்துவதால் அதை எதிர்த்து நேட்டோ படைகள் கடாபி ஆதரவாளர்கள் தங்கியுள்ள கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதில் கடாபியின் நண்பர் ஹெமிதியும், அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொலைக்காட்சியில் பேசிய கடாபி கூறியதாவது: நேட்டோ படைகள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாமல் மக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதலை தொடர்கின்றன. இதை ஐ.நா பார்வையாளர்கள் பார்வையிட வேண்டும்.எத்தனை ஆண்டுகளானாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம். சாவுக்கு நாங்கள் அஞ்சவில்லை. நூறாண்டுகள் ஆனாலும் நேட்டோ படைகளை எதிர்த்து நின்று சண்டையிடுவோம்.
பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ஒபாமா.
எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.ஆப்கனிலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருந்து உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர்.
"பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கன் இருக்கிறது" என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வந்தார். ஆப்கனில் சோவியத் யூனியன் படைகளை விரட்டி அடிக்க அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இறுதியில் அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் அமெரிக்கா விழித்தது. அமெரிக்காவுக்கே சவாலாக இந்த பயங்கரவாதிகள் மாறினர்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின் கடந்த 2009ம் ஆண்டில் ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரித்தார். தற்போது ஆப்கனில் ஒரு லட்சம் அமெரிக்கப் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர்.இதனிடையே தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆப்கன் அதிபர் அமித் கர்சாய் தலைமையிலான அரசு துவக்கும். பின்னர் சிறிது சிறிதாக அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அப்போது ஒபாமா பேசினார்.
இந்நிலையில் ஆப்கனில் அமெரிக்கப் படைவீரர்கள் வாபஸ் தொடர்பான அறிவிப்பை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டு பேசியதாவது: ஆப்கனில் இருந்து நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள்.இவர்கள் வாபசுக்குப் பின் அந்நாட்டில் மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில் ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு அனைத்து அமெரிக்கப் படைவீரர்களும் வாபஸ் பெறப்படுவார்கள்.
தலிபான்கள் மீதான போரில் அமெரிக்கா பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அதே சமயம் முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து இதன் கூட்டு நாடுகளும், ஆப்கனில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க உதவின.ஏற்கனவே ஆப்கனின் சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்களை அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவக்கி விட்டோம். தலிபான்களுடனான எங்களது அமைதிப் பேச்சு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியான ஆப்கன் நாடாக மாற விரும்புபவர்கள் அல்கொய்தா அமைப்பை துண்டித்து வெளியேற வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும்.
ஆப்கன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆப்கன் நாட்டை பயங்கரவாதிகளின் கூடாரமாக அல்கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மாற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக இருந்தது. தற்போது அமெரிக்காவின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது.எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது.