Wednesday, June 1, 2011

இன்றைய செய்திகள்.

யாழ் - கொழும்பு தனியார் பஸ் பயணிகளின் ஆசனப் பதிவுகள், இன்று முதல் போக்குவரத்து ஆணைக்குழு முகவர்களிடம்.

யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தமது பயண ஆசனப் பதிவுகளை இனிமேல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள முகவர்களிடமே மேற்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நாரஹேன்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.இந்த நடைமுறை இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.பயணிகள் ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதிலும் அதன் பின்னர் பயணம் செய்வதிலும் ஏற்படும் பல பிரச்சினைகள் குறித்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த புகாரையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.அதனால் இந்தப் புதிய நடைமுறை அமுல் செய்யவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால் இன்று முதல் வர்த்தக நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் யாழ்ப்பாணம் - கொழும்பு ஆசனப் பதிவுகள் மற்றும் பயண அனுமதிச்சீட்டு (ரிக்கற்) விற்பனை செய்யப்படக்கூடாது எனவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற பயண ரிக்கற்றுகளையே பயணிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ரிக்கற்றுகள் ஆணைக்குழுவின் முகவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சேவைக்கு வழித்தட அனுமதிப் பத்திரம் பெறாத பஸ்களிலும் பயணிகள் பயணம் செய்யக்கூடாது. இவ்வாறான பஸ்களில் பயணம் செய்தால் பயணிகளும் அபராதத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.இருபதுக்கும் மேற்பட்ட பஸ்கள் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி இச் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.இந்தப் பயண ரிக்கற் முகவர்களின் விபரங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் திடீர் இராஜினாமா!

பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் அவசர கூட்டம் ஒன்றும் இன்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கையாண்டமுறை குறித்து பொலிஸார் விமர்சிக்கப்பட்ட நிலையிலேயே மகிந்த பாலசூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில், 

பொலிஸ் மா அதிபர் பதவி விலகவில்லை என்றும் ஜூன் 18 ஆம் திகதி அவரது பதவிக்காலம் முடிவடைவது என்பதனால் ஓய்வு பெற்றுச் செல்வதாக குறிப்பிட்டார். இதேவேளை கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரத்ன உள்ளிட்ட மற்றும் பல பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மகிந்த பாலசூரிய 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 32 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார் என்பதுடன் இவர் பல உயர்நிலை பொலிஸ் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கட்டுநாயக்க சம்பவத்துக்கு கோத்தபாயவே பொறுப்பு – சரத் பொன்சேகா.
தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் மீது பலி சுமத்தக்கூடாது எனவும், இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் முன்னாள் இராணுவத்தளபதி  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்ற  சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இதற்கு முழுமையாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளருமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் நாடு திரும்ப அச்சம் கொள்ளத் தேவையில்லையாம்!

மோதல் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். 


வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கையர்கள் அந்தநாடுகளில் அரசியல் புகலிடம் கோர வேண்டிய தேவை இல்லலையென்பதே இலங்கையின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார். இலங்கையில் இருந்து வெளியேறிய பலர் அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர். 


இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு அமைதிச் சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் புகலிடம் கோரவேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார். அத்துடன் வெளிநாட்டிலுள்ள இலங்கையின் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி நாடு திரும்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒசாமா பின்லேடன்.
பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன் பத்து வருடங்களாக அவர் எங்கு இருந்தார் என்பது எவருக்கும் தெரியாது.அமெரிக்கப் படைகள் எப்படியோ அவரைத் தேடிக் கண்டு பிடித்து பாகிஸ்தானில் அவர் கதையை முடித்ததாக அறிவித்தன.
ஆனால் தற்போது பிரிட்டனில் இவரை ஒருவர் பார்த்துள்ளார். அதுவும் ஒரு டோஸ்டரில். மேற்கு மிட்லாண்ட் பகுதியில் காலை உணவிற்காக பாணில் பட்டர் தடவிக் கொண்டிருந்த போது தான் அதன் அருகில் இருந்த டோஸ்டரில் ஒசாமாவின் உருவத்தை இவர் பார்த்துள்ளார்.இவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். தான் பார்த்தது அப்படியே ஒசாமாவின் உருவம் தான் என்று இந்த நபர் டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் பற்றிய விவரங்கள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் ஒரு பயங்கரவாதியின் உருவத்தை இப்படிப் பார்த்ததாக சொல்லப்படுவது இது தான் உலகில் முதற் தடவை என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அழகிப்போட்டியில் பங்கேற்றதற்காக 19 வயது பெண் கல்லெறியப்பட்டு கொலை.
அழகு ராணிப் போட்டியில் பங்கேற்றமைக்காக 19 வயது முஸ்லிம் பெண் உக்ரேனில் கல்லெறிந்து கொல்லப்பட்டுள்ளார்.கட்யாகொரேன் என்ற பெண்ணுக்கே இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து இந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இவர்களில் 16 வயதான பிஹால் காஸிவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்லாமியச் சட்டங்களின் பிரகாரம் இந்தப் பெண் கொல்லப்பட வேண்டியவர். அவரைக் கொன்றதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று இந்த நபர் தெரிவித்துள்ளார்.கட்யாகொரேன் கல்லெறிந்து கொல்லப்பட்டு ஒரு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார். இவரைக் காணவில்லை என்ற புகாரின் பேரில் தேடுதல் நடத்திய பொலிஸார் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட இவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவர் நவநாகரிக உடைகளில் மோகம் கொண்ட ஒரு பெண் என்றும், அவர் கலந்து கொண்ட அழகு ராணிப் போட்டியில் அவர் ஏழாவது இடத்துக்கு வந்திருந்தார் என்றும், இவர் மீது அடிப்படை வாத முஸ்லிம்கள் ஆத்திரம் கொண்டிருந்தனர் என்றும் அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கடற்கரையில் ஒதுங்கிய பாரிய திமிங்கலம் மரணம்.
20 டன் எடையுடன் 44 அடி நீளத்துடன் கிளவ்லேண்ட் ரெட்கார் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பிரம்மாண்ட திமிங்கலம் மூச்சு திணறல் காரணமாக இறந்தது.கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காப்பாற்றுவதற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் இதர ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் அந்த முயற்சியில் உரிய பலன் கிடைக்கவில்லை. அதிக எடை உள்ள இந்த உயிரினத்தை மீண்டும் கடலில் மிதக்க விடும் முயற்சி மிக மோசமானதாக இருந்திருக்கும் என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.பகுதி அளவு கடல் நீரில் இருந்த திமிங்கலம் காலை 9 மணிக்கு இறந்தது. தீயணைப்பு துறையினர் ஜெட் மூலமாக திமிங்கலத்தை கடலில் கொண்டு சேர்க்க முடியுமா என்றும் ஆலோசனை செய்தனர்.
வடக்கு கடல் பகுதியில் பல திமிங்கலங்கள் உள்ளன. இருப்பினும் பற்கள் உடைய பெரும் தலை உள்ள ஸ்பெர்ம் திமிங்கலத்திற்கு உரிய உணவு வகைகள் இல்லை.எனவே ஸ்பெரீம் திமிங்கலம் இந்தப் பகுதியில் இறந்து இருக்கலாம் என பிரிட்டிஷ் கடல் உயிரின மீட்பு குழுவைச் சேர்ந்த ரிச்சரிடு லிடர்டென் தெரிவித்தார். இறந்து போன திமிங்கலத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இது போன்ற எதிர்பாராத முடிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
5 டன் எடை வரை உள்ள கடல் உயிரினத்தையே மீண்டும் கடலில் கொண்டு விடும் வசதிகள் மீட்புக் குழுவினரிடம் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட எடையை விட 4 மடங்கு அதிகம் உள்ள ஸ்பெர்ம் திமிங்கலத்தை மீண்டும் கடலில் கொண்டு விட முடியாத நிலை மீட்பு குழுவுக்கு ஏற்பட்டது.தரையிலேயே பல மணி நேரம் உணவு இல்லாத சூழலில் திமிங்கலம் இறந்தது சரியான முடிவு என்றும் அதனை பார்த்தவர்கள் கூறினர்.
சுனாமி அபாயத்தை ஜப்பான் குறைத்து மதிப்பிட்டுள்ளது: ஐ.நா கருத்து.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தால் ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு பரவியதால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த அணு மின் நிலைய விபத்து இடத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அணு பாதுகாப்பு குழு பார்வையிட்டது. இந்த குழு பார்வையிட்ட பின்னர் சுனாமி அபாயம் குறித்து ஜப்பான் குறைத்து மதிப்பிட்டதால் இதுபோன்ற விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தது.இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடக்கு பகுதியில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கடலின் அடியே ஏற்பட்டது. இதன் தாக்கம் காரணமாக கடல் அலைகள் பொங்கி சுனாமி பேரலைகளாக ஊருக்குள் பரவி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து முக்கிய உதாரணமாக உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையான அவசர நிலை மீட்பு நடவடிக்கை மையம் ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச அணு சக்தி முகமை அறிவுறுத்தி(ஐ.ஏ.இ.ஏ) உள்ளது.ஜப்பானின் பசிபிக் கடற்கரை பகுதியல் அமைந்துள்ள புகுஷிமா டச்சி அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பிரிட்டிஷ் பாதுகாப்பு நிபுணர் மைக் வெய்ட்மென் தலைமையில் இந்த ஆய்வுக்குழு வந்தது.
இக்குழுவில் பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற்று இருந்தனர். இந்த குழு தனது அறிக்கையை வியன்னாவில் இந்த ஜூன் மாதம் 20ம்
திகதி முதல் 24ம் திகதி வரை நடைபெறும் சர்வதேச கூட்டத்தில் சமர்ப்பிக்கிறது.
ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது 5.7மீற்றர்(19அடி) அளவிற்கு கடல் அலை பொங்கி வந்தது. இந்த அலை அணு மின் நிலையத்தை பயங்கரமாக தாக்கியதை குழுவினர் சுட்டிக்காட்டினார்கள். சுனாமி அபாயத்திற்கான பாதுகாப்பை மேற்கொள்ளவில்லை என்ற இந்த தவறை ஜப்பான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.
பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம்.
பாகிஸ்தான் கடற்படைக்கும், அல்கொய்தாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி எழுதிய அந்நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டார்.செய்தியாளர் சையத் சலீம் ஷஸாத் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அந்த செய்தியாளரின் படுகொலை சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளதை வரவேற்பதாகவும் ஹிலாரி தெரிவித்தார்.
இத்தாலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்காகவும், ஹோங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட ஓன்லைன் செய்தி இணையதளத்துக்காகவும் பணியாற்றி வந்த 40 வயதான ஷஸாத் ஞாயிற்றுக்கிழமையன்று காணாமல் போனார்.பின்னர் அவரது உடல் இஸ்லாமாபாதில் இருந்து தென்கிழக்கே 150 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
பின்லேடன் கொலையை விசாரிக்க விசாரணைக்குழு: பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானிடம் தெரிவிக்காமல் அமெரிக்கா ராணுவம் தன்னிச்சையாக புகுந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது பாகிஸ்தானின் இறையான்மையையும், தனித்தன்மைக்கும் எதிரானது என கூறப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இது பின்லேடன் கொலை குறித்து விசாரணை நடத்தும். 5 பேர் குழு கொண்ட இந்த கமிஷனின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜாவீத் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பிரதமர் யூசுப் ரசாகிலானி பிறப்பித்துள்ளார்.
விசாரணை கமிஷனின் 5 பேர் குழுவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பக்ருதீன் இப்ராகிம், ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் நதீம் அகமது, முன்னாள் பொலிஸ் அதிகாரி அப்பாஸ்கான், வெளிநாட்டு முன்னாள் தூதர் அஷ்ரப் ஜகாங்கீர் குவாஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜேர்மனியைத் தொடர்ந்து சுவீடனிலும் நோய் பரவியது: மக்கள் பெரும் அவதி.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் 15 பேர் ஜேர்மனியில் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.சுத்தம் செய்யப்படாத வெள்ளரியில் இ.கோலி என்ற பக்டீரியா உள்ளது. இந்த நுண் உயிரி பரவல் காரணமாக மனிதர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடருகின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளன.
எனவே வெள்ளரிக்கயை பச்சையாக சாப்பிட வேண்டாம். அதனை பக்குவப்படுத்தி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ.கோலி பக்டீரியாவுக்கு ஜேர்மனி பாதிக்கப்பட்டதைப் போல சுவீடனும் பாதிக்கப்பட்டுள்ளது.இ.கோலி தொற்று காரணமாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார் என சுவீடன் மருத்துவமனை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அந்த பெண்ணுக்கு 50 வயது ஆகும். சுவீடனின் தென் மேற்கு நகரமான போரசில் சிகிச்சை பெற்றார்.
70 வயது மதிக்கதக்க பெண் இதே மருத்துவமனையில் இ.கோலி அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வடக்கு ஜேர்மனியில் வெள்ளரிக்காயை சாப்பிட்டவர்களே இ.கோலி பாதிப்புக்கு உள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவார்கள்.ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு வெள்ளரிக்காய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி கூறுகிறது. இது குறித்து ஹம்பர்க் சுகாதாரத்துறை ஆய்வு செய்தது.இந்த ஆய்வில் இ.கோலி வெள்ளரி மூலம் பரவியதை உறுதிபடுத்த முடியவில்லை இருப்பினும் தொற்று பரவல் காரணத்தை கண்டறிய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் குற்றச்சாட்டை ஸ்பெயின் முற்றிலும் நிராகரித்தது. தங்கள் வெள்ளரிக்காயால் நோய் பரவியது என்ற ஜேர்மனி குற்றச்சாட்டு காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உரிய நஷ்ட ஈட்டை பெற்று தரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்பெயின் அணுகியுள்ளது.ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இ.கோலி பக்டீரியா பரவல் காரணமாக அங்கிருந்து சில பொருட்கள் இறக்குமதியை ரஷ்யா தடை செய்துள்ளது.
ஜேர்மன் முடிவால் பிரான்சில் அணு உலை பிரச்சினை குறித்து தீவிர விவாதம்.
வருகிற 2022ஆம் ஆண்டு அனைத்து அணு உலைகளையும் மூட ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் பிரான்சில் அணு உலைகள் குறித்து தீவிர விவாதம் துவங்கியுள்ளது. பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலன் திங்கட்கிழமை கூறுகையில்,"ஜேர்மனியின் முடிவை பிரான்ஸ் மதிக்கிறது. எதிர்கால தீர்வுக்கு அணு சக்தி மின்சாரமே உரிய முடிவாக இருக்கும் என்பது பிரான்ஸ் கருத்து ஆகும்" என்றார்.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே கூறுகையில்,"இத்தகைய கருத்தால் அணு சக்தி மின்சாரத்தை  தவிர வேறு எரிசக்தி ஆதாரத்தை நாங்கள் உருவாக்க மாட்டோம் என்று அர்த்தம் அல்ல" என்றார்.பிரான்சில் அணு சக்தி மின்சாரம் உற்பத்தி குறித்த விவாதத்தை ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி விரும்பவில்லை. எனவே இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் பிரான்சின் புகுஷிமா அணு மின் உலையில் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு பரவியது. இதனால் உலக நாடுகள் அணு மின் உற்பத்தி குறித்து தீவிரமாக விவாதிக்கும் வேளையில் பிரான்ஸ் கூடுதல் பாதுகாப்புடன் அணு மின் உலைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.பிரான்சில் உருவாக்கப்பட்ட அணு மின் உலைகள் மிக பாதுகாப்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணு உலைகளை விற்பதில் சோர்வு இல்லாத நபராக சர்கோசி திகழ்கிறார்.
அணு உலைகள் பயன்பாடு குறித்து பிரான்சில் நடந்த முந்தய வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் அணு மின் திட்டம் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். புகுஷிமா அணு விபத்திற்கு பின்னர் இந்த ஆதரவு சிறிது குறைந்துள்ளது.ஜேர்மனியில் உள்ள 17 அணு மின் உலைகளும் 2022 ஆம் ஆண்டு மூடப்படும் என திங்கட்கிழமை அதிபர் ஏங்கலா மார்கெல் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரான்சில் அணு மின் உற்பத்தி குறித்து மீண்டும் கடுமையான விவாதம் துவங்கி உள்ளது.
தேடப்படும் குற்றவாளி முஷாரப்: பாகிஸ்தான் நீதிமன்றம்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.முன்னாள் அதிபர் பெனாசீர் புட்டோ 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காததால் அவர் ஒரு பயங்கரவாதி என்றும் நீதிபதி ராணா நிசார் குறிப்பிட்டுள்ளார்.பெடரல் புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீதிபதி இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். பெனாசீர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை பாதுகாப்பு காரணங்களுக்காக அடியாலா சிறையில் நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக முஷாரப் தலைமறைவு குற்றவாளி என கடந்த பெப்பிரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.முஷாரப் ஒத்துழைப்பு அளிக்காததால் பெனாசீர் புட்டோ கொலைவழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் மீதான வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறவில்லை.
இந்நிலையில் அல்பின்டி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பெப்பிரவரியில் நீதிபதி அளித்த உத்தரவு நகலை முஷாரபிடம் வழங்க முடியவில்லை.2009ம் ஆண்டு முதல் அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அந்நாட்டு அரசும் உதவி செய்ய முன்வராததால் உத்தரவு நகலை அவரிடம் அளிக்க இயலவில்லை என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.
மேலும் சமீபத்தில் வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் மூலம் இந்த வழக்கு தொடர்பாக அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.இதைக்கேட்ட நீதிபதி முஷாரப் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவும், அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்தோனேஷியாவுக்கு கால்நடைகள் ஏற்றுமதி தடை: அவுஸ்திரேலியா விதித்தது.
இந்தோனேசியாவின் சில மாட்டிறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் மிகக் கொடூரமாகக் கொல்லப்படும் காட்சிகள் வெளியானதை அடுத்து அந்நாட்டின் இறைச்சிக் கூடங்களுக்கான கால்நடைகள் ஏற்றுமதியை அவுஸ்திரேலியா தடை செய்துள்ளது.அவுஸ்திரேலியாவில் இருந்து அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் உயிருள்ள கால்நடைகள் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தோனேசியா உடனான இந்த வர்த்தகத்தில் ஆண்டுதோறும் 1,541 கோடி ரூபாய் வருமானம் அவுஸ்திரேலியாவுக்கு கிடைக்கிறது. உலகில் கால்நடைகள் ஏற்றுமதிச் சந்தையில் முதலிடம் வகிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பின் அவுஸ்திரேலியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் "ஏ.பி.சி" தொலைக்காட்சி, தனது போர் கார்னர்ஸ் என்ற புலனாய்வுப் பத்திரிகையியல் தொடரில் இந்தோனேசியாவிற்கு அனுப்பப்படும் அவுஸ்திரேலிய கால்நடைகள் பல்வேறுவிதமான சித்திரவதைகளுக்குப் பின் கொல்லப்படுவதை ஒளிபரப்பியது.கசை மற்றும் பிரம்பால் அடித்தல், கத்தியால் கீறப்படுதல், உதைக்கப்படுதல், மாடுகளின் தலை கான்கிரீட் தரையில் முட்டப்படுதல், கழுத்து அறுக்கப்பட்ட பின்னும் சில நிமிடங்கள் அந்த கால்நடை, உயிர் பிரிவதற்கு துடித்துக் கொண்டிருப்பது ஆகிய கொடூரங்கள் அந்த ஒளிபரப்பில் காட்டப்பட்டன.
இக்காட்சிகள் அவுஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு விவசாய அமைச்சர் ஜோ லுட்விக்,"இந்தக் காட்சிகளில் காண்பிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்கான கால்நடைகள் ஏற்றுமதியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளேன். இத்தடை மேலும் பல இறைச்சிக் கூடங்களுக்கு நீட்டிக்க வகை செய்யப்படும்" என்று கூறினார்.
இது குறித்து விசாரிக்க ஒரு நபர் குழுவையும் அவர் நியமிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சுயேச்சை எம்.பி.க்கள் இருவர் இந்தோனேசியாவுடனான ஒட்டுமொத்த கால்நடை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும், இன்னும் மூன்றாண்டுகளில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதிக்கும் முழுத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து பேசிய இந்தோனேசியாவின் பொருளாதார விவகார ஒத்துழைப்புத் துறையின் துணை அமைச்சர் பாயு கிருஷ்ணமூர்த்தி,"இந்தோனேசியாவின் வளர்ச்சியும், அவுஸ்திரேலியாவின் வளர்ச்சியும் மொத்தத்தில் வேறுபட்டது என்பதை அவுஸ்திரேலியா உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.கால்நடைகள் ஏற்றுமதித் தடையை நீக்குவது குறித்து அவுஸ்திரேலிய அரசுடன் பேச இந்தோனேசிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF