இராணுவத் தலைமையக் காணியை விற்றதில் 29 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது: ஐ.தே.க.
அமெரிக்கத் தடையால் லிபியா அரசுக்குச் சொந்தமான கானா- லிபியா அராப் கோல்டிங் நிறுவனம், கிளாக்கோ ஹோட்டல்ஸ், நார்வேயன் ரசாயன நிறுவனம், லிபியன்- நார்வே உர நிறுவனம் ஆகியவை மற்ற நிறுவனங்களுடன் இனிமேல் வர்த்தகம் செய்ய முடியாது. இதனால் நிறுவனங்கள் நலிவடைந்து மூடவேண்டிய நிலை உருவாகும்.இது பற்றி அமெரிக்க நிதி அமைச்சக வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் ஆடம் சூபின் கூறுகையில்,"உலக அளவில் செயல்படும் கடாபியின் நிறுவனங்களை தீவிரமாக கண்காணித்து அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
காலிமுகத் திடலில் அமைந்திருந்த இராணுவத் தலைமையகக் காணிகளை விற்பனை செய்ததன் மூலம் 29 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.சங்கரி லா மற்றும் காடிக் லிமிடட் நிறுவனத்திற்கு அரசாங்கம் விற்பனை செய்ததன் மூலம் பாரியளவு வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணி விற்பனை தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட தயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முதலாம் காலாண்டுக்கான அரசாங்க விற்பனை வருமான விபரங்களில் குறித்த காணி விற்பனை பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.ஆயினும் பிரஸ்தாப காணி விற்பனை தொடர்பான கொடுக்கல் வாங்கல் வெளிப்படையான முறையில் நடைபெற்றதாக ஆளும் கட்சி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எம்மை மின்சார நாற்காலியில் இருக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி.
தம்மை மின்சார நாற்காலியில் இருத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க சிலர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் பயங்கரவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உர மானியம் தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் நோக்கில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை தட்டிப்பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.படைவீரர்களைப் போன்றே நாட்டு விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது – சரத் பொன்சேகா.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்திய பல முக்கிய உயர் இராணுவ அதிகாரிகள் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.போரின் போது முன்னணி செயற்பாடுகளை மேற்கொண்ட பிரிகேடியர்கள், ஜெனரல்கள் கொத்துக் கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் 30,000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கான ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதியரசர்களில் ஒருவர் சுகயீனமுற்ற காரணத்தினால் இன்றைய வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
அரசியலமைப்பை மீறும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து ஐ.தே.க.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கம் பல கொள்கை மாற்றங்களை செய்துள்ளது. பாராளுமன்றத்திற்கு அமைச்சர்கள் பொறுப்பு சொல்லும் சம்பிரதாயத்தையும், அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்று பாராளுமன்ற சட்டத்தின் 42ஆவது சரத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு வருடாவருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிதியைக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செயற்படுத்துவர். ஒவ்வொரு அரசாங்கமும் இதனை நடைமுறைப்படுத்தி வந்தது. அந்த நிதியை அரசாங்கம் அகற்றியுள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்டமூலத்தை கரு ஜயசூரிய சமர்ப்பித்தார். நான் அதனை ஆமோதித்தேன். ஆனால் பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்த முன்னரே அரசு அதனை அகற்றிவிட்டது.பாராளுமன்ற முறையை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. தியாவன்னா நதிக்கு நாட்டு மக்களை அநாதையாக்க அரசாங்கம் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் அதற்கு இடமளிக்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்முறைகள் நடந்திருப்பதை பாலித கொஹண ஏற்றுக்கொண்டுள்ளார்: சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பாலித கொஹண ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐநாவுக்கான பணியகத்தின் தலைமை அதிகாரி சர்வதேச மன்னிப்பு சபையின் இணையத் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே மேற்கண்ட விடயம் குறித்துப் பிரஸ்தாபித்துள்ளார்.இலங்கையின் கொலைக்களம் காணொளி திரையிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காணொளியைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கொஹண ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததார்.
இலங்கையின் கொலைக்களம்' என்ற சனல்-4 தொலைக்காட்சியின் விபரணப்படத்தினை நியூயோர்க்கில் அமைந்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஐ.நா பணியகத்தில் திரையிடுவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் அங்கு அதனைப் பார்ப்பதற்காகக் கூடியவர்களது அளவுக்கு அதிகமான எண்ணிக்கைதான் எங்களுக்குக் கவலையினைத் தந்தது.மன்னிப்புச்சபையின் நியூயோர்க் செயலகத்தில் இந்த ஆவணப்படத்தினைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த பெருந்திரளான பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வளவு காத்திரமான விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
2009ம் ஆண்டு சிறிலங்காவினது இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் பிரித்தானியாவில் சணல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இந்த ஆவணப்படம் பின்னர் அதனது இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.கலாநிதி பாலித கோகன்ன மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையிலான 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இந்த ஆவணப்படத்தினை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவின் படமும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சரணடைவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொலைசெய்தாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த ஆவணப்படம் திரையடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்தக் ஆவணப்படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்க்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் என்றும் அந்த அதிகாரி தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா முனைப்புக் காட்டவில்லை: சர்வதேச நெருக்கடிக்குழு.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா போதுமான முனைப்பு காட்டவில்லை என சர்வதேச நெருக்கடிக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தம் நிறைவுற்ற பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச நெருக்கடிக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரம் இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருகின்றது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே கருதுகின்றனர்.மறுபுறத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இந்தியா பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்த போதிலும் அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகின்றது.
இலங்கை விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதனை தடுக்க வேண்டுமாயின் இந்தியா ஆக்கபூர்வமான முறையில் இலங்கைப் பிரச்சினையில் தலையீடு செய்ய வேண்டும். வலியுறுத்தப்பட்டுள்ளது.வடக்கில் இராணுவமயப்படுத்தல்களை தடுத்த நிறுத்தவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் சர்வதேச நெருக்கடிக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகளுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்.
அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் 67 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. தன்னிச்சையாக தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கொன்றதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு வருவதற்காக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் 67 பேருக்கு வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விஸா வழங்கியுள்ளதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் விசா வழங்கும் முடிவை பாகிஸ்தான் எடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஏற்பாட்டின்படி இஸ்லாமாபாதின் கோரிக்கையான பாகிஸ்தானில் சி.ஐ.ஏ.வின் பணிகளை முழுமையாக தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை சி.ஐ.ஏ ஏற்றுக் கொண்டது.ஐ.எஸ்.ஐ தலைவர் சுஜா பாஷாவுக்கும், சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கத்தில் இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக டான் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி.
சி.ஐ.ஏ அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களில் ஊடுறுவிய குற்றத்துக்காக 19 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் றீட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.
இவர் 10 வயதிலேயே தற்கொலை செய்ய முயன்றவர் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் ஐந்து வயதிலேயே பாடசாலையில் இருந்து முதற் தடவையாக விலக்கப்பட்டார்.அதன் பிறகு பெரும்பாலும் ஒரு துறவி போல் தமது குடும்பத்துக்குச் சொந்தமான எஸக்ஸ் பங்களாவில் தனது படுக்கை அறையிலேயே பெரும்பாலான காலத்தைக் கழித்தவர்.
அவசியத் தேவைக்காக மட்டும் தான் அந்த அறையிலிருந்து வெளிவருவார். இணையத் தளத்திலேயே இவரின் காலம் கழிந்தது. இவருடைய அறைக்குள் கிழமைக்கு ஒரு தடவை தாயார் சென்று சுத்தப்படுத்துவார்.அதைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. இவர் சிறு பிள்ளையாக இருக்கின்ற போது அச்சம் என்பதே கிடையாது. போக்குவரத்து நெரிசல் மிக்க வீதிகளின் நடுவே பாய்ந்து ஓடுவார். வீட்டுக்குள் நெருப்பை மூட்டி வேடிக்கைப் பார்ப்பார்.
எந்த விளைவையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருந்தது. என்னுடைய மகன் எனக்கு ஒரு குழந்தை போல். அவரைக் காப்பாற்ற நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன் என்று சி.ஐ.ஏ யை கதிகலங்கச் செய்துள்ள இந்த கணணி மாயாஜால இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட இவர் தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர் மேலதிக விசாரணைகளுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
கண்களால் பார்த்த படத்தை அப்படியே வரையும் அதிசய ரோபோ.
எந்திரக் கையில் பென்சில் பிடித்து ரோபோ ஒன்று அழகாக ஓவியம் வரைகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஓவியர் பேட்ரிக் டிரெசட்.பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரை அச்சு அசலாக வரைவதில் கில்லாடி. பென்சிலும் பேப்பருமாக உட்கார்ந்தால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளை வரைவார்.கிறுக்குவது போலத்தான் தெரியும். சிறிது நேரத்தில் அற்புத ஓவியத்தை உருவாக்கி விடுவார். இந்த திறமையின் அடிப்படையில் மினி ரோபோ ஒன்றை பேட்ரிக் உருவாக்கியுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தின் கணணித் துறை உதவியுடன் லிவர்ஹ்யூம் அறக்கட்டளை நிதியுதவி மூலமாக ஓவிய ரோபோவை உருவாக்கியிருக்கிறார்.
பார்க்கும் உருவத்தை பதிவு செய்து கொள்வதற்காக கண் போன்ற கமெரா ஒன்று ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு உருவத்தை இப்படித்தான் வரைய வேண்டும் என்பதை புரொகிராமாக செய்து அதற்கான சிப்களை ரோபோவின் கட்டுப்பாட்டு பகுதியில் இணைத்துள்ளார்.ஓவியம் தொடர்பான பல்வேறு நுணுக்கங்கள், விதிமுறைகள், நெளிவு, சுளிவுகள் ஆகியவற்றையும் புரொகிராமில் பதிவு செய்துள்ளார். எந்திர ஓவியனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கமெரா முன்பு உட்கார வேண்டும்.
அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், வெளிச்சம், நிழல் ஆகியவற்றை தனது கமெரா கண்களால் ரோபோ பார்க்கிறது. அடுத்த நிமிடம் ரோபோவின் இயந்திர கை சரசரவென இயங்குகிறது.அதில் இருக்கும் பென்சில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளை வரைகிறது. என்ன ஆச்சரியம் என்னவென்றால் ஆசான் பேட்ரிக் போலவே அடுத்த சில நிமிடங்களில் அற்புத ஓவியத்தை வரைந்து முடித்து பேப்பரை நகர்த்தி விடுகிறது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் கணணித் துறை பேராசிரியர் பிரெடரிக் லேமரி உதவியுடன் இந்த ரோபோவை உருவாக்கியிருக்கிறார் பேட்ரிக். எந்திர ஓவியனுக்கு ஐகான்-2 என்று செல்லப் பெயர் வைத்துள்ளார்.இதுபற்றி பேராசிரியர் பிரெடரிக் கூறுகையில்,"ஓவியக் கலை, கணணி தொழில்நுட்பம் இணைந்து உருவாக்கப்பட்ட ரோபோ இது. ஆனால் தான் எதை வரைகிறோம் என்பது அந்த மினி ரோபோவுக்கு தெரியாது. அதுவே கற்பனை செய்து வரையும் அளவுக்கு நவீன எந்திர ஓவியனை உருவாக்குவோம்" என்றார்.
மக்கள் மீது நேட்டோ தாக்குதல்: ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி.
லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ராணுவத்தை ஒடுக்க நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டு படைகள் தாக்குதலில் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.தலைநகர் திரிபோலியில் நேட்டோ சமீபத்தில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பெரும் சேதம் அடைந்ததுடன் உயிர் சேதமும் ஏற்பட்டது.
கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தும் நபர்கள் மீதும் நேட்டோ குண்டுகள் பாய்ந்துள்ளன. இது தவறுதலாக நடந்த நிகழ்வு என நேட்டோ ஒப்புக் கொண்டு உள்ளது.இந்த நிலையில் சர்மான் நகரில் நேட்டோ படைகள் திங்கட்கிழமை நடத்திய புதிய தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் 5 வீடுகள் நொறுங்கின. இந்த சர்மான் நகரம் திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ளது.
சர்மான் நகரில் பன்னாட்டுப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் 3 குழந்தைகளும் இறந்துள்ளன என லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நேட்டோ தரப்பு கூறுகையில்,"தங்களது தாக்குதலில் தவறுதலாக பொது மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது வருந்தத்தக்கது" என கூறியுள்ளது.மக்கள் உயிரிழப்புகளை தடுக்க நீண்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றும் நேட்டோ உறுதி அளித்து உள்ளது. லிபியா மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்துவதே நேட்டோவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கடாபி கூறியதாவது: நேட்டோ படைகள் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தனி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் முஸ்லீம்கள். அதனால் நீங்கள் வெறுக்கிறீர்கள். எங்கள் மக்கள் மீது குண்டு மழை பொழிகிறீர்கள் என்றும் கடாபி கோபமாக கூறினார்.தான் வசிக்கும் பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியாகும். ராணுவ பகுதியில் வசிக்கவில்லை. ராணுவ தளங்களை மட்டும் தாக்குவதாக கூறிக்கொள்ளும் நேட்டோ படைகள் திரிபோலியின் குடியிருப்பில் தாக்குதலை நடத்துகிறது என்றும் கடாபி ஆத்திரப்பட்டார்.
சீன கலைஞர் அய்வெய் ஜாமீனில் விடுதலை.
சர்ச்சைக்குரிய சீனக் கலைஞர் அய்வெய் நேற்று இரவு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சீன பிரதமர் வென்ஜியாபல் இந்த வார இறுதியில் லண்டன் வரவுள்ள நிலையில் அய்வெய் விடுவிக்கப்பட்டு உள்ளார். சீனாவில் கொம்யூனிஸ்ட் ஆட்சி நீண்ட காலம் நடைபெறுகிறது. அந்த ஆட்சி முறையை சீனக் கலைஞர் அய்வெய் வெளிப்படையாக விமர்சித்து வந்தார். அதனால் அவரை சீனா கைது செய்து காவலில் வைத்தது.
அவரது கைது நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போன்று பிரபல சிற்பி அனிஷ் கழர், நாவல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி போன்ற கலைஞர்களும் சீன அரசு கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அய்வெய் விடுதலை குறித்து சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அய்வெய்யை விடுதலை செய்ததை பொலிசார் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
அவர் தன் மீது உள்ள பொருளாதார குற்றங்களை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக குறிப்பிட்ட தொகையை வரியாக திரும்ப அளிக்கவும் ஒப்புக் கொண்டு உள்ளார் என இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.அய்வெய் விடுதலை உலகில் உள்ள கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. "நான் வெளியே வந்து விட்டேன், நான் வீடு திரும்புகிறேன்" என அய்வெய் தொலைபேசியில் கூறினார்.அவரது குரல் மிகவும் பலவீனமாக இருந்தது. அய்வெய்க்கு ஒரு ஆண்டு ஜாமீன் தரப்பட்டு உள்ளது. சிறையில் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் விளக்கம் தர மறுத்தார்.
அழுத குழந்தையை அடித்து கொலை செய்து மைக்ரோ ஓவனில் போட்ட தாய்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க்(29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது.இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க் குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொலையை மறைக்க குழந்தையின் உடலை மைக்ரோ ஓவனுக்குள் வைத்து மறைத்து விட்டார். பிறகு பொலிசிற்கு போன் செய்து தனது குழந்தை தெரியாமல் மைக்ரோ ஓவனுக்குள் புகுந்து விட்டது.
இதில் உடல் வெந்து இறந்து விட்டது என கூறினார். பொலிசார் விரைந்து வந்து மைக்ரோ ஓவனுக்குள் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காயாங்க் பொலிசில் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரை பொலிசார் கைது செய்தனர்.
புலம் பெயர்ந்த நபர்கள் பிரிட்டனில் தஞ்சம்: டேவிட் கமரூன் எதிர்ப்பு.
பிரிட்டனில் விதிமுறைகளை மீறி தங்கி உள்ள புலம் பெயர்ந்தவர்களை தங்க வைக்க ஐரோப்பா முயற்சி மேற்கொண்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு டேவிட் கமரூன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.ஐரோப்பாவிற்குள் முதலில் நுழைந்த புலம்பெயர்ந்தவர்களை தொடர்ந்து தங்க வைக்க ஐரோப்பிய கொமிஷன் பரிந்துரை அளித்துள்ளது. இந்த நடவடிக்கையால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வந்த நபர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படாது.
கடந்த ஜனவரி மாதம் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் புகலிடம் தேடிவந்தவர்களை பிரச்சனைக்குரிய கிரீஸ் நாட்டிற்கு அனுப்ப தடைவிதித்தது. கடந்த 1997ஆம் ஆண்டு ஐரோப்பியர் அல்லாத இதர நாட்டு நபர்கள் ஐரோப்பாவில் விதிமுறை மீறி தங்கும் பட்சத்தில் வெளியேற்றப்பட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்தை திரும்ப பெறக்கூடாது. அது அமலிலேயே இருக்க வேண்டும் என பிரஸ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தி பேசுகிறார்.
இது குறித்து கமரூன் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில்,"ஐரோப்பிய எல்லைகளில் நடப்பதை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை" என்றார்.இடம்பெயர்தல் மற்றும் புகலிடம் தேடி வருபவர்கள் குறித்து இன்றும், நாளையும் பிரஸ்சல்ஸ் நகரில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. தற்போது 10 லட்சம் மக்கள் லிபியாவில் இருந்து வெளியேறி உள்ளனர்.இவர்களில் 48 ஆயிரம் பேர் ஏற்கனவே ஐரோப்பாவில் குடியேறி இருக்கிறார்கள் என டவுனிங் ஸ்றீட் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 50 ஆயிரம் பேர் இத்தாலி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராங்க்பர்ட் விமானநிலைய துப்பாக்கி சூடு: 21 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு.
பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி அமெரிக்க விமானப்படை வீரர்கள் வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் தொடர்புடைய 21 வயது கொசாவா இளைஞர் அரிட்யுகா மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் பதிவு செய்தது.
பிராங்க்பர்ட் சர்வதேச விமான நிலையத்தில் அரிட்யுகா நடத்திய துப்பாக்கி சூட்டில் பேருந்து டிரைவர் குடேபேக் கொல்லப்பட்டார். மேலும் யுகா சரமாரியாக துப்பாக்கி குண்டுகளால் பேருந்தை தாக்கினார். பேருந்தில் அமெரிக்கர்கள் இருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள யுகா தாக்குதலை தொடங்கி உள்ளார்.இந்த தாக்குதலுக்கு பின்னர் அவர் ஜேர்மானிய நிர்வாகத்தால் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ளும் போர் நடவடிக்கையை கண்டித்து அந்த தாக்குதலை யுகா மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய அந்த நபர் எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு உள்ளவராக தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய யுகா மீது ஜேர்மனியிலும் கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன.தற்போது அவர் ஜேர்மனி சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். துப்பாக்கி சூடு நடத்தும் போது அரபு மொழியில் கடவுளை உயர்ந்தவர் என யுகா சத்தம் போட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
லிபியாவில் போர்நிறுத்தம் செய்ய இத்தாலி அழைப்பு: பிரான்ஸ் நிராகரிப்பு.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளும் சமீபத்தில் சேதம் அடைந்துள்ளன.இந்த நிலையில் மனித நேய அடிப்படையாக போரை நிறுத்தலாம் என இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோ பிராட்டனி புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
இந்த போர் நிறுத்த அழைப்பை பிரான்ஸ் முற்றிலும் நிராகரித்தது. போர் நிறுத்த நடவடிக்கை மக்களை துன்புறுத்தும் கடாபி ராணுத்திற்கு சாதகமாக அமைந்து விடும் என பிரான்ஸ் தெரிவித்தது.நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் இத்தாலிய அமைச்சர் பிராட்டனி கூறுகையில்,"லிபியாவின் கிழக்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களில் மட்டுமல்லாமல் தலைநகர் திரிபோலியிலும் நேட்டோ படைத்தாக்குதல் தொடர்ந்தது. அங்கு மனித நேய நடவடிக்கையாக போரை சிறிது நிறுத்தலாம். மிகச் சிறந்த மனிதாபிமான பாதை ஏற்படுத்தி இந்த முடிவு எடுக்கலாம்" என்றார்.
போர்நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சு வார்த்தை குறித்தும் விவாதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பெர்னார்டுவாலரோ கூறியதாவது: கடாபிக்கு நெருக்கடியை ஏற்படுத்த நேட்டோவும் அதன் கூட்டாளிகளும் போரை தீவிரப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் விரும்புகிறது.தற்காலிக போர் நிறுத்தம் கடாபி படைகள் மீண்டும் வலுப்பெற வழி வகுத்து விடும். தாக்குதலை நிறுத்த முடியாது என தெரிவித்தார்.
அரசியல்வாதிகளை விட துருப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை.
ஆப்கானிஸ்தான் போர் நடவடிக்கையின் போது அரசியல்வாதிகளைக் காட்டிலும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக கனடா வீரர்கள் செயல்பட்டு உள்ளனர் என தெரியவந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்கு சென்றுள்ள நேட்டோப் படையில் கனடா வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். இந்த வீரர்களின் செயல்பாடு குறித்து முன்னாள் லிபரல் கட்சி பிரதமர் ஜீன் செரிடின் பேசி உள்ளார்.கனடிய துருப்புகள் பிடித்த நபர்களை ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்த விபரங்கள் மட்டுமல்லாது தற்போது பிடிபட்ட நபர்கள் குறித்த ஆவணங்கள் குறித்தும் பேசினார்.
புதன்கிழமையன்று கனடா எதிர்க்கட்சி தலைவர்கள், நிபுணர்கள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அரசை விமர்சித்தார்கள். ராணுவ வீரர்களின் பின்னால் அரசு மறைந்து கொண்டு இருக்கிறது.கனடா வீரர்கள் விதிமுறைகளை மீறினார்களா? அல்லது வேண்டுமென்றே எதுவும் தெரியாதது போல் இருந்தார்களா? என்ற கேள்வியும் உள்ளது என அவர்கள் கூறினர்.
2006ம் ஆண்டு மோதல் சுழற்சியை தொடங்கும் வரை ஆப்கானிஸ்தானில் கனடா வீரர்கள் பெரும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் நடவடிக்கையில் கனடா நாட்டின் நன்மைக்காக வீரர்கள் செயல்பட்டு உள்ளனர்.கனடா மக்களின் நம்பிக்கை பெற்றவர்களாக இருந்தனர். கனடா அரசியல் தலைவர்களை காட்டிலும் கனடா துருப்புகள் மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர் என ஆப்கனில் கைது நடவடிக்கை ஆவணம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது கட்சித் தலைவர்கள் கூறினர்.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி.
ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹோங்ஸூகூ மாகாணத்தில் 20 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.வடக்கு ஜப்பானின் பசிபிக் பிராந்தியத்தில் 6.7 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்த தகவலை ஜப்பான் மற்றும் அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது.நிலநடுக்கம் காரணமாக கடலோர நகரங்களான காமய்ஷி மற்றும் ஒபுனட்டோ பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தின் பின் அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
நிலநடுக்கத்தால் ரயில் சேவை அந்தப் பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் இயங்கத் துவங்கியது. ஜப்பான் நேரப்படி இன்று காலை 7 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வடகிழக்கே 53 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி வடக்கு ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது 23 ஆயிரம் மக்கள் இறந்தோ அல்லது மாயமாகியோ போனார்கள். புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வன்முறைக்கு எதிரான கொள்கையில் மாற்றம் செய்து கொள்ளப் போவதாக சூகீ அறிவிப்பு.
வன்முறைக்கு எதிரான தனது கொள்கையில் சிறிது மாற்றம் செய்து கொள்ளப் போவதாக மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் அவுங் சான் சூகீ தெரிவித்துள்ளார்.மியான்மர் தலைநகர் நேப் இ டவ்வில் ரகசிய அறையில் இருந்து லண்டன் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அவுங் சான் சூகீ அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் சமுதாயத்தை ஒட்டிய நீதி தொடர்பான செயல்களுக்கு வன்முறையை கடைபிடிக்க மாட்டேன்.
ஆனால் அரசியலில் வன்முறைக்கு எதிரான எனது கொள்கையில் சிறிது மாற்றம் செய்து கொள்ள உள்ளேன். அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் நெல்சன் மண்டேலா தனது மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.வன்முறையற்ற கொள்கைக்கு தந்தை போன்றவர் மகாத்மா காந்தி. அவர் கூட கோழைத்தனமா? வன்முறையா? என்கிற போது கண்டிப்பாக வன்முறையைத் தான் தேர்வு செய்வார்.
அரபு நாடுகளில் பெரிய அளவில் இணைய வசதி இருப்பதால் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று மியான்மரில் ஏற்பட வழியில்லை. காரணம் மியான்மரில் இணைய வசதி இல்லை. உலக நாட்டு மக்களைப் போன்றே மியான்மர் மற்றும் துனிஷியா நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக காத்திருக்கின்றனர்.
2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமா.
ஆப்கானிஸ்தானில் இருந்து 2012ம் ஆண்டு கோடைகாலத்திற்கு முன்பாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
படைகள் வாபஸ் பெறுவதை முன்னிட்டு இந்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் பேர்களை வாபஸ் பெறப்படும் என்றும் தொடர்ந்து மீதமுள்ள வீரர்கள் படிப்படியாக வாபஸ் பெறப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறை வைக்கப்பட்டிருந்த 40 அல்கொய்தா தீவிரவாதிகள் தப்பியோட்டம்.
ஏமன் நாட்டின் தெற்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்கொய்தா பயங்கரவாதிகள் 40 பேர் நேற்று தப்பிச் சென்றனர்.ஏமன் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு நடந்து வருகிறது. இதனால் சிறையில் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று சிறையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் கையில் இருந்த ஆயுதங்களை பிடுங்கி அவர்களை தாக்கி விட்டு 40 அல்கொய்தா பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர்.ஏமன் நாட்டில் புரட்சி நடந்து வரும் நிலையில் அல்கொய்தா கைதிகள் தப்பி இருப்பது அந்நாட்டிற்கு சவாலாக அமைந்துள்ளது.
லிபியாவின் 9 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை.
லிபிய அதிபர் மோமர் கடாபியின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார்.
இந்த நிலையில் லிபியாவுக்கு சொந்தமான அராப் துர்கிஷ் வங்கி, வட ஆப்பிரிக்க சர்வதேச வங்கி, வட ஆப்பிரிக்க வர்த்தக வங்கி ஆகிய 3 வெளிநாட்டு வங்கிகள் உள்பட 9 நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாக்-லிபியா ஹோல்டிங் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் லிபியாவின் பங்கு 50 சதவீதமும், பாகிஸ்தானின் பங்கு 50 சதவீதமும் உள்ளது.