Wednesday, June 22, 2011

இன்றைய செய்திகள்.


சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க விசா நடைமுறைகளில் மாற்றம்.

இலங்கையுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியம், இலங்கை மக்கள் தமது நாட்டுக்கு விஜயம் செய்வதையும் அங்கு கல்வியைத் தொடர்வதையும் பெரிதும் விரும்புகின்றது.இருந்தபோதிலும், சட்ட ரீதியற்ற முறையில் நாட்டுக்குள் நுழைவதையும் சட்டரீதியற்ற குடியேற்றத்தையும் தவிர்க்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதோடு அவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்காக பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் தெரிவித்தார். 

இதன்பொருட்டு மாணவர் விசாக்கள் மற்றும் குறுங்கால விஜயத்திற்கான விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள அதேநேரம், வதிவிட விசா வழங்குவதற்கான நடைமுறைகளையும் அடுத்த வருடம் முதல் திருத்தியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார். ஐக்கிய இராச்சியத்திற்கான குடிவரவு நடைமுறைகள், விசா வழங்கல் நடவடிக்கைககள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. 

அங்கு விளக்கமளிக்கும் போதே பிரதி தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கையும் பிரித்தானியாவும் நீண்ட கால பொருளாதார, காலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்ட நாடுகளாகும்.இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இந்நாடுகளுக்கிடையில் பயணம் செய்யும் நடவடிக்கை இப்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. 

இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமன்றி, இந்நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளது.இரண்டாவது, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி நிலை இப்போது சீரடைந்து விட்டது. இதன் காரணமாக எதிர்விளைவுகளைச் சந்தித்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரமும் மீட்சியடைந்து, மீளவும் முன்னேறிச் செல்கின்றது. 

இதனால் வர்த்தக முயற்சிகளை முன்கொண்டு செல்லும் நோக்கிலும், வேறு நோக்கங்களுக்காகவும் பிரித்தானியாவுக்கு சென்று வருவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. எனவே இவ்வாறான ஒரு காலகட்டத்தில், நல்ல நோக்கங்களுக்காக பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புகின்ற அனைவராலும் நேர்மையான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற விசா விண்ணப்பங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால், போலியான அல்லது குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான விண்ணப்பங்கள் குறித்து இறுக்கமான சட்ட நடைமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இதற்காக குடிவரவு கொள்கைகள் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பெருமளவானோர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்; செல்கின்றனர். 

இப்போது சட்டரீதயிõக அங்கு 2 இலட்சம் இலங்கையர் வாழ்கின்றனர். கடந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் 70 வீதமானவற்றுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் பேர் விசாவினைப் பெற்றுள்ளனர். இவர்களுள் 8000 பேர் குறுங்கால விஜய (விசிட்) விசாவையும் 7000 பேர் மாணவர்களுக்கான விசாவையும் பெற்றுள்ளனர்.

சாதாரணமாக 15 நாட்களுக்குள் விசா வழங்கப்படுகின்றது. அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணம் தெளிவாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுகின்றது. விசா ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடைமுறை தொடர்பிலும் எமது இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இதற்கென ஆலோசனை முகவர்களின் உதவி அத்தியாவசியமற்றது என்றே கருதுகின்றேன் என்றார். ஐக்கிய இராச்சியத்தின் கரையோர கண்காணிப்பு முகவரகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் உக்பா விளக்கமளித்து உரையாற்றுகையில், தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களினால் பிரித்தானியா தனது குடிவரவு சட்ட விதிகளை இறுக்கமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத குவியேற்றத்தை தடுப்பதும் சட்டத்திற்கு முரணாக நாட்டில் தங்கியிருத்தலை கட்டுப்படுத்துவதுமே இப்புதிய நடைமுறைகளின் பிரதான நோக்கமாகும். 

இது தொடர்பாக உலக நாடுகளின் அரசங்கங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். பிரித்தானியாவில் உயர்தரம் வாய்ந்த கல்வியகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் பலர் நேர்மையாக கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றனர். ஆனால், இதனை சில உள்நாட்டு விண்ணப்பதாரிகளும் ஏன் குறைந்த தரத்திலான ஒரு சில பிரித்தானிய கல்வியகங்களும் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெரியவந்துள்ளது.இலங்கையில் பிறந்த 2 இலட்சம் பேர் பிரித்தானியாவில் சட்டரீதியாக வசிக்கின்றனர் என்றாலும் சட்டத்திற்கு முரணாக எத்தனைபேர் அங்குள்ளனர் என்பது குறித்த மிகச் சரியான தரவுகள் எம்மிடம் இல்லை. நிச்சயமாக அத்தொகை மேற்குறிப்பிட்டதை விட கணிசமானளவு அதிகமாகவே இருக்கும். அவர்களுள் 26 பேரே அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கையில் இருந்து விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுள் மாதத்திற்கு 200 விண்ணப்பங்கள் போலியான ஆவணங்களுடன் மோசடியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்படியாயின் நாளொன்றுக்கு சராசரியாக இவ்வாறான 10 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன. பிரித்தானியாவுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 30ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இலட்சக் கணக்கில் உள்ள குடியேற்றவாசிகளின் தொகையை ஆயிரக்கணக்காக குறைப்பதற்கு எமது அரசாங்கம் விரும்புகின்றது. இதற்கமைய கொண்டுவரப்படும் புதிய விதிமுறைகளின் படி, கல்வியைத் தொடர்வதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், கூடியபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கும் கல்வி கற்கவும் அனுமதிக்கப்படுவர். 

அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பியாக வேண்டும். அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பின், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது அவருக்கு இன்னுமொரு விசா வழங்குவதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும். காலாநிதி போன்ற பட்டப் படிப்புகளை தொடரும் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனினும் பொதுவாக இவ்விதி கடைப்பிடிக்கப்படும்.பிரித்தானியாவில் கல்வியைத் தொடர விரும்பும் விண்ணப்பதாரி, பிரித்தனிய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றால் மட்டுமே பகுதிநேரமாக தொழில்புரிவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்படாத, தனியார் கல்வியகங்களில் கற்கைகளுக்காக பதிவு செய்யும் எவருக்கும் வேலை செய்வதற்கான அனுமதி கிடைக்காது.

இவ் விதி புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கே செல்லுபடியாகும். எவ்வாறிருந்த போதும், அவர்கள் இதற்குப்பிறகு வேறொரு கற்கை நெறிக்கு பதிவு செய்ய முற்படுகின்றபோதோ அல்லது தமது விசா காலத்தை புதுப்பிக்க முனையும் போதோ இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுவர். அத்துடன் , பிரித்தானியாவில் பட்டப்படிப்பு ஒன்றை பூர்த்தி செய்யும் ஒருவர், தமது தகுதிக்கமைய தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை முறையாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இரு வருடங்கள் தொழில்நிமித்தம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும். 

அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள மிக முக்கிய கம்பனிகளின் அதிகாரிகளுக்காக எக்ஸ்பிரஸ் சேர்விஸ் எனப்படும் விஷேட விசா நடைமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அது மட்டுமன்றி, சிலர் என்னென்ன காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். எனவே, மிகவும் சிறந்த, நேர்மையான பிரஜைகளுக்கு மட்டுமே வதிவிட விசாவை வழங்கும் வகையில் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் குடிவரவு விதிகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளோம் என்றார்.
சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த இலங்கையர் இந்திய விமானநிலையத்தில் கைது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்திய வர்த்தகரொருவர் இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் திருச்சி விமானநிலையத்தில் அதிரடியாக சோதனை நடத்தியபோது பிரஸ்தாப நபர் தன் உடம்பின் கீழ்ப்பகுதியில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 14 தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து திருச்சிக்கு நேற்று சென்ற ஸ்ரீலங்கன் ஏயார்ர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் ஆய்வுத்துறை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தங்கக் கட்டிகளின் இந்தியப் பெறுமதி 40 இலட்சம் ஆகும். இதையடுத்து அவரிடம் இருந்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சந்தேகநபர் தங்க கட்டிகளை எங்கு கடத்திக் கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்.
கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி.1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.
இதனால் ஏற்பட்ட குப்பை 2.5 கோடி டன் பசிபிக் பெருங்கடலில் 10 ஆண்டுகளுக்கு சுற்றிக் கொண்டிருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.ஆனால் நடந்த சோகத்தை உடனே மறந்துவிட்டு விறுவிறுவென மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினர் ஜப்பானியர்கள். சுனாமி தாக்குதல் நடந்து 3 மாதத்துக்குள் சுனாமி சுவடு தெரியாமல் நகரங்களை சீரமைத்துவிட்டார்கள். எதையும் சமாளிப்போம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.
உலகின் மிக வயதான நபர் பிரேசிலில் மரணம்.
உலகின் மிக வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தவர் மரியா கோம்ஸ்.இவர் 1896ம் ஆண்டு ஜுலை 9ம் திகதி பிறந்தார். இந்த மிக வயதான பெண் தனது 115வது பிறந்த நாளை கொண்டாட வேண்டிய தருணத்தில் மரணம் அடைந்தார்.
பிரேசிலைச் சேர்ந்த இந்த பெண் செவ்வாய்கிழமை இறந்தார். அவரது இறப்பைத் தொடர்ந்து உலகின் மிக வயதான நபர் என்ற பட்டம் அமெரிக்கவைச் சேர்ந்தவருக்கு கிடைத்து உள்ளது.பல்வேறு உடல் உறுப்புகள் பழுதடைந்த நிலையில் மரியா கோம்ஸ் வாலன்டிம் மரணம் அடைந்தார். வருகிற ஜுலை 9ம் திகதி அவருக்கு 115 வது பிறந்த நாள் வருகிறது. அவர் 114 வயது 347 நாளில் இறந்துள்ளார் என அதிகாரிகள் கூறினர்.
மரியா மரணத்தை தொடர்ந்து அமெரிக்க ஜார்ஜியாவை சேர்ந்த பெண் பெசே கூப்பர் உலகின் வயதான நபர் ஆகியுள்ளார். அவர் தற்போது மான்ரோ பாதுகாப்பு இல்லத்தில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மகன் சிட் கூப்பர் தெரிவித்தார்.அவருக்கு உடல் எடை சிறிது அதிகரித்து உள்ளது. அவர் நல்ல முறையில் உணவு சாப்பிட்டு வருகிறார் என்றும் சிட் கூப்பர் தெரிவித்தார்.
உலகின் வயதான பெண் என பெருமை பெற்று இருந்த மரியா கோம்சின் தந்தையும் 100 வயது வரை உயிர் வாழ்ந்தவர் ஆவார். மரியா கோம்ஸ் 1913ம் ஆண்டு ஜோவோ என்பவரை திருமணம் செய்தார். கணவர் 1946ம் ஆண்டு மரணம் அடைந்தார். மரியா கோம்சுக்கு நான்கு பேரக் குழந்தைகளும், 7 கொள்ளு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
நெல்சன் மண்டேலாவுடன் ஒபாமாவின் குடும்பம் சந்திப்பு.
முதல் கறுப்பின அதிபர் நெல்சன மண்டேலாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி சந்தித்து பேசினார்.தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரும், கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவருமான நெல்சன் மண்டேலாவை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும் அவரது குழந்தைகளும் நேற்று தென்னாப்பிரிக்காவில் சந்தித்து பேசினர்.சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின் ஒபாமாவின் குடும்பத்தினர், மண்டேலா குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் தற்போது கடுமையாக அதிகரித்து வருகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.பிரபல ஜேர்மனி பருவ நிலை விஞ்ஞானி இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த கட்டுரை அமெரிக்க இதழான நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் புத்தகத்தில் வெளியாகி உள்ளது.
வடக்கு அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் உள்ள படிவங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு 100 ஆண்டுகள் முன்பாக மற்றும் கிறிஸ்துவிற்கு பின்னர் 950ம் ஆண்டு வரை கடல் நீர் மட்டம் ஒரு சீராக இருந்துள்ளது.உலகில் தொழில் புரட்சி ஏற்பட்ட பின்னர் ஆண்டுக்கு 0.6 மில்லி மீற்றர் அளவுக்கு கடல் நீர் அதிகரிப்பு ஏற்பட்டடு 400 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 1800ஆம் ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டதை தொடர்ந்து கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு 2 மில்லி மீற்றர் அளவு அதிகரித்தது.
2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவு நீர் மட்ட அதிகரிப்பு காணப்பட்டது. கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடலோரம் அருகே நகரங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய நெருக்கடியும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கிரீஸ் அரசு தப்பியது.
கிரீஸ் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டு அரசு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.செலவினங்களை குறைப்பதன் மூலமே கிரீசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாவது கட்ட கடன் உதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அரசின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.இந்த வாக்கெடுப்பில் பிரதமர் ஜார்ஜ் பாப்பன்ட்ரேயு தலைமையிலான அமைச்சரவைக்கு 155 வாக்குகள் கிடைத்தன. 143 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.
அரசின் மீதான இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து 2800 கோடி யூரோக்களுக்கான செலவின ரத்து, வரி உயர்வு, நிதி சீரமைப்பு, தனியார் மய திட்டங்கள் போன்றவற்றுக்கு எம்.பி.க்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.1200 கோடி யூரோ கடன் உதவி பெற இந்த சட்ட திருத்தம் தேவை என ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் கடன் உதவியால் தான் தனது பழைய கடன்களை கிரீஸ் அடைக்கும் நிலை உள்ளது.
முன்னதாக அரசின் செலவு ரத்து நடவடிக்கைகளை எதிர்த்தும் அரசியல்வாதிகளை எதிர்த்தும் தலைநகர் ஏதென்சின் நாடாளுமன்ற கட்டிடம் முன்பாக எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.அவர்கள் அரசியல்வாதிககளை திருடர்கள் என விமர்ச்சித்து கோஷம் எழுப்பினர். பிரதமர் பாப்பன்ட்ரேயு கேபினட்டில் மாற்றம் செய்தார். தனது நிதி அமைச்சரையும் மாற்றம் செய்தார்.
நாஜி படையினரை புகைப்படம் எடுத்த நபரை கண்டறிய தீவிர முயற்சி.
ஹிட்லரின் தலைமையிலான நாஜி படையை படம் எடுத்த புகைப்படக்காரர் யார் என்கிற தேடுதல் வேட்டை துவங்கி உள்ளது.நாஜி படை குறித்த பட ஆல்பம் கிடைத்துள்ள நிலையில் அந்த புகைப்படக்காரரை அறிய உலகம் ஆர்வம் கொண்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் யூனியன் பகுதியில் படை எடுத்து சென்று ஹிட்லர் தோல்வி கண்டார்.அவர் கிழக்கு எல்லை பகுதியில் மேற்கொண்ட போர் நடவடிக்கைளை போர் நிகழ்விடத்தில் ஒரு புகைப்படக்காரர் அற்புதமாக படம் பிடித்து உள்ளார். அந்த நபர் எடுத்த ஆல்பம் நியூயார்க்கில் அணி வகுத்து நிற்கின்றன.
அந்த அற்புதமான படங்களை எடுத்த பொட்டோகிராபர் யார் என தேடுதல் வேட்டை தீவிரமாகி உள்ளது. அந்த புகைப்படக்காரர் யார் என்பது புதிராகவே உள்ளது.ஓன்லைனில் இந்த நாஜி ஆல்பம் செவ்வாய்க்கிழமை வெளியானது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் 1941ஆம் ஆண்டு கால கட்டத்தில் வெர்மாசட்டின் கிழக்கு நோக்கிய அணிவகுப்பை எடுத்துக்காட்டுவதாக படங்கள் உள்ளன.
ஹிட்லருக்கு சில அடி தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. பேஷன் இன்டஸ்ட்ரி நிர்வாகி ஒருவர் இந்த ஆல்பத்தின் மூலம் தனது மருத்துவ செலவினங்களை ஈடுகட்ட முயன்ற போது அரிய புகைப்பட தகவல் வெளியே தெரியவந்தது.ஜேர்மனி ராணுவத்தின் பிரசார பிரிவு புகைப்படக்காரர் இந்த படங்களை எடுத்து இருக்கலாம் என அமெரிக்கா ஹோலோ காஸ்ட் நினைவு அருங்காட்சியக ஜீடித் ரோகன் கூறினார்.
சிலி எரிமலை சாம்பல் பாதிப்பு நீங்கியது: அவுஸ்திரேலியா விமானங்கள் இன்று இயங்க துவங்கின.
சிலி எரிமலை சாம்பல் பரவுவது நின்று வான் பகுதியில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்ட அவுஸ்திரேலியா விமானங்கள் மீண்டும் இன்று இயங்க துவங்கின.கர்ண்டாஸ் மற்றும் விர்ஜின் நிறுவன விமானங்கள் அதிகாலை அடிலைடு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டன. இருப்பினும் மெல்போர்ன் மற்றும் தலைநகர் கான்பராவில் அந்த நிறுவனங்களின் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
சிட்னி, நியூகேசில், ஹொபர்ட் ஆகிய இடங்களில் இருந்து விமானங்கள் இன்று மதியம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. பல பயணிகள் விமான நிலையங்களிலேயே இரவில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக விமான சேவை எரிமலை சாம்பலால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் எரிமலை சாம்பல் பரவல் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் பரிதவித்து நின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து விமானங்களும் இயல்பாக இயங்கின. இருப்பினும் எரிமலை சாம்பல் பரவலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் விமானங்கள் இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டன.சிலியில் இந்த முறை ஏற்பட்ட எரிமலை சாம்பல் 20 ஆயிரம் அடி முதல் 40 ஆயிரம் அடி வரை பரவி இருந்தது. எனவே விமானங்கள் இந்த குறிப்பிட்ட அடிதூரத்திற்கு கீழாகவே இயக்க அறிவுறுத்தப்பட்டது.அவுஸ்திரேலியாவில் வான் பகுதி இன்று மிக தெளிவாக இருக்கும் என அவுஸ்திரேலியா வானிலை எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் தெரிவித்தது.
அரசு நிதி செலவில் 5 கோடி டொலர் முறைகேடு: ஆர்.சி.எம்.பி பொலிஸ் விசாரணை.
பொது நிதியில் 5 கோடி டொலர் செலவினம் குறிப்பிட்ட அமைச்சருக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜி8 மாநாட்டிற்கு முன்பாக இந்த செலவினம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த குற்றச்சாட்டு குறித்து ஆர்.சி.எம்.பி பொலிசார் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி8 மாநாடு செலவினம் குறித்து ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை வெளியான நிலையில் நிதி முறைகேடு விவரம் வெளிவந்துள்ளது.
மாநாட்டின் போது எந்த பணிகளுக்கு எவ்வளவு செலவு என்பதை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசு தெளிவாக குறிப்பிடவில்லை என அறிக்கை தெரிவித்து இருந்தது. கன்சர்வேடிவ் அமைச்சர் டோனி கிளமென்ட் மாநாட்டின் போது செலவழித்த தொகை விவரம் தெளிவாக குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக முன்னாள் லிபரல் எம்.பி மார்லனே ஜென்னிங்ஸ் முறைப்படி புகார் செய்துள்ளார். அரசு பொது நிதி முறைகேடு குறித்து கடந்த வாரம் ஆர்.சி.எம்.பி.யின் 3 அதிகாரிகளிடம் அவர் 1 மணி நேரம் விளக்கி கூறி இருந்தார்.அவர்கள் எனது புகாரை நிச்சயம் தீவிரமாக விசாரணை செய்வார்கள் என மார்லனே நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து ஆர்.சி.எம்.பி பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"புகாரினை ஆய்வு செய்கிறோம். அதன் பின்னர் முறைப்படியான விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 83 கோடி டொலர் தொகை எல்லை கட்டமைப்பு வசதிக்கு ஒதுக்கீடு செய்து இருந்தது. போக்குவரத்து மற்றும் நெருக்கடியை கிராசிங் பகுதிகளில் தவிர்ப்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் 5 கோடி டொலர் கிளமென்ட்சின் ஒண்டாரியோ காட்டேஜ் கண்ட்ரி பகுதியில் செலவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிதியில் ஹன்ட்ஸ்விலே பகுதியில் 32 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
அமெரிக்காவுடன் சமசரம் ஏற்படுத்திக் கொள்ள 1700 தலிபான்கள் சம்மதம்.
ஆப்கனில் தலிபான்களுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள 1,700 தலிபான்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கன் அரசை மிரட்டி வரும் பயங்கரவாத அமைப்பான தலிபான்களுடன் சமரசம் ஏற்படுத்த அந்நாட்டு அதிபர் ஹமித் ஹர்சாய் நிர்வகித்த குழுக்கள் பேச்சு நடத்தி வருகின்றன.
ஆப்கனுக்கு உதவும் வகையில் தலிபான்களுடன் அமெரிக்காவும் பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான செய்தியில் ஆப்கனில் உள்ள 40 ஆயிரம் தலிபான் பயங்கரவாதிகளில் 1,700 பேர் அமெரிக்காவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சம்மதித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பத்திரிகைக்கு தலிபான் பயங்கரவாதி தூர் ஜான் அளித்த பேட்டியில்,"தொடர்ந்து சண்டையிட்டு நான் சோர்ந்து விட்டேன். நான் ஓய்ந்து விட்டதால் இனி துப்பாக்கி ஏந்தி என்னால் சுட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.கடந்த பத்து மாதங்களாக தலிபான் பயங்கரவாதிகளிடம் சமரசம் ஏற்படுத்த ஆப்கன் அரசும், அமெரிக்காவும் மேற்கொண்டு வரும் முயற்சியில் இந்த பலன் கிடைத்துள்ளது. மனம் மாறிய பயங்கரவாதிகளில் பலர் பயங்கரவாத அமைப்பில் கமாண்டர்களாக பணியாற்றியவர்கள்.
தலிபான்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கென்று அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் 690 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளன. தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறி சமரசம் ஏற்படுத்திக் கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு சிறிது காலத்திற்கு நிதியுதவி அளிப்பது பின்னர் இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது போன்ற திட்டங்களை அமெரிக்கா கொண்டு வந்தது.இதுகுறித்து இந்நடவடிக்கையை மேற்பார்வையிட்டு வரும் நேட்டோ அமைப்பின் இயக்குநரும், மேஜர் ஜெனரலுமான பில் ஜோன்ஸ் கூறுகையில்,"ஆப்கனின் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அந்த அமைப்பில் இருந்து வெளியேற பயப்படுகின்றனர். வெளியேறிய பின்னர் பயங்கரவாதிகளால் பழிவாங்கப்படுவர் என்று பயப்படுகின்றனர். பெரிய அளவில் தலிபான்கள் மாறுவதற்கு பாகிஸ்தானின் உதவி அவசியம்" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF