Saturday, June 4, 2011

இன்றைய செய்திகள்.


இலங்கையின் போர்க்குற்ற ஐ.நா. அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை!

இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஐ.நா. அறிக்கை குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள கொள்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாகவும், அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கு ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது. 

போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து ராஜபக்ச அரசு இந்த விஷயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாக தெரிந்த நிலையில், அது குறித்து வெளிப்படையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் புகலிடம் கோரியவர்களுக்கு ஆப்பு! குடிவரவு முறையில் புதிய சர்ச்சை.

பிரிட்டனின் குடிவரவு முறைமையில் காணப்படும் குழறுபடிகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரிட்டனில் மன்னிப்பும் அளிக்கப்பட்டு தங்கியிருக்கும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன் பிரிட்டனில் புகலிடம் கோரிய சுமார் 450,000 பேர் சம்பந்தப்பட்ட கோவைகள் உள்துறை அமைச்சு அலுவலகத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெட்டிகளுக்குள் காணப்பட்டன.

இதில் 430,000 பேரின் விடயத்தில் இப்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 161,000 பேருக்கு பிரிட்டனில் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் அநேகமானவர்கள் பிரிட்டனில் நீ்ண்ட காலம் தங்கியிருந்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இங்கு வாழவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் எல்லைப்புற முகவராண்மை நிறுவனம் தான் இந்தக் குழறுபடிகளுக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கான புதிய நிலையமொன்றும் நேற்று குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீனால் திறந்து வைக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களில் 74500 பேர் இதுவரை தலைமறைவாகியும் உள்ளனர். இவர்கள் இன்னும் இருக்கின்றனரா அல்லது இறந்து விட்டனரா என்பது கூடத் தெரியவில்லை.பிரிட்டனின் குடிவரவுக் கட்டுப்பாட்டு முறைகளைக் காரசாரமாகக் கண்டித்து
பாராளுமன்றக் குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் குடிபுக அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்கான அனுமதி பிரிட்டிஷ் பொது மக்களின் வரிப்பணத்திலேயே வழங்கப்பட்டு உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் பிரிட்டிஷ் எல்லை முகவராண்மை இன்னும் அதன் நோக்கத்தை நிறைவேற்றப் போதுமான அமைப்பல்ல என்று குறைகூறியுள்ளார். பிரிட்டனின் குடிவரவு முறை மிகவும் குழப்பகரமானது என்பதை குடிவரவு அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க தாக்குதல்! ஐ.தே.க.அடுத்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகிறது.

கட்டுநாயக்க தாக்குதல் மற்றும் ஊழியர் பலியானமையைக் கண்டித்து எதிர்வரும் வியாழக்கிழமை (09.06.2011) ஐக்கிய தேசியக் கட்சி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடுசெய்துள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊழியர் சங்கம்,சுதந்திரத்துக்கான அரங்கினர் பங்குகொள்ளவுள்ளதாக அக்கட்சியில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்ததுடன் தமக்கு விடுக்கப்பட்ட சவாலையேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாட்டின் விளைவாகவே பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.அப்படியாயின் கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகம் முன் அமைச்சரொருவரின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதி பொலிஸ்மா அதிபரின் தொப்பி கழற்றப்பட்டதற்கு ஏன் தாக்குதல் நடத்தவில்லையென கேட்கின்றேன்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது யாரது உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே கேள்வியாகவுள்ள நிலையில் இது வெளிப்படுத்தப்படாதுள்ளது.
சாதாரணமாக ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம், அதன் பின் இறப்பர் தோட்டா பிரயோகம், இதற்கும் அடங்காத பட்சத்திலேயே வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு காரணம் என்ன?அவசரகாலச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படுவதன் விளைவே இதுவாகும். மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் இச்சட்டத்தை நீக்குமாறு கோரிய போதிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் இயலுமானால் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தட்டுமென சவால் ஆளும் தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ளது.இந்தச் சவாலையேற்றும் ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் மற்றும் ஊழியர் பலியானமையைக் கண்டித்தும் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளோம்.தனியார் ஓய்வூதிய திட்டம் குறித்து எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் பேசிய பின் நடவடிக்கை எடுக்குமாறு எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிய போதிலும் தொழிலமைச்சர் நிராகரித்ததாலேயே ஊழியரொருவர் பலியாகியுள்ளார்.
எனவே இச்சட்டமூலத்தை முழுமையாக வாபஸ் பெற்று ஊழியர்களுக்கு நன்மையான புதிய சட்டமூலத்தை சகல தரப்பினருடன் பேசி கொண்டு வருமாறு கோருகின்றேன்.இந்த ஆர்ப்பாட்டம் ஜே.வி.பி.யின் பின்னணியில் நடைபெறுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி.யினர் மட்டுமன்றி ஐ.தே.க.மற்றும் சு.க.வினரும் பங்குபற்றியதற்கு காரணம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்தேயாகும்.
ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களே பெருமளவில் பங்குபற்றினர். எனவே இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம்.2002 முதல் 2004 வரையான ஐ.தே.க.வின் ஆட்சியில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் தாக்கப்படவில்லையென்பதுடன் தடுக்கப்படவுமில்லை.தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை ரணில் விக்கிரமசிங்க இடமளித்தார்.தற்போது பயமுறுத்தி அரசியல் செய்ய இந்த அரசு முயல்கின்றது. இதற்கு எதிராகவே நாம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
பொலிஸ் மா அதிபர் போன்று கோத்தபாயவும் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்!- ஐ.தே.க.
கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் முழுப்பொறுப்பேற்று, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபரைப் போன்று பாதுகாப்புச் செயலரும் பதவி விலக வேண்டும் என்றார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்துக்கு முன்பாக அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் அங்கிருந்த பொலிஸ் அதிகாரியின் தொப்பியைக் கழற்றி அவமானப்படுத்தியபோதும் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தாத பொலிஸார், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? இதன் பின்புலம் என்ன?
அந்த அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் உட்பட பொலிஸ் முகமூடி அணிந்த பலரும் அங்கு நடமாடினர் என்று தகவல் வெளிவந்துள்ளது. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது அவ்வாறு தாக்குதல் நடத்திய இனந்தெரியாத கும்பல் யார்? என்றார்.கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொஷான் சானக்க பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான சம்பவத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மருதானைச் சந்தியில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளோம்.
உபுல் தரங்கவுக்கு ஊக்கமருந்தை வழங்கிய வைத்தியர், ஜனாதிபதிக்கு மிகவும் நெருங்கியவர்?
இலங்கையின் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க, உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவருக்கு ஊக்கமருந்தை வழங்கிய வைத்தியர் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன 
எலியந்த வைட் என்ற இந்த வைத்தியர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருங்கிய வைத்தியராவார். இந்தநிலையில் அவரே, உபுல் தரங்கவுக்கு ஊக்கமருந்தை வழங்கினார் என்ற குற்றச்சாடடுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் இதனை இலங்கையின் ஜனாதிபதி தரப்பு மறைக்க முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


எலியந்த வைட் என்ற இந்த வைத்தியர், இந்திய கிரிக்கட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், அசீஸ் நெய்ரா, கௌதம் கம்பீர், மற்றும் இலங்கையின் லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் செப்பல் ஆகியோருக்கும் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மருத்துவம் செய்துள்ளார்.இதேவேளை உபுல் தரங்க ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான வைத்திய கலாநிதி கீதாஞ்சன மெண்டில், குறித்த எலியந்த வைட் என்ற வைத்தியரின் தகமைகள் குறித்து தமக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க, இது தொடர்பில் கூறுகையில் உபுல் தரங்க தாமாகவே குறித்த ஊக்க மருந்தை பயன்படுத்தியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.எலியந்த வைட் என்ற வைத்தியரிடம் உப்புல் தரங்க மருத்;துவம் செய்தமையை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமமேயும் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இது தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உலக கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி முடிவடைந்ததன் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, வைத்தியர் எலியந்த வைட்டுக்கு விசேடமாக நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு தனியாக வைததிய ஆலோசகர்கள் இருக்ம் போது ஏன்? குமார் சங்கக்கார அந்த வைத்தியருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதேவேளை இந்த எலியந்த வைட் என்ற வைத்தியரை நாடவேண்டுமானால் இலங்கையின் ஜனாதிபதியின் செயலகத்துடன் தொடர்புகொள்ளவேண்டும் என்று வைத்தியர் வைட்டின் சொந்த புளொக்ஸ்பொட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே அவருடைய சொந்த புளொக்ஸ்பொட் முகவரி (http://dr-eliyantha-white.blogspot.com/)
இலங்கையின் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்ள இந்த புளொக்ஸ்பொட்டில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் உபுல் தரங்கவின் பிரச்சினை வெளியானதன் பின்னர் அந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிகளும் புளொக்ஸ்பொட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட அரவிந்த மற்றும் சனத் ஜெயசூரிய : ஹசான் திலகரட்ன தகவல்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்தக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியுடனான இச் சந்திப்பை உடுவே தம்மாலோக தேரர், ஏற்பாடு செய்திருந்தார்.எனினும் தம்மீது சுமத்தப்பட்ட இந்தக்குற்றச்சாட்டை அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
போர் காலத்தில் காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்தவர்களுக்கு சலுகை!- நீதியமைச்சர்.
போர் இடம்பெற்ற காலத்தில் அச்சம் காரணமாக காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாக வடக்கின் காணிகள் மிகவும் சொற்ப விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.புலிகளின் அழுத்தம் காரணமாக சில பிரதேசங்களில் ஒரு ஏக்கர் காணி பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்தபோது அக்காணிகளை வாங்கியவர்களிடமிருந்து மீளவும் பெற்றுக் கொண்டு உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் காணி உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தாவின் இணையத்தளத்தை களவாடிய உளவுப் பிரிவு.
வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த முழு விவரங்கள் அடங்கிய அல்கொய்தாவின் இணையத்தளத்தை ஹேக் செய்தது இங்கிலாந்தின் உளவுப் பிரிவினரான எம்ஐ6.தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது ஆரம்பித்து, வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், பற்றரிகள், வயர்கள் விவரம், வெடிகுண்டுகளை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள் ஆகிய விவரங்களுடன் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த இணையத்தளத்தை 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யவும் அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. இது குறித்து விவரம் அறிந்த இங்கிலாந்து உளவுப் பிரிவான எம்ஐ6, இதை ஹேக் செய்தது. பின்னர் அதில் வெடிகுண்டுகளுக்குப் பதில் கேக் செய்வது குறித்த சமையல் குறிப்புகள் அடங்கிய கோப்புக்களை பதிவேற்றம் செய்து கடவுச்சொல்லையும் மாற்றிவிட்டது.
மேலும் இதில் சில கோட்களையும் எம்ஐ6 சேர்த்தது. அதை வைத்து இந்த இணையத்தளம் யாரால் எப்போது தொடர்பு கொள்ளப்படுகிறது, அதில் தீவிரவாதத்துக்கு உதவியான விவரங்களை சேர்ப்பவர்கள் யார் யார் என்ற விவரங்களை அறிந்து அவர்களை அமெரிக்க, இங்கிலாந்து உளவுப் பிரிவினர் கண்காணிக்கவும் ஆரம்பித்தனர்.அதன்மூலம் இந்த 67 பக்க வெடிகுண்டு இணையத்தளத்தை உருவாக்கியது வளைகுடாவைச் சேர்ந்த அன்வர் அல் அவ்லாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.

138 பயணிகளுடன் எஞ்சின் கோளாறு காரணமாக மொன்றியலில் தரையிறக்கப்பட்ட ஏயர்கனடா விமானம்!

கனடாவின் ஹெலிபெக்ஸில் இருந்து 138 பயணிகளுடன் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்கனடா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக மொன்றியல் நோக்கித் திசை திருப்பப்பட்டது. நள்ளிரவு வேளையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்தில் அதன் இடது பக்க என்ஜினில் பாரிய ஓசையுடன் கூடிய கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானிகள் விமானத்தை தொடர்ந்து செலுத்தாமல் அருகில் உள்ள ஒரு விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தனர். 

ஆனால் புறப்பட்ட இடமான ஹெலிபெக்ஸில் அப்போது கடும் இடி மின்னல் ஏற்பட்டிருந்ததால், அங்கு திரும்பிச் செல்ல முடியாமல் மொன்றியலுக்குத் திசை திருப்ப முடிவு செய்யப்பட்டது. விமானம் மொன்றியலில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் இதனால் சற்று குழப்பமடைந்தனர். ஆனால் விமானிகளும், விமான ஊழியர்களும் இவ்வாறான நிலைமைகளைக் கையாள போதிய பயிற்சி உடையவர்கள். 

எனவே அவர்கள் மத்தியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விமான சேவை அதிகாரி ஒருவர் கூறினார். விமானம் தற்போது முழு அளவிலான பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வேறு ஒரு விமானத்தில் பயணத்தைத் தொடரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா: பயங்கரவாதி இலியாஸ் கொலை.
அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவரும், மும்பை தாக்குதலில் தொடர்புடையவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா அவ்வப்போது குற்றம் சுமத்தி வந்தாலும், பாகிஸ்தான் அதனை மறுத்து வந்திருக்கிறது. இது போல கடந்த மாதம் ஒசாமா அமெரிக்க படையினரால் வேட்டையாடப்பட்டார். இந்நிலையில் மேலும் ஒரு முக்கிய பயங்கரவாதியை அமெரிக்கா கொன்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அல்கொய்தாவின் ஒரு அங்கமான ஹர்கத் உல் ஜிஹாதி இயக்கத்தின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி. பாகிஸ்தானின் தெற்கு வாசரிஸ்தானின் பழங்குடியின பகுதியில் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இல்யாஸ் காஷ்மீரியுடன் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இலியாஸ் காஷ்மீரியும் அவரது கூட்டாளிகளும் இருந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். இன்று காலையில் தெற்கு வாஜரிஸ்தானின் வானா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை பாகிஸ்தான் அரசு உயர் அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார். இருப்பினும் அவர் இலியாஸ் காஷ்மீரி குறித்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை.
இலியாஸ் காஷ்மீரி மும்பை தாக்குதலில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒசாமாவிற்கு பின்னர் இலியாஸ் தலைமை பொறுப்புக்கு வரக்கூடும் என்று கூறப்பட்டது. ஆப்கன், காஷ்மீர், பாகிஸ்தான் என பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு இவர் தொடர்புடையவனாக தேடப்பட்டு வந்தார். இவரது தலைக்கு பல கோடி ரிவார்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் அமெரிக்கா 5 பயங்கரவாதிகள் பெயர்‌கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் நேட்டோ படைகள் தேடி வரும் அந்த 5 பயங்கரவாதிகளையும் பிடிக்க பாகிஸ்தான் உதவ வேண்டும் என்றும், இவர்கள் குறித்த விவரத்தை தருமாறும் கோரியிருந்தது. அந்தப்பட்டியலில் இலியாஸ் காஷ்மீரி, ஜவாஹிரி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இலியாஸ் கொல்லப்பட்டாரா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு இது தொடர்பாக இதுவரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியுள்ளார். இலியாஸ் கடந்த 2009 செப் 7ம் திகதி கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
மதுபானத்தில் நச்சுப்பொருட்கள் கலந்ததால் உல்லாசப் பயணிகள் உயிரிழப்பு.
துருக்கிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த 3 ரஷ்யப் பிரஜைகள் அங்கு நச்சுத்தன்மை கொண்ட மதுபானத்தை அருந்தியதால் உயிரிழந்துள்ளனர்.துருக்கியின் முக்கிய சுற்றுலா மையமான பொட்ரம் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் பொட்ரம் நகருக்குச் சென்றிருந்த வேளையில் அங்கு படகுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது நச்சுத்தன்மையான மதுபானத்தை அருந்தியுள்ளனர்.
அவர்களில் இருவர் குறித்த பகுதியில் உயிரிழந்த அதேவேளை ஒருவர் ரஷ்யாவுக்கு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும் நஞ்சடைந்த மதுபானத்தை அருந்திய 20 ரஷ்யர்கள் மற்றும் ஒரு துருக்கி நாட்டவர் ஆகியோர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களில் ஒரு பெண் சுயநினைவற்ற நிலையில் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக துருக்கிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் குறித்த பயணிகள் பயணித்த படகிலிருந்த மதுபானம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இச்சம்பவத்தினை தொடர்ந்து ரஷ்ய வழக்கறிஞர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துருக்கிக்கு 60ற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களில் 20 இற்கும் மேற்பட்டோர் இரவு நேரத்தின் போது படகொன்றில் பயணம் செய்ததுடன் அவர்களுக்கு பிடித்தமான உணவுகள், விஸ்கி, கோலாபானம் என்பவற்றை அருந்தியுள்ளனர்.அதன் பின்னர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த மதுபானத்தில்(விஸ்கி)நச்சுத்தன்மை மிக்க மெதனோல் கலந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ரஷ்ய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சிரியாவில் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 35 அப்பாவி மக்கள் பலி.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். அவர்கள் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கண்டன பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 35 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் பிரிவு தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தற்போது கலவரம் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தம்மை குற்றம் சாட்டியதற்காக நஷ்டஈடு தர வேண்டும்: ஸ்பெயின்.
சர்சைக்குரிய இ.கோலி வெள்ளரிகாய் தொடர்பில் தம்மை குற்றஞ்சாட்டியதால் ஏற்பட்ட பொருளதார நஷ்டம் தொடர்பில் நஷ்ட ஈடு கோரவுள்ளதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.ஜேர்மனியிலும், இதர ஐரோப்பிய நாடுகளிலும் இ.கோலி எனும் நுண்கிருமி பரவுவதற்கு ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காய்கள் தான் காரணம் என்று முன்பு ஜேர்மனி அறிவித்ததால் ஸ்பெயினில் வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விற்பனை வெகுவாகக் குறைந்தது.
மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதும் நிறுத்தப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஸ்பெயினிலிருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளன.இந்நிலையில் அந்த நுண்கிருமி ஸ்பானிய வெள்ளரிக்காய் மூலமாகப் பரவவில்லை என்றும் சோதனைகள் மூலம் இது தெரியவந்திருப்பதாகவும் ஜேர்மனிய ஆய்வாளர்கள் இப்போது தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஸ்பெயினுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் இன்னும் நீங்கவில்லை. காய்கறிகள் விற்பனை சரிந்திருப்பதாக ஸ்பானிய விவசாயிகள் கூறுகின்றனர். ஸ்பெயின் நாட்டின் பொருளியல் பாதிக்கப்பட்டதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஸ்பானிய பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸ் ஜபாட்ரியோ கேட்டுக் கொண்டார்.
ஜேர்மனியின் முந்திய அறிவிப்பால் ஸ்பெயினில் விளைந்த காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது. எனவே எங்கள் இழப்புக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியுள்ளது.பக்டீரியா தாக்கம் காரணமாக ஜேர்மனியில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450க்கும் மேற்பட்டவர்களின் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது.
1500 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 ஐரோப்பிய நாடுகளில் இ.கோலி பக்டீரியா பரவியுள்ளது. இந்த புதுவகையான பாதிப்புக்கு சரியான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.இது குறித்து உலக சுகாதார இயக்கத்தின் உணவு பாதுகாப்பு நிபுணர் ஹில்டே குருசே கூறுகையில்,"இ.கோலி பக்டீரியா பல குணாதிசயங்களை கொண்டதாகவும், நச்சு ஜீன்களுடனும் இருக்கிறது. இதுபோன்ற பாதிப்பு இதற்கு முன் ஏற்பட்டதில்லை" என்றார்.
துனிஷியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 200 பேர் பலி.
உள்நாட்டு கிளர்ச்சி, மேற்கத்திய கூட்டுப்படைகள் தாக்குதல் என போர்க்களமாக காட்சியளிக்கும் லிபியாவில் இருந்து பெரும்பாலோனோர் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புக புலம்பெயர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் லிபியாவில் இருந்து சுமார் 800 பயணிகளுடன் இத்தாலி நோக்கி புறப்பட்ட படகு ஒன்று துனிசியா அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 200 பேரது கதி என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இருப்பினும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. படகில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் மேற்கு ஆப்ரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிகிற.
ஜப்பானில் பிரதமருக்கு தொடரும் நெருக்கடி.
ஜப்பானை உலுக்கிய நிடுநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்த பின் பதவியை விட்டு விலகுவேன் என்று ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் கூறியதன் பின் விளைவுகளை அவர் எதிர்நோக்குகிறார்.பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து ஜப்பான் எப்போது மீள்வது, அதுவரை அவர் பதவியில் நீடிப்பாரா என்று செய்தியாளர்கள் கூட்டத்தின் போது பலர் அவரிடம் வினவினர்.அதற்குப் பின்னரே அடுத்த ஆண்டு வரையில் பிரதமர் பதவியில் நீடிக்க விரும்புவதாக நவோட்டா கான் கூறினார்.
பிரதமர் நவோட்டோ கானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வியாழக்கிழமை தோல்வியடைந்தது.பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்த பிறகு பதவி விலக கான் முன்வந்ததைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதவராக வாக்களித்தனர்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகள் அடியோடு அழிந்தன. இங்குள்ள அணு மின் நிலையங்கள் சேதமடைந்து கதிர்வீச்சு வெளியானது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மீது எதிர்க்கட்சியினரும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் குறை கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் தலிபான்கள்.
அமெரிக்காவுடனான உறவை துண்டிக்காதவரை பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெஹ்ரிக் இ தலிபான் எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.பாகிஸ்தானின் அரசு கட்டடங்கள், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இக்குழுவினர் ஏற்கெனவே ஆப்கனிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போது தங்களது போர் உத்தியை மாற்றி பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கடற்படைத் தளம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களைப் போன்று பல தாக்குதல்களை மேற்கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தவிர எல்லைப் பகுதியில் குறிப்பாக திர் பிராந்திய எல்லையை ஒட்டிய பகுதியிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கைபர் பக்துன்வா பிராந்தியத்தில் தனித்தனியே தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுபோன்ற தாக்குதல்களும் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் உள்ளூர் செய்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மெளலானா குறிப்பிட்டுள்ளார்.டி.டி.பி எனும் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக கடந்த ஆண்டு இருந்த போது இவர் தலைமறைவானார். அரசு தரப்புடன் அப்போது இவர் தான் பேச்சு நடத்தினார். இந்த அமைப்புக்கு தலைமையேற்ற பிறகு இப்போது தான் முதல் முறையாக பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்துவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் மத்தியில் நம்பிக்கையும் மன உறுதியும் குறையும். இதன் மூலம் அரசுப் பணியின் மீது நம்பிக்கை இழப்பர். இது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் அரசை தங்களால் பணிய வைக்க முடியும் என்ற உத்தியில் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதன் முக்கிய நோக்கமே, அமெரிக்காவுடனான உறவை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று அவர் தெளிவுபடக் கூறினார். கடந்த மாதம் 22ம் திகதி பி.என்.எஸ் மெஹ்ரான் கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சக நாட்டு ராணுவ வீரர்களின் மீது தாக்குதல் நடத்துவதன் பின்னணி என்ன? இதில் இறப்பவர்களும் முஸ்லிம் வீரர்கள் தானே? என்று கேட்டதற்கு, முதலில் ராணுவ வீரர்கள் தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதாகவும் மெளலானா குறிப்பிட்டார். முதலில் தங்களது இலக்கு ஆப்கனில் சண்டையிடுவதாக இருந்தது என்றும் இப்போது பாகிஸ்தான் பக்கம் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தாக்குதலில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் தாமாக முன்வந்து அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதாகவும் இதனால் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால், இதுவரையில் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தாத பயங்கரவாத குழுக்களும் இனி தாக்குதல் நடத்தும்.ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ள குனார் மற்றும் நெளரிஸ்தான் பகுதியில் அமெரிக்க படைகள் மற்றும் வெளிநாட்டுப் படைகளின் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் தான் பயங்கரவாத குழுக்கள் செயல்படுவதாக மெளலானா தெரிவித்தார்.
இந்த பகுதிகளை பயங்கரவாத குழுக்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவித்த அவர் ஆப்கன் அரசு பாகிஸ்தான் தலிபான்களை ஆதரிப்பதாக தவறாக பிரசாரம் செய்யப்படுவதாகவும் கூறினார்.டி.டி.பி மற்றும் அல்கொய்தா அமைப்புகள் வெவ்வேறானவை. சில சமயங்களில் இரண்டு குழுக்களின் குறிக்கோள் ஒன்றாக அமையலாம். பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் டி.டி.பி.யும் அதன் துணை அமைப்புகளும் மேற்கொள்வதாக மெளலானா கூறினார்.
முன்னர் டி.டி.பி அமைப்புக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. ஆனால் இப்போது அல்கொய்தா அமைப்பினரும் டி.டி.பி.யுடன் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது.இந்தியாவை முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரிகின்றனர். எனவே இந்தியாவிலிருந்து தங்கள் அமைப்புக்கு நிதி உதவி வருகிறது என்பது தவறான தகவல் என்று குறிப்பிட்ட மெளலானா இந்தியாவை எதிரி நாடாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
உலகையே அச்சுறுத்தும் இ.கோலி: ஐரோப்பாவில் மிகப் பெரும் அபாயம்.
உலகை அச்சுறுத்தி வரும் இ-கோலி பக்டீரியாவால் ஐரோப்பாவில் மிகப் பெரும் பிரச்னை கிளம்பியுள்ளது.இதுவரை 17 பேரை பலி வாங்கியுள்ள இந்த பக்டீரியாவால் உலக நாடுகளிடையே அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளின் சுத்தமின்மையால் இந்த பக்டீரியா உருவாகி தொற்று ஏற்பட்டுள்ளவரின் மலம் வெளியேறும் பாதை மற்றும் உணவுப்பாதை வழியே பரவுகிறது என கூறப்படுகிறது.
ஜேர்மனியில் தான் இதன் உதயம் ஆரம்பம் எனக் கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் 1624 பேர் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
பச்சை அல்லது கெட்டுப் போன காய்கறிகளைச் சாப்பிடுவதால் இது ஏற்படுவதாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாட்டு மக்களும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பக்டீரியா அதிக ஆபத்தில்லாதது எனக் கூறப்படுகிறது. ஆனால் இது உமிழும் எச்சம் குடலின் உட்பகுதியில் படிந்து விஷத்தைப் பரப்பி உடலை பாதிக்கிறது. இதை நீக்க இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை.
ஐரோப்பாவில் இந்நோய் பரவி இருப்பதையடுத்து ஸ்பெயின், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து பச்சைக் காய்கறிகளை குறிப்பாக வெள்ளரிக்காயை இறக்குமதி செய்ய ரஷ்யா தடை விதித்துள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வார்த்தை உச்சரிப்பு போட்டி: இந்திய மாணவி சாதனை.
அமெரிக்காவின் பென்சில் வேனியா பகுதியில் வசித்து வரும் சுகன்யா ராய் சிறந்த உச்சரிப்பிற்காக வழங்கப்படும் ஸ்பெல்லிங் பீ ராணி பட்டத்தை வென்றுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த ஸ்பெல்லிங் பீ இணைய தளம் 8 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு வார்த்தை உச்சரிப்பு குறித்த போட்டியை நடத்துகிறது.
போட்டியின் முடிவில் ஸ்பெல்லிங் பீ கிரவுன் என்ற பட்டத்தை வழங்குகிறது. இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் பென்சில் வேனியா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாவது கிரேடு படித்து வரும் 14 வயதாகும் சுகன்யா ராய் என்பவர் ஸ்பெல்லிங் பீ கிரவுன் போட்டியில் பங்கு பெறுவது மூன்றாவது முறையாகும்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட சுகன்யாரய் 12வது இடத்திலும், 2010ம் ஆண்டு 20வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரைப்போலவே கடந்தாண்டுகளில் ஸ்ரீராம்ஹத்வார், அரவிந்த் மகான்காளி, பிரகாஷ் மிஸ்ரா, மஸ்ஹாத் அரோரா, திவ்யா செந்தில் முருகன் ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்குபெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனாமிகா வீரமணி என்பவர் ஹாட்ரிக் சாதனை படைத்து ராணி பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் புதிய ஜனநாயகம் அமைய வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்.
மியான்மர் நாட்டில் ஜனநாயகம் தழைக்க இந்தியாவும், சீனாவும் உதவ வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.மியான்மரில் நீண்ட நாட்களாக ராணுவ ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகியை ஆட்சியில் அமரவிடாமல் வீட்டு சிறையில் அடைத்தது. அந்நாட்டு ஜுண்டா அரசு சமீபத்தில் நடந்த தேர்தலில் அவரை தேர்தலில் போட்டியிடாமல் செய்தது.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜோ யுன் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கூறியதாவது: மியான்மர் நாட்டில் பேச்சு சுதந்திரம் கூட மறுக்கப்படுகிறது.
அந்நாட்டு அதிபராக இருந்த தான் ஷ்வி ஆட்சியின் போது ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி பல ஆண்டு காலம் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.புதிய அதிபரின் ஆட்சியில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. இருப்பினும் அந்நாட்டில் ஜனநாயகம் தழைக்க அண்டை நாடுகளான இந்தியாவும், சீனாவும் உதவ வேண்டும்.
ரஷ்ய ஆயுதக்கிடங்கில் பயங்கர தீ விபத்து: 28 ஆயிரம் பேர் வெளியேற்றம்.
ரஷிய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் 28 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.ரஷியாவில் உள்ள வோல்கா குடியரசில் உள்ள சுரங்கப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் டன் வெடிகுண்டுகள் உள்ளன.
இதனால் ஏற்பட்ட பயங்கர தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியைச் சுற்றி வாழும் 28 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.ஒரு வாரத்தில் ரஷியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்படும் இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 160 வீடுகள் சேதமடைந்தன.
இப்போது வோல்கா குடியரசில் உள்ள சுரங்க ஆயுதக் கிடங்கில் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு வெடிகுண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் வாழும் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இப்போது மேலும் 18 ஆயிரம் பேர் மாற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் கிடங்கில் உள்ள 18 பாதுகாப்பு அறைகள் வெடித்துச் சிதறின. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 200 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் மற்றும் லாரிகள் மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரஷியாவிலிருந்து தண்ணீர் ஏற்றிச் சென்று தீயை அணைக்கும் பணியில் 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF