வெளிநாட்டு மாணவர்களைப் பல்கலைக்கழங்களில் அனுமதிப்பதற்கு ஐ.தே.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பின்லேடன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்: தலிபான்கள் எச்சரிக்கை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.பணத்திற்காக பட்டப்படிப்பை விற்பனை செய்யும் முதல் கட்டமாக இந்த நடவடிக்கையை கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இதன் மூலம் உள்நாட்டு மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கான சந்தர்ப்பம் வரையறுக்கப்படும். கட்டண அடிப்படையில் ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 150,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதாகவும் இதில் 50000 முதல் 60000 வரையிலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதில் 22000 முதல் 25000 வரையிலான மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.இவ்வாறு ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதன் மூலம் ஐந்து வீதமான உள்நாட்டு மாணவர்களின் சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் அதிகாரப் பரவலாக்கல் வழங்கப்படாவிட்டால் அதற்குப் பின் வாய்ப்பொன்று கிடைக்காது: இந்திய கட்டுரையாளர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்துக்குள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதான ஒர் அரசியல் தீர்வினை வழங்காது போனால் அதன் பின் அவ்வாறானதொரு வாய்ப்புக்கிடைக்காதென இந்தியக் கட்டுரையாளரொருவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசியல் நிலமைகள் பற்றிய இந்திய ஆய்வாளரான என்.சத்தியமூர்த்தி ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்கத் தவறினாலோ, வழங்க விருப்பமின்றித் தட்டிக்கழித்தாலோ அந்தத் திசையில் எவருமே முன் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது. கோட்பாட்டு ரீதியில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று பிரிவுகளை எடுத்துக் கொண்டாலும் இது பொருந்தும். அவர்களில் ஒருவர் ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி பதவியில் இருந்தாலும் அதே நிலைதான்.ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியான ஐ.தே.க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக தமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வேறெந்த தமிழ்ப் பிரதிநிதித்துவ கட்சிகளின் மீதும் இல்லாத வகையில் நம்பிக்கை வைத்திருக்கின்றன.
இன்றைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை ஒர் அதிகாரப் பகிர்வுப் பொதி குறித்து திருப்தி கொள்ளச்செய்ய முடியாமல் போகுமானால் எதிர்வு கூறக் கூடிய காலத்தில் அவர்களை எவராலும் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளும்படியாக நிர்ப்பந்திப்பது சாத்தியமாக மாட்டாது. இவ்வாறான ஒரு ஸ்தம்பித உறவு நிலையானது இரண்டு சமூகங்களுக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்குமே ஏன் அதுக்கு மேலும் கூட அழிவைத் தருவதாகவே முடியும்.எனவே இரு சமூகங்களும் ஒன்றை ஒன்று நம்புவதற்கு ஆரம்பிப்பது அவசியமாகின்றது. மற்றத்தரப்பினரும் மிக நெருக்குதலான அரசியல் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதுவும் அவர்களின் அரசியல் பெருமையில் மூழ்கியுள்ள பிரிவினரிடம் இருந்து என்பதை உணரவேண்டும்.
அரசும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தாங்கள் மரபுரீதியில் பெற்றுக்கொண்டுள்ள குணாம்சங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ஒரே இரவில் மறைந்து விடமாட்டாது.அரசு சதிபுரிகிறது என்று கூறாவிட்டாலும் நேர்மை இல்லாது நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டுகின்ற அதேநேரம் சிங்கள அரசியல்துறையும், சமூகமும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நேர்மை மற்றும் ஆழ்ந்த மனோநிலைகளை மேல்மட்டத்தில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் ஆதரவாளர்களும் உணரவேண்டும். இதுவும் கூட இரட்டை வழிப்பாதையாக இருத்தல் வேண்டும்.
ஈழப்போர்4 மூலமாக இராணுவம் தமிழ் மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்துவிட்டது. அதனால் அவர்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற பிரசாரத்தில் அரசாங்கமும் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்க முடியாது.களநிலைமைகள் சிக்கலாகவும் குழப்பகரமாகவும் காணப்படுகின்றன. அப்படியான கருத்துகளை முன் வைத்து அதில் தொடர்ந்து தங்கி இருக்க முடியாது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உடல் ரீதியானவை மட்டுமல்ல உளரீதியானவையே அதிகம். அதில் அரசியலும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவர்களை வென்றெடுக்க போதுமான அளவில் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு அக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தீர்வு குறித்து இந்தியாவிடம் இருந்து நெருக்கடி எதுவுமில்லை: ஊடகவியலாளர்களிடம் மஹிந்த.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து எவ்வித நெருக்குதலும் தமக்கு இல்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.இதுகுறித்து பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் இன்று அவர் கூறுகையில்,தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு இந்தியா மூலம் எனக்கு எந்த நெருக்குதலும் ஏற்படுத்தப்படவில்லை. 13-வது திருத்தம் தொடர்பாகவோ அல்லது 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடம் இருந்து எந்த நெருக்குதலும் இல்லை.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் இலங்கைப் பயணம், வழக்கமான இருதரப்பு விவகாரங்கள் தொடர்புடையதே.இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யோசனை முன்வைத்ததை என்னிடம் சிவ்சங்கர் மேனன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது காலம் கடத்தும் தந்திரமல்ல. எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் எந்தத் தீர்வையும் நான் அங்கீகரிப்பேன் என்றார் ராஜபக்ஷ.பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் உடனிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ. எல்.பீரீஸ், ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் அரசு மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கவில்லை என்றார்.
நாடாளுமன்றத்தின் ஊடாக முன்மொழியப்படும் தீர்வுக்கு ஆதரவு வழங்கத் தயார்: ஜனாதிபதி மஹிந்த.
நாடாளுமன்றத்தினால் முன்மொழியப்படும் அரசியல் தீர்வை வழங்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்இன்று காலை அலரி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரஸ்தாப சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அடுத்த வருடம் கட்டாயமாக வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என கூறினார்.அதேவேளை பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய காவற்துறை மா அதிபர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரது பெயர் நாளை(29) அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள பொலிஸ் மா அதிபரின் பெயர் குறித்து ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி வாயே திறக்கவில்லை.அதே நேரம் தற்போதைய பதில் பொலிஸ் அதிபர் இலங்கக்கோனுக்குப் பதிலாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் விக்கிரமசிங்கவை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்தே ஜனாதிபதி அதிக விருப்புக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிசானா நபீக்கை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொஹங்காகே ரிசானா நபீக்கை விடுதலை செய்ய அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.இதேவேளை ரிசானா நபீக்கை விடுதலை செய்யும் வகையில் சவூதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசானா நபீக்கிற்கு தண்டனை வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று நேற்று வெளியானதை அடு;த்தே அவர் தொடர்பான முனைப்புகளை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மேற்கொண்டுள்ளன.
பிக்குகளின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் மீண்டும் வடக்கில் பழைய நிலை ஏற்படலாம் - மல்வத்து பீடாதிபதி.
பௌத்த பிக்குகளின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டால் வடக்கில் மீண்டும் பழைய நிலைமை ஏற்படக் கூடும் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் இராதாகிருஸ்ணன், மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க அதிகாரிகள் பௌத்த பிக்குகளின் அறிவுரைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் இராதாகிருஸ்ணனிடம் கோரியுள்ளார்.இதேவேளை, மலையகத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் என்றாவது ஒருநாள் பிரச்சினை வெடிக்கக் கூடும் என இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் அறிமுகம்.
இலங்கையில் கணனி மற்றும் சைபர் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.கணனி குற்றச் செயல்களை தடுப்பதற்காக புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு விடயத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் நாட்டு மக்கள் திறமையானவர்கள்.அதன் காரணமாகவே கணனி பாவனை சட்டம் திருத்தி அமைக்கப்பட உள்ளது. .
2007ம் ஆண்டு 24ம் இலக்க கணனி குற்றச் செயல் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடு தழுவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விநியோகம் செய்வதற்கு எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு கணனிகள் வழங்கப்பட்டன.சட்டவிரோத செயற்பாடுகளுக்காக இந்த கணனிகள் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
2007ம் ஆண்டு 24ம் இலக்க கணனி குற்றச் செயல் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடு தழுவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விநியோகம் செய்வதற்கு எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு கணனிகள் வழங்கப்பட்டன.சட்டவிரோத செயற்பாடுகளுக்காக இந்த கணனிகள் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப்புலிகளி்ன் கோரிக்கைகள் நிறைவேறும் சூழல் கனிந்து வருகின்றது: கலாநிதி குணதாச அமரசேகர.
விடுதலைப்புலிகளி்ன் கோரிக்கைகள் நிறைவேறும் சூழல் இலங்கைக்குள் கனிந்து வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.தேசியப் பிரச்சினைக்கு தீர்வெனக் கூறி நாட்டை துண்டாடும் சதியில் உள்ளூர் அரசியல் கட்சிகள் பலவும் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பி. யும் அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றன. அரசாங்கம் கடந்த பல மாதங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தது.
அவை அனைத்திலுமே அதிகாரப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகளையே சம்பந்தன் குழுவினர் முன்வைத்தனர். இதே போன்றுதான் ஈ.பி.டிபி.யின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தெரிவுக்குழு அமைக்குமாறு கோரி வருகின்றார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பி.யும் அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் சுயநிர்ணய ஆட்சியை அமைத்துக்கொள்ள சூழ்ச்சிசெய்கின்றன. இதற்கு இந்தியாவின் அழுத்தம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தேவைகள் இன்று இலங்கையில் நிறைவேறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதிகாரப் பகிர்வு முழு அளவில் நடைறைப்படுத்தப்படுமேயானால் வடக்கு மற்றும் கிழக்கில் சுய நிர்ணய ஆட்சி உருவாவதை தடுக்க முடியாது.எனவே கூட்டமைப்புடனான சந்திப்புகளின் தீர்மானத்தை நாளை அரசு வெளியிட்டவுடன் தாய் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்க வேண்டும் - சரத் பொன்சேகா.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாட்டின் ஏனையவர்களை ஏமாற்றியதனைப் போன்றே இந்த அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் ஏமாற்றியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றிற்கு சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, வழக்கு விசாரணை மேற்கொள்ளும் நீதவான் ஒருவர் சுகவீனமுற்றிருப்பதனால் வழக்கு எதிர்வரும் 5ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு.
மனிதக் கடத்தல்களை இல்லாமல் ஒழிப்பதில் இலங்கை முக்கியமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது என அமெரிக்கா பாராட்டி உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உலகின் மனிதக் கடத்தல்கள் நிலைவரம் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இலங்கையைப் பாராட்டி உள்ளார். மனிதக் கடத்தல்களை இல்லாமல் செய்கின்ற விடயத்தில் இலங்கை உரிய தகைமைகளை பெற்றிருக்காவிட்டாலும்கூட அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது என சுட்டிக் காட்டினார்.
எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் சதுக்கத்தில் புதிய மோதல்கள் வெடித்து உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் பொலிசார் இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றன.போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினார்கள். அப்போது பலர் பொலிசார் மீது கற்களை வீசினார்கள். தாகிர் சதுக்கம் கடந்த பெப்பிரவரி மாதம் துவங்கிய புரட்சி போராட்டத்திற்கு முக்கிய களம் ஆகும்.இந்த போராட்ட களம் தான் எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவி விலக காரணமாக அமைந்தது. முன்னாள் அதிபரின் அதிகாரிகள் மீதான விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.இன்று காலை தாகிர் சதுக்க பகுதியின் வீதிகளில் கற்கள் உடைந்த கண்ணாடிகள், குப்பைகள் இறைந்து கிடந்தன. பல வாரங்கள் நடைபெற்ற மோதல்களில் இந்த மோதல் மிகவும் மோசமானது என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.போராட்டத்தின் போது உயிர் துறந்த நபரின் குடும்பத்தினர் அரசு தொலைக்காட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை பொலிசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்த போது செவ்வாய்க்கிழமை மோதல் தீவிரமானது.
மோதல் தீவிரமானதை தொடர்ந்து பொலிசார் தற்காப்பு கேடயத்துடன் எதிர்பாளர்களை விரட்டினர். இந்த மாத துவக்கத்தில் எகிப்தின் முன்னாள் வர்த்தக துறை அமைச்சர் ராசிட் முகமதுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி முபாரக் ராணுவ மருத்துவமனையில் காவலில் உள்ளார். அவர் மீதான விசாரணை ஆகஸ்ட் 3ஆம் திகதி நடைபெறுகிறது. அவரது மகன்கள் அலா மற்றம் கமால் மீதும் விசாரணை நடைபெறுகிறது.பெப்பிரவரி மாத போராட்டத்தில் போராடக்காரர்கள் மரணம் தொடர்பாக முபாரக் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் அவசியம்: அவுஸ்திரேலிய அதிகாரி.
பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று அவுஸ்திரேலியப் பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் துணைக் கொமிஷனர் கார்ல் ஓ கல்லகன் கூறுகையில்,"பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை" என்றார்.
இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி பொலிசாரால் சோதனை செய்ய முடியாததால் ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்ய முடியாது.ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டனில் பெற்றோர்களால் குழந்தைகள் கடத்தப்படும் அவலம்.
பிரிட்டன் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களால் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.இக்குழந்தைகள் உலக குழந்தைகள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். 2010-11ஆம் ஆண்டு கால கட்டத்தில் 161 பிரிட்டன் குழந்தைகள் குடும்ப பிரச்சனை காரணமாக பெற்றோரால் கடத்தப்பட்டு உள்ளனர்.முந்தய ஆண்டு இந்த குழந்தை கடத்தல் எண்ணிக்கை 146ஆக இருந்தது. அந்த நாடுகளில் இருந்து குழந்தைகளை மீண்டும் கொண்டு வருவதற்கு பிரிட்டன் அரசு போராட வேண்டி உள்ளது. குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து பிரிட்டன் அரசு உரிய ஆலோசனை வழங்கி உள்ளது.
பெரும்பாலான குழந்தைதகளை கடத்துவது பள்ளி நாட்களிலேயே நடைபெறுகிறது. தங்களது குழந்தையை அழைத்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லும் வாழ்க்கை துணை நபர் மீண்டும் குழந்தையை பிரிட்டன் கொண்டு வர மறுப்பது அதிகரித்து உள்ளது.பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பிரிட்டன் குழந்தைகள் கடத்திச் செல்லப்படும் பொதுவான பகுதிகளாக உள்ளன. கடந்த ஆண்டு 97 நாடுகள் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தொடர்பான 1980ம் ஆண்டு ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் குழந்தைகள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஜெர்மி பிரவ்னி தெரிவித்தார்.கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2011ம் ஆண்டு இடையே பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 24ல் இருந்து 21ஆக குறைந்தது. அதேபோன்று இந்தியாவுக்கு கடத்தப்படுவது 14ல் இருந்து 9ஆக குறைந்தது.ஆனால் அல்ஜீரியாவுக்கு பூஜ்ய நிலையில் இருந்து 9ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் 105 குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளன.
யூரோ நாணயத்தை கைவிடும் நோக்கில் ஜேர்மனி.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி யூரோ நாணயத்தை கைவிட்டு பழைய நாணயமான டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக யூரோ நாணயத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜேர்மனி நாட்டின் மத்திய வங்கியான பண்டெஸ் வங்கி "டச்மார்க்" சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து டச்மார்க் சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும் அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜேர்மன் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் டச்மார்க் நாணயம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டொலருக்குப் பிறகு உலகளவில் டச்மார்க் நாணயத்திற்கு நல்ல பெயர் இருந்தது. தற்போது அந்நாட்டு மக்கள் டச்மார்க் நாணயத்தின் தனித்துவத்தை இழக்காமல் மீண்டும் அதே நாணயம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விட்டு வந்தனர்.
மேலும் வர்த்தக ரீதியில் டொலருக்கு அடுத்ததாக நல்ல முதலீட்டை டச்மார்க் நாணயம் ஈர்த்து வந்தது. யூரோவைப் பெற்றிருக்கும் கிரீஸ் நாடு தற்போது திண்டாடுகிறது. இந்நிலையில் யூரோ நாணயத்தின் மதிப்பை சர்வதேச அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால் கிரீஸ் நாட்டை திவாலில் இருந்து ஐரோப்பிய நாடுகள் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால் யூரோ நாணயத்தின் மதிப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளதால் ஜேர்மன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் டச்மார்க் நாணயத்திற்கு மாற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இது தொடார்பாக ஜேர்மன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: யூரோ நாணயத்திற்கு எதிர்காலம் இல்லை என்று 71 சதவீதம் பேரும், அந்த நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று 19 சதவீதம் பேரும், கிரீஸ் நாட்டை காப்பாற்றும் ஐரோப்பிய நாடுகளின் எமர்ஜென்சி நடவடிக்கை வெற்றி அளிக்காது என்று 68 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.மற்றொரு ஆய்வில் யூரோ நாணயத்திலிருந்து கிரீஸ் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று ஜேர்மனி நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நிதியத்தின் தலைவராக கிறிஸ்டைன் லாகர்டே தேர்வு.
சர்வதேச நிதியத்தின் அடுத்த தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்டே(55) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம் இந்த அமைப்பின் முதலாவது பெண் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.
ஐ.எம்.எப் தலைவராக இருந்த ஸ்டிராஸ்கானின் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐ.எம்.எப் அமைப்பின் செயற்குழு வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை கூடியது.மெக்ஸிகோ மத்திய வங்கி ஆளுநர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், லாகர்டே ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது. எனினும் அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் லகார்டே தேர்வுசெய்யப்பட்டார்.
காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச ஹோட்டலை மனித வெடிகுண்டுகளும் துப்பாக்கி ஏந்திய நபர்களும் தாக்கினர். அவர்களை வீழ்த்துவதற்கு நேட்டோ ஹெலிகாப்டர்கள் அழைக்கப்பட்டன.இரண்டு ஹெலிகாப்டர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 3 தலிபான்கள் கொல்லப்பட்டனர். காபூல் சர்வதேச ஹோட்டலில் நேற்று இரவு தலிபான் தீவிரவாதிகளுக்கும் நேட்டோ படையினருக்கும் இடையே 5 மணி நேரம் மோதல் நடந்தது. இதில் தீவிரவாதிகள் அல்லாத இதர 7 பேரும் கொல்லப்பட்டனர்.தீவிரவாதிகள் தாக்கிய ஹோட்டல் மேற்கத்திய நாட்டவர்கள் தங்கும் பிரபலமான இடமாகும். தங்கள் அமைப்பினரே தாக்குதல் நடத்தியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இன்று அதிகாலை ஹோட்டலில் இருந்து தீப்புகை கடுமையாக வந்து கொண்டு இருந்தது.உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சித்திக் கூறுகையில்,"இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் கொல்லப்பட்ட பொது மக்களில் 7 பேரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்" என்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஹோட்டலின் அறைகளில் இரவு உணவு சாப்பிட்ட போது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. ஒரு மனித வெடிகுண்டு நபர் தனது உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் பீதியில் அலறி ஓடினர். ஹோட்டல் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஹோட்டல் மேல் தளப்பகுதிகளில் இருந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், ராக்கெட் உந்துதல் குண்டுகள், ஏ.கே.47 போன்ற அதி நவீன துப்பாக்கிகளை வைத்து இருந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.இதே போன்று 2008ம் ஆண்டு தலைநகர் செரினா ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தலிபான் இயக்கம் இரண்டாக பிளவுபட்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் தலிபான் இயக்கம் செயல்பட்டு வருகிறது.இங்கு செயல்படும் வீரர்கள் பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுவர். குர்ரம் மலைப்பகுதியில் பஸ்ஸல் சயீத் ஹக்கானி தலைமையில் செயல்படும் குழு தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது.
பள்ளிவாசல் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தற்கொலைப்படை தாக்குதலுக்கு இப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தெஹ்ரிக் இ தலிபான் என்ற பிரதான அமைப்பிலிருந்து பிரிந்து தெஹ்ரிக இ தலிபான் இஸ்லாமி என்ற பெயரில் செயல்பட இக்குழு முடிவு செய்துள்ளதாக ஜியோ தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஹக்கானி தெரிவித்ததாகவும், பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவது, அப்பாவி பொதுமக்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்துவது ஆகியவற்றில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.குர்ரம் பகுதியில் மட்டுமின்றி இதைச் சுற்றிய பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களிலும் பயங்கரவாதிகளுக்கு ஹக்கானி பயிற்சி அளித்து வந்தார். இங்கு பயிற்சி பெறுவோரில் பலர் கடத்தப்பட்டு கட்டாயமாக இந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களாவர்.
இவ்விதம் கடத்தப்பட்டவர்களை பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு பணம் வசூலிப்பது அல்லது அவர்களை கொன்று விடுவது இந்த இயக்கத்தின் வழக்கமான செயலாக இருந்தது.இந்த இயக்கத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் அரசு ஈடுபட்டு அதை செயல்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் இப்போது ஹக்கிமுல்லா மசூத் தலைமையில் செயல்படுகிறது. அணியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
கடாபிக்கு எதிரான கைது வாரண்டை ஏற்க முடியாது: லிபியா
லிபியா தலைவர் கடாபிக்கு எதிரான சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் கைது வாரன்ட்டை ஏற்க மாட்டோம் என்று அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முகம்மெத் அல் குவாமுதி தெரிவித்துள்ளார்.லிபியாவில் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது அந்நாட்டுத் தலைவர் கடாபி மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி சர்வதேச குற்றவியல் கோர்ட் நேற்று முன்தினம் கைது வாரன்ட் பிறப்பித்தது. கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை தலைமை அதிகாரிக்கும் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து திரிபோலியில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் முகம்மெத் அல் குவாமுதி அளித்த பேட்டியில் கூறியதாவது: மூன்றாம் தர நாடுகளின் தலைவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆயுதமாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.லிபியா அரசில் கடாபியோ, அவரது மகனோ எவ்வித பொறுப்பிலும் இல்லை. ஆதலால் அவர்கள் மீது சர்வதேச குற்றவியல் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும், அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பெங்காசியில் கடாபிக்கு எதிரான கைது வாரன்ட்டை கிளர்ச்சியாளர்கள் வரவேற்று கொண்டாடினர். சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் ஒன்பது ஆண்டு கால வரலாற்றில் 2009ல் முதன் முதலாக சூடான் அதிபர் ஓமர் அல் பஷீருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது இரண்டாவதாக கடாபிக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் பெண்களுக்கு மட்டுமான தனி திரையரங்கம்.
பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேட திரையரங்கம் ஒன்று கட்டாரின் டோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திரையரங்கிற்கான அனைத்து திரைப்படங்களும் கட்டார் சினிமா மற்றும் திரைப்பட விநியோக நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளன.ஒவ்வொரு வார இறுதியிலும் 3 படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் பெண்களுடன் சமூகமளிக்கும் சிறுவர்களை கருத்தில் கொண்டு மேலதிகமாக 1 படம் காண்பிக்கப்படவுள்ளது.குறித்த திரையரங்கில் 154 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திரையிடப்பட்டுள்ள படங்கள் குறித்த விபரம் 3 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படுமென அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இதன் டிக்கெட் விலைகள் டோஹாவில் உள்ள மற்றைய முக்கிய திரையரங்குகளின் வி.ஐ.பி டிக்கெட் விலையை ஒத்ததாக இருக்குமென்பதுடன் இடைவேளையின் போது சத்தான உணவு மற்றும் பானங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடாபிக்கு எதிராக கைது வாரன்ட்: சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்தது.
லிபியாவில் மக்களுக்கு எதிராக பயங்கர தாக்குதல் நடத்தி வரும் அந்நாட்டு தலைவர் கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக அந்நாட்டில் கடந்த பெப்பிரவரி மாதம் முதல் கிளர்ச்சி வெடித்துள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கும், கடாபி ஆதரவுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டையும் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரிடுகின்றன. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் டிரிபோலியில் கடாபியை குறிவைத்து அவரது வீட்டு அருகே நேட்டோ படைகள் கடந்த சில நாட்களாக பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் மற்றும் உளவுத்துறை தலைமை அதிகாரி அப்துல்லா அல் சனுஸ்சி ஆகிய மூவர் தான் அப்பாவி மக்கள் பலியாவதற்கு காரணம்.இவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் தலைமை வக்கீல் லூயிஸ் மொரீனோ ஒகேம்போ மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த வந்த நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட் நீதிபதி சாஞ்ஜி மோனாகெங் நேற்று அளித்த தீர்ப்பில்,"லிபியாவில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் பலியானதற்கும், கிரிமினல் குற்றங்களுக்கும் கடாபியும், அவரது மகனுமான சயீப் அல் இஸ்லாம் மற்றும் உளவுத்துறை தலைமை அதிகாரி அப்துல்லா அல் சனுஸ்சி மறைமுகமாக காரணமாகின்றனர். எனவே இவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன" என்றார்.சர்வதேச குற்றவியல் கோர்ட் எந்த நேரத்திலும் கைது வாரன்ட் பிறப்பிக்கலாம் என்ற நிலையில் நேற்று முன்தினம் லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் அளித்த பேட்டியில்,"நாங்கள் கைது வாரன்ட்டை அங்கீகரிக்க மாட்டோம். பயப்படவும் மாட்டோம். ஆப்ரிக்க நாட்டு தலைவர்கள் மீது கைது வாரன்ட் பிறப்பிப்பதை சர்வதேச குற்றவியல் கோர்ட் வேலையாக கொண்டுள்ளது" என்றார்.
காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு.
பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உதவி பொருட்களை வழங்குவதற்காக 10 கப்பல்களில் உணவு பொருட்கள் சென்றுள்ளன.இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசாவை நெருங்கும் கப்பல்களை தடுப்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது.
இருப்பினும் கப்பல்படை நிவாரணக் கப்பல்களுடன் கடுமையாக மோதாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. சர்வதேச நிவாரணக் கப்பல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் போது இஸ்ரேல் கடற்படையினருடன் பத்திரிக்கையாளர்களும் அனுப்பப்படுவார்கள்.ஏனெனில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிய வேண்டும் என பிரதமர் தெரிவித்து உள்ளார். இதன் படி 30 – 50 பத்திரிக்கையாளர்கள் சர்வதேச கப்பல்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு செல்கின்றனர்.
இஸ்ரேலிய ராணுவ பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"சர்வதேச நிவாரணக் கப்பல்களில் தீவிரவாத சக்திகள் இருப்பதாக எங்கள் ராணுவ உளவுத் துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்த தீவிரவாத சக்திகள் இஸ்ரேலிய வீரர்களை கொல்லத் துடிக்கின்றனர்" என்றார்.சர்வதேச கப்பல் ஒன்றில் இஸ்ரேலிய வீரர்களை தாக்குவதற்கு பயங்கர வெடி ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்றார்.
மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம்.
எகிப்தில் விரைவில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் மிக்கெய்ன் தெரிவித்துள்ளார்.தற்போது ஆட்சி செய்து வரும் ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கிற்கு ஆதரவானவர்கள், ஆதலால் விரைவில் அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் வரை தேர்தல் நடத்த தாமதம் செய்தால் இது இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவாகிவிடும் என்று மதச்சார்பற்ற மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் அந்நாட்டு பிரதமர் எசம் ஷரப் அரசு பத்திரிகையான அல் அரம்மிற்கு அளித்த பேட்டியில்,"செப்டம்பர் மாதத்திற்கு பாராளுமன்ற தேர்தலை ஒத்தி வைத்து இருப்பது அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நேரத்தை அளிக்கும். மேலும் அதிக கட்சிகள் போட்டியிட வாய்ப்பளிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோ வந்திருந்த அமெரிக்க செனட் சபையின் ரிபப்ளிக்கன் கட்சி உறுப்பினர் ஜான் மிக்கைன் கூறியதாவது: ராணுவ ஆட்சியின் உயர்மட்டக் கவுன்சில் தலைவரான பீல்டு மார்ஷல் ஹூசைன் தந்தாவியை சந்தித்து பேசினேன்.
விரைவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவதாக ஹூசைன் தெரிவித்தார். மேலும் தேர்தலை மேற்பார்வையிட சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஹூசைனிடம் கேட்டுக் கொண்டோம். இதுபோன்ற பரிந்துரைகளை முன்பு முபாரக் நிராகரித்து வந்தார்.அமெரிக்க செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜான் கெர்ரி கூறுகையில்,"மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.
எகிப்து நாட்டை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த வந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் பயங்கர கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த பெப்பிரவரி 11ம் திகதி அந்நாட்டை விட்டு தனது குடும்பத்தினருடன் முபாரக் வெளியேறினார். இதையடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலும், நவம்பர் மாதத்தில் அதிபருக்கான தேர்தலும் நடத்தப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.
அணு மின் சக்தி உற்பத்திக்கு 100 கோடி யூரோ முதலீடு: சர்கோசி.
எதிர்கால அணு மின் சக்தி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக பிரான்ஸ் 100 கோடி யூரோ முதலீடு செய்கிறது என ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி தெரிவித்தார்.எதிர்கால அணு திட்டங்களுக்காக 100 கோடி யூரோக்களை முதலீடு செய்ய பிரான்ஸ் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 4வது சந்ததியனருக்கான தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது என நிகோலஸ் சர்காசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அணு பாதுகாப்பு ஆராய்ச்சிக்காக இந்த நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புகுஷிமா அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டது.
இந்த பாதிப்புக்கு பின்னர் சில நாடுகளில் அணு மின் திட்டங்கள் மூடப்படுகின்றன. இது அர்த்தமற்ற நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார். இன்றைய கால கட்டத்தில் அணு சக்திக்கு மாற்றாக வேறு ஒரு புதிய சக்தி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.எதிர்கால அணு மின் உலை திட்டங்களுக்காக 100 கோடி யூரோ ஒதுக்கீடு செய்வதாக கூறிய நிகோலஸ் சர்கோசி புதுப்பிக்கதக்க எரிசக்திக்கு 135 கோடி யூரோ ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா ஏவுகணை வீசித் தாக்குதல்: 26 தீவிரவாதிகள் பலி.
பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர். எனவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் ஷாவால் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ராகாவ்ரா மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 2 ஆளில்லா விமானங்கள் மூலம் அப்பகுதியில் ஏவுகணை வீசப்பட்டது. அதில் ஒரு ஏவுகணை தீவிரவாதிகள் சென்ற வாகனத்தை தாக்கியது. அதில் வாகனத்தில் பயணம் செய்த 12 தீவிரவாதிகள் பலியாகினர்.ஆப்கானிஸ்தானில் பக்திகா மாகாணத்தில் பிர்மால் பகுதியில் தாக்குதல் நடத்தி விட்டு மாண்டோய்க்கு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்த தீவிரவாதிகள் வாகனத்தின் மீதும் ஏவுகணைகள் தாக்கின. இந்த சம்பவத்திலும் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்.
வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன.வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
வானில் தோன்றிய அந்த வினோதப் பொருட்கள் சிறு புள்ளிகளாக கடுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த 3 வினோதப் புள்ளிகளும் முக்கோண வடிவில் விண்ணில் சீறி சென்றன.இதில் ஒரு புள்ளி மிக நீளமானதாக இருந்தது. அதே நேரத்தில மிகுந்த ஒளிரும் தன்மையுடன் காணப்பட்டது. அந்த நீள நிற புள்ளி வட்ட வடிவில் மற்ற பொருளை விட மெதுவான வேகத்தில் சென்றது.
இந்த வினோத பொருள் மேற்கு லண்டன் வான் பகுதியில் பறந்தது குறித்து ஆச்சரிமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்த யுஎப்ஓ என்ன என்பதை விவரம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டும் என இளைஞர்கள் தங்கள் எதிரே வந்தவர்களிடம் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். இந்த யுஎப்ஓ குறித்து இணையதள கருத்து பரிமாற்றத்திலும் கடுமையான விவாதம் காணப்பட்டது.
பின்லேடன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்: தலிபான்கள் எச்சரிக்கை.
அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடனை அமெரிக்கா கொன்றதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் கோபத்தில் உள்ளனர்.அவர்கள் பின்லேடன் கொலைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய மேற்கத்திய நாடுகளின் 10 இடங்களை தகர்ப்பதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் நேட்டோ படை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை விரைவில் நீங்கள் காண்பீர்கள். ஐரோப்பாவில் எங்களது முதல் முன்னுரிமை தாக்குதல் பிரிட்டன் மற்றும் பிரான்சில் நடைபெறும் என பாகிஸ்தானிய தலிபான் துணைத் தலைவர் வாலி உர் ரகுமான் எச்சரித்துள்ளார்.அவரது எச்சரிக்கை வீடியோ டேப் அல் அரேபியாவில் ஒளிபரப்பு ஆனது. வாராந்த இறுதியில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. தெரிக் எ தலிபான் அல்லது பாகிஸ்தான் தலிபான் அமைப்பு எனப்படும் இந்த தீவிரவாத இயக்கம் ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட விசுவாச அமைப்பு ஆகும்.
தெரிக் தலிபான் அமைப்பு பல பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய அமைப்பு ஆகும். ஆப்கன் எல்லை பகுதியிலும் ராணுவ தாக்குதலை மீறி இந்த தீவிரவாத அமைப்பு தனது நாச வேலைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த ஆண்டு நியூயார்க் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் திடீர் உத்தரவு.
பாகிஸ்தான் துணை ராணுவப் படையினருக்கு போர் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்து ராணுவ ஆலோசகர்கள் 18 பேர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தங்கியிருந்தனர்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது இங்கிலாந்து படையினரிடமும் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.எங்கள் படையினருக்கு நாங்களே பயிற்சி அளித்துக் கொள்கிறோம். அதனால் பாகிஸ்தானை விட்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியாளர்கள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மனி பொருளாதாரத்திற்கு சவால் அளிக்கும் சீனா: ரோஸ்லர் எச்சரிக்கை.
சீன பிரதமர் வென்ஜியா பவ்வை ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் திங்கட்கிழமை வரவேற்க தயார் ஆனார். அதே நேரத்தில் அவருக்கு பிலிப் ரோஸ்லர் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.ஜேர்மனி பொருளாதாரத்திற்கு சீனா சவால் தருவதாக உள்ளது என அவர் தெரிவித்தார். பொருளாதாரத்துறை அமைச்சரான ரோஸ்லர் கூறுகையில்,"பொருளாதார உறவுகள் மிக சிறப்பாக உள்ளன. ஆனால் சீன நிறுவனங்கள் ஜேர்மன் நிறுவனங்களுக்கு கடும் சவால் தரக்கூடியதாக உள்ளன" என்றும் குறிப்பிட்டார்.சீனாவை பார்த்து ஜேர்மனி பயம் கொள்கிறதா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் பயம் என்பது எப்போதும் மோசமான வழிகாட்டி. ஆனால் உலக சந்தையில் உருவாகி வரும் சீனாவின் பங்கு ஜேர்மனிக்கு சவாலாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெருகி வரும் சந்தையில் ஜேர்மனி லாபம் ஈட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏற்றுமதியில் ஜேர்மனியை காட்டிலும் அதிக அளவு வர்த்தகத்தை சீனா மேற்கொண்டிருந்தது.சீன பிரதமர் வென்ஜியா பவ் 13 அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர் குழுக்களுடன் பிரிட்டனில் இருந்து ஜேர்மனி வருகிறார். அவர் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.அதனைத் தொடர்ந்து கூட்டு கேபினட் கூட்டம் நடைபெறுகிறது. வாராந்த இறுதியில் ஐரோப்பிய மண்டல பொருளாதார நெருக்கடியை தவிர்க்க சீனா ஆதரவு கரம் நீட்டும் என வென்ஜியா பவ் உறுதி அளித்து இருந்தார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் கினா ரினே ஹார்ட்(57) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் சுமையுடன் தந்தையின் சுரங்கத்தை பெற்றார்.தற்போது இந்த பெண் தொழிலதிபர் உலகின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்து ஆயிரத்து 30 கோடி டொலராக ஆனது.அதாவது பிரிட்டன் பவுண்ட் மதிப்பில் அவரது சொத்து 630 கோடி பவுண்ட் ஆக அதிகரித்தது. மூலப்பொருள் விலை அதிகரிப்பால் அவரது சொத்து மதிப்பு கடுமையான உச்ச நிலையை எட்டியது.
இந்த பெண் தொழிலதிபர் மெக்சிகன் தொழிலதிபர் கரோலஸ் சிலிம் சொத்து மதிப்பை காட்டிலும் கூடுதல் சொத்து பெற்றவராக ஆகிறார். கரோலஸ் சொத்து 460 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ் சொத்து 350 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது.அவுஸ்திரேலிய பெண் தொழிலதிபரின் மூன்று கரி மற்றும் இரும்பு சுரங்க உற்பத்தி மூலம் அவரது சொத்து மதிப்பு உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது. அவரது நிறுவனங்கள் அனைத்தும் அவரது முதலீட்டிலேயே உள்ளன.
அந்த நிறுவனங்களில் வெளி முதலீடுகள் இல்லை. இதனால் அவரது நிறுவன வருமானத்தின் 100 சதவீதமும் இந்த தொழிலதிபரின் சொத்து கணக்கிலேயே இடம் பெறுகிறது என நிதி குழுக்கள் மதிப்பிட்டு உள்ளன.உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஆகும் கினா ரினே ஹார்ட் இரண்டு முறை திருமணம் செய்தவர் ஆவார். அவரது 2வது அமெரிக்க கணவர் பிராங்க் ரினே ஹார்ட் ஆவார். அவர் கடந்த 1990ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.