Monday, June 20, 2011

இன்றைய செய்திகள்.

தூதுவர் பதவிக்காக வாயை மூடிக்கொண்டிருக்கின்றேன்: முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய.

கட்டுநாயக்க சம்பவம் குறித்த உண்மைகளை எனது எதிர்கால நன்மை கருதி மௌனமாக புதைத்துக் கொண்டுள்ளேன் என்று முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்க சம்பவம் குறித்து பேசப் போனால் அதன் பின்னணி பற்றியும் பேசியாக வேண்டும். அதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் குறித்தும்  பேச வரும். அதன் பின் அவர்களிடம் யாராவது விசாரணை மேற்கொள்ளும்போது தங்களுக்கு அதற்கான பணிப்புரை விடுத்தவர்கள் குறித்து அவர்கள் உண்மையை வெளியிட்டாக வேண்டும்.
அப்படி நடந்தால் நான் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டாக வேண்டும். எனக்குக் கிடைக்கவுள்ள தூதுவர் பதவி பறிபோய் விடும். அதன் மூலமான வரப்பிரசாதங்களும் பறிபோய் விடும். அதன் காரணமாகத் தான் அனைத்தையும் கண்டும் காணாதது போன்று வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருக்கின்றேன் என்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சம்பவத்தின் பின்னணி மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்து தான் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தவுள்ளதாக மஹிந்த பாலசூரிய முன்னர் தெரிவித்திருந்தார்.அதன் பிரகாரம் கடந்த 17ம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவரை கட்டுநாயக்க சம்பவம் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடித்திருக்க முடியுமான வாய்ப்பு கட்டுநாயக்க தாக்குதல் சம்பவம் காரணமாக பறிபோனதாகவும், அதைப் பற்றிப் பேசப் போனால் தூதுவர் பதவியும் அதன் மூலம் கிடைக்கவிருக்கும் வரப்பிரசாதங்களும் பறிபோய் விடும் என்பதால் அனைத்தையும் சகித்துக் கொண்டு மௌனமாக இருக்க தான் முடிவெடுத்துள்ளதாகவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
உயிர்களைத் தியாகம் செய்து பெற்றுக் கொண்ட வெற்றி சுயநல அரசியல்வாதிகளால் சர்வதேசத்தின் அபகீர்த்திக்குள்ளாகியுள்ளது: பிரதமர்.
எண்ணற்ற தியாகங்கள் மூலம் நாட்டைப் பாதுகாப்பதில் பெற்றுக் கொண்ட வெற்றியானது இன்று சர்வதேசத்தின் முன் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டீ.எம். ஜயரத்தின குற்றம் சாட்டியுள்ளார்.பல்லாயிரக்கணக்கான  இளைஞர்கள் தங்கள் இளமைக்காலத்தை, குடும்பங்களை,  உடல் அங்கங்களை,  உயிர்களைத் தியாகம் செய்தே விடுதலைப் புலிகளுடான யுத்தத்த்தை முன்னெடுத்து நாட்டைப் பாதுகாப்பதில் வெற்றி கண்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் டீ.எம். ஜயரத்தின மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.உடல் அங்கங்களை இழந்து, உயிர்களைத் தியாகம் செய்ததன் மூலமே பாதுகாப்புப் படையினர் நாட்டைப் பாதுகாப்பதற்கான யுத்தத்தின் போது வெற்றியை ஈட்டியிருந்தனர். ஆயினும் அந்த வெற்றி இன்று சர்வதேசத்தின் முன் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
தாய்நாட்டை நேசிக்காத, சுயநலநோக்கம் கொண்ட ஒருசில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே அதற்கான காரணம். அவர்கள் தான் தாய்நாட்டுக்கு எதிராக சர்வதேசத்துக்கு காவடி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆயினும் இலங்கையர் என்ற வகையில், நாம் ஒரு உன்னதமான சமூகம் என்பதை வெளிக்காட்டும் வகையில் எம்மை நாம் மாற்றியமைத்துக் கொண்டு நாட்டையும் கட்டியெழுப்பத் துணை புரியவேண்டும் என்றும் பிரதமர் அங்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்துடனான நல்லிணக்கத்தையேற்படுத்திக் கொள்ளவே சம்பந்தன் விரும்புகின்றார்: கோத்தாபய ராஜபக்ஷ.
அரசாங்கத்துடனான நல்லிணக்கத்தையேற்படுத்திக் கொள்ளவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விரும்புவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அவ்வாறு அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சம்பந்தனின் இந்த முனைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் அவரது  கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் தமது தலைவரின் முனைப்புக்கு முறறிலும் மாற்றமான போக்கில் அளவெட்டி சம்பவத்தை பூதாகாரமாக மாற்றும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இராணுவத்துடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் சம்பந்தன் கடிமொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் தடைகளை ஏற்படுத்துவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.எனவே மூத்த அரசியல்வாதி சம்பந்தன் போன்று அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேச நாடுகள் அறிவுரை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடும் அதிருப்தி?
பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடும் அதிருப்தி கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.பாதுகாப்புச் செயலாளர் மட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரின் நடவடிக்கைகளால் மிகவும் அதிருப்திப் போயுள்ளதாக தெரிவித்துள்ள ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, மிக விரைவில் தான் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடற்படையின் முன்னாள் பிரதித் தளபதியும், ஊர்காவல் படையினரின் பணிப்பாளர் நாயகமுமாக செயற்பட்டிருந்தவர் ஆவார்.
சரத் வீரசேகர, கோத்தாபய ராஜபக்ஷ, வசந்த கரண்ணாகொட, சரத் பொன்சேகா, ஆகியோர் ஒரே வகுப்பில் கல்வி கற்காது போனாலும் சமகாலத்தில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றவர்களாவர். அதே காலப்பகுதியில் ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற ஒருவரிடமே  சரத் வீரசேகர மேற்கண்டவாறு மனம் திறந்து கதைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அண்மையில் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டபோதே  தனது பாடசாலைப் பருவத்து நண்பரான பிரஸ்தாப நபரைச் சந்தித்திருந்ததுடன்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச்  செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்துக்குள் பலர் கடும் அதிருப்தியுடன் இருப்பதாகவும், ஆனால் சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்த கதி காரணமாக அச்சத்தில் பலரும் வாய் திறக்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சரத் வீரசேகர மிக விரைவில் தன்னைப் போலவே பலரும் அரசாங்கத்துக்கும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் எதிராக போர்க்கொடி தூக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஆயினும் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் பாரிய பங்களிப்பை வழங்கியவன் என்ற வகையில் தன்னால் தொடர்ந்தும் பொறுத்திருக்க முடியாது என்றும், அதன் காரணமாக தான் மிக விரைவில் அரசியல் ரீதியான தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
இந்திய அரசாங்கம் ரணிலைப் புறக்கணிக்க முனைகின்றதா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியத்தூதுக்குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்காமல் விட்டதன் மூலம் இந்திய அரசாங்கம் அவரைப் புறக்கணிப்பதாக அரசியல் பரபரப்பொன்று தோன்றியுள்ளது.அதிகாரப் பரவலாக்கல் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் அண்மைக்காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதுவித கருத்துக்களையும் வெளியிடாத நிலையில் அவருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதில் எதுவித பலனும் கிட்டப் போவதில்லை என்பதாக இவ்விடயம் தொடர்பில் வினாவெழுப்பிய ஊடகமொன்றுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ள கருத்தானது அந்தப் பரபரப்பை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களை மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்துக் கலந்துரையாடுவது அரசியல் மரபாகவும், வழமையான சம்பிரதாயமாகவும் காணப்படுகின்றது. ஆனால் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியத் தூதுக்குழுவினர் அந்த சம்பிரதாயத்தை மீறியுள்ளனர்.
பிரஸ்தாப விடயம் உண்மையென்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இந்தியத் தூதுக்குழுவினரின் புறக்கணிப்பானது பாரிய சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அரசியல்வாதியொருவரும் கருத்து வெளியிட்டுள்ளார்.ஆனாலும் தனது தாயாரின் மறைவு குறித்த துக்கம் காரணமாக அண்மைக்காலங்களில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க எந்தவிதமான அரசியல் சந்திப்புகளையும் மேற்கொள்ளாதது மாத்திரமன்றி, அரசியல் கலந்துரையாடல்களுக்கான அழைப்புகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவினரின் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளையில் முஸ்லிம் வணக்கத்தலமொன்று மூடப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவினரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை பாத்தியா மாவத்தையில் செயற்பட்டு வந்த முஸ்லிம் வணக்கத்தலமொன்று மூடப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக அங்கு இயங்கி வந்த பிரஸ்தாப வணக்கத்தலத்தில் ஐவேளைத் தொழுகை மற்றும் குர்ஆனைக் கற்பித்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் இடம்பெற்று வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் பிரஸ்தாப வணக்கத்தலத்தை மூடாது விட்டால் அதன் மதகுருமார் படுகொலை செய்யப்படுவார்கள் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த நேரடி அச்சுறுத்தல்  காரணமாக தற்போது அவ்வணக்கத்தலம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள வணக்கத்தலத்தின் அருகிலேயே ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும், ஆளுங்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வரும் வசிக்கின்ற போதும் அவர் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலிருப்பதாகவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பலம்வாய்ந்த நாடுகள் சிறியநாடுகளின் அரசுகளை வீழ்த்துவதற்கு பல்வேறு வழிகளில் செயற்படுகின்றன: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
உலகின் பலம்வாய்ந்த நாடுகள் சிறிய நாடுகளின் அரசுகளை வீழ்த்துவதற்கு பல்வேறு வழிகளில் செயற்படுவதாக நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.லுணுகல பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் போதே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். லுணுகல பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட படைவீரர்கள் நினைவுத்தூபியைத் திறந்து வைப்பதற்காக இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுத்தத்தில் உயிரிழந்த இந்த பகுதியைச் சேர்ந்த 43 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பொரேரா மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரினால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இராணுவ வீரர்கள் ஈட்டிதந்த வெற்றியையும், அவர்களால் முன்னனெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையினையும் மலிவுபடுத்தி அவற்றை இல்லாதொழிப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களும் புலம்பெயர்ந்தோரும்  மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
இவற்றிற்கு தருஸ்மான் அறிக்கையும், சனல்4 இனால் தயாரிக்கப்பட்ட ஒளிப்பதிவு காட்சிகளையும் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன் அவற்றுக்கு எதிராக உள்நாட்டு ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளக் கூடிய பணிகளை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
முதல் முறையாக தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சூகி.
பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சுதந்திரமாக கொண்டாடினார் ஆங்சான் சூகி.அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், மியான்மர் அரசியல் தலைவருமான ஆங்சாங் சூகி 1945ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்தார்.
இவர் மியான்மரில் 1962க்குப்பின் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வந்தார். இவரின் போராட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு அதிகரிப்பதை உணர்ந்த ராணுவ அதிகாரிகள் சூகியை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.இடையில் விடுதலை செய்யப்பட்ட சூகியை மீண்டும் 2003ல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். இதையடுத்து கடந்த ஆண்டு பெயரளவில் அங்கு நடந்த தேர்தலுக்குப்பின் சூகி விடுதலை செய்யப்பட்டார்.
பல ஆண்டுகளாக வீட்டு சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதால் பிறந்த நாளை கூட கொண்டாட முடியாமல் இருந்தார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேற்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடினார் சூகி. மேலும் லண்டனில் வசிக்கும் சூகியின் இளைய மகன் கிம் அரிஸ் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
கராச்சியை வந்தடைந்த எம்.வி.சூயஸ் கப்பல்.
எகிப்து நாட்டிற்கு சொந்தமான எம்.வி.சூயஸ் சரக்கு கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது.இக்கப்பலில் ஆறு இந்தியர்கள், 11 எகிப்தியர்கள், நான்கு பாகிஸ்தானியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 22 பணியாளர்கள் இருந்தனர்.
பெரும் பணத்தை தந்த பின்னர் விடுவிக்கப்பட்ட இக்கப்பல் ஓமன் நாட்டின் சலாலா துறைமுகம் நோக்கி வரும் போது எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக தத்தளித்து.இதனையடுத்து பாகிஸ்தானின் பி.என்.எஸ் பாபர் கப்பலுக்கு மேற்கண்ட 22 பேரும் மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் அடுத்த மூன்று தினங்களுக்குள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் கண்டுபிடிப்பு.
டென்மார்க் முன்ஸ்கிளின்ற் கடற்கரைப் பகுதியில் உள்ள கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்ற வளையங்கள் மேலும் பரவிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் நிறத்திலான வளையங்களாக இவை காணப்படுகின்றன.
ஒருவிதமான காளான்களே இப்படி வட்டவடிவமாக நிற்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த வட்டவடிவான அடையாளங்கள் கடந்த 2008 ம் ஆண்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளன.அடுத்த வாரம் இவை பற்றிய ஆய்வுகள் தொடங்குகின்றன. காலநிலை, சூழல் மாசடைவதால் வந்த பக்கவிளைவா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அதேவேளை இதை அதிசயமான நிகழ்வாக பார்ப்போரும் இருக்கிறார்கள்.
ஒசாமாவின் ஆதரவாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் 30 பேர் கைது.
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இத்தகவலை அமெரிக்காவுக்கான பாகிஸ்தானிய தூதர் ஹுசைன் ஹக்கானி கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி இணையதளம் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: பின்லேடனுக்கு உதவிய நபர்கள் பற்றி அடையாளம் காண்பதற்காக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்த ஜோனதன் பொலார்ட் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பின்லேடன் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொது எதிரி. அவர் பாகிஸ்தானில் இருந்ததற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாகிஸ்தானை நம்பலாமா என்று அமெரிக்காவில் கேள்வி எழுப்பப்படுகிறது.அதே போல் அமெரிக்காவை நம்பலாமா என்று பாகிஸ்தானியர்கள் கேட்கின்றனர். தீவிரவாதத்தால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றுள்ள போயிங் விமானம்.
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த 747-8 இன்டர்கான்டினன்டல் ஜம்போ விமானம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது.இதில் மொத்தம் 467 இருக்கைகள் உள்ளன. ஏர் பஸ் நிறுவனத்தின் ஏ380 ரக விமானத்துக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்துக்கு இப்போதே ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பயணிகள் விமானத்துக்கு 33 ஆர்டர்களும், சரக்கு விமானத்துக்கு 76 ஆர்டர்களும் கிடைத்துள்ளது.ஜேர்மனியின் லுப்தான்சா நிறுவனம் 20 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் போயிங் 747-8 ஜம்போ விமானத்தை லுப்தான்சா நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. முதல் விமானத்தை வி.ஐ.பி வாடிக்கையாளர் ஒருவருக்கு இந்த ஆண்டு இறுதியில் டெலிவரி செய்வோம் என போயிங் நிறுவனம் கூறியுள்ளது. 
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சு: 25 தீவிரவாதிகள் பலி.
பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் படி பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.பொதுவாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற பின் பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மொக்மன்ட் பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வாலிடாட் பாதுகாப்பு படை சோதனை சாவடி மீது 50 தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை மற்றும் விமான படை ஆகிய 3 பிரிவினரும் சேர்ந்து பதில் தாக்குதல் நடத்தினார்கள். விமான படையின் போர் விமானங்கள் தீவிரவாதிகளின் பதுங்கு இடங்களின் மீது சரமாரியாக குண்டு வீச்சு நடத்தின.ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
மொராக்கோவில் மன்னருக்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் போராட்டம்.
மொராக்கோவில் பல ஆண்டுகளாகவே மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. நாட்டில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு முடிவு எடுக்கும் உரிமை மன்னர் வசமே உள்ளது.மன்னர் ஆட்சியை விரும்பாத சிலர் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் விளைவாக மொராக்கோவில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசியல் அமைப்பில் சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை மன்னர் அந்த நாட்டின் தொலைக்காட்சியில் அறிவித்தார். மன்னர் ஆட்சியில் இருந்து மக்கள் ஆட்சிக்கு மொராக்கோ நாடு மாறுவது குறித்து பொதுமக்களின் வாக்கெடுப்பு ஜுலை 1ஆம் திகதி நடைபெறுகிறது.இந்த வாக்கெடுப்பில் மன்னரின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டுமா என்றும் பிரதமரின் மற்றும் நாடளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்தும் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள்.
மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது புதிய சீரமைப்பு மூலம் நீதித்துறை சுயமாக செயல்படும் அமைப்பாக இருக்குமென உறுதியளித்துள்ளார். மொராக்கோ நாட்டில் மன்னரின் அதிகாரம் குறைக்கப்படுவதை பல ஆயிரம் மக்கள் ஏற்கவில்லை.மன்னர் முழுமையான அதிகாரத்துடன் நீடிக்க வேண்டுமென பல ஆயிரம் மக்கள் நேற்று காசா பிளான்க்கா நகரில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் சனிக்கிழமை நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றவர்கள் உண்மையான ஜனநாயகம், நாடாளுமன்ற அதிகாரத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். 47 வயது மன்னர் 6ஆம் முகமது கடந்து 1999ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார்.
ஜேர்மனி ராணுவத்தினர் மீது தலிபான்கள் தாக்குதல்.
தலிபான்கள் தாக்குதலை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இதில் ஜேர்மனி துருப்புக்களும் இடம் பெற்றுள்ளனர்.நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் பொது இடங்களில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அரசு கட்டிடங்கள், அயல் நாட்டு துருப்பு முகாம்கள் மீதே அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனி இராணுவத்தினர் சென்ற வாகனம் மீது தலிபான் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு ஜேர்மனி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தலிபான் தாக்குதல் குறித்து முன் விவரங்களை ஆப்கானிஸ்தான் புலனாய்வுத் துறையினர் தரத் தவறியதால் ஜேர்மனி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 இராணுவ வீரர்களும் தாக்குதலில் சேதம் அடைந்தனர். ஜேர்மன் முகாமிட்டுள்ள வட மேற்கில் 3 கிலோ மீற்றர் தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது. கடந்த 2001ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் ஜேர்மானிய வீரர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 50 ஜேர்மானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 30 வீரர்கள் போர் மோதலில் உயிரிழந்து உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் குறித்து பிரான்ஸ் விசாரணை.
பதவியில் இருந்து விலக்கப்பட்ட துனிஷியா ஜனாதிபதி மற்றும் எகிப்து முன்னாள் ஜனாதிபதியின் கருப்பு பணம் பிரான்சில் முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பிரான்ஸ் விசாரணையாளர்கள் ஆராயத் துவங்கி உள்ளனர். துனிஷியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சினே அல் அபிடேன் பென் அலி, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் இந்த இரு தலைவர்களும் இந்த ஆண்டு துவக்கத்தில் பதவியை விட்டு விலக்கப்பட்டனர்.
பொருளாதார சீர்குலைவு, முறைகேடு நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த மக்கள் வீதிகளில் பெரும் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பென் அலியும், ஹோஸ்னி முபாரக்கும் பதவியில் இருந்து விலகினர்.இவர்கள் தங்களது கறுப்பு பணத்தை பிரான்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் உண்மை நிலையை கண்டறிய பிரான்ஸ் விசாரணையாளர்கள் செவ்வாய்க்கிழமை விசாரணையை துவக்கினர்.
பென் அலி ஜனவரி மாதம் மத்தியில் துனிஷியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஓடினார். அவர் பிரான்சில் முதலீடு செய்துள்ள விவரங்கள் தற்போது ஆய்வு செய்யப்படுகிறது.முன்னாள் எகிப்து தலைவரான முபாரக்கின் சொத்து 10 லட்சம் டொலர் மற்றும் பல நூறு கோடி டொலர் பணம் கையிருப்பும் உள்ளது. அரசு சாராத அமைப்புகளான ஷெர்ப் மற்றும் பிரான்ஸ் சர்வதேச வெளிப்பாடு அமைப்பும், பென் அலி முதலீடு குறித்து விசாராணை செய்ய இம்மாதம் துவக்கத்தில் வேண்டுகோள் விடுத்தது.
நான் நிச்சயம் நாடு திரும்புவேன்: முஷாரப்.
அடுத்த ஆண்டு நான் நிச்சயம் நாடு திரும்புவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறுவது தவறு. காஷ்மீர் மற்றும் கார்கில் பிரச்னைகளில் மக்களை தவறாக முன்னடத்திச் செல்வதை அவர் நிறுத்த வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 23ம் திகதி நான் பாகிஸ்தான் திரும்புவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் கூறியுள்ளார்.
கார்கில் போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததற்கு அப்போதைய ராணுவத் தளபதியான முஷாரப் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியிருந்தார்.அவருக்குப் பதிலளிக்கும் விதத்தில் தன் கட்சி தொண்டர்களிடையே "வீடியோ கான்ப்ரன்சிங்" மூலம் பேசிய முஷாரப் கூறியதாவது: கார்கில் போரின் போது அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது பற்றி பொய் சொல்கிறார் நவாஸ். கார்கில் போரின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றியும் அவர் பேசவில்லை.
கார்கிலில் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும். இப்போது தனக்கு எதுவுமே தெரியாதது போல நடிக்கிறார். 1999 பெப்பிரவரி 12ம் திகதி மேற்கொள்ளப்பட்ட லாகூர் ஒப்பந்தத்தில் காஷ்மீர் பற்றி ஒரு வார்த்தை கூட கிடையாது.ஆனால் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க தான் முயன்றதாக நவாஸ் கூறுகிறார். கார்கில் மற்றும் காஷ்மீர் பிரச்னைகளில் மக்களைத் தவறாக முன்னடத்திச் செல்லும் போக்கை அவர் கைவிட வேண்டும். வரும் 2013 பொதுத் தேர்தலில் கலந்து கொள்வதற்காக அடுத்தாண்டு மார்ச் 23ம் திகதி நான் பாகிஸ்தான் திரும்புவேன். இவ்வாறு முஷாரப் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலுக்கான தனது பிரசாரத்தை துவக்கினார் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பராக் ஒபாமா பேஸ்புக், டுவிட்டர் இணையதளம் மூலம் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.அமெரிக்க அதிபராக கடந்த 2008ம் ஆண்டு பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலில் கடந்த 2008ம் ஆண்டு கிடைத்த வெற்றியை போல் மீண்டும் வெற்றி பெற தனது பிரசாரத்தை சமூக இணையதளங்கலான பேஸ்புக், டுவிட்டர் மூலம் துவக்கியுள்ளார்.டுவிட்டர் இணையதளத்தில் அவர் இனிமேல் தொடர்ந்து கருத்துக்களை கூறப்போவதாக கூறியுள்ளார். இதேபோல் பேஸ்புக்கிலும் கூறியுள்ளார். இதற்கு 23000 பேர் வரவேற்றுள்ளனர். பேஸ்புக்கில் 4,000 பேர் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க புதிய குழு விரைவில் நியமனம்.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு செயல்படுவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானதால் புதிய குழு விரைவில் அமைக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தது எப்படி, அவரைப் பற்றிய தகவல் எப்படி அமெரிக்காவுக்குக் கிடைத்தது, பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்காமல் ஒசாமாவை அமெரிக்கா கொன்றது போன்றவை குறித்து தீர விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை பிரதமர் யூசுப் ரசா கிலானி சமீபத்தில் நியமித்தார்.
ஆனால் அக்குழுத் தலைவரும், இன்னொரு உறுப்பினரான சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும் தங்களிடம் இதுகுறித்து முறையாக கலந்து ஆலோசிக்காமல் தங்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு செயல்படும் முன்பே சர்ச்சையில் சிக்கியதால் புதிய குழு விரைவில் அமைக்கப்படும் என பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் மவுலா பக்ஷ் சாண்டியோ நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீனாவில் வெள்ளம்: 50 லட்சம் பேர் பாதிப்பு.
சீனாவில் தொடர்மழையினால் ‌ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் கிழக்கு பகுதி முழுவதும் 50 லட்சம் பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை ‌தொடர்ந்து அங்கு உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்த்துள்ளதாக அங்குள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இதில் ஹூபெய் மற்றும் ஷெஜியாங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 7 ஆயிரம் வீடுகள் தரைமட்டமானதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு செலவாக(930 மில்லியன் டொலர்) தேவைப்படும் என ‌கருதப்படுகிறது. திங்கள்கிழமை‌க்கு மேல் நிலைமை சீர‌டையும் என எதிர்பாக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF