Saturday, June 11, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகா பாரியளவில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டுள்ளார் – துமிந்த சில்வா.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பாரியளவில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சரத் பொன்சேகாவினால் எங்களுடன் மோத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளே இருப்பவர் எவ்வாறு எங்களுடன் மோத முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டைப் பாதுகாத்த ஜனாதிபதிக்காக குரல் கொடுக்கும் சேரிப்புற மக்களை சில ஊடகங்கள் போதைப் பொருள் பாவனையாளர்கள் மற்றும் குண்டர் குழுக்களாக விபரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தாபயவை சுற்றிவளைத்த ஏழு இந்திய அதிகாரிகள் – பீரிசுடனும் சந்திப்பு.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.இன்று நண்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசினர். 

இவர்களுடன் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் ஏழு அதிகாரிகள் இந்தியத் தரப்பில் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பில் கோத்தாபய ராஜபக்சவுடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் பங்குபற்றினர்.

வழக்கமாக இத்தகைய பேச்சுக்களில் இருதரப்பு பிரதிநிதிகளினதும் எண்ணிக்கை சமமானதாகவே இருப்பதுண்டு. ஆனால் இன்றைய சந்திப்பில் கோத்தாபய ராஜபக்ச, லலித் வீரதுங்க, பிரசாத் காரியவசம் ஆகியோரைச் சுற்றி ஏழு இந்திய அதிகாரிகள் அமர்ந்திருந்து பேச்சு நடத்தியுள்ளனர். இது சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு நெருக்கடி கொடுக்கின்ற அணுகுமுறையாகவே கருதப்படுகிறது.

இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் இன்று மாலை இந்திய அதிகாரிகள் குழு சந்தித்துப் பேசியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீடித்துள்ளது. எனினும் இன்றைய சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
பிரிட்டன் வீசா நடைமுறை மாற்றம் விரைவில்! கொழும்பு உயர்ஸ்தானிகரகம்.
தற்காலிக வீசாவில் பிரிட்டனுக்கு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு குடிவரவு திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.வீசா தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை வகைப்படுத்துவதற்கும் பிரிட்டனில் தங்க விரும்புவர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதற்குமான யோசனைகைள பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் முன்வைத்துள்ளார்.
குடியேறலுக்கு வழியமைக்கும் தொழில்வாய்ப்புகளின் மீளாய்வு தொடர்பான பொதுக் கலந்துரையாடலொன்றை ஆரம்பித்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுக்கான தொடர்பை முறிப்பதை இந்த யோசனைகள் இலக்காக கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
தற்போதைய நடைமுறைகளின் கீழ் பெரும்பாலான ஊழியர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.2010 ம் ஆண்டில், தொழிலுக்காக பிரிட்டனுக்கு வந்தவர்களில் 84,000 பேர் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டனர்.1997 ம் ஆண்டில் 10,000 ற்கு குறைவானோரே தொழில்வாய்ப்பு தொடர்பான குடியேற்றத்திறகு தகுதி பெற்றிருந்தனர்.
இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை - உலக வங்கி.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக (GDP)  இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016 ல் முறையே 8.5%, 9.5% மாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது.எனினும் இது 2011, 2012, 2013 ல் முறையே 7.5%, 6.8%, 6.4% என எட்டு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியினையே இலங்கையால் பதிவு செய்ய முடியும் என உலகவங்கி கடந்த வாரம் வெளியிட்ட (Global Economic Prospects 2011) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக உயர்வான பணவீக்கம், உயர்வான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்தளவான பொதுப் படுகடன்கள் போன்றவை தனியார் முதலீடுகளை வெளியேற்றுகின்றன. இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான வளர்ச்சி வீதம் சரிவடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பணவீக்கம் உயர்வாக உள்ளன. ஆனால் இவை வட்டி வீதங்களை உயர்த்தி பணவீக்க அழுத்தங்களை சமாளிக்கின்றன. எனினும் இத்தகைய தீர்மானத்தினை இலங்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இலங்கைப் பொருளாதாரம் பணவீக்க அழுத்தங்களிற்குள்ளேயே காணப்படுகின்றது.
இதன் விளைவாகவும் வரவு செலவுதிட்ட பற்றாக் குறைகள் உயர்வடைவதுடன் இதுவே கடந்த ஆண்டில் மாலைதீவு, இந்தியா, இலங்கை ஆகியவற்றில் முறையே 20.7%, 8.8%, 7.9% என ஒப்பீட்டளவில் இலங்கையில் குறைவாக காணப்பட்டாலும் வருந்தத்தக்க நிலையிலேயே இலங்கையும் உள்ளது என உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை அமெரிக்காவினை தளமாக கொண்டியங்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கம், செயற்பாடு மற்றும் அறிக்கைகள் தொடர்பாக ஆசிய நாடுகள் அதிருப்தி அடைந்து இருப்பதோடு இவற்றுக்கு எதிராக பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ல் ஆரம்பம்.
தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கை தலைநகர் கொழும்புக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 13ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பல தசாப்தகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமாகின்ற இக்கப்பல் சேவையில், முதல் கப்பல் திங்கட்கிழமை மாலை தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டுச் செல்லும் என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுப்பையா பிபிசியிடம் தெரிவித்தார்.
எம்.வி.ஸ்காட்டியா பிரின்ஸ் என்று பெயர்கொண்ட இந்தக் கப்பல் கொழும்பு நகரை சென்றடைய 14 மணி நேரம் ஆகும். இக்கப்பலில் 1200 பயணிகள் பயணிக்க முடியும். இது தவிர 4 ஆயிரம் தொன்கள் எடையுள்ள சரக்குகளையும் ஏற்றுமதி செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.கப்பலில் மொத்தம் 325 அறைகள் இருக்கும். பயணிகளுக்குத் தேவையான உணவு வசதிகளும், பொழுது போக்குகளும் இதில் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலில் வாரம் இரு முறை இயக்கப்படும் இந்தக் கப்பல் சேவை, பின்னர் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும்.ஒரு-வழி பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 49 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சரக்குத் துறைமுகமாக இருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் பயணிகளைக் கையாளத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கடற்படைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் : அமெரிக்கக் கடற்படைத் தளபதி.
போருக்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படைக்கு உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் றொபேட் எவ்.வில்லாட் உறுதியளித்துள்ளார்.சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சங்கிரிலா கருத்தரங்கு என்ற பெயரில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போதே, அமெரிக்க- சிறிலங்கா கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா வழங்கிய உதவிகள் குறித்து தாம் எப்போதும் மதிப்புடன் நோக்குமாக சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கத் தளபதியிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக அமெரிக்கத் தளபதி விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.குறிப்பாக சிறிலங்கா கடற்படை தொடர்பாகவும், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற- அமெரிக்கா வழங்கிய ‘சமுத்திர‘ என்ற போர்க்கப்பலின் செயற்பாடு பற்றியும் அவர் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அமைதி திரும்பியுள்ள நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வரமுடிந்துள்ளதாகவும், எனவே சிறிலங்காவுக்கான பயணங்களை அவை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தச் சந்தப்பின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.27 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்க பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், ஆனால் கட்டுநாயக்க தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
மிஹின் எயாருக்கு விமான நிறுவனத்திற்கு 5.8 பில்லியன் ரூபாய் நட்டம்.
இலங்கையின் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இயங்கி வரும் மிஹின் எயார் விமான சேவை, 5.8 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிஹின் எயார் விமான சேவையின் இந்த நட்டம், இலங்கையின் பொதுமக்கள் வரியின் மூலம் சமப்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிஹின் எயார் விமான சேவை, இலங்கை அரசாங்கத்தின் சொத்து என்று கூறப்படுகின்ற போதும் அது தனியார் நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை இந்த விமான சேவைக்கு அரச வங்கிகளில் இருந்து கடன்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் திறைசேரியே பொறுப்புக்கூறுநராக செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கையர்கள் 30 பேரே நாடு கடத்தப்படவுள்ளனர் : பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்.
தமிழர்கள் உட்பட்ட இலங்கைப் பிரஜைகள் 30 பேரை நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.முன்னதாக 300 பேர் எதிர்வரும் 16 ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் அரசியல் புகலிடம் மறுக்கப்பட்ட 30 பேரே திருப்பியனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிரகம் குறிப்பிட்டுள்ளது.இதில் எத்தனை தமிழர்கள் என்ற விடயத்தை அந்த உயர்ஸ்தானிகரம் தெரிவிக்கவில்லை.
இனிமேலாவது அரசு பிழையைத் திருத்திக் கொள்ள வேண்டும்! சுரேஷ் எம்.பி. தெரிவிப்பு.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு இலங்கை அரசே பொறுப்புக் கூற வேண்டும். எனவே, இனியாவது அரசு தனது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இழுத்தடிப்பது, காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்காது, மனித உரிமைக் குற்றச்சாட்டுகள், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆகிய விடயங்களுக்குப் பதிலளிக்காமல் அரசு மௌனப் பாதையில் பயணிப்பது ஆகிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகளிலும் இந்தியாவுடனான பேச்சுகளிலும் உறுதியளித்த பல விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றவேண்டும் எனக் கூட்டமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டிய பொறுப்புகள் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இலங்கை அரசு அவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளவில்லை.
இதன் பின்னணியிலேயே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் காணாமல் போனோர் குறித்து விசாரணை அவசியம் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை அரசு மேற்கொள்ளாததினால் இலங்கை மீது வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.இனியாவது, அரசு தனது பிழைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். எதிர்காலத்திலாவது இவ்வாறு அழுத்தங்கள் அதிகரிக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நோர்வேயுடன் உறவை பலப்படுத்த இலங்கை அரசு தயாராகிறது.
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக அரங்கில் இலங்கை அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில் நோர்வேயுடன் மீண்டும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகியுள்ளது. விரைவில் ஒஸ்லோ செல்லவுள்ள கடற் தொழில்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, போரின் பின்னர் இலங்கையின் அரசியல் சூழல் குறித்து விளக்க உள்ளார்.
நோர்வேக்குச் சென்று அமைச்சரும் சமாதானப் பேச்சுக்களுக்கான முன்னாள் அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.பாணந்துறையில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை நேற்றுத் திறந்து வைத்துப் பேசிய போது அமைச்சர் ராஜித இதனைத் தெரிவித்தார்.
ஒஸ்லோவில் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேசும் போது, போருக்குப் பின்னர் இலங்கை அரசு எப்படி இயல்பு நிலையைக் கொண்டு வந்துள்ளது என்று தான் விளக்குவார் என்றும் அவர் கூறினார்.எந்த ஒரு விடயத்துக்காகவும் இலங்கையின் மீது தடைகளை விதிப்பது நாட்டு மக்களையே பாதிக்கும் என்று தான் ஐரோப்பய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி இருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மிகப்பாரிய ஹெரோயின் கடத்தல்! 3 ஆயிரம் ஹெரோயின் பொதிகள் மீட்பு.

கொழும்பு, கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் 3 ஆயிரம் ஹொரோயின் பொதிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த மிகப்பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் சுத்திகரிப்பாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான ஹொரோயின் போதைப்பொருள் கடத்தலுக்கு இவர்கள் உடந்தையாக செயற்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சுத்திகரிப்பாளர் மூவரும் ஹெரோயின் பொதிகளை தூசி உறிஞ்சி(vacuum cleaner) சுத்திகரிப்பு கருவிக்குள் மறைத்து வைத்துள்ளனர்.இந்த கருவிகளுக்குள்ளிருந்தே 3 ஆயிரம் ஹெரோயின் பொதிகள் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
உலகின் மிக எளிதான தண்டனைகள் வழங்கும் நாடாக மாறப் போகும் பிரிட்டன்.
தற்போதுள்ள தண்டனை முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் உலகிலேயே மிகவும் இலகுவான தண்டனைகளைக் கொண்ட நாடாக பிரிட்டன் மாறவுள்ளது.தற்போது அமுலில் உள்ள சிறைத் தண்டனை முறைகளை அரைவாசியாகக் குறைப்பதே உத்தேச புதிய திட்டத்தின் பிரதான அம்சமாகும்.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் ஆரம்பத்திலேயே தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்தக் குற்றத்துக்கான தற்போதைய தண்டனையிலிருந்து அது அரைவாசியாகக் குறைக்கப்படும். பிரிட்டிஷ் நீதி அமைச்சர் கென் கிளார்க் தெரிவித்துள்ள இந்த யோசனைகள் ஏற்கனவே எதிர்ப்பைச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன.
தண்டனை வழங்கும் கொள்கையின் அடிப்படையே இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இது குற்றவாளிகளை மேலும் ஊக்குவிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது உத்தேச யோசனைகளின் பிரகாரம் சில தண்டனைகள் 35 வீதத்தால் குறையக் கூடும்.
குற்றத்தை ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டால் தண்டனை குறையும் என்ற இந்தச் சலுகையின் மூலம் அவ்வாறு ஒப்புக் கொள்கின்றவர்களின் எண்ணிக்கைக் கூடும் என்று எதிர்ப்பார்க்க முடியாது என்று பிரிட்டனின் தண்டனைச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.காரணம் ஏற்கனவே அவ்வாறான ஒரு முறை சட்டத்தில் இருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் நியாயமற்றது.இது பிரயோசனமான ஒன்றாகவும் தெரியவில்லை. எனவே இதை அரசாங்கம் கை விட வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் கேட்டுள்ளனர்.

லாரி ஏறி 20 பேர் நசுங்கிச் சாவு: தறிகெட்டு ஓடிய லாரியால் பயங்கரம்.

தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி, சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 20 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். அகமதாபாத் அருகே இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலம் படியாத்தில் பிரபலமான தர்கா உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தர்காவுக்கு முஸ்லிம்கள் யாத்திரை சென்று வருகின்றனர். பலர் பாதயாத்திரையாகவும் வருவார்கள். 

அகமதாபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக நேற்று காலை பாதயாத்திரையாக படியாத் தர்காவுக்கு புறப்பட்டனர். அகமதாபாத் அடுத்த டோல்கா அருகே பகோத்ரா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. 

பகல் முழுவதும் நடந்து களைத்துப்போன 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாலையோரம் ஓய்வெடுக்க அமர்ந்தனர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர்கள், அசதியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையோரம் படுத்திருந்தவர்களை டிரைவர் கவனிக்கவில்லை. 

திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 20 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.பக்தர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

காயமடைந்தவர்களை மீட்டு அகமதாபாத்தில் உள்ள வி.எஸ். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் 20 பக்தர்கள் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடாபி மீதான இலக்கு சட்டப்படியானது! நேட்டோ படைகளின் சிரேஷ்ட அதிகாரி கருத்து.

லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியை இலக்கு வைப்பதை ஐ.நா.தீர்மானம் நியாயப்படுத்துவதாக நேட்டோ படைகளின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் புது விளக்கமளித்துள்ளார். லிபியாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பான பூரண விளக்கமுள்ள அதிகாரி ஒருவரே சி.என்.என் செய்திச் சேவைக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடாபியை இலக்கு வைப்பது உண்மையா என்று அவரிடம் கேட்டபோது அவர் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், லிபியா தொடர்பான ஐ.நா தீர்மானம் அதை நியாயப்படுத்துகின்றது. லிபிய இராணுவத்தின் தலைவர் அவர்தான். 

அவரே லிபியா இராணுவத்தின் கட்டளைக் கட்டமைப்புக்களை இன்னமும் நெறிப்படுத்தி வருகின்றார். எனவே அவர் இலக்கு வைக்கப்படுவதை ஐ.நா.தீர்மானம் நியாயப்படுத்துகின்றது என்று விளக்கமளித்துள்ளார்.கடாபியின் படைகளுக்கு எதிராக மார்ச் மாதம் 31ம் திகதி தாக்குதல்கள் தொடங்கின. நேட்டோ கடந்த வாரம் முதல் தாக்குதல் ஹெலிகொப்டர்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. 

பொது மக்களைக் காப்பாற்ற தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று, லிபியா தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட 1973ம் இலக்கத் தீர்மானம் கூறுகின்றது.இதனிடையே கடாபி இல்லாத ஒரு லிபியா எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி நேட்டோ அதிகாரிகள், கடாபிக்கு எதிரான கிளர்ச்சிப் படை முக்கியஸ்தர்களுடன் முக்கிய கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல் என்பனவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
அழுத குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது சிறுமி.
சிறு குழந்தை தொடர்ந்து கதறி அழுததால் ஆத்திரம் அடைந்த 5 வயது சிறுமி குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றார்.மிசௌரியில் உள்ள கனாஸ் நகரில் ஜுன் 3ம் திகதி இந்த துயர நிகழ்வு ஏற்பட்டது. 18 மாத ஆண் குழந்தை ஜெர்மேன் ஜான்சன் அன்றைய தினம் அழுது கொண்டே இருந்ததால் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்ததாக சிறுமி பொலிசாரிடம் தெரிவித்தாள்.இது கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது என சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் தெரிவித்தனர்.
5 வயது சிறுமியின் நடத்தைக்கு குற்றப்பிரிவு சட்டத்தில் என்ன தண்டனை அளிக்கப்படும் என தெரியவில்லை. இருப்பினும் அந்த நிகழ்வு கொலை வழக்காக அறிவிக்கப்படவில்லை.இந்த வழக்கு குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏமனில் வான்வழித் தாக்குதலை அமெரிக்கா துவக்கியது: தீவிரவாதிகளுடன் கடும் போராட்டம்.
ஏமனில் நிலவும் அரசியல் கொந்தளிப்பை அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்திக் கொள்வதாக அச்சம் நிலவுகிறது.இந்த நிலையில் தீவிரவாத நபர்களை எதிர்த்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஏமன் அரச படைகளும் தீவிரவாத நபர்களுக்கு எதிராக தாக்குதலை துவங்கி உள்ளது.
ஏமனில் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதலை நடத்தி இருந்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையால் பதட்ட நிலை தணிந்துள்ளதாக கூறப்படுகிறது. அரேபிய தீபகற்ப நாடான ஏமனில் முறையான தலைமை இல்லாததால் அங்கு ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது.ஏமன் அரசப்படைகள் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தெற்கு நகரமான ஜினிபாரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டன. இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதலை துவக்கி உள்ளது.
ஏமனில் போராட்டம் நடத்தும் நபர்களின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏமன் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு சி.ஐ.ஏ அமைப்பு வழிக்காட்டுகின்றன.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சி.ஐ.ஏ அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என பிரான் டௌன்சென்ட் கூறினார். இவர் புஷ் நிர்வாகத்தின் போது உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.
ஏமனில் ஆட்சி செய்து வரும் ஜனாதிபதி அப்துல்லா அலி சலே பதவி விலக வேண்டும் என கடந்த சில மாதங்களாக அங்கு போராட்டம் நடந்து வருகிறது. சமீப வாரங்களாக அரசுக்கு எதிராக துருப்புகளுடன் பழங்குடியின போராட்டக்காரர்கள் மோதி வருகிறார்கள்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர்கள் கொல்லப்பட்டனர். அப்யான் மாகாணத்தில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பினரும் கொல்லப்பட்டனர் என்று ஏமன் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.மாரிப் மாகாணத்தில் உள்ள தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அலி சலே பர்கானும் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.
2020ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் இல்லாத உலகமாக மாற்ற வேண்டும்: பான் கி மூன்.
2020ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ‌கூறினார்எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்து ‌ஐ.நா.வின் சிறப்பு மாநாடு ஐ.நா பொதுசபையின் தலைமையகமான நியூயார்க்கில் நடக்கிறது.
இதில் கலந்து கொண்டு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் பேசியதாவது: உலகம் முழுவதும் ஆட்கொண்டுள்ள கொடி‌ய நோய் எய்ட்‌ஸை ஒழிப்பது குறித்து விவாதிக்க இந்த சிறப்பு மாநாடு நடக்கிறது.அதன்படி வரும் 2020ம் ஆண்டிற்குள் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்புள்ள நோய்களை ஒழித்து எய்ட்ஸ் இல்லாத உலகினை படைப்பதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். அதனை முழுமூச்சாக செயல்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.
இ.கோலி பக்டீரியா அச்சத்தால் பிரான்சில் வெள்ளரிக்காய் விற்பனை பாதிப்பு.
ஜேர்மனியில் ஏராளமானவர்கள் இ.கோலி என்னும் பக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நச்சு நுண் உயிரி தாக்குதலுக்கு உயிர்ப்பலியும் அதிகரித்து வருகின்றன.இ.கோலி பக்டீரியா ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. பின்னர் இந்தக் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இ.கோலி பக்டீரியா பரவுகிறது என்கிற அச்சம் பொது மக்களிடம் நிலவுகிறது.
இந்த அச்சம் பிரான்சிலும் நிலவுகிறது. பிரான்ஸ் பொது சந்தையில் மற்றக் காய்கள் பரவலாக விற்பனை ஆகின்றன. ஆனால் வெள்ளரிக்காய் ஒவ்வொரு கடையிலும் அடுக்கி வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன.அதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் முன்வருவது இல்லை. பாரிசின் தெற்குப் பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரும் மொத்த காய்கறி விற்பனை உள்ளது. இங்குள்ள கடைகளில் வெள்ளரிக்காய் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கிறது.
ரங்கிஸ் மார்க்கெட்டில் இருக்கும் வெள்ளரிக்காய் தரமானதா என்பதை பார்க்க வாடிக்கையாளர்கள் ஒரு வினாடி கூட செலவழிக்காமல் இதர காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.இ.கோலி பக்டீரியா பாதிப்பால் இதுவரை ஜேர்மனியின் ஹம்பர்க்கில் 27 பேர் இறந்துள்ளனர். 270 பேர் நோய் பாதித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை விரைவில் அழிப்போம்: ஜவாஹிரி.
"அமெரிக்காவை அழிப்போம், வாஷிங்டனை புதைப்போம்" என அல்கொய்தாவின் நம்பர் 2 எனக் கருதப்படும் அல் ஜவாஹிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி பயங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் பழி தீர்ப்போம் என அவர் எச்சரித்துள்ளார்.
பின்லேடனைக் கொன்ற பிறகு அவரது உடலை அமெரிக்கா கடலில் வீசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.பின்லேடன் உயிருடன் இருந்த போது அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஜவாஹிரி ஆவார். அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மீது ஜவாஹிரிக்கு கோபம் உள்ளது. அமெரிக்க அரச நிர்வாகத்தை அவர்கள் துரோகிகள் என ஆத்திரத்துடன் குறிப்பிட்டார்.
எகிப்து, துனிஷியா, லிபியா நாடுகளைப் போன்று புரட்சி ஏற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துருப்புகள் தொடர்ந்து இருப்பதற்காகவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.அங்கிருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றார். "நியூயார்க்கை சிதைப்போம், வாஷிங்டனை புதைப்போம்" என அவர் கூறினார். அவரது 28 நிமிட உரை ஓன்லைனில் ஒளிபரப்பானது.
அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை.
வரும் 2016ம் ஆண்டில் விண்ணை முட்டும் வகையிலான 800 அதி உயர கட்டடங்களை சீனா நிறுவும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்நாட்டு நிபுணர்கள் அரசை வலியுறுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த தனியார் வார இதழ் ஒன்று உலகின் அதி உயர கட்டடங்கள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் 200 அதி உயர கட்டடங்கள் தான் உள்ளன. எனினும் உலகில் உள்ள பத்து மிகப்பெரிய கட்டடங்களில் ஐந்து கட்டடங்கள் சீனாவில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.152 மீற்றர்(500 அடிகள்) உயரம் கொண்ட கட்டடங்கள் அதி உயரம் கொண்டவை எனும் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. முடிவில் ஹோங்கொங் நகரில் 58 கட்டடங்களும், ஷாங்காயில் 51 மற்றும் ஷென்சென்னில் 46 கட்டடங்களும் அதி உயரம் கொண்டவையாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தற்போதுள்ள நிலையே தொடருமானால் வரும் 2016ம் ஆண்டில் 800 அதி உயர கட்டடங்களை சீனா நிறுவும் என தெரிகிறது. ஏற்கனவே 200 புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இதுகுறித்து சீனாவைச் சேர்ந்த பொருளாதார பேராசிரியர் வாங் ஜியான்மோ கூறியதாவது: அரசின் இந்த நடவடிக்கை நிலத்தை பாதுகாக்கும் முயற்சி என துவக்கத்தில் கூறப்பட்டாலும் தற்போது நாட்டின் கனவுத்திட்டமாக மாறியுள்ளது.
நகரங்களில் உள்ள மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க இதுபோன்ற அதி உயர அடுக்குமாடிக் கட்டடங்களை சீனா அமைத்து வருகிறது. எனினும் அதிக பொருட்செலவில் நிறுவப்படும் இத்தகைய கட்டடங்களை பராமரிக்கும் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது.ஷாங்காய் நகரில் உள்ள 421 மீற்றர் உயரம் கொண்ட ஜின் மா டவர் அடுக்குமாடிக் கட்டடம் ஒரு சதுர மீற்றருக்கு மூன்றாயிரம் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பராமரிக்க ஆண்டிற்கு 75 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க டொலர் செலவாகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள் மட்டுமல்லாமல் புறநகர்ப்பகுதிகளிலும் தற்போது இதுபோன்ற கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஷாங்காயில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தை விட உயரமானதாக குவாங்சி யுவாங் பகுதியில் 528 மீற்றர் உயரத்திலான கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன."இதுபோன்ற கட்டடங்களில் முதலீடு செய்பவர்கள் அனைவரும் பிறரிடம் கடன் வாங்கியே செய்கின்றனர் என்பதால் தங்களின் சுயலாபத்துக்காக உயரத்தை அதிகரித்துக் கட்டுகின்றனர்" என ஷாங்காய் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு: டோக்கியோ முதலிடம்.
சர்வதேச அளவில் சரக்கு மற்றும் சேவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை ஆகியன அடிப்படையில் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் குறித்து ஈ.சி.ஏ என்ற சர்வதேச அமைப்பு உலகளவில் ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வின் அடிப்படையில் அதிக செலவு மிக்க முதல் பத்து நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆசியாவின் சிங்கப்பூர் கடந்த ஒரு ஆண்டுகளில் 68வது இடத்திலிருந்து 38 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது ஜப்பானின் ஹாங்காங் நகரினை காட்டிலும் 5 சதவீதம் அதிகம். ஈ.சி.ஏ என்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள முதல் 10 நகரங்கள் பட்டியல் பின்வருமாறு: 1. டோக்கியோ, 2. நெளகோயா, 3. யாகோமா, 4. கூபோ, 5. சீயோல், 6. சிங்கப்பூர், 7. ஹாங்காங், 8. பீய்ஜிங், 9. ஷாங்கை, 10. பூசான் ஆகும்.
உலக வங்கியின் அடுத்த தலைவராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பு.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது அமைச்சர் பதவி காலம் முடியவுள்ள நிலையில் உலக வங்கியின் தலைவராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அரசு நிர்வாகத்தில் வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார். இவர் அதிபர் ஒபாமாவை எதிர்த்து அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எனினும் ஒபாமா இவரை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு முதல் துவங்குகிறது. இதில் தனது பதவி காலத்தை முடிக்கவுள்ள ஹிலாரி கிளின்டன் கெளரமிக்க உலக வங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக பூர்வாங்க ஆலோசனை நடந்து வருவதாக ஹிலாரியின் செயலாளர் பிலிப்ரையினஸ் தெரிவித்தார். தற்போது உலக வங்கியில் 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டால் 2012ம் ஆண்டு ஹிலாரி உலக வங்கியின் தலைவர் பதவியேற்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக வங்கியின் தற்போதைய தலைவராக ராபர்ட் ஜிலோயிக் உள்ளார்.
அப்பாவி இளைஞனை சுட்டுக் கொலை செய்த ராணுவம்: வீடியோ வெளியானதால் பரபரப்பு.
பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை பாரா ராணுவப் படையினர் கொடூரமாக தாக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.இதனை அந்நாட்டு டி.வி சானல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் நகரில் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த பாரா ராணுவ படையினர் ஒரு இளைஞனை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது பெயர் ஷர்பராஸ்ஷகா என்பதும் கொள்ளையடிக்கும் திட்டத்தில் நடமாடியதாக கூறப்பட்டது. உடனே அந்த இளைஞனை தீவிர விசாரணை நடத்தாமல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் ஒரு ராணுவ வீரர் துப்பாக்கியால் அந்த இளைஞனின் மார்பில் அருகே வைத்து சுட்டுக்கொன்றார். இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தினை அந்நாட்டு தனியார் டி.வி.‌சானல் ஒன்று ஸ்டிங்க் ஆபரேசன் மூலம் நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணுவத்தினர் பிடிக்கப்பட்ட போது அந்த இளைஞன் அவர்களிடம் சுட வேண்டாம் என கெஞ்சியுள்ளார். நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சிகள் அனைத்து டி.வி சானல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானதால் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தற்போது பாகிஸ்தானில் பாராளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது.இதில் எதிர்க்கட்சிகள் வீடியோ காட்சி குறித்து சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் யுசுப்ராஸா கிலானி கூறுகையில்,"பயங்கரவாத எதிர்ப்பு கோர்டில் விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் முடிவினை அறிவிக்கும்" என தெரிவித்தார்.

கடாபி பதவி விலகுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை: சி.ஐ.ஏ தலைவர்.
லிபியா அதிபர் கடாபிக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் தலைவர் தெரிவித்துள்ளார்.
லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களை ஒடுக்க அரசுப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதையடுத்து அதிருப்தியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேட்டோ படைகள் கடாபிக்கு எதிராக களமிறங்கின.
இந்நிலையில் அமெரிக்காவின் செனட் சபையில் சி.ஐ.ஏ அமைப்பின் தலைவர் லியோன்பெனிட்டா உரையாற்றி போது கூறியதாவது: லிபியாவில் அதிபர் கடாபியின் ஆதரவுப் படைகள் வலுவிழந்து வருகின்றன. நேட்டோ படைகளின் கையே தற்போது ஓங்கி நிற்கிறது.மேலும் சர்வதேச அளவில் அதிபர் கடாபி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.
1000 அடி கற்பாறையில் ஏறி சாதனை படைத்த நபர்கள்.
லிபியாவுக்கு அருகில் உள்ள சஹாரா பாலைவனப் பிரதேசத்தில் அமைந்துள்ள சாட் நாட்டின் பின் தங்கிய ஒரு பகுதியில் எனடி என்ற இடத்தில் நட்டநடு பாலைவனத்தில் ஒற்றைக் கோபுரம் போல் அமைந்துள்ளது ஒரு கற்பாறை. இந்தக் கற்பாறைக்கு மேல் ஏறிப் பார்க்க வேண்டும் என்பது இதுவரை யாரும் எண்ணிப் பார்க்காத ஒரு விடயம்.ஆனால் ஜிம்மி சின் மற்றும் ஜேம்ஸ் பியர்ஸன் ஆகிய இருவரும் முதற் தடவையாக இந்தக் கற்பாரைக்கு மேல் ஏறி சாதனைப் படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்னும் சுமார் ஆறு பேரும் ஒரு குழுவாக பல சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்துள்ளனர்.இதில் ஜிம்மி சின் ஒரு படப்பிடிப்பாளரும் கூட. ஆயிரம் அடி உயரத்தில் இவர்களைக் கீழே இருந்து பார்த்தால் எறும்புகள் போலவும், பூச்சிப் புழுக்களைப் போலவும் தென்படுகின்றனர்.
கண்களைச் சிமிட்டிப் பார்த்தால் மறைந்து விடுவது போலவும் தென்படுகின்றது. இந்த இடத்தைச் சென்றடைவதே ஒரு சிரமமான பயணம்.இருந்தாலும் மழை ஏறுபவர்களுக்கான ஒரு புதிய கண்டத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக இவர்கள் இருவரும் கூறுகின்றனர்.இனி மலையேறும் பலரின் கவனத்தை இந்த இடம் ஈர்க்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
இளவரசி கதே மிடில்டனின் வங்கி கணக்குகள் திருட்டு.
இளவரசர் வில்லியமின் மனைவியான கதே மிடில்டன் வங்கி கணக்கை தனியார் துப்பறியும் நபர் ஒருவர் திருடியுள்ளார்.நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கைக்கு புலனாய்வுச் செய்திகளை தருவதற்காக அவர் கதே மிடில்டன் வங்கி விவரங்களை களவாடினார். இளவரசர் வில்லியமின் தோழியாக இருந்த போது 2005ம் ஆண்டு அவர் பராமரிப்பு வங்கிக் கணக்கு விவரங்களை துப்பறியும் நிபுணர் ஜோதைன் ரீஸ் திருடினார்.
பிரிட்டனின் முக்கியத் தலைவர்களின் ரகசிய விடயங்களை பெறுவதிலும் ரீஸ் தீவிர ஆர்வம் கொண்டு இருந்தார். டோரி பிளேர், ஜாக்ஸ்டிரா கென்ட் மற்றும் தொலைபேசித் தகவல்களை திருடும் வழக்கு விசாரணை தொடர்பாக தலைமை வகித்த மெட்ரோ பாலிடன் பொலிஸ் உதவி கொமிஷனர் ஜான் யேட்ஸ் ஆகியோரது பிரத்யேக விவரங்களை பெறுவதில் ஆர்வம் காட்டினார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கேம்பிரிட்ஜ் இளவரசியான கதே மிடில்டனின் வங்கி கணக்குகள் திருடப்படலாம் என ஸ்காட்லாந்து யார்டின் புலனாய்வுத் துறையினர் எச்சரித்து உள்ளனர். வங்கி கணக்கு விவரங்களை களவாடிய ரீஸ் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார்.கோகைன் போதை மருந்து சதி வழக்கில் ரீஸ் 1999ம் ஆண்டில் 7 வருட சிறைத்தண்டனை பெற்றார். சிறையில் இருந்து வந்த அவரை 2004ல் நியூஸ் ஆப் தி வேர்ல்டு வாடகைக்கு அமர்த்தியது.
இ.கோலி பக்டீரியா தாக்குதல்: விவசாயிகளுக்கு 210 மில்லியன் யூரோ நஷ்டம்.
ஜேர்மனியில் காய்கறிகள் மூலம் பரவிய இ.கோலி என்ற பக்டீரியாவுக்கு 18 பேர் பலியாயினர். 470 பேருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. 1500 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 9 ஐரோப்பிய நாடுகளில் இ.கோலி பக்டீரியா பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்ய ரஷ்யா உள்பட பல நாடுகள் தடை விதித்தன.வெள்ளரி மற்றும் தக்காளி மூலமாகத்தான் இ.கோலி பக்டீரியா பரவியது என கூறப்பட்டதால் இவற்றை பயிரிட்ட ஜேர்மனி விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த வெள்ளரிக்காய் மூலம் தான் இ.கோலி பரவியது என தகவல் பரவியதால் அங்குள்ள விவசாயிகளுக்கு கடந்த வாரத்தில் மட்டும் ரூ.1300 கோடி நஷ்டம் ஏற்பட்டது.இ.கோலி பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் 210 மில்லியன் யூரோ வழங்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது.
லிபியா போராட்டக்குழுவின் முதல் எண்ணெய் விற்பனை துவக்கம்.
கர்னல் கடாபிக்கு எதிராக போராட்டக்காரர்கள் புதிய அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த போராட்டக்குழு நிர்வாகம் தனது முதல் எண்ணெய் விற்பனையை அமெரிக்காவிடம் துவக்கியது.அமெரிக்காவில் டெசோரோ என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தேவையான எரிபொருள் எண்ணெய் விற்பனையை போராட்டக்குழு அரசு நிர்வாகம் துவக்கி உள்ளது.
லிபியாவின் பெங்காசியை மையமாக கொண்ட தேசிய மாற்றக் கவுன்சில் லிபியாவின் 120 லட்சம் பேரால் எண்ணெயை டெசோரோ நிறுவனத்திற்கு அளிக்கிறது. லிபியாவின் கிழக்குப்பகுதி போராட்டாக்காரர்கள் நிர்வாகத்திலேயே உள்ளது.லிபியா போராட்டக்காரர்கள் அரசு நிர்வாகம் அமெரிக்காவுக்கு எண்ணெய் விற்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் அரசு நிர்வாகம் அனுப்பும் எண்ணெய் லைபீரியா கொடியுடன் உள்ள கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. லிபியா மக்களின் வருவாயை பெருக்கும் விதமாக இந்த எண்ணெய் விற்பனையை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.லிபியா தொடர்புக்குழுவை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய அரபு எமிரெட் வந்த நிலையில் இந்த எண்ணெய் விற்பனை அறிவிப்பு வெளியாகியுள்ளது.லிபியாவின் போராட்டக்காரர்களின் அரசு நிர்வாததை பிரான்ஸ், இத்தாலி, கத்தார் மற்றும் சிறு எண்ணிக்கை நாடுகள் ஆதரித்துள்ளன.
ஆப்கனில் நேட்டோ படைத் தாக்குதலில் பொதுமக்கள் பலி: ஒபாமா வருத்தம்.
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நேட்டோ படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாயிடம் பேசினார். மேலும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளைக் குறைப்பது, பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பயங்கரவாத எதிர்ப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கர்சாயிடம் ஒபாமா விவாதித்தார்.
ஹெல்மாண்ட் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கர்சாயிடம் ஒபாமா வருத்தம் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருவரும் பேசிக் கொண்டதாகவும், சுமார் ஒருமணி நேரம் இருவரும் பேசியதாகவும் ஜே கார்னி தெரிவித்தார்.
முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அபாயம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக முஷாரப் ஆஜராகி தன் பதிலை தெரிவிக்காத காரணத்தால் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படி அரசு தரப்பு வக்கீல் கோரியுள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. பெனாசிர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அப்போது அதிபராக இருந்த முஷாரப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என விசாரணை கமிஷன் அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு கடந்த பெப்பிரவரி மாதம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.முஷாரப் தற்போது லண்டன் மற்றும் அமெரிக்காவில் தங்கியுள்ளார். பாகிஸ்தானில் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் திரும்பினால் கைது செய்யப்படுவோம் என்ற காரணத்தால் அவர் வெளிநாட்டிலேயே தங்கியுள்ளார்.
பெனாசிர் கொலை வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் முஷாரப் ஆஜராகாத காரணத்தால் கடந்த மாதம் 30ம் திகதி அவரை "தேடப்படும் குற்றவாளி"யாக கோர்ட் அறிவித்தது. இதைத் தொடர்ந்து முக்கியமான பத்திரிகைகளில் அவர் தேடப்படும் குற்றவாளி என்ற விளம்பரம் வெளியானது.இந்த விளம்பரத்தைக் கண்ட ஏழு நாட்களுக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். தன் வக்கீல் மூலமாவது அவர் கோர்ட்டில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அவரது சொத்துகள் முடக்கப்படும் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் வெளியாகி ஒரு வாரமாகியும், முஷாரப் சார்பில் எந்த வித பதிலும் கிடைக்காத காரணத்தால் அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடும்படி அரசு வக்கீல் நீதிபதி ராணா நிஜாரிடம் கோரிக்கை வைத்தார்.விளம்பரம் வெளியாகி ஏழு நாட்களுக்குள் முஷாரப் தரப்பில் எந்த பதிலும் வராத நிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் 11ம் திகதி நடக்கிறது. அப்போது முஷாரபின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF