Monday, June 13, 2011

இன்றைய செய்திகள்.

ஈராக்கில் உள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்.

ஈராக்கில் பணியாற்றச் சென்ற 30 இலங்கை பணியாளர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.ஈராக் அல் அமாரா என்ற பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.வேலை வழங்குனர்கள் கடந்த 19 மாதங்களாக அவர்களுக்கான வேதனத்தை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் உரிய முறையில் செயற்படவில்லை.
கடந்த முறை அவர்கள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த போதும், அவர்களின் கோரிக்கையைநிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம், ஈராக்கிய அதிகாரிகளுடன் இணைந்து உறுதி வழங்கியது.இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். எனினும் இன்னும் அவர்களுக்கான எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை. 
பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்தாமல் அதற்கப்பால் செல்வது எவ்வாறு?: திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி.
அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தையே இன்னும் முழுமையாக அமுல்படுத்தாமல் அதற்கப்பால் சென்று எவ்வாறு அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியும் என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள இந்தியாவிடம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆயினும்  இன்னும் 13வது திருத்தச்சட்டமே முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில் அதற்கப்பால் சென்று அதிகாரப் பகிர்வை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்று அவர் வினாத் தொடுத்துள்ளார்.இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான இணக்கப்பாடு குறித்து இன்றைய திவயின சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் இந்தியாவுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன் நடைமுறையில் இருக்கும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அரசாங்கம் இந்தியாவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டுக்கு தீமை பயக்கும் விதத்திலான தீர்வுத்திட்டங்களை முன்வைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் அதற்கு ஆதரவு வழங்காது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதனை எதிர்க்கும்.
அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதாயின் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் அதனை முன்வைக்க வேண்டும்.மூன்று  தசாப்த கால யுத்தம் காரணமாக நாட்டின் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் இழக்கப்பட்ட பின் அன்றைக்கு முன்வைக்கப்பட்ட அதே கோரிக்கையின் பிரகாரம் அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு முன் அது குறித்து அரசாங்கம் இன்னொரு தடவை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவை நீண்ட இழுபறிகளின் பின் இன்று ஆரம்பமானது! 201 பேருடன் புறப்பட்டது.
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நீண்ட இழுபறிகளின் பின் இன்று மாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.இன்று பிற்பகல் 3.15 மணியளவில் தூத்துக்குடி வ.ஊ.சி துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் முதலாவது பயணிகள் கப்பல்சேவையை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.தூக்துக்குடி-கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடவுள்ள ஸ்கொட்டியா பிறின்ஸ் என்ற பயணிகள் கப்பலில் 1044 பேர் பயணம் செய்ய முடியும்.  இதில் 307 அறைகள் உள்ளன. ஆரம்பத்தில் இந்தக் கப்பல்சேவை வாரத்தில் இரண்டு நாட்கள் இடம்பெறும்.
கப்பலில் பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக 40 கப்பல் பணியாளர்கள் பணியாற்றுவர்.  மேலும் 25  பணியாளர்கள் குடிவரவு, சுங்க, மற்றும் ஏனைய சோதனைகளில் அதிகாரிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடவுள்ளனர்.300 தொன் எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்தக் கப்பலில் 111 சாதாரண வகுப்பு அறைகள் உள்ளன. கழிவறைகளுடன் கூடிய 22 அறைகளும், கழிவறைகள் மற்றும் குளிக்கும் வசதிகளைக் கொண்ட 169 சொகுசு அறைகளும், 11 முதல்தர அறைகளும் இந்தக் கப்பலில் உள்ளன.
சிற்றுண்டிச்சாலை, உணவகம், சூதாட்ட விடுதி, மதுபானசாலை, மற்றும் சுங்கத் தீர்வையற்ற பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கடைகள் என்பன போன்ற வசதிகளும் பிரஸ்தாப கப்பலில் இருக்கும்.தனிநபர் ஒருவருக்கு சாதாரண படுக்கைக்கு 2243 இந்திய ரூபாவும், சொகுசு படுக்கைக்கு 2588 இந்திய ரூபாவும், உயர்சொகுசு படுக்கைக்கு 2760 இந்திய ரூபாவும், முதலாம் தர அறையொன்றின் படுக்கைக்கு 10,350 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படவுள்ளதாக இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய இலங்கை கப்பல் சேவை ஆரம்பமானது
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை, இன்று உத்தியோகபூர்வமாக தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமானது.தூத்துக்குடி வா.ஊ.சிதம்பரநாத் துறைமுகத்தில் இருந்து இன்று மாலை 3.15 அளவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கொடியசைத்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.இன்றைய முதலாவது பயணத்தில், நல்லெண்ண தூதுவர்கள் 80 பேர், 121 பயணிகள் உட்பட, மொத்தமாக 201 பேர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
முன்னர் இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வாசன், இதேபோன்ற சேவை ஒன்றினை இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.இது தொடர்பான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், பணிகள் பூர்த்தி அடைந்ததும், ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.இதேவேளை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இன்று மாலை ஆரம்பமான இந்த கப்பல் சேவை, கொழும்பை வந்தடைய சுமார் 14 மணி நேரம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழிகளில் தங்கியிருக்கும் கடாபி.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றனர்.அதற்கு மறுத்து வரும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ராணுவத்தின் மூலம் கொன்று குவித்து வருகிறார்.
எனவே போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ படைகள் களமிறங்கியுள்ளன. அதிபர் கடாபியின் ராணுவ தளங்கள் மற்றும் அவரது மாளிகையின் மீது அப்படையின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர்.சமீபத்தில் நடந்த குண்டு வீச்சில் கடாபியின் இளைய மகன் மற்றும் 3 பேரக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதில் கடாபியும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதை தொடர்ந்து கடாபி திடீரென தலைமறைவானார். அவர் எங்கு தங்கியுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில் நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க அவர் பாதாள பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. பாலைவனத்தில் 13 அடி ஆழ பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குளு குளு வசதியுடைய பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க 600 அடி ஆழ பதுங்கு குழிகளில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பதுங்கு குழிகளை திரிபோலி அருகே கடந்த 1980ம் ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் கடாபி கட்டியதாக தெரிகிறது.
சிலி எரிமலை வெடிப்பு: அவுஸ்திரேலிய விமான சேவை பாதிப்பு.
சிலி நாட்டின் புயேஹு எரிமலை கடந்த வாரம் வெடித்து சாம்பல் புகையை கக்கி வருகிறது. அதிகளவில் வெளியேறிய சாம்பல் புகை நியூசிலாந்தின் வான் எல்லை வரை பரவியுள்ளது.இதனால் அவுஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான நிறுவனம் நியூசிலாந்து சென்று திரும்பும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்து விட்டது.
இதே போல் குவான்டாஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெட் ஸ்டார் நிறுவனமும் 60க்கும் அதிகமான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.வர்ஜின் அவுஸ்திரேலியா விமான நிறுவனமும் நியூசிலாந்து செல்லும் 2 விமானங்களை ரத்து செய்தது. ஆனால் ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் மாற்று வழியில் விமானத்தை இயக்குகின்றன. எரிமலை சாம்பல் விமான ஜெட் இன்ஜினுக்குள் சென்றால் அதன் செயல்பாடு மோசமடையும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைன் போர் ஒத்திகை: ரஷ்யா கடும் எதிர்ப்பு.
சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது.இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என நேட்டோ நாடுகளை வலியுறுத்தியது.ரஷியாவின் இந்த கோரிக்கையை ஏற்க நேட்டோ நாடுகள் மறுத்து விட்டன. இதை தொடர்ந்து அமெரிக்கா போர்க்கப்பல் கருங்கடலுக்குள் நிலைநிறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை மிஞ்சும் சீனா.
அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது.கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார்.
கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது.
கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,"தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நிலையில் அமெரிக்காவுக்கு போட்டி போடும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது. சமீப ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை நவீனப்படுத்திக் கொள்ள அமெரிக்காவின் உதவியை சீனா எதிர்பார்த்துள்ளது" என்றார்.அமெரிக்காவின் ஆதிக்கம் 50 ஆண்டுகளாக தான் உள்ளது. ஆனால் இரண்டு ஆயிரம் ஆண்டுகளில் 1600 ஆண்டுகள் சீனா ஆதிக்கம் தான் காணப்பட்டது. அமெரிக்கா புதிய உலகில் நுழைகிறது. இதில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது விலகிக் கொள்ளவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ் தகவல்.
அமெரிக்காவில் ஹேட்லி கைது செய்யப்பட்டதன் மூலம் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கும், பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த தகவல்கள் வந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டே ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும், லஷ்கர் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்தாக விக்கீலிக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 2005ம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரிடம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விஜய் நம்பியார் உலகளவில் நடைபெறும் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் மையமாக உள்ளது.
ஐ.எஸ்.ஐ தலைவர் மற்றும் லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசுவதற்கான ஆதாரம் உள்ளதாக கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தை ஐ.எஸ்.ஐ அமைப்பு குறி‌வைத்துள்ளதாகவும், ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வங்கசேதம் சென்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும், இந்த செயல்களால் இந்தியா கவலையடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆப்கனை சேர்ந்த தலிபான் அமைப்‌பை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அவர்களுடன் போட்டி போடுகின்றனர். ஐ. எஸ்.ஐ தலைவர்கள் லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசியதற்கான ஆதாரங்களை அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்தில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு பல முறை ஏற்பட்டது.கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் 11 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
கடந்த வாரத்திலும் கிரைஸ்ட்சர்ச்சசில் 2 அதிர்வுகள் ஏற்பட்டன. அந்த அதிர்வின் காரணமாக நகரம் பதட்டத்திற்கு ஆளானது.நிலநடுக்கத்தால் சில பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தாலும் பெரிய அளவில் யாரும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது 181 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த நிலநடுக்க அதிர்ச்சி மக்கள் மனதை விட்டு மறையாத நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.
90 வயது பெண்ணுக்கு 70 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த இரண்டாம் உலகப்போர் பதக்கங்கள்.
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் விமானப்படையில் பணியாற்றிய பெண் தனது 90 வயதில் அந்தப் போருக்கான பதக்கங்களை பெற்றார். 70 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அந்த பதக்கங்களை பெற்றார்.இரண்டாம் உலகப்போரின் போது போர்த்க்காலைச் சேர்ந்த யோனே கார்னெலியஸ் பணியாற்றினார். துணை விமானப்படை பிரிவில் அவர் பணியாற்றினார். அவருக்கு லிபர்ட் ஸ்யே விழாவில் பதக்கங்கள் அளிக்கப்பட்டன.
பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றிய வெல்ஷ் விமானப்படை வீரர்களுக்கு உலகப்போரின் 70வது விருந்து நிகழ்ச்சி நேற்று லிபர்ட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியின் போது விமான வீராங்கனை யோனெவுக்கு உலகப்போர் பதக்கங்கள் வழங்கப்பட்டன.குரூப் கப்டன் டிக் ஆலன் பிரிட்டன் படை பிரிவில் பங்கேற்ற திருமதி கார்னெலியசுக்கும் இதர உலக போர் சாகச வீரர்களுக்கம் நன்றி தெரிவித்துக் கொண்டார். இரண்டாம் உலகப்போரின் போது டோவர், லண்டன், கென்ட் பகுதிகளில் போர் தாக்குதல் வழிநடத்தல் குறித்த அறிவுறுத்தல் பணியை யோனே கார்னெலியஸ் மேற்கொண்டிருந்தார்.
இத்தகைய தீரமிக்க வீராங்கனை வீரர்கள் பணியால் நாம் வெற்றியை பெற முடிந்தது என விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனின் போர்க்களமான ஸ்டான்மோரில் அமைந்த பதுங்கு குழிக்கு பல வி.ஐ.பி.க்கள் வந்த போது யோனே கார்னெலியஸ் சேவை நினைவுக்கூரப்பட்டுள்ளது என குரூப் கப்டன் ஆலன் நெகிழ்வுடன் தெரிவித்தார்.போர் நடந்த பதுங்கு குழி பகுதிக்கு அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற தலைவர்கள் வந்ததையும் ஆலன் நினைவு கூர்ந்தார்.
இ.கோலி பக்டீரியாவால் சிறுநீரகம் பாதிப்பு: ஜேர்மனி மக்கள் கவலை.
ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கி உள்ள இ.கோலி பக்டீரியாவால் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதல் காரணமாக இதுவரை 32 பேர் ஜேர்மனியில் இறந்துள்ளனர்.ஸ்வீடனில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதைத் தவிர 14 நாடுகளில் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டும் அல்லாமல் இந்த நுண் உயிரி தாக்கம் காரணமாக சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பு ஜேர்மனி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியான சோசியல் டெமாக்ரேட் கட்சியின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கார்ல் லாடர்பாச் கூறுகையில்,"இ.கோலி பக்டீரியா பாதிப்பால் சிலரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது" என கவலை தெரிவித்தார்.இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு உள்ளான 100 நோயாளிகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் உயிர் பிழைக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது என்று அவர் நாளிதழ் பில்ட் ஆம் சோன்டக்கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்த இ.கோலி பக்டீரியா தாக்கம் மீண்டும் ஏற்படும் என அவர் எச்சரித்தார். மருத்துவமனைகளில் இனி அனுமதிக்கப்படும் இ.கோலி பக்டீரியா பாதிப்பு நோயாளிகளின் விவரம் ஜேர்மனியின் பொது சுகாதாரத்துறை ஆணையமான ரொபர்ட் கொச் இன்ஸ்டிடியூட்டுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதிப்பு குறித்த விவரங்களை அறிவதில் முன்னேற்றம் தேவை என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் டேனியல் பர் ஒப்புக் கொண்டார். இதே நேரத்தில் நுகர்வோர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் லிசெ கூறுகையில்,"உணவு பொருட்களை முறைப்படுத்த வேண்டி உள்ளது" என்றார்.வழக்கறிஞர் சாக்சன் கிராமமான பினென் படேல் பகுதியில் உள்ள பண்ணை காய்கறிகளில் இருந்து இ.கோலி பக்டீரியா பரவி உள்ளதை தேசிய ஆய்வு அமைப்பான பி.ஐ.ஆர் உறுதிப்படுத்தியது.
சிரிய அதிபருக்கு எதிராக பாரிசில் மக்கள் போராட்டம்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் ஊழலும் சர்வாதிகாரமும் தலைவிரித்து ஆடுகிறது என அந்த நாட்டில் எதிர்ப்பு போராட்டம் வெடித்து தீவிரமாகி உள்ளது.சிரிய நிர்வாகத்தை வெளியேற்ற வேண்டும் என உலக நாடுகளிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகே நேற்று 300 பேர் கூடி சிரியா நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சர்வதேச சமூகம் சிரியா அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள். போராட்டக்காரர்களை தாக்குவதாக கூறிக்கொண்டு சிரியா நிர்வாகம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்கு முறையை கையாண்டு வருகிறது என போராடக்காரர்களில் ஒருவரான ரபி குமுறினார்.இந்த கருத்துக்கள் இதர நபர்களிடம் இருந்தும் வந்தன. சிரியாவில் ராணுவ குறுக்கீடு வரக்கூடாது. சிரியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பசாத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தினர்.
பாரிசில் நடந்த எதிர்ப்பு போராட்டம் சிரியா மக்கள் சார்பில் நடந்ததாக கருதக்கூடாது. அரபு உலகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் சிரியா மக்களுக்காக ஆதரவுக்கரம் நீட்டி உள்னர் என எதிர்ப்பாளர்கள் கூறினர்.சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் மத்தியில் எதிர்ப்பு போராட்டம் சிரியாவில் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க சிரியா ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் இதுவரை 1200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை குழுவினர் சிரியா நிர்வாகத்தை கண்டித்து உள்ளனர்.
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.யின் சில அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ராணுவம் நிராகரித்து விட்டது.இதனால் பேச்சுவார்த்தை நடத்தி வந்த சி.ஐ.ஏ இயக்குனர் லியோன் பனெட்டா வெறுங்கையுடன் அமெரிக்கா திரும்பினார். சி.ஐ.ஏ இயக்குனர் லியோன் பனெட்டா கடந்த 10ம் திகதி இஸ்லாமாபாத்துக்கு வந்தார்.பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கியானி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா இருவரையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அப்போது அவர்களிடம் ஒரு வீடியோவை போட்டுக் காட்டினார்.
அதில் வடக்கு வாஜிரிஸ்தான் மற்றும் தெற்கு வாஜிரிஸ்தானில் வெடிபொருட்கள், குண்டுகள் தயாரிக்கும் இரு தொழிற்சாலைகளை காலி செய்து விட்டு பயங்கரவாதிகள் வெளியேறுவது பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் பகதூர் மற்றும் ஹக்கானி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.இதன் பின் பேசிய பனெட்டா பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஐ.எஸ்.ஐ.க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. அதனால் தான் அந்த வெடிபொருட்கள் தொழிற்சாலைகளை பாகிஸ்தான் ராணுவம் முற்றுகையிடுவதற்கு முன் பயங்கரவாதிகள் எளிதில் தப்பித்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை வேருடன் அறுக்க வேண்டுமானால் சி.ஐ.ஏ பாகிஸ்தானில் சில தன்னிச்சையான காரியங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவாக சி.ஐ.ஏ அதிகாரிகள் சிலருக்கு பாகிஸ்தான் விசா வழங்கப்பட வேண்டும். அவர்கள் யாரையும் சாராமல் சுயேச்சையாக சில நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்று பனெட்டா தன் கோரிக்கையை முன்வைத்தார்.ஆனால் சி.ஐ.ஏ.யுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்ந்து நடக்கும். சி.ஐ.ஏ அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட மட்டும் அனுமதி அளிக்க மாட்டோம். சமீபத்தில் அமைக்கப்பட்ட உளவு ஒத்துழைப்புக்கான கூட்டு அதிரடிப் படை தான் எதிர்காலத்தில் சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ இடையிலான உறவு மையமாக செயல்படும் என்று கியானியும், பாஷாவும் வலியுறுத்தினர்.
சர்வதேச நிதி நிறுவனத்தின் தகவல்கள் திருட்டு.
சிட்டி வங்கி, சோனி நிறுவனம், கூகுளை அடுத்து தற்போது இணையத் திருடர்களின் கைவரிசைக்கு சர்வதேச நிதி நிறுவனம் ஆளாகியுள்ளது.ஐ.எம்.எப்.பின் முக்கிய தகவல்களை குறிவைத்து நடந்துள்ள இத்தாக்குதலோடு வெளிநாட்டு அரசு ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 14ம் திகதி ஐ.எம்.எப்.பின் அப்போதைய தலைவரான டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதற்கு முன் அந்நிறுவனத்தின் முக்கிய கணணிகளுக்குள் இணையத் திருடர்கள் புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
இதை அந்நிறுவனம் மற்றும் உலக வங்கியின் மென்பொருள் பாதுகாப்பு நிபுணர் டோம் கெல்லர்மென் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இத்தாக்குதல் ஒரு இலக்கோடு தான் நடத்தப்பட்டுள்ளது. பணப் பரிமாற்ற ஸ்திரத் தன்மையை மேம்படுத்த உதவும் சில பொருளாதார தரவுகள், உலக வர்த்தகத்தை சமநிலையில் பேண உதவும் சில தகவல்கள், உறுப்பு நாடுகளின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தரும் தகவல்கள் ஆகியவற்றைக் குறிவைத்து இத்தாக்குதல் நடந்தது.ஐ.எம்.எப் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஹாலே,"இத்தாக்குதலுக்குப் பின் எவ்விதப் பாதிப்பும் இன்றி நிறுவனம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் கன்னிங்ஹாம் தெரிவித்தார்.ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்,"இத்தாக்குதலின் பின்னணியில் ஒரு வெளிநாட்டு அரசுக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. சில ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் திருடப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது. முன்னெச்சரிக்கையாக உலக வங்கி, ஐ.எம்.எப் உடனான கணணித் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு விட்டது.
அணு உலைகளை உளவு பார்த்த அமெரிக்க உளவாளி கைது.
பாகிஸ்தானில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேத்யூ கிரெய்க் பேரட்(27). இவர் இஸ்லாமாபாத் அருகே பெத்ஜங் என்ற இடத்தில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் பொலிசார் இவரை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி ராவல்பிண்டி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு இவருக்கு கடந்த 4ம் திகதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இவர் பெத்ஜங் பகுதியில் இருந்து தப்பித் தலைமறைவானார். இதையடுத்து பாகிஸ்தான் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இவரைக் கைது செய்தனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேத்யூ பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
18 சுரங்கத் தொழிலாளர்களை கடத்திச் சென்ற தலிபான்கள்.
பாகிஸ்தானில் 18 சுரங்கத் தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தாரா ஆடம் கேல் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு 100 தலிபான்கள் துப்பாக்கிகளுடன் அங்குச் சென்று தொழிலாளர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து சில தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். 18 தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று விட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் அங்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட தொழிலாளர்களை தேடி வருகின்றனர். தாரா ஆடம் கேல் பகுதியில் உள்ள சுரங்க அதிபர்களை தலிபான் தீவிரவாதிகள் மிரட்டி மாதந்தோறும் வரி வசூலித்து வந்தனர்.
மேலும் ராணுவத்துக்கும், அரசு நிர்வாகத்துக்கும் உதவக்கூடாது என்றும் அவர்கள் மிரட்டி வந்தனர். இந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், சுரங்க அதிபர்களுக்கு ஆதரவாகவும் மொமின் கான் அப்ரிதி தலைமையில் மற்றொரு தீவிரவாதக் குழு உருவாகி இருக்கிறது.தலிபான் தீவிரவாதிகள் தாரா ஆடம் கேல் பகுதியில் தீவிரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் வர்த்தகர்களை மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் மொமின் கான் அப்ரிதி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் சுரங்கத் தொழிலாளர்களை கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF