இன்றைய சமுதாய சூழ்நிலையில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்பாடுகளில் மனஅழுத்தம் முக்கியமானது.
ஏழை, பணக்காரர், கல்வியற்றவர், கல்வியாளர், பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் ஏதாவது ஒரு நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாக நேர்கிறது.
இத்தகைய மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு தியானம், யோகா என பல்வேறு வழிமுறைகளை பலரும் கடைபிடிக்கின்றனர்.
இதற்கான பயிற்சி பெறும் காலத்தில் தொடர்ச்சியாக வகுப்பிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அதன் காரணமாகவே கூடுதலான மன அழுத்தத்திற்கு ஆளாகும் சிக்கலும் சிலருக்கு நேர்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பர்.
இதேபோன்று மனம் விட்டு பேசினால், மன அழுத்தம் நீங்கிவிடும் என்பது மனநல ஆலோசகர்களின் கருத்து. மனதில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள இயலாமல் மனதிற்குள் அடக்கி வைப்ப து தான் மன அழுத்தத்திற்கு அடிப்படை காரணம்.
நினைப்பதை வெளியில் பேசமுடியாத நிலை பெரியவர்களுக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தின் பாதிப்பை அவர்கள் வெளிப்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இதன் பின்விளைவாக ஏற்படும் சிரமங்களையும், பிரச்னைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் தவிர்க்க இயலாது.இதேசமயம், வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர் மன அழுத்தத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
குடும்பம், சுற்றுப்புற சமுதாயம், பள்ளி ஆகிய சூழல்களில் மாணவர்கள் வசிக்கின்றனர். இதில் ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களின் ஆதிக்கம், அடக்கு முறைக்கு கட்டுப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தநேரத்தில் வாய்ப்பு கிடைத்தாலும், இந்த அடக்குமுறைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற ஆவல் மாணவ, மாணவியருக்கு ஏற்படுகிறது.
இதன் விளைவாகத்தான் பள்ளிப்பருவத்தில் தவறான வழியில் செல்தல், தற்கொலை,கொலை ஆகிய செயல்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
வளர் இளம் பருவ மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் தரப்பட்டது.
இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் பெற்றோர் தங்களை கண்டிப்பது பிடிக்கவில்லை, வீட்டில் நீண்ட நேரம் இருப்பது பிடிக்கவில்லை, பெற்றோர்களின் பல செயல்கள் தங்களை கோபப்படுத்துகின்றன, பெற்றோர் தங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை, பெற்றோர் எந்தவொரு விஷயத்திலும் தங்கள் கருத்தை கேட்பதும் இல்லை, அதற்கு முக்கியத்துவம் தருவதும் இல்லை என குமுறியுள்ளனர்.
இத்துடன் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் தங்களுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை, ஆசிரியர்கள் தங்கள் மீதும், கல்வியிலும் போதிய ஈடுபாடு காட்டவில்லை என்பவை உள்ளிட்ட குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் , தங்களை மீறி செல்ல இயலாதவர்கள் என்பதற்காக அடக்குமுறையை அளவிற்கு மீறி பிரயோகம் செய்தும்போது தான், அத்துமீறல்கள் ஏற்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
குடும்ப சூழ்நிலை, தங்களது பொருளாதார நிலை, உறவுகளின் நிலவரம் ஆகியவை குறித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மனம்விட்டு பேசவேண்டும். அவர்கள் தரப்பில் உள்ள பிரச்னைகள், விருப்பு, வெறுப்புகளை பொறுமையாக கேட்டறிய வேண்டும்.
மற்றவர்களிடம் முறையீடு செய்து, பஞ்சாயத்து வைத்து பிரச்னைக்கு தீர்வு காண நினைப்பது தவறு. இதை உணர்ந்து செயல்பட்டால் தோளுக்கு மேல் வளர்ந்தவர்கள் தொல்லையாக மாறாமல் தோழன், தோழியாகவே காலம் முழுவதும் இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.