Friday, February 11, 2011

இன்றைய செய்திகள் 11/02/2011

ஏனைய அணிகளின் பலத்தை எதிர்கொண்டு கிண்ணத்தை வெற்றிகொள்வோம்: முரளிதரன்.

இம்மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஏனைய அணிகளின் பலத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உலகக் கிண்ணப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுவதால் ஏனைய அணிகள் பலம் வாய்ந்ததாக இருப்பதோடு போட்டித் தன்மை அதிகம் காணப்படும்.
இதேவேளை இலங்கையிலும் போட்டிகள் நடைபெறுவதால் வெற்றி பெறுவதற்கு சாத்தியகூறுகள் காணப்படுகின்றன. எனவே, போட்டிகளைப் பார்வையிடும் இலங்கை இரசிகர்கள் எமது அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இருபது வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நான், ஐந்து முறை உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றி உள்ளேன். எனக்கு தற்போது வயது 38 என்பதால் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்தோடு ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பேன் எனத் தெரிவித்தார்.

நாம் உலக கிண்ணத்துக்கு தயார் நிலையில் : இலங்கை அணி தலைவர்.
உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு போதுமான அளவு பயிற்சிகளை பெற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் அதற்கான தயார் நிலை ஆட்டத்தில் போதுமான அளவில் விளையாடி உள்ளோம் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் எமக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன என்றும் சங்கக்கார குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணியின் தயார் நிலை குறித்து ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து தெரிவித்த போதே சங்கக்கார அவ்வாறு தெரிவித்தார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க உலகக் கிண்ணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய வரிசை வலுவாக இல்லை என்று குற்றச்சாட்டு குறித்து சங்கக்காரவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த சங்கக்கார, அர்ஜுன ரணதுங்கவின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். எனினும் நெருக்கடியான நேரத்தில் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து ஆடும் வகையிலேயே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணித் தேர்வின் போது இந்த விடயம் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டது என்றார்.

இதில் சிரேஷ்ட வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் சமிந்த வாசின் நீக்கம் குறித்து கருத்து கூறிய சங்கக்கார, இவர்களை அணியில் இணைத்துக் கொள்வதற்கு எந்த அணியும் மறுப்பு தெரிவிக்காது எனினும் இவர்கள் இல்லாமல் நாம் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தற்போதைய அணி உலகக் கிண்ணத்திற்கு பொருத்தமாக அமைந்து விட்டது.

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 படையினர் உடல் சிதறிப் பலி!

பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ மையத்தில் பள்ளி சீருடையில் வந்த தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில், 31 வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெஷாவர் மாவட்டம் மர்தான் நகரில் பஞ்சாப் மாகாணத்தின் ராணுவ மையம் உள்ளது. நேற்று காலை இங்குள்ள மைதானத்தில் ராணுவ வீரர்கள் கவாத்து பழகிக்கொண்டிருந்தனர். அப்போது ராணுவ மையத்தில் 15 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் பள்ளி சீருடையில் நுழைந்தனர். 

ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்துக்கு வந்த அந்த இளைஞர்கள் திடீரென தங்கள் பையில் வைத்திருந்த வெடிமருந்தை வெடிக்கச்செய்தனர். இந்த சம்பவத்தில் 31 வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரக் கூடும். பாகிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மொஹ்மான்ட் மாவட்டத்தில் 25 ஆயிரம் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த காலங் களில் மர்தான் ராணுவ மையத்தின் மீது, பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் இரண்டுமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து பிரதமர் யூசுப் ரசா கிலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க போர் விமானத்தில் 45 நிமிடங்கள் பறந்த ரத்தன் டாடா! 74 வயது இந்திய தொழில் அதிபரின் மகத்தான சாதனை.

வயது இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா, `எப்-18' என்ற அமெரிக்க போர் விமானத்தில் நேற்று சுமார் 45 நிமிடங்கள் பறந்து சாதனை நிகழ்த்தினார். ``அமெரிக்க யுத்த விமானத்தில் பறந்தது ஒரு புதுவிதமான அனுபவம்'' என்று அவர் கூறினார். விமான சாகச நிகழ்ச்சி ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவான ``ஏரோ இந்தியா-2011'' என்ற விமான கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 

பெங்களூர் எலகங்காவில் உள்ள விமானப்படை விமான நிலையத்தில் இந்த கண்காட்சி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிகள் நேற்று 2-வது நாளாக நடந்தன. 

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட அதி நவீன மற்றும் கண் இமைக்கும் ந்நேரத்தில் பல நூறு மைல்கள் கடந்து செல்லக் கூடிய போர் விமானங்கள் வான மண்டலத்தில் சாகசங்கள் புரிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதை நூற்றுக்கணக்கானவர்கள் கண்டு களித்து பரவசம் அடைந்தனர். 74 வயது ரத்தன் டாடா நேற்றைய விமான சாகச நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, ``எப்-18'' என்ற அமெரிக்க யுத்த விமானத்தில் பறந்து சென்று சாகசம் நிகழ்த்தியதாகும். 

74 வயதான ரத்தன் டாடா ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விமான கண்காட்சியில் கலந்து கொண்டு ``எப்-16'' என்ற அமெரிக்க போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்து இருந்தார். நேற்று அவர் பறந்து சென்ற விமானம், அதை விட கூடுதலான சக்தி கொண்ட ``சூப்பர் ஜெட்'` போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அற்புதமான அனுபவம் விமானத்தில் அவர் இணை விமானியாக செயல்பட் டார். விமானிக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். விமானத்தில் பறப்பதற்கு முன்பு அவருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அசுர வேகத்தில் விமானம் பறக்கும்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து டாக்டர்கள் ஆய்வு நடத்தினார்கள். 

அமெரிக்க விமானத்தில் சுமார் 45 நிமிடங்கள் ரத்தன் டாடா வானத்தில் பறந்தார். வானில் பறந்து வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு தரை இறங்கிய ரத்தன் டாடாவிடம், விமான பயணம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, ``இது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்'' என்று ரத்தன் டாடா பதில் அளித்தார்.

 

இயற்கை துப்புரவாளர்களுக்கு இனி பற்றாக்குறை: அழிவின் விளிம்பில் பிணந்தின்னிக் கழுகுகள்.

தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் உபயோகத்தில் இருப்பதால், பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு. இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

கேரள மாநிலம், கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைப் பேராசிரியர் கிறிஸ்டோபர், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: பிணந்தின்னிக்கழுகுகள் குறித்து ஆராய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பறவை ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, "பம்பாய் இயற்கை வரலாற்று மையம்' பல்வேறு பகுதிகளிலும் ஆய்வில் ஈடுபட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் "அருளகம்' அமைப்பு இணைந்து செயல்படுகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம் பகுதிகளிலும், கேரளாவில் ஆறு இடங்களிலும், பிணந்தின்னிக்கழுகுகள் இருப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினோம். 

அக்., - நவ., மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு. 

கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது. கடந்த 1993ல் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்து, "டைக்குளாபினாக்' இந்தியாவில் அறிமுகமானது. அந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள், இறந்த பின் தூக்கி எறியப்பட்டால் அவற்றை உண்ணும் கழுகுகள், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி ஒரே நாளில் இறந்து விடும்.இக்காரணத்தைக் கண்டறியும் முன், 99.9 சதவீத கழுகுகள் இறந்து விட்டன. நாங்கள் நடத்திய ஆய்வில், கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. 

நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.



வானிலிருந்து விழுந்து இராணுவ வீரர் மரணம்: பரசூட் பயிற்சியின் போது அசம்பாவிதம்.
இலங்கை இராணுவத்தைச் சோ்ந்த விசேட படையணி வீரரொருவர் வானிலிருந்து விழுந்து மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ள சம்பவம் இன்று காலை ஹம்பாந்தோட்டை வீரவில் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
விமானப்படையினருடன் இணைந்து பரசூட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே அவர் விபத்துக்குள்ளாகி மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எட்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து அவர் பரசூட்டைக் கட்டிக்கொண்டு குதித்த போதும் அவரது பரசூட் ஒழுங்காக விரியாத காரணத்தால் அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வீரவில குளத்தில் விழுந்து கிடந்த அவரது சடலம் கைப்பற்றப்பட்டு தற்போது மரண பரிசோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF