அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நோயாளியின் உடல் நரம்புகளை ஒளிரச் செய்யும் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அறுவை சிகிச்சை என்றால் அனைவருக்கும் ஒரு வித பயம் ஏற்படுவது வழக்கம். காரணம் சிகிச்சையின் போது ஏற்படும் சில தவறுகளால் பல பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் புதிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.பொதுவாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் உடலில் உள்ள நரம்புகளை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க தவறும் போது தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் எலக்ட்ரானிக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு மின்காந்த அலைகளில் ஒளிரக்கூடிய திரவம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போது நோயாளி உடலில் இதை செலுத்தினால், அவரது உடல் நரம்புகள் அனைத்தும் ஒளிரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக அமினோ அமிலங்கள் அடங்கிய இந்த புரோட்டின் கலவையை எலிகள் மீது செலுத்தி சோதனை செய்த போது, அவற்றின் உடலில் உள்ள நரம்புகள் ஒளிர்ந்தன. இதன் மூலம் உடலின் பிற பகுதிகளையும், நரம்புகளையும் எளிதாக பிரித்தறிய முடிகிறது.மேலும் அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.