Friday, February 18, 2011

இன்றைய செய்திகள் 18/02/2011

இலங்கை மக்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு வீடு. ஜனாதிபதி திட்டம்.

நாட்டில் சகலருக்கும் சொந்த வீட்டைப் பெற்றுக்கொடுப்பதே மஹிந்த சிந்தனை எதிர்காலத்திட்டத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்து இலட்சம் வீடுகளை இலக்காகக் கொண்ட ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கிருலப்பனை மிஹிந்துபுரவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து நிர்மாணப்பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி மக்களுக்கான சேவைகளை எத்தகைய அரசியல் அவதூறுகளுக்காகவும் நிறுத்தப் போவதில்லையென தெரிந்ததுடன் சகலருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி தனி மனித வாழ்வை உயர்த்தி அதன் மூலம் குடும்பத்தை உயர்த்தி அதனூடாக கிராமத்தைக் கட்டியெழுப்பி அதிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதே மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும். மூன்று தசாப்த கால கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப எம்மால் முடிந்துள்ளது. போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிநபர் வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாட்டிலும் நாம் வெற்றிகண்டுள்ளோம். நாடு சுதந்திரமடைந்த கால கட்டத்தில் 1030 டொலராகவிருந்த தனிநபர் வருமானத்தை 2400 டொலராக தற்போது அதிகரிக்க முடிந்துள்ளது. இதனை இரண்டு மடங்காக அதிகரிப்பதே எமது இலக்கு.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போதும் நாட்டின் ஏனைய துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இலவச பாடநூல் விநியோகத்திலிருந்து கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குப் பொதிவரை அரசாங்கம் வழங்குகிறது. நெனசல அறிவகத்தை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று உலகை கிராமங்களோடு இணைக்க முடிந்துள்ளது. அதே போன்று வீடமைப்புத் திட்டங்களும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய தரத்தினருக்கான வீடுகளைப் போன்றே வறுமை நிலை மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்தவுள்ளோம். குடிசைகளில் குடியிருப்போர் புதிய வசதியான வீட்டுற்குச் செல்லும் போது வரும் மகிழ்ச்சி அளப்பரியது. சேரிகளிலும் முடுக்குகளிலும் வாழ்கின்ற மக்கள் எந்நாளும் அதில் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சூழலில் இருந்து ஒரு மாற்றுச் சூழலுக்கு வரும்போது அவர்களின் மனநிலையும் வாழ்க்கையும் மாற்றமடையும்.

ஜனசெவன வீட்டுத் திட்டம் சகல மக்களுக்குமான வீட்டினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று 560 வீடுகள் கொண்ட வீட்டுத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எந்த வெளிநாட்டு நிதியும் இன்றி அரசாங்கமே முழுமையான நிதியை வழங்குகிறது. வீடமைப்பு வங்கி வீடமைப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பசில் ராஜபக்ச விமல் வீரவன்ச தினேஷ் குணவர்தன கீதாஞ்சன குணவர்தன பிரதியமைச்சர் அப்துல் காதர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



நுவரேலியாவாக மாறும் மட்டக்களப்பு வழமைக்கு மாறாக அதிகமாக பனிமூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை சுமார் எட்டு மணிவரை வழமைக்கு மாறாக பனிமூட்டம் அதிகமாக காணப்ட்டது. வீதிகளில் வாகனங்களை செலுத்துவதில் சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டனர்.அத்துடன் வீதி விபத்துக்களும் இடம் பெற்றன. கிழக்கு மகாணத்தில் அண்மைக்காலமாக காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில் குளிரும் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஹ்ரேனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 4 பேர் பலி .
பஹ்ரேனில் இடம்பெற்று வரும் அந்நாட்டு அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டு தலைநகரான மனாமாவில் உள்ள பேர்ல் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இவர்களைக் கலைக்க பொலிஸார் முற்பட்டபோது இடம்பெற்ற மோதல் சம்பவத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் இம்மோதலில் சிக்கி 50 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக அங்கு தொடரும் போராட்டங்களில் அந்நாட்டு ஜனாதிபதி ஷேய்க் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா பதவி விலகவேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





இலங்கையில் குண்டு வீசும் விமானங்களை இரகசியமாக தயாரிக்கும் பணியில் சீனா!

கொழும்பில் இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியில் 04 ஏக்கர் சீன நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டு உள்ளது என லங்கநீயூஸ் வெப் இணையத்தளம் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து செய்து பிரசுரித்து உள்ளது. 

கடின் ஹெம் என்கிற நிறுவனம் இக்காணித் துண்டை ஹோட்டம் நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த உள்ளது என்று வெளியில் சொல்லி வருகின்றது என்றும் ஆனால் உண்மையில் குண்டு வீசும் விமானங்களை தயாரிக்கின்றமையே இந்நிறுவனத்தாரின் நோக்கம் என்றும் இச்செய்தியில் கூறப்பட்டு உள்ளது. 

இந்நிறுவனத்துக்கு சீனாவில் ஒரேயொரு ஹோட்டல் மாத்திரமே உண்டு என்றும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக கிண்ண போட்டிக்கு வெடிகுண்டு வைக்கும் அமெரிக்கா!

எதிர்வரும் உலக கிண்ண கிறிக்கெற் போட்டி நடைபெற இருக்கும் நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்து உள்ளது. இலங்கை, இந்தியா, பங்காளதேஷ் ஆகிய நாடுகளில் இப்போட்டி இம்முறை இடம்பெற உள்ளது. 

போட்டி நாளை ஆரம்பம் ஆகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நிறைவடைகின்றது. இந்நிலையில் உலக கிறிக்கெற் போட்டிகளை நேரில் பார்வையிட செல்லும் பிரஜைகள் எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

தலைக்குள் கத்தியுடன் நான்கு வருடங்களாக வாழ்ந்த வாலிபர்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்.

சீனாவைச் சேர்ந்த லீபூ என்பவர் தனக்கு அடிக்கடி தலைவலிப்பதாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற சென்றார். அவருடைய தலையை ஸ்கேன் செய்து பார்க்கையில் அவருடைய தலையில் கத்தி இருந்தது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவரிடம் இது குறித்து விசாரித்தனர். 

இதுகுறித்து விளக்கிய லீபூ, தான் 2006ஆம் அண்டு யுன்னான் புரோவின்ஸ் (சீனா) பகுதியில் சென்றபோது வழப்பறி கொள்ளையர்களால் கத்தியால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.இதனை அடுத்து லீக்கு அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்ற டாக்கடர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்றினார்கள். 

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 
கத்தியுடன் 4 ஆண்டுகள் இருந்தது மிக அரிதான ஒன்றாகும். தன்னுடைய பணிக்காலத்தில் இதுபோன்ற ஒரு பாதிப்பு அடைந்த ஒருவரை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு 8 வயது தான் ஆகிறது; ஆனால் தோற்றமோ 80 வயது பாட்டி போல! விசித்திர நோயால் அவதி.
இந்தச் சிறுமிக்கு எட்டு வயதுதான் ஆகின்றது. ஆனால் தோற்றமோ 80 வயதுத் தோற்றம். விரைவாக வயதாகும் ஒரு வகை அரிய நோய் தான் இந்த நிலைமைக்குக் காரணம்.Hutchinson-Gilford Progeria Syndrome (HGP) என்று இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

முதலாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இவருக்கு இந்த நோய்த் தாக்கம் இருக்கின்றமை தெரியவந்தது.
ஆனால் அஷாந்தி என்ற இந்தச் சிறுமிக்கு மூளை வளர்ச்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அவருடைய வயதுக்கு ஏற்ற வகையில் அது காணப்படுகின்றது. தோற்றத்திலும், சருமத்திலும் தான் முதுமை. எடையும் போதாது. இவரின் தற்போதைய எடை 13 இறாத்தல்கள் மட்டுமே.

நண்பர்களோடு விளையாடுவதில் அஷாந்திக்கு ஆர்வம் உண்டு. ஆனால் அது முடியாத காரியம். அவரின் எலும்புகளையும் மூட்டுக்களையும் இந்த நோய் மிக மோசமாகப் பாதித்துள்ளமையே இதற்குக் காரணம். இசையை ரசிக்கும் ஆர்வமும் இவரிடம் காணப்படுகின்றது.

இவருக்குத் தேவையான சக்கர நாற்காலியை வாங்குவதற்கு 6000 பவுண் அரசாங்க உதவி கோரப்பட்டபோது அது மறுக்கப்பட்டுள்ளது.

காரணம் இவர் ஒரு அங்கவீனரல்ல. அந்த வகைப்படுத்தலின் கீழ் இவரைச் சேர்த்துக் கொள்ள முடியாது, என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டனின் சன் பத்திரிகை நிறுவனம் இவருக்கு இந்த நாற்காலியை வழங்கி உதவியுள்ளது.

அஷாந்தியின் உடல் நிலை காரணமாக அவருக்கு அடிக்கடி சுவாசப் பிரச்சினையும் ஏற்படுகின்றது.இதனால் இவரின் இரத்த ஓட்டமும் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றது. இந்த நோய்க்கான மருந்து பிரான்ஸில் இப்போதுதான் பரீட்சார்த்த நிலையில் உள்ளது.

வருடத்துக்கு இரண்டு தடவைகள் என்ற அடிப்படையில் அஷாந்திக்கு இந்த மருந்து இரண்டு தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக இவரின் இரத்தக் குழாய் பாதிப்படைவது தடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இது எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் அல்லது எதிர்காலத்தில் குருதிச் சுற்றோட்டம் எந்தளவுக்கு சீராக இருக்கும் என்பது பற்றி எந்த உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சசெக்ஸ் மேற்குப் பகுதியில் வசித்துவரும் இந்தச் சிறுமிக்கு ஒரு வயது முதலே தலை முடி உதிர ஆரம்பித்துவிட்டது. இந்தச் சிறுமியின் தாய்க்கு 25 வயதாகின்றது. தன்னுடைய முழுக் கவனத்தையும் அவர் அஷாந்தி மீது செலுத்தி வருகின்றார். இந்த நோய் மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்றும், மிகவும் அரிய வகை நோய் என்றும் குணப்படுத்த முடியாதது என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்..








வெள்ளைப் பிரம்பின் உதவியோடு நடமாடும் உலகின் வயது குறைந்த சிறுவன்!

உலகிலேயே வெள்ளைப்பிரம்பின் உதவியோடு நடமாடும் மிகவும் வயது குறைந்த சிறுவன் இவன் தான். இந்தச் சிறுவனுக்கு வயது இரண்டு.இவனை வெள்ளைப் பிரம்புடன் பார்க்கின்ற பலர் அது அவனின் விளையாட்டுப் பொருள் எனக் கருதி கவனிக்காமல் சென்றுவிடுகின்றனர். இவனின் பெயர் ஒஸ்கார் ஓ சுவிலான். ஒரு அரிய வகை மரபணுக் கோளாறு காரணமாக பிறக்கும் போதே முழு அளவில் கண்பார்வையற்ற ஒரு குழந்தையாகவே ஒஸ்கார் பிறந்துள்ளான். 

நடக்க ஆரம்பித்தது முதலே தனது மகன் வெள்ளைப் பிரம்பையும் பாவிக்க ஆரம்பித்து விட்டான் என்று 30 வயதான இவனின் தாய் கேய்ட்ஹியுக்ஸ் வேதனையுடன் கூறுகின்றார். கடைக்குப் போகும் போது இவனைக் கூட்டிச் சென்றால் பான், ஷம்பூ என சகல பொருள்களையும் மோப்பம் பிடித்தே கூறிவிடுவான். கடைகளுக்குள் குளிர் சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கூட மோப்பம் பிடித்தே அறிந்து கொள்கின்றான்.

சில நேரங்களில் மக்கள் இவனை முட்டி மோதிக் கொண்டு வெள்ளைப் பிரம்பையும் தட்டிவிட்டுச் செல்வதுண்டு. இதற்குக் காரணம் பார்த்த பார்வையில் இவன் குருடு என்பது தெரியாது. வயதையும் உருவத்தையும் பார்த்தால் கையில் இருப்பதை விளையாட்டுப் பொருள் என்று சிலர் நினைக்கக்கூடும்.

பிறந்தது முதல் இந்தக் குழந்தையின் பார்வையில் கோளாறு இருப்பதாகப் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால் வைத்தியர்களை நாடிய போது எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். அண்மையில் தான் இது அரிய வகை ஒரு பிரச்சினை என்று இனம் காணப்பட்டுள்ளது. Lebers Congenital Amaurosis என்று இது இனம்காணப்பட்டுள்ளது.இதைக் குணப்படுத்த முடியுமா பார்வை திரும்புமா என்பது பற்றி உறுதியாக வைத்தியர்களால் எதையும் கூற முடியவில்லை. செய்வதறியாது பெற்றோரும் தவித்துப் போய் உள்ளனர்.

விலங்குகளைப் போல மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியுமா?
சில விலங்குகள் குளிர் காலத்தை உறக்கத்தில் கழிப்பதைப் போல மனிதர்களையும் செயற்கையாக உறக்கத்தில் ஆழ்த்தமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான ஆராய்ச்சிகளில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.பொதுவாக அலஸ்கான் கரடிகள் பனிக்காலத்தின் போது சுமார் 7 மாதம் வரை நித்திரையிலேயே கழிக்கக் கூடியன. இக்காலப்பகுதியில் அவை உணவை உட்கொள்வதில்லை ஏன் நீரைக் கூட பருகுவதில்லை.

இவ்வகையான குளிர் காலத்திற்கு முன்னரே அதற்கு தேவையான கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டு விடும் இவை சேமிக்கப்பட்டு உறக்கத்தில் இருக்கும் காலப்பகுதியில் உறுப்புகளின் செயற்பாட்டிற்கு தேவைக்கேற்ப கடத்தப்படும். மேலும் அவை நித்திரையிலிருந்து எழும்பும் போது எந்த உடல் நிலையில் இருந்தனவோ அதே நிலையிலேயே இவை எழும்புகின்றன.

இக்காலப்பகுதியில் இவற்றின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு சுமார் 8 முதல் 14 தடவையென குறைந்துவிடும். உடலில் வெப்பமும் சுமார் -12 பாகை செல்சியஸ் வரை குறைந்து விடுகின்றது.

இரத்த ஓட்டம், சுவாசம் என்பன அப்படியே குறைந்து விடும் மேலும் உடலின் வளர்சிதைமாற்றமும் (Metabolism) மூன்றில் ஒன்றாக குறையும்.

மொத்தத்தில் இவற்றின் உடலானது உயிரினை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புக்கள் செயற்படும். இதே போன்ற உறக்க நிலைக்கு மனிதர்களையும் ஆழ்த்தும் முறையானது நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் முதல் கடும் சுகயீங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களின் உடலிலும் வளர்சிதை மாற்ற வீதத்தினை குறைத்தல் மற்றும் மனித உடலின் திசுக்களுக்கு தேவையான ஒக்சிஜனின் அளவைக் குறைத்தல் போன்ற ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தால் இந் நிலமை சாத்தியமே என அவர்கள் குறிப்பிடுகின்றனர். கரடிகள் மட்டுமன்றி சில வகை எலிகள், வெளவ்வால்கள், சில வகை பாம்புகளும் இவ்வகையான பனிக்கால உறக்கத்திற்கு செல்கின்றன.

எகிப்தில் தாக்கப்பட்ட பெண் நிரூபர்: ஒபாமா ஆறுதல்.
எகிப்து நாட்டில் நடந்த போராட்டத்தின் போது, செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பெண் நிரூபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். அவரை அதிபர் ஒபாமா சந்தித்து ஆறுதல் கூறினார்.
அமெரிக்காவின் சி.பி.எஸ் தொலைக்காட்சியின் நிருபர் லாரா லோகன்(39). எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்த போது, அந்த நிகழ்வுகளை சேகரிக்க  தொலைக்காட்சியின் சார்பில் ஒரு குழு கெய்ரோ சென்றது.
அதிபர் முபாரக் பதவி விலகியதாக செய்தி வெளியானதும், கெய்ரோவில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 200 பேர் கொண்ட கும்பல் இந்த குழுவினரை சூழ்ந்து கொண்டு யூதர்கள் என கூறி தாக்கினர். லாரா லோகனை தனியாக அழைத்து சென்று அடித்துள்ளனர்.
லாரா லோகன் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவரை எகிப்து ராணுவ வீரர்களும், பெண்களும் காப்பாற்றியுள்ளனர். மறுநாள் அவர் விமானம் மூலம் அமெரிக்கா திரும்பியுள்ளார்.

இதற்கிடையே லாராவை அதிபர் ஒபாமா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் விரைவில் குணம் பெற வாழ்த்து தெரிவித்த ஒபாமா, "லாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை எகிப்து அரசு தண்டிக்க வேண்டும்" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF