Saturday, February 19, 2011

இன்றைய செய்திகள் 19/02/2011

மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் ஊழல்: மருத்துவர்கள் உட்பட 111 பேர் கைது.

அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளதாக நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 65 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்காமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி கணிசமான தொகையை பெற்றுள்ளதாக ஒன்பது நகரங்களை சேர்ந்த மருத்துவத் துறை அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள் என 111 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், சுகாதாரத்துறை அமைச்சர் கேத்லீன் செபிலியஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சாதாரண காய்ச்சலுக்கு கூட அதிகப்படியான பரிசோதனைகளை செய்ய சொல்லியும், வீட்டிற்கு சென்று மருத்துவ சேவை செய்வதாக கூறி அதற்காக அதிக கட்டணம் வசூலித்ததும் தேவையில்லாதவற்றுக்கு அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொண்ட இந்திய வம்சா வழி டாக்டர் ஜஸ்விந்தர் ராஜ் சிப்பர் (48) கைது செய்யப்பட்டு, சிகாகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதேபோல டெட்ராய்டில் இந்திய வம்சாவழி டாக்டர்களான விஷ்ணு பிரதீப், ராம் நரேஷ், சூரிய நளினி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புளோரிடாவை சேர்ந்த ஜெயம் கிருஷ்ண அய்யர் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்காமலேயே இன்சூரன்ஸ் தொகை இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ ஊழல் தொடர்பாக புருக்ளின், லூசியானா, மியாமி, தம்பா ஆகிய பகுதிகளை சேர்ந்த 700 பேரை எப்.பி.ஐ., போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 16 பேருக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் : இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்.

உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. வங்கதேச தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சொந்த மண்ணில் ஆடுவதால் ரசிகர்களின் ஆதரவு வங்கதேச அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனினும் பலம் மிக்க இந்திய அணியை வெல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.
இரு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. சேவாக், சச்சின், கம்பீர், கோலி, தோனி, யுவராஜ் சிங், பதான் என இந்திய பேட்டிங் வரிசை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக உள்ளது. பந்து வீச்சில் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் சிறப்பாக உள்ளது.
வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், முகமது அஷ்ரப்ஃவுல், தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால், விக்கெட் கீப்பர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சில் மொர்டாசா, இளம் வீரர் ஹுசைன், சுழற்பந்து வீச்சில் ஷாகிப், அப்துல் ரசாக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருநாள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் ஷாகிப்-அல்-ஹசன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வங்கதேச அணிக்கு பலம் சேர்க்கும் விஷயம். பயிற்சி ஆட்டங்களைப் பொறுத்தவரை வங்கதேசம் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.
உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் வங்கதேசம் சிறப்பான வெற்றிகளைப் பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.
தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது .
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தனது கடற்பரப்பிற்குள் ஊடுருவல் இடம்பெறுவதை இலங்கை அமைதியாகப் பார்த்துக்கொண்டு அவதானித்துக்கொண்டும் இருக்க முடியாது என்று சென்னையிலிருந்து வெளியாகும் இந்து நாளேடு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக இந்து நேற்று வெளியிட்டிருக்கும் செய்தி ஆய்வில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கைக் கரைக்குச் சமீபமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக தீவிரமான கருத்தைக் கொண்டிருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த சில மணித்தியாலங்களின் பின்னர் மற்றொரு தொகை மீனவர்கள் (24) அதே பகுதியில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
புதுடில்லியில் புதன்கிழமை இடம்பெற்ற தொலைக்காட்சி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது "ஆம்,மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றிருக்கிறோம். இந்த விடயம் குறித்து தீவிரமான கருத்தைக் கொண்டுள்ளோம்' என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் 112 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கே அவர் இந்தப் பதிலை அளித்திருந்தார். அதேசமயம், கொழும்பிடம் இருந்து விடுக்கப்பட்ட செய்தி தெளிவானதாக அமைந்திருந்தது. தனது கடல் எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கான உரிமையானது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது என்பதை இலங்கை நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதே அந்த செய்தியாகும்.
2008 அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையை இப்போதும் இந்தியா பற்றிப் பிடித்திருக்கிறது. தனது மீனவர்கள் தடுத்து வைக்கப்படும்போது ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வுகாணும்போது உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை மூலமே முயற்சிப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்து வருகிறது.
அத்துடன், 2008 அக்டோபர் உடன்படிக்கையை உறுதியாகப் பின்பற்றும் விதத்திலேயே அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் மேற்கொண்ட விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை அந்த உடன்படிக்கையானது மற்றொரு சகாப்தத்தின் ஒரு பகுதியாகும். கணிசமானளவு அதனை மீளாய்வு செய்ய இலங்கை விரும்புகிறது.
2008 இல் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அரசியல் ரீதியான உணர்வு காணப்பட்டதால் அதனை மேற்கொண்டிருந்தது. இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் உணர்வானது 2009 மே இற்குப் பின்னரான களநிலை யதார்த்தங்களுக்கு அமைவானதாக மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.
விடுதலைப்புலிகளை இராணுவம் தோற்கடித்த பின்னரான தற்போதைய களநிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இலங்கை உள்ளது. இந்த விடயத்தில் இந்தியா வேறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது, இப்போதும் கொண்டிருக்கின்றது. அத்துடன், இலங்கையின் புதிய தேவை தொடர்பாக அது பதிலளித்திருக்கவில்லை.
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் பிரதானமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக மீன்பிடித்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஆடைகள், நுகர்வுப்பொருட்கள் என்பவற்றை கடத்திச் செல்கின்றனர். அத்துடன், இந்தியாவுக்கு மதுபானத்தைக் கடத்தி வருகின்றனர். பாரிய தொகையில் இந்த மீனவர்கள் குழுவாக வருவதால் உள்ளூர் மீனவர்கள் அவர்களை அச்சுறுத்துவதில்லை. யாவற்றுக்கும் மேலாக இந்தியப் படகுகள் இலங்கையின் படகுகளைவிட வேகமாகச் செல்பவையாகும்.
2011 ஜனவரியில் இந்திய மீனவரொருவர் கொல்லப்பட்டிருந்தார். இரு வருடங்களில் இடம்பெற்ற முதலாவது சம்பவமாக அமைந்ததுடன், ஒரு திருப்புமுனையாகவும் அது காணப்படுகிறது.
இலங்கை கோரியிருந்ததன் பிரகாரம் அத்தாட்சியை இந்திய அரசாங்கத்தால் வழங்கக்கூடியதாக இருந்தது. படகு சம்பந்தப்பட்ட சோதனைகளின் பெறுபேறுகள் மற்றும் மீனவரின் பிரேத பரிசோதனை அறிக்கை என்பனவற்றை நிரூபமா ராவ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். இலங்கைக் கடற்படையின் தரத்தைச் சார்ந்ததாக சன்னங்கள் இருந்தமை என்பதே முடிவுக்கு வந்த தீர்மானமாகும்.
கூட்டறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இந்த விடயமானது மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கரைப்பகுதியில் வைத்து இந்திய மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்கள் கைதுசெய்கின்றனர் என்பதே அந்தத் திருப்பமாகும்.
இலங்கை மீனவர்களை தொலைவில் இந்திய மீனவர்கள் பார்க்கும்போதும் கூட பாரியதும் துரிதமாகச் செல்லக்கூடியதுமான படகுகளில் வரும் இந்திய மீனவர்கள் அந்த இடத்தைவிட்டுச் செல்வதற்கு வழமையாக முயற்சிப்பதில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தில் அவர்கள் தப்பிச்செல்லவில்லை. பெப்ரவரி 16 மாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் பிரசன்னத்துக்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் என்ற மாதிரியான விடயங்களை இலங்கை அரசாங்கமும் அதிகாரிகளும் கொண்டிருக்கின்றனர். இந்த வாதத்தை இந்திய தரப்பு நிராகரிக்கும் போக்கைக் கொண்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் வடபகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்தியர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடக்கூடியளவுக்கு வைத்திருக்கும் உபகரணங்களையும் அவர்கள் வைத்திருக்கவில்லை.
இலங்கை மீனவர்கள் எப்போதுமே தமது கடல் எல்லைக்குள் தொழில் செய்வதாகவும் அதேசமயம்,தமது கடற்பரப்புக்குள் வெளியார் மீன்பிடிப்பதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதுமே இலங்கையின் மற்றொரு வாதமாகும்.
அரேபியக் கடலின் தமிழக,கேரள மீனவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் ஆந்திரக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஊடுருவும் போது மோதல் ஏற்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
ஒரேநாட்டைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு பிரதிபலிப்புகளை வெளியிடும்போது சர்வதேச கடல்எல்லையைத் தாண்டி கிரமமான முறையில் ஊடுருவல் இடம்பெறுவதை இலங்கையால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது நிச்சயமாக முடியாததொன்றாகும். அதுவும் இலங்கையின் கரையோரத்துக்குச் சமீபமாக மீன்பிடிக்க அனுமதிப்பது இயலாத விடயமாகும்.
ஆயினும் அதிகளவு மீன்வளங்கள் இருப்பதால் இந்த விடயம் இடம்பெறுகிறது. அத்துடன், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏதாவது விட்டுக்கொடுப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் உள்நாட்டு அரசியல் நெருக்குதல்களும் இடமளிக்கமாட்டாது. ஏனெனில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அண்மித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு இடமளிப்பதற்கு உள்ளூர் அரசியல் அழுத்தங்கள் இடமளிக்காத நிலைமை காணப்படுகிறது.
இரு மாதங்களில் தமிழ்நாட்டிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுமே இலங்கை விவகாரத்தை உயர்த்திப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இலங்கைத் தமிழ் மீனவர்களே தமிழ்நாட்டின் மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர் என்ற விடயம் அநேகமான அரசியல்வாதிகளிடமிருந்து அவர்களின் வசதிக்கு ஏற்புடையதாக காணாமல்போய்விட்டது. சிங்கள அரசின் அடாவடித்தனங்களே என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
2009 லோக்சபாத் தேர்தலானது விடுதலைப்புலிகள் சிறைப்பிடிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டபோதே இடம்பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இலங்கைப் பிரச்சினை உண்மையில் முக்கியமான இடத்தை அச்சமயம் பிடித்திருக்கவில்லை என்பதை தேர்தல் வெளிப்படுத்தியது.
ஆனால், இந்தத் தடவை சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்டவர்கள் மற்றொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் ஒரே மொழித் தொடர்பைக் கொண்டவர்களாகும். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களாகும்.
இதனால் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரத் தேர்தல் தொகுதிகளில் வெற்றி, தோல்வியில் வித்தியாசத்தை இந்த விடயம் உருவாக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமைக்கு இலங்கையில் தற்காலிகத் தடை! 
இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை  வழங்குவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அங்கீகாரத்துக்காக காத்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படவுள்ளதாக அத்தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவருக்கு இலங்கையினுள்ளும் சொத்துக்கள் ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற வேண்டுமென்பது இதுவரை கால விதியாக இருந்து வந்தது.
அதன் கீழ் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் ஒருவரிடமிருந்து இலங்கை அரசாங்கம் இரண்டு இலட்சம் ரூபாவைக் கட்டணமாக அறவிட்டு வந்தது. அவ்வாறான கட்டணங்கள் இலங்கைக்கு பொருளாதார நலனைத் தரும் என்பதால் கடந்த காலங்களில் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் விடயத்தில் ஊக்குவிக்கப்பட்டார்கள்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,  இத்தாலி, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ள.தற்போது இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

எகிப்தில் போன்று இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – மனோ கணேசன்.
எகிப்தில் போன்று இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.எகிப்தில் ஏற்பட்டதனைப் போன்று கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கனவு காண்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகியனவற்றின் தனித்தனியான இந்தக் கனவினால் நாட்டு மக்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளே வழியமைத்துக் கொடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பயணித்து ஒருபோதும் எகிப்தைப் போன்றதொரு கிளர்ச்சியை முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்திய குழந்தைகள் கனடாவுக்கு கடத்தல்: விக்கிலீக்ஸ் அம்பலம்.
எகிப்திலிருந்து குழந்தைகளை கனடாவிற்கும், அங்கிருந்து அமெரிக்காவிற்கும் கடத்தும் கும்பலைப் பற்றி கனடாவின் எகிப்திய தூதரக அதிகாரிகளும், ராயல் கனேடியன் மவுண்டட் பொலிசும் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த தகவலை அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் பற்றிய அமெரிக்க ரகசியங்களை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வெளி உலகிற்கு கசிய விட்டுக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் 2010 நவம்பர் 28 ல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
11 பேர் கொண்ட இந்தக் கடத்தல் கும்பல், பொய்யான பிறப்புச் சான்றிதழ்களை காட்டி அமெரிக்காவிற்கு குழந்தைகளை கடத்திய குற்றத்திற்காக செப்டம்பர் 17, 2009 ல் எகிப்து நீதித்துறையால் 2 லிருந்து 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து அதிகாரிகளின் ஓராண்டு விசாரணைக்குப் பின்பு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த தகவல் மற்ற நாட்டு தூதரகங்களுக்கும் குறிப்பாக கனடா தூதரகத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கனடா தூதரகம் நடத்திய முழு விசாரணையில் இத்தகைய குற்றங்கள் 300 வரை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் 12 சந்தேகத்திற்கு இடமாக இருந்ததையும் அவை எகிப்தின் எகிப்து ஸ்டேட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேடிட் சர்வீசஸ் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் மேலும் கூறியுள்ளது.
ஜீலை 6, 2009 ல் கனடாவின் ராயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் கெய்ரோ சென்று இந்தக் குழந்தை கடத்தல் கும்பலைப் பற்றி தீவிர விசாரணை செய்தது. கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் இச்சம்பவங்கள் மேலும் நடக்காதிருக்க கனடா எகிப்து விசாரணை அமைப்புகளிடம் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல் காப்டிக் கிறிஸ்துவ பாதிரிமார்களும், கன்னியாஸ்திரிகளும் குழந்தைகள் கடத்தலில் இடைத்தரகர்களாக செயல்பட்டதை பிராட் பிரிவென்ஷன் யூனிட் கண்டுபிடித்துள்ளது. இந்த விசாரணை இன்னும் முடியாத நிலையில் இது பற்றி கருத்து கூற இயலாது என ஆர்.சி.எம்.பி தொடர்பாளர் கூறியுள்ளார்.
400 மில்லியன் டொலர் கடனுடன் இறந்த மைக்கேல் ஜாக்சன்.
உலகப்புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கெல் ஜாக்சன் 2009 ம் ஆண்டு ஜுன் மாதம் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை சாப்பிட்டதால் இறந்தார்.
1982 முதல் தற்பொழுது வரை ஜாக்சனுடைய பாப் இசை பாடல்கள் உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்று வாழ்ந்து வந்த ஜாக்சன் தான் சாகும் வரையிலும் ஆடம்பரமாகவே வாழ்ந்தார். அதற்காக அளவுக்குமீறி கடன் வாங்கினார்.
அவர் 2009 ஜுனில் இறந்தபோது அவருக்கு 400 மில்லியன் டொலர் கடன் உள்ளதாக கூறி கடன்காரர்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இறந்த ஜாக்சன் உறவினர்கள் அவருக்கு 159 மில்லியன் டொலர் அளவே கடன் உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.
அதன் பிறகு ஜாக்சனின் சொத்துக்கள் மற்றும் அவருடைய வெளிவராத ஆல்பம் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியாக அவருடைய சொத்துக்கள் மற்றும் வெளிவராத பாப் இசை ஆல்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஆனால் 310 மில்லியன் டொலர் அளவிற்கே அவருடைய சொத்துக்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் வசூல் ஆனது. இந்த பணத்தை வைத்து கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது, வரி செலுத்துவது உட்பட அனைத்து பிரச்சனைகளையும் ஈடுசெய்வது கடினம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் 400 மில்லியன் டொலர் கடனுக்கு வெறும் 310 மில்லியன் டொலரே வசூலானது.
இதில் 27 மில்லியன் டொலர் வரியும், 5.3 மில்லியன் டொலர் ஜாக்சன் குடும்பத்திற்கும், சொத்து அடமானத்திற்கு 4 மில்லியன் டொலரும் கொடுக்க வேண்டும். மேலும் ஜாக்சனை அடக்கம் செய்த இடத்திற்கு 9 லட்சம் டொலரும், அவருடைய நினைவுச்சின்ன ஆடைகளுக்கு 35 ஆயிரம் டொலரும் கட்ட வேண்டும்.
ஏனெனில் அவர் அடக்கம் செய்யப்பட்ட பாரஸ்ட் லாவன் மெமோரியல் பார்க் தனியாருக்குச் சொந்தமானதாகும். அவருடைய இறுதி ஊர்வலம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவருடைய மரணத்திற்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா, கவிஞர் மேயா ஏஞ்சல்சியோ, உலகப் புகழ் பெற்ற பாடகர் டையனா ரோஸ் அனுதாபச் செய்தி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைன் மன்னருக்கு ஒபாமா கண்டனம்.
பஹ்ரைன் நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை ஷியா முஸ்லிம் பிரிவினர் கோரி வருகின்றனர்.
பிரதமர் பதவி விலக வேண்டும் என்றுதான் நாங்கள் முதலில் கோரி வந்தோம். ஆனால் இப்போது மன்னர் குடும்பமே கூண்டோடு அகற்றப்படும் வரை ஓயமாட்டோம் என்று முகமது அலி என்ற போராட்டக்காரர் தெரிவித்தார்.
சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இப்போது ஹமாத் பின் இசா அல் கலிஃபா மன்னராக உள்ளார். மன்னர் குடும்பத்தினர் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பஹ்ரைனில் பெரும்பான்மை மக்கள் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் கிளிர்ச்சியை பொலிஸ் மூலம் அடக்க அரசு தரப்பினர் முயன்று வருகின்றனர். பொலிசாருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடைபெற்ற மோதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் முகாமிட்டு அரசுக்கு எதிராக, பதாகைகளோடு முழக்கம் எழுப்பி வந்தனர். இரவு பகலாக அங்கே முகாமிட்டு போராடி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு வியாழக்கிழமை அதிகாலை அந்த சதுக்கத்தை பொலிசார் சுற்றி வளைத்தனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டை பயன்படுத்தினர்.
இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொலிசாரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். பொலிஸ் அடக்குமுறையில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
அவர்கள் பலர் அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்தனர். மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பலர் தெரிவித்தனர். இதனிடையே கிளர்ச்சியை ஒடுக்க தலைநகர் மனாமாவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் ராணுவ டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் போராடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் அலி சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே அமைதியாக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்த வேண்டாம் என்று பஹ்ரைன் ஆட்சியாளர்களிடம் அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா, பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இசா அல் கைபா‌விடம் தொலைபேசி மூலமாக உரையாடினார். அப்போது அமைதியாக போராடி மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவது கண்டிப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.
எகிப்தில் மாபெரும் வெற்றிப் பேரணி.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரம்மாண்டப் பேரணி நடத்தினர்.
எழுச்சியில் பங்கேற்ற அனைத்து இளைஞர் அமைப்புகளின் கூட்டமைப்பான "புரட்சிகர இளைஞர் கூட்டணி" இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. போராட்டத்தின் மையமாக இருந்த தாஹிர் சதுக்கத்கத்தில் கூடிய பொதுமக்கள் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தினர். இதில் முஸ்லிம் மதத் தலைவர் யூசுப் அல் கரதாவி பேசினார்.
நமது மதம் மாறியிருக்கிறது என்பதை அரபு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், எகிப்தில் அமையப் போகும் புதிய அரசில் பழைய தலைவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
பழைய முகங்களைப் பார்க்கும் போது மக்களுக்கு வறுமையும், பசியும், ஏமாற்றமும் தான் நினைவுக்கு வரும். அதனால் பழைய அமைச்சரவையை ராணுவம் உடனடியாகக் கலைத்துவிட வேண்டும் என்று கரதாவி கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த படுகொலைகள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் எகிப்தில் அதிகார மாற்றம் நிகழும் காலகட்டத்திற்கான பொருளாதார உதவியாக அமெரிக்கா உடனடியாக 675 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. மக்களை திருப்திபடுத்தும் விதத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல் அட்லி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரபல தொழிலதிபர் ஆகியோரை ராணுவம் கைது செய்துள்ளது.
ஹொஸ்னி முபாரக் அரசாங்கத்தின் சொத்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன : அரசாங்கம்.
எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது உறவினர்களினால் சுவிஸ் வங்கிகளில் பேணப்பட்ட சொத்துகள் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி, உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்களின் சொத்து தரவுகளை வழங்குமாறு அரசாங்கம் வங்கிகளிடம் கோரியிருந்தது.அரசின் கோரிக்கைக்கு அமைவாக சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், சொத்து விபரங்கள் மற்றும் பெறுமதிகள் பற்றி எந்தவிதமான தரவுகளும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.முபாரக் மற்றும் சகாக்களின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்களும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவூதியில் அடிமையாக 17 வருடங்கள் நடத்தப்பட்ட இலங்கைப் பணிப் பெண் தூதரகத்தால் மீட்பு!

கடந்த 17 வருடங்களாக சவூதி அரேபியாவில் எஜமானர்களால் அடிமையாக நடத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஒருவரை தூதரக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை மீட்டனர்.இப்பணிப் பெண்ணின் பெயர் குசுமா நந்தினி. வயது 56. நாட்டில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1994 ஆம் ஆண்டு சவூதிக்கு வந்து இருந்தார். 

சிறைக் கைதி போல் நடத்தப்பட்டு இருக்கின்றார். 15 வருடங்கள் சம்பளம் எதுவும் இவருக்கு வழங்கப்படவே இல்லை. நாட்டில் உள்ள குடும்பத்தினருடன் எவ்வித தொடர்பும் அற்ற நிலையில் இவ்வளவு காலமும் இருந்து இருக்கின்றார். இந்நிலையில் இவரைக் கண்டு பிடித்துத் தரச் சொல்லி வெளிநாட்டு அமைச்சு ஊடாக குடும்பத்தினர் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு விண்ணப்பித்து இருந்தனர். 

இவர் தாய்மொழியை மறந்து இருந்தார் என்றும் மனித ரோபோவைப் போல் செயல்படும் நிலையில் சுயத்தை இழந்து காணப்பட்டார் என்றும் தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இப்பெண்ணை மீட்க முடிந்தமை தூதரகத்தை பொறுத்த வரை மிகப் பெரிய வரலாற்றுச் சாதனை ஆகும்.

உலக கிண்ண போட்டி: உள்ளூர் மைதானங்களில் அரசுக்கு எதிரான பிரசாரங்களுக்கு தடை!

இலங்கையில் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டிகள் இடம்பெறவுள்ள விளையாட்டு மைதானங்களில் அரசுக்கு எதிரான சுவரொட்டிகள், பதாகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றமைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய இவ்வறிவித்தலை விடுத்து உள்ளார்.

அரசுக்கு அல்லது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானங்களில் பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்தி நிற்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்து உள்ளார். பட்டாசு வெடிகள், கண்ணாடி போத்தல்கள், கொள்கலன்கள், சுவரொட்டிகள், பதாகைகள், சங்கீத உபகரணங்கள், லேசர் விளக்குகள் போன்றவற்றை மைதானங்களுக்கு கொண்டு வருகின்றமை முற்றாக தடை செய்யப்பட்டு உள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF