Wednesday, February 23, 2011

இன்றைய செய்திகள் 23/02/2011


நாட்டை விட்டு ஓடவில்லை; புறம்கூறும் நாய்களை நம்பாதீர்கள்! மறுக்கிறார் கடாபி.

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் மீது நேற்றும், போர்விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடந்தது. 

இந்நிலையில், கடாபி நாட்டை விட்டு ஓடிவிட்டதாக வெளி வந்த செய்தியை மறுக்கும் விதத்தில், நேற்று திடீர் பேட்டியளித்த கடாபி,"நான் டிரிபோலியில் தான் உள்ளேன்; நாய் போன்று அலையும் "டிவி' க்களின் செய்திகளை நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

லிபியாவின் பல நகரங்களில் கடாபி எதிர்ப்பு போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தலைநகர் டிரிபோலி, கிழக்கு நகரமான பெங்காசி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று முன்தினம், டிரிபோலியில் உள்ள பொதுமக்கள் காங்கிரஸ் எனப்படும் லிபியா பார்லிமென்ட் தீக்கிரையாக்கப்பட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்களுக்கும் இதே கதி ஏற்பட்டது.

போர் விமானம் மூலம் தாக்குதல்:இந்நிலையில் நேற்று முன்தினம் டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான பசுலும் மற்றும் டஜுரா மாவட்டங்களில், வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது, போர்விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்களும் சரமாரியாகக் குண்டு வீசிக் கொன்றன. 

கடாபி ஆதரவாளர்களும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர்.இச்சம்பவத்தில் 61 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்பது நாள் போராட்டத்தில் இதுவரை 400 க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக் கூடும் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. 

டிரிபோலியில் நேற்றும் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகவலை இந்தியாவுக்கான லிபியா தூதராக இருந்து, தற்போது ராஜினாமா செய்து விட்ட அலி எல் எஸ்ஸாவி உறுதிப்படுத்தினார். மேலும் துப்பாக்கிச் சூடு, ஆப்ரிக்கக் கூலிப் படையினரைப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலம் லிபியா அரசு தனது மக்களைக் கொன்று வருவதாகத் தெரிவித்தார். 

அதேபோல, ஐ.நா.,வுக்கான லிபியா தூதர் இப்ராகிம் டப்பாசியும்,"லிபியாவில் மனிதப் படுகொலையை ஆரம்பித்து விட்டார் கடாபி' என்று கூறினார்.

ஆனால், கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகளை தான் போர் விமானங்கள் தாக்கின. குடியிருப்புகள் மீது தாக்குதல் நடக்கவில்லை. அதேபோல் டிரிபோலியிலும் பெங்காசியிலும் விமானத் தாக்குதல் நடக்கவில்லை' என்று மறுத்தார். 

பெங்காசி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும்படி, இரு விமானப் படைத் தளபதிகளுக்கு ராணுவம் உத்தரவிட்டது. 

அதேநேரம், பெங்காசி விமானப் படைத் தளத்தை மக்களும் கைப்பற்றிக் கொண்டதால், வேறு வழியின்றி அந்த இரு விமானப் படைத் தளபதிகளும், ஒரு போர் விமானத்தில் ஏறி, மக்கள் மீது தாக்குதல் நடத்த விரும்பாமல், மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மால்டாவில் தரையிறங்கினர்.

அங்கிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரித்த போது, இத்தகவல் வெளியானது. இதன் மூலம் சயீப்பின் மறுப்பு பொய் என்பது தெரியவந்துள்ளது. கடாபி காட்டம்:இந்நிலையில், லிபியா தலைவர் மும்மர் கடாபி, வெனிசுலா நாட்டுக்கு ஓடிப் போய்விட்டதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் நேற்று முன்தினம் தெரிவித்தார். 

இதையே சீனாவுக்கான லிபியாவின் துணைத் தூதர் முஸ்ரதியும் தெரிவித்திருந்தார்.ஆனால், நேற்று டிரிபோலியில் உள்ள தனது வீட்டின் முன் ஒரு வேனில் உட்கார்ந்தபடி, அரசு "டிவி'க்குத் திடீர் பேட்டி கொடுத்த கடாபி,"நான் இன்னும் டிரிபோலியில் தான் இருக்கிறேன். நாய் போலத் திரியும் "டிவி' செய்திகளை நம்ப வேண்டாம்' என்று மறுப்பு தெரிவித்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெனிசுலா தூதரகமும் இதை மறுத்துள்ளது. பெங்காசி வீழ்ந்தது:லிபியாவின் கிழக்கு நகரமான பெங்காசி தற்போது மக்களின் கைகளுக்கு வந்து விட்டதாகவும், அங்கிருந்த ராணுவப் படைத் தளங்களை மக்கள் கைப்பற்றி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பெங்காசியில் உள்ள விமான ஓடுதளம் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் இழுத்து மூடப்பட்டு விட்டது. இதனால் லிபியாவில் உள்ள இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் மீட்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிட்ரே, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல் ஜாவியா மற்றும் ஜவாரா ஆகிய நகரங்களையும் மக்கள் கைப்பற்றி விட்டனர்.எகிப்து - லிபியா எல்லையில் இருந்த லிபியா ராணுவ வீரர்கள் அங்கிருந்து சென்று விட்டதால், எகிப்து எல்லையில் அந்நாட்டு ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 

கடாபி மீது விசாரணை:லிபியாவில் நடந்த படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.,வின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் நவிபிள்ளை கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"மனித இனத்திற்கு எதிரான குற்றத்தில் லிபியா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை லிபியா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்! 65 க்கும் மேற்பட்டோர் பலி.

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் கிறிஸ்சர்ச் நகர் உள்ளது. நியூசிலாந்து நேரப்படி இன்று மதியம் 12.51 மணிக்கு கிறிஸ்சர்ச் நகரில் திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன. பல கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 


நிலநடுக்கத்தின் போது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த ஆயிரக்கணக்கானோர் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடினார்கள். நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என்று பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜான்கி, “நில நடுக்கத்தால் 65 பேர் உயிர் இழந்தனர் என்று தெரிவித்தார்.

உயிர் இழப்பு மற்றும் சேதங்கள் அதிகம் இருக்கலாம் என்று கருதுவதாகவும், இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்சர்ச் நகர மேயர், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். இது “நகரத்தின் கறுப்பு தினம்” என்றும் அறிவித்துள்ளார். இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளிக்கிடையே ஏராளமான பொதுமக்கள் சிக்கி இருக்கிறார்கள். 


சாலைகளிலும், தெருக்களிலும் விரிசல்கள் காணப்படுகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பியபடி உள்ளனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்தனர். என்றாலும் கட்டிட இடிபாடுகள் காரணமாக தெருவில் விரைவாக செல்ல முடியவில்லை. எனவே, மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலநடுக்கம் காரணமாக கிறிஸ்சர்ச் நகர விமானநிலையம் மூடப் பட்டுள்ளது. காயம் அடைந் தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகரில் மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது.டெலிபோன் தொடர்புகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்பு குழாய்களும் உடைத்தன. நகரம் முழுவதும் சேதம் அடைந்து காணப்படுகிறது. 


ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிலநடுக்கத்துக்கு பயந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தங்கி இருக்கிறார்கள்.கட்டிட இடிபாடுகளில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை, சேத மதிப்பு பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF