Sunday, February 20, 2011

இன்றைய செய்திகள் 20/02/2011

17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்க்காத பணிப்பெண் !

சவுதி அரேபியாவில் ரியாட் நகரில் சுமார் 17வருடமாக சிறைவக்கப்பட்ட இலங்கைப் பெண் மீட்க்கப்பட்டுள்ளார். சுமார் 39 வயதில் சவுதி சென்ற இப் பெண், தன் அங்கு செல்லும்போது தனக்கு 8 வயதில் மகனும் 6 வயதில் ஒரு மகளும் இருந்ததாக தனது நினைவுகளை தூசிதட்டிச் சொல்லியுள்ளார். ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் அவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. தாய்மொழியான சிங்களத்தை மறந்த நிலையில், பிள்ளைகளை மற்றும் குடும்பத்தை மறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்டபோது அவர் ஒரு இயந்திரத்தைப் போல வேலைசெய்துகொண்டு இருந்ததாக தூதர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காலையில் இதனைச் செய்யவேண்டும், மதியம் இந்த வேலை என அவர் பழக்கப்பட்டுவிட்டதாகவும், சுய நினைவைக் கூட இழந்து அவர் வேலைசெய்து வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற எஜமான் அவரை ஒரு கைதியாக் வீட்டில் அடைத்துவைத்தது மட்டுமல்லாது, வெளியுலகோடு எத்தொடர்பையும் பேண தடைவிதித்துள்ளதோடு, வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பூட்டிய வீட்டிற்குள் அவர் 17 வருடமாக வேலைமட்டும் செய்துகொண்டு இருந்திருக்கிறார். சில காலங்களில் அவர் தனது பிள்ளைகளை மறந்து உறவுகளை மறந்து தனது தாய்மொழியையும் மறந்துவிட்டார்.

அந்த அளவுக்கு அவருக்கு வேலைகள் திணிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அவருக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்பதே பெரும் கொடுமையான விடையமாகும். அனைத்தையும் மறந்த நிலையில் அவரை இலங்கை தூதர அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவரோடு திரும்பத் திரும்பப் பேசி அவரது நினைவுகளை வரவழைத்ததால், அவர் தனது உறவுகள், மற்றும் குடும்பத்தார் குறித்த தகவல்களை மெல்ல மெல்ல வழங்கிவருவதோடு, சிங்களத்தையும் சற்று பேச ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்டு இலங்கைத் தூதரகத்தில் அவர் இருந்தபோதும் தன்பாட்டில் அங்குள்ள வேலைகளை அவர் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை அவரே அறியாமல் செய்ய ஆரம்பித்தவேளை தான் இப் பெண்ணை அந்த எஜமான் எவ்வளவு கொடுமைசெய்திருக்கிறார் என்பது அவர்களுக்கு விளங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து பல பணிப்பெண்கள் வறுமைகாரணமாக அரபு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றனர். எண்ணைக் குதங்களை வைத்து இலகுவாக பணம் சம்பாதிக்கும், திமிர் பிடித்த எஜமானர்களிடன் இவர்கள் சிக்கித் தவிப்பது பெரும் துன்பகரமான நிகழ்வுகளாக உள்ளன. கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் இவர்கள் போன்ற எஜமானர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். இக் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பெண் விடுதலை பற்றிப் பேசிவரும் அமைப்புகள் இது குறித்து கவனம் செலுத்துவது நல்லது.



இலங்கையர்கள் பக்ரைய்ன் செல்ல தடை!


இலங்கைப் பிரஜைகள் பக்ரைய்ன் நாட்டுக்கு வேலை வாய்ப்பு தேடி செல்கின்றமைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தற்காலிகமாக தடை போட உள்ளது. பக்ரைய்ன் விமான நிலையத்தில் ஏதேனும் அசௌகரியங்களை இலங்கையர்கள் எதிர்கொள்ளக் கூடும் என்பதால் ஒரு வாரம்வரை இவ்வேற்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

பக்ரைய்ன் நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை முடுக்கி விட்டு உள்ளனர். இதனால் அங்கு பாரிய வன்முறைகள் வெடித்து உள்ளன. பொதுமக்கள் ஐவர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 200 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர்.பக்ரைய்னில் 10000 பேர் வரை இலங்கையர்கள் வேலை பார்க்கின்றனர். ஆனால் இவ்வன்முறைச் சம்பவங்களில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

கட்டார் நாட்டு அரசர் மே மாதம் இலங்கை விஜயம்!

கட்டார் நாட்டு அரசர் ஷேய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று இவர் வருகை தருகின்றார்.

இவர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் பற்றி இங்கு பேச்சுக்களில் ஈடுபடுவார். கட்டாருக்கான இலங்கையின் பதில் தூதுவர் ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் இலங்கைத் தரப்பினரால் செய்து கொடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொள்கின்றார்.

இலங்கையில் ஆள் இல்லா விமானங்கள்!

ஆள் இல்லா விமானங்களை இலங்கை வான் பரப்பில் பறக்க விட இலங்கை விமானப் படையால் அனுமதி வழங்கி உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த காலங்களில் ஆளில்லா விமானங்களை பறக்க விடுகின்றமைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. விமானப் படையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் வேண்டுகோள் எனும் பெயரில் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை?
தூக்குத் தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறி அதனை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.தற்போதைக்கு சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை அதன் மூலம் மெளனிக்கச் செய்ய முடியும் என்று அராசங்கம் எதிர்பார்க்கின்றது.
அதன் ஆரம்ப முயற்சியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பங்குபற்றிய பொதுமக்கள் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு கோரியதாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
ஆனாலும் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படும் அரசாங்கத்தில் தூக்குத் தண்டனை மீண்டும் செயற்படுத்தப்படுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதாக சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கணனி ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கை.
கணனி ஊடாக நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணனி குற்றச் செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள், கடனட்டை மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் உலகின் முதனிலை நிறுவனங்களில் ஒன்றான இம்பெக்ட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் திரிபுராவில் பறவை காய்ச்சல்: 3 ஆயிரம் கோழி பண்ணைகள் அழிப்பு.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் திடீரென பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
அகர்தலாவில் அரசு வாத்து பண்ணை உள்ளது. இங்கு கடந்த 3-ந் திகதி வாத்துக்களை பறவை காய்ச்சல் தாக்கியது இது மேலும் பல இடங்களுக்கு பரவி 3 ஆயிரம் கோழி மற்றும் வாத்துக்கள் இறந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 3 ஆயிரம் கோழி பண்ணைகளில் உள்ள அனைத்து கோழிகளையும் அழிக்கும்படி உத்தரவிடப்பட்டது. சுகாதார ஊழியர்கள் அங்கு சென்று அனைத்து கோழிகளையும் கொன்றனர். மேலும் பண்ணைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடுப்பு மருந்துகளை தெளித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் மற்ற பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி விடாமல் தடுக்க உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2008-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தின் பக்கத்து நாடான வங்காளதேசத்தில் இருந்து பறவை காய்ச்சல் பரவியது. அப்போது லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டன.


புதுவையில் அமில மழை: மாணவர்களுக்கு தோல் அரிப்பு.


புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அமில மழை பெய்துள்ளது.
இதனால் சில மாணவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை மைதானத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது மழைத்தூரல் போன்ற மஞ்சள் நிற திரவம் பெய்துள்ளது.
இது குறித்து பள்ளியின் முதல்வர் சரஸ்வதி கூறியது: பிரார்த்தனைக் கூட்டம் நடந்த போது லேசான தூரல் போன்று மஞ்சள் நிற திரவம் விழுந்தது. மாணவர்கள் உடனே வகுப்பறைக்குள் சென்றுவிட்டனர்.
அவர்களின் வெள்ளைச் சட்டையில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் ஏற்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறினர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம்.
மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளனர். மாதிரிகளைக் கொண்டு செய்யப்படும் ஆய்வின் அறிக்கையை சனிக்கிழமை தருவதாகக் கூறியுள்ளனர். அறிக்கை வந்த பிறகே, அமில மழைக்கான காரணம் தெரியவரும் என்றார்.

லிபியா-பஹ்ரேன் போராட்டங்களில் 50 பேர் பலி.
லிபியா மற்றும் பஹ்ரேனில் அந்நாட்டு அரசாங்கங்களுக்கெதிராக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.
எகிப்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் அரசாங்கங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு எதிராகவும் பஹ்ரேனில் மன்னர் அல் கலீபாக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் திரண்டுள்ளனர்.
மேற்படி நாடுகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுவதற்காக பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதாலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்.
ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் முகாமிட்டுள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர்.
தற்கொலை தாக்குதல்கள், வெடிகுண்டு சம்பவங்கள் போன்றவை அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அழகிய நகரமான பாக்தாத்தில் ஏராளமான கட்டிடங்கள், பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் பெருமளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. அடிக்கடி நடைபெறும் வன்முறை சம்பவங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே அமெரிக்க அரசு பாக்தாத் நகர நிர்வாகத்துக்கு ரூ. 4500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பாக்தாத் நகர இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய நாட்டவரின் சட்ட விரோதக் குடியேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது.
கடந்த 1967ல் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையில் நடந்த போரில், பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் இஸ்ரேலியர்கள் குடியேறினர்.
காலப் போக்கில் அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், மேற்குக் கரையின் ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதி மற்றும் கோலன் பீடபூமிப் பகுதிக் குடியேற்றங்களை இஸ்ரேல் ஆதரித்து வருவதோடு அங்கு குடியேறும்படி இஸ்ரேலியர்களை ஊக்கப்படுத்துகிறது. சர்வதேசச் சட்டப்படி, இந்த குடியேற்றத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சட்ட விரோதம் என்று ஒப்புக் கொண்டன. அதே நேரத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீன எல்லையில் உள்ள இஸ்ரேலிய சட்ட விரோதக் குடியேற்றத்தை கண்டிக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் நேற்று ஒரு தீர்மானம் வாக்களிப்புக்கு விடப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. ஆனால், அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இது குறித்து ஐ.நா.,வுக்கான இந்தியத் துணைத் தூதர் மஞ்சீவ் சிங் புரி கூறுகையில், பாலஸ்தீன எல்லையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றம் சர்வதேச சட்டப்படி சட்ட விரோதம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தது என்றார்.
"வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம், இஸ்ரேலியக் குடியேற்றம் சரியே என, அமெரிக்கா ஆதரவளித்தாக கருத வேண்டாம். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே, இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை தீர ஒரே வழி. இது போன்ற தீர்மானங்கள் பிரச்னையைத் தீர்க்காது' என்று ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் தெரிவித்தார்.
லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான வலுப் பெறும் போராட்டங்கள்.
ஆப்ரிக்க நாடான லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதேநேரம், ஆட்சியை தக்க வைக்கும் விதத்தில், கடாபி தனது ஆதரவாளர்களின் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.
ஆப்ரிக்காவின் வடபகுதியில் உள்ள எகிப்தின் அண்டை நாடான லிபியாவில், 1969ல் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த கடாபி அன்று முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத தலைவராக இருந்து வருகிறார்.
துனிசியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியாவிலும் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதனால், ஆட்சியை தக்க வைக்கும் விதத்தில், கடாபி தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு தன் புகழ் பாடும் பேரணிகளை நடத்தி வருகிறார்.
தலைநகர் டிரிபோலியில் நேற்று நடந்த ஆதரவுப் பேரணியில் திறந்த காரில் அவர் வலம் வந்தார். அவரது காருக்குப் பின்னால் தொண்டர்கள் அணி வகுத்து வந்தனர். எதிர்ப்பு போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில், அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, தன்னை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்ட 110 அரசியல் கைதிகளை விடுவித்தது போன்ற சில தந்திர உத்திகளையும் கடாபி கையாண்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் பலியானோரின் இறுதிச் சடங்குகள் நேற்று பிங்காசி மற்றும் பெய்டாவில் நடந்தன.
பிங்காசியில் பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து வந்தனர். கடந்த இரு நாட்களில் மட்டும் போராட்டங்களில் மொத்தம் 24 பேர் பலியானதாக அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. லிபியாவில் போராட்டம் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, இணையதள சேவைகளை லிபிய அரசு துண்டித்துள்ளது.
அல்ஜீரியாவில் மீண்டும் போராட்டம்.
ஜனநாயகத்தை கோரும் அல்ஜீரிய மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். அல்ஜீரியாவில் கடந்த 19 ஆண்டுகளாக அவசர நிலை பிரகடனமே நீடிக்கிறது.
இந்த சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகம் மலர வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வட ஆப்பிரிக்க தேசத்தில் எழுந்துள்ள எழுச்சிப் போராட்டத்தில் மாணவர்கள், வேலை இல்லாத இளைஞர்கள் ஹெசி மெசவுட் பகுதியில் புதனன்று திரண்டு ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த வாரம் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு 25 பொலிசார் குவிக்கப்பட்டனர். பொலிசார் அடக்கு முறையை புறக்கணித்த மக்கள் மீண்டும் எதிர்ப்பு பேரணி நடத்த ஆயத்தமானார்கள். மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் அவசர நிலையை விலக்கிக் கொள்வதாக அல்ஜீரிய ஜனாதிபதி அப்டெலசிஸ் பவுடே பில்கா உறுதியளித்தார்.
மாட்ரிட் நகருக்கு பயணித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மவுரட் மெடிக் கூறுகையில்,"மக்கள் பேரணிக்கு அதிகாரப் பூர்வ தடை இல்லை. இந்த பேரணி நடத்த ஒருவர் கூட அங்கீகாரம் பெறவில்லை" என்றார். கடந்த வார பேரணியை ஒடுக்கிய பொலிசார் பணியையும் அவர் பாராட்டினார்.
லிபியாவில் மூன்றே நாட்களில் 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: மனித உரிமை கண்காணிப்பகம்.
லிபியா முழுவதும் தொடர்ந்திருக்கும் போராட்டங்களில் குறைந்தது 84 பேர் இறந்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி பேட்டிகள் மூலமாகவும், மருத்துவமனை ஊழியர்கள் மூலமாகவும் இச்செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் லிபியாவில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளன.
லிபியாவின் பெரிய நகரமான பென்காஜியில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி அதிபரும், அவருடைய குடும்பமும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஒருவர்,"உலக சரித்திரத்திலேயே மோசமான சர்வாதிகார ஆட்சி இது தான்" என்றார்.
மேலும் அரசுப் படைகள் இல்லை. ஆனாலும் மூன்று இராணுவ கவச வண்டிகள் இருந்ததாகவும், அவை அந்த இடத்தில் இருந்து நகரவில்லை எனவும் தெரிவித்தார். இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் முகம்மது அப்தல்லா கிழக்குப் பகுதி அல்பைதாவில் இறந்த 13 பேரின் உடல் அடக்கத்தில் கலந்து கொண்டதாகவும், சாதாரண உடையில் வந்த அரசு ஆதரவு புரட்சிக் குழுவினர் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறினார்.
இந்த போராட்டங்களை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார். மேலும் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு சில குறிப்பிட்ட உரிமைகள் உள்ளன. அமைதியாகக் கூடவும், தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கவும் உரிமை உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு எதிரான ஆட்சியரின் அடக்கு முறைகள் சட்ட விரோதமானதும், ஆதிக்க அதிராகப் போக்கை காட்டுவதாக உள்ளது என ஜ.நா ஹை-கமிஷனர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹொஸ்னி முபாரக்கின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் முடக்கம்.
எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், அவரது உறவினர்கள் மற்றும் முக்கிய அரசாங்க பதவி வகித்தவர்களின் சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.எகிப்து அரசாங்கத்தின் பணம் துஸ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்ற காரணத்திற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு இறுதியில் எகிப்தியர்களினால் 3.6 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான சொத்துக்கள் சுவிஸ் வங்கிகளில் பேணப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சூரியனில் இருந்து தீப் பிழம்பு இலங்கைக்கு ஆபத்தா ?
மில்லியன் கணக்கான மைல் தொலைவில் உள்ள சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அங்கே நடப்பது ஹெட்ரஜன் ரி அக்ஷ்ன் ஆகும். சங்கிலித் தொடராக நடக்கும் இத் தாக்கத்தால் சூரியன் ஒரு தீப்பிழம்பாக வெப்பத்தை வெளியிட்டவண்ணம் உள்ளது. சூரியனுக்கு என்று ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதிலும் அது புவியீர்ப்பு சக்த்தியைவிட அதிகமானது. ஆனால் சிலவேளைகளில் சூரியனில் ஏற்படும் வெடிப்புகளால் சில தீப் பிழம்புகள் சூரியனை விட்டுவெளியே தூக்கி எறியப்படுகிறது. அவை சில நேரங்களில் பூமியை நோக்கியும் வருவது உண்டு. அவ்வாறு வரும் தீப் பிழப்புகளால் பூமிக்கு பேராபத்து எதுவும் இல்லை என்றாலும் கூட அப் பிழம்பிகள் பூமியின் காற்றுமண்டலத்தை அண்மிக்கும்போது காந்தப் புலன்களைப் பாதிக்கும்.

கடந்த 15ம் திகதி சுமார் 4 வருடங்களுக்குப் பின்னர் சூரியன் தீ பிழம்புகளைக் கக்கியுள்ளது. அவை பூமிநோக்கிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை பூமியை அண்மிக்கும்போது, வடக்கு மற்றும் தென் துருவங்களில் உள்ளவர்கள் வாணில் சில அபூர்வமான நிறங்களைப் பார்க்ககூடியதாக இருக்கும். இந் நிகழ்வை அவ்ரோரா என அழைப்பார்கள். இத் தீ பிழம்புகள் பூமிக்கு மேலே உள்ள செய்மதிகளையும், மின் பிறப்பாக்கிகளையும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் தொலைத் தொடர்புகளில் பெரும் சிக்கல் ஏற்படக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இலங்கைத் தீவுக்கு மேலாக இத் தீ பிழம்புகள் வரமாட்டாது எனவும், ஆசியப் பகுதிகள் அவை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் செய்மதிகள் பாதிப்படைந்தால், இன்டர்நெட் முதல் பல தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படும் நிலை தோன்றலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கு முன்னர் 1972 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் தொலைத்தொடர்பாடல் துறை செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சூரியனின் தீப்பிளம்புகள் 1989 ஆம் ஆண்டில் கனடாவின் கியூபெக் பிராந்தியத்தில் சுமார் 6 மில்லியன் பேரை இருளில் ஆழ்த்தியதுடன், அந்த நாட்டின் மின் விநியோகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF