Thursday, February 17, 2011

இன்றைய செய்திகள் 17/02/2011

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி.


அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.திவயின சிங்கள நாளிதழின் தலைமை ஆசிரியரை தமது மாளிகைக்கு அழைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

எகிப்திய ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளதாக அண்மையில் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜனாதிபதி திவயின பத்திரிகையின் தலைமை ஆசிரியரை அழைத்து தாம் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதை நிரூபித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அழைக்கப்பட்டிருக்கும் போது ஜனாதிபதி அலரி மாளிகையில் அவரது புதல்வருக்காக பொறுத்தப்பட்ட உற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அருகில் இருந்த தொலைக்காட்சியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எகிப்திய விவகாரம் குறித்து உரையாற்றும் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இருக்கலாம் என லங்கா நிவ்ஷ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளில் குழப்பங்களை தோற்றுவிக்க முயற்சித்து வருவதாகவும் எனினும் அவர்கள் அமெரிக்காவுக்கு எதனையும் செய்யவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான ஒரு நிலைமை இலங்கையில் வரவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சீண்டியவர்களுடன் போராடிய தலித் இளம்பெண் உயிருடன் எரிப்பு!

தன்னைச் சீண்டி வம்பிழுத்த இளைஞனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொழுத்தப்பட்ட சம்பவம் போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபாலை அடுத்துள்ள நரசிங்கபுரம் என்ற மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் 15 வயது நிறைந்த தலித் வகுப்பைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டி கேவலப்படுத்திய தஸ்ராத் சவுத்ரி என்ற இளைஞனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமுற்ற சவுத்ரி அந்த இளம்பெண் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

இதன் காரணமாக அந்த இளம்பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். நடந்த சம்பவங்களைக் குறித்து பாதிக்கப்பட்ட தலித் பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.இளம்பெண் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த இளைஞன் சவுத்ரியைக் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது.



எகிப்து, சுவிட்சர்லாந்திடம் உதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எகிப்தின் புதிய ஆட்சியாளர்கள் சுவிட்சர்லாந்திடம் உதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது பத்து குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள், சுவிட்சர்லாந்து நீதியமைச்சிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஹொஸ்னி முபாரக்கின் சொத்துக்களை முடக்குவதற்கு சுவிட்சர்;லாந்து ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.எகிப்தில் விரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு.
பிரிட்டனில் 16 வயதிலிருந்து 24 வயது வரை வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டின் கடைசி காலிறுதி பகுதியில் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரித்தது. இந்த வேலை இல்லாத திண்டாட்ட நிகழ்வில் இருந்து மீட்சி அடைய முடியும் என அரசு சாதகமான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது.
நாட்டில் ஏராளமான பணி இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறினர். பணி மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிஸ் கூறுகையில்,"வேலை இல்லாத நிகழ்வு தற்போது ஸ்திரப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இந்த பணியிடங்களில் அதிக நபர்கள் பயன் அடைய நலவாழ்வு சீரமைப்பை மேம்படுத்த வேண்டி உள்ளது" என்றார்.
பொதுத்துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ரத்து நடவடிக்கை காரணமாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஜி.எம்.பி யூனியன் பொதுச்செயலாளர் பால் கென்னி கூறியதாவது: 290 கவுன்சில்களில் ஜி.எம்.பி 1 லட்சத்து 62 ஆயிரம் வேலை இழப்புகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என்றார்.

வயிற்றில் கத்திரிக்கோலுடன் பெண் அவதி.
தனது வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கத்திரிக்கோலால் பிரெஞ்சு பெண் அனே கடந்த 6 மாதமாக அவதிப்பட்டு வருகிறார்.
லையான் நகரில் வசித்து வரும் அனே கடுமையான வயிற்று வலியாலும், இருமலாலும் அவதிப்பட்டு வந்தார். கடந்த வெள்ளியன்று வலி அதிகமாகவே, 6 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஓபரேஷன் செய்த மருத்துவமனையை அனே அணுகினார்.
அப்போது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்த அபாயமும் நேராது என அங்குள்ள சத்திர சிகிச்சை நிபுணர்கள் மெத்தனம் காட்டினர். இதனால் அனே அவர்கள் மீது வழக்கு தொடரும் முடிவுக்கு வந்தார்.
அனே மற்றொரு மருத்துவமனையில் வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது 10 செ.மீ நீளத்தில் கத்திரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு வழக்கறிஞரின் அழைப்பை அணுக வேண்டி இருந்தது என அவர் தெரிவித்தார்.
காதலர் தினமன்று இந்த சத்திரசிகிச்சை மேற்கொண்டதால் இந்த ஓபரேஷனுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை எனக் குறிப்பிட்ட மருத்துவர், இந்த விடயத்தை நகைச்சுவையாக்க முயன்றார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட மருத்துவமைனையில் தன்னை நோயாளியாக பாவிக்கமால், சந்தைப் பொருள் வாங்கும் வாடிக்கையாளராக பாவித்தது அதிர்ச்சி அளித்தது என அனே தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.
அவுஸ்திரேலிய அரசு மாணவர்களின் விசாவில் பல்வேறு சட்டதிட்டங்கள் போட்டதால், அங்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.அவுஸ்திரேலியாவில் கடந்த 2009 வரை வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக சீனா மற்றும் இந்திய மாணவர்கள் படிப்பதற்காக கணிசமான அளவில் வந்து கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த இனவெறித் தாக்குதல், விசா கெடுபிடிகள் அதிகரிப்பு இவற்றால் மாணவர்களின் வருகை கணிசமான அளவில் குறைந்து விட்டது.
அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டனை நோக்கி இம்மாணவர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதே நிலை நீடித்தால் 2015 ல் வெளிநாட்டு மாணவர்களின் வரத்து 30 சதவீதமாகக் குறைந்து விடும். அதனால் 36 ஆயிரம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று பல்கலைக்கழகங்கள் கடந்தாண்டு எச்சரித்திருந்தன.
அவர்கள் கூற்றுப்படி இந்திய மாணவர்களின் மீதான இனவெறித் தாக்குதல், படிப்புச் செலவு உயர்வு, அவுஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பு உயர்வு போன்ற பிரச்னைகளால் கடந்தாண்டில், இந்திய மாணவர்கள் அங்கு செல்வதில் 50 சதவீதம் குறைந்து விட்டது."வெளிநாட்டு மாணவர்களின் வரத்து அவுஸ்திரேலியாவில் குறைந்ததற்கு காரணம் அந்நாட்டு அரசின் குறுகிய மனப்பான்மை மற்றும் தொலைநோக்கின்மை தான்" என்றனர் நிபுணர்கள்.

டேவிசை விடுவியுங்கள்: பாகிஸ்தானுக்கு ஒபாமாவின் எச்சரிக்கை.
Barack Obama in President Obama Signs Executive Orders To Close Guantanamo Detention Center
அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிசை பாகிஸ்தான் சிறையில் அடைத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலையிட்டுள்ளார்.
"வியன்னா ஒப்பந்தத்தை மதிக்கும் வகையில் டேவிஸ் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய ரேமண்ட் டேவிஸ் கடந்த மாதம் இரண்டு பாகிஸ்தானியர்களைச் சுட்டுக் கொன்றார்.
இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தற்காப்புக்காக சுட்டதாக கூறிய டேவிசின் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது. இவ்விவகாரம் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் உயரதிகாரிகள் மட்டுமே தலையிட்டிருந்த நிலையில், தற்போது அதிபர் ஒபாமாவே தலையிட்டு பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: டேவிசின் விடுதலை என்பது மிக எளிதான வகையில் செய்யக் கூடியது. அதாவது நாடுகளுக்கிடையிலான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்த வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வந்தாலும், அவர்கள் அந்த நாடுகளின் சட்ட வரம்புக்குள் வரமாட்டார்.
அவர்கள் மீதான குற்றம், அமெரிக்க சட்டபடி மட்டுமே விசாரிக்கப்படும். இதேநிலை தான் அமெரிக்காவில் உள்ள பிற நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும் பொருந்தும். அதனால் இந்த எளிய வழியின் அடிப்படையில் டேவிஸ் விடுதலை செய்யப்பட வேண்டும். வியன்னா ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிப்பது போலவே, பிற நாடுகளும் மதிக்க வேண்டும். அதனால் டேவிஸ் விடுவிக்கப்படும் வரை இவ்விவகாரத்தில் செயலாற்றுவோம். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி இதுபற்றி கூறுகையில், "அமெரிக்காவின் விருப்பப்படி தூதரக அதிகாரம் என்ற பெயரில் டேவிசை நாம் விடுவிக்க முடியாது. இந்த வழக்கை விசாரித்து வரும் லாகூர் கோர்ட் என்னிடம் இதுபற்றி விசாரிக்க கூடும். அப்போது இக்கருத்தை நான் உறுதியாக சொல்வேன். இதற்கு நான் அதிக விலை கொடுக்க வேண்டி வரும். எனினும் தேச நலன் கருதி நான் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்" என்றார்.
உலக வங்கியின் மிகப் பெரிய கவலை.
உலகளாவிய உணவு விலை‌ ஏற்றம் அபாய கட்டத்தை நெருங்குவதாக உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
இதன் கரணமாகவே மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அரசியல் குழப்பமும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட்ஜியோலிக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: உலகளாவில் உணவு விலை ஏற்றம் வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை உண்டாக்குகின்றன. எனவே உணவு பாதுகாப்பு என்பது எந்த நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
‌கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் இவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில் தான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடாடுகளான எகிப்து, துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளில் வன்முறைகள் நடக்கின்றது. இதுவே பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த காரணமாக அமைந்தது.
விவசாய பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளான ஆஸ்திரேலியா- ரஷ்யா ஆகிய நாடுகளில் ‌மழை, வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டன. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் உலகளாவில் 44 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வளர்ந்து வரும் நாடுகள் அதிகம். எனவே உணவு பாதுகாப்பு குறித்து சர்வதேச சமூகம் புதிய சீர்திருத்தத்தினை ‌கையாள வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்று தான் மிகச்சிறந்த வழி. இவ்வாறு ராபர்ட்ஜியோலிக் கூறினார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட்! கோலாகல தொடக்க விழா.

வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. 

தொடக்க நாளில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுதினம் தொடங்கினாலும், தொடக்க விழா மட்டும் இன்று (வியாழக்கிழமை) வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள பங்கபந்து தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா 2 மணி 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு நடைபெறும் முதல் மிகப்பெரிய விளையாட்டு இது தான். 

எனவே தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது வித்தியாசமான நடனங்கள் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கிறார்கள். போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளின் கலாச்சாரம், பண்பாட்டை சித்தரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. 42 நாட்கள் நடைபெறும் இந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் (ஐ.சி.சி.) சரத்பவார் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மற்றும் ஐ.சி.சி. தலைவர் உரையாற்றிய பிறகு, 14 நாட்டு அணிகளின் கேப்டன்களும் மைதானத்திற்குள் நுழைகிறார்கள். 

வங்காளதேசத்தின் பாரம்பரிய வாகனமான அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில் கேப்டன்கள் வலம் வருவார்கள். இது மட்டுமின்றி, பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். கனடா பாடகர் பிரையன் ஆடம்ஸ் மற்றும் இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் சோனு நிகாம் தொடக்க விழாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உலக கோப்பை மையநோக்கு பாடலை உருவாக்கிய, இந்திய இசைக்குழுவினர் சங்கர் மகாதேவன், ஈசான் மற்றும் லாய் ஆகியோரும் அசத்த உள்ளனர். இலங்கை, வங்காளதேசத்தின் இசை மேதைகள், பாடகர்களும் தங்களது திறமையை காட்ட இருக்கிறர்கள். 

மேலும், ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் லேஷர் ஷேஷா, விண்ணைமுட்டும் வாணவேடிக்கை தொடக்க விழா ஸ்டேடியத்தை அதிர வைக்கும். தொடக்க விழாவை மாலை 5.30 மணி முதல் இ.எஸ்.பி.என்., ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இலங்கையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சேவை : ஆரம்ப நிகழ்விலேயே குளறுபடி
இந்திய அரசாங்கத்தின் கடனுதவிடன் நேற்றைய தினம் ஆரம்பமான இலங்கையின் கடுகதி புகையிரத சேவையின் ஆரம்ப நிகழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பி.டி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்விலேயே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து, ஒரு மணித்தியாலங்கள் தாமதமாகவே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குரவத்து அமைச்சர் குமாரவெல்கம இந்த நிகழ்வுக்கு ஒரு மணித்தியாலம் தாமதித்தே வந்துள்ளமையே இதற்கான காரணம்.


அத்துடன் இந்த நிகழ்வின் அடித்தள ஏற்பாடுகள் முறையாக இல்லாத காரணத்தினால், நிகழ்வில் கருத்து தெரிவிக்கவும் அவர் மறுப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஏற்பாட்டளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்திய அரசாங்கதின் 167 மில்லியன் டொலர்கள் செலவில் காலிக்கும் - மாத்தரைக்கும் இடையிலான மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் புகையிரத சேவைகள் நேற்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த சேவைக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த புகையிரத என்ஜின் தயாராகாததால், அதற்கு பதிலாக சீனாவின் லொக்மோடிவ் என்ஜின் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா.
இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறைகள் என்பன தலைவிரித்தாடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இன்று கட்டுநாயக்கவில் நடைபெற்ற மறைந்த விஜய குமாரதுங்கவின் நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,  நானும் விஜய குமாரதுங்கவும் அன்று தொடக்கம் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்தை மட்டுமன்றி அரச பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம்.
இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் நிலவரம் பற்றி விஜய கண்ணுற்றிருப்பாராக இருந்தால் அவர் பெரிதும் மனம் வருந்தியிருப்பார். அந்தளவுக்கு அரச அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நானும் என் கணவரும் இந்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட பல செயற்திட்டங்கள் இன்று தலைகீழாக புரட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF