
நீங்கள் அழகாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.
தினமும் இரவில் ஒழுங்காக தூங்கினாலே போதும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் பேராசிரியர் ஜான் ஆக்ஸல்சன் தூக்கத்திற்கும் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
தற்போதைய இயந்திர வாழ்வில் மக்கள் தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வரும் வேலையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 18 முதல் 31 வயது வரையுள்ள 23 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பிற்பகல் 2 மணி மற்றும் 3 மணி அளவில், நல்ல தூக்கம், தூக்கமின்மை ஆகிய 2 தருணங்களில் புகைப்படம் எடுத்தனர்.
இந்த ஆய்வில் புகைபிடிப்பவர்களை அழைக்கவில்லை. இதில் கலந்து கொண்டவர்கள் ஆய்வுக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே மது அருந்த அனுமதிக்கவில்லை. புகைப்படம் எடுக்கையில் அவர்கள் யாரும் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வின் பின்னணி பற்றி தெரியாதவர்களிடம் அவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து கருத்து கேட்கப்பட்டது.
இதில் 65 பேர் நன்றாக தூங்கியவர்களின் புகைப்படங்கள் தான் அழகாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதன் மூலம் இரவில் நன்றாகத் தூங்கினால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.