Tuesday, February 15, 2011

இன்றைய செய்திகள் 15/02/2011


சவூதியில் விலங்குப் பண்ணையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண்!

சவூதி அரேபியாவில் ஒதுக்குப் புறம் ஒன்றில் உள்ள விலங்குப் பண்ணை ஒன்றில் எஜமானர்களால் கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்த இலங்கைப் பணிப் பெண் ஒருவரை தூதரக அதிகாரிகள் மீட்டு உள்ளனர்.பாத்திமா அசீரா (வயது-43) என்பவர் வீட்டுப் பணிப் பெண் வேலைக்காக கடந்த செப்டெம்பர் மாதம் சவூதி வந்து சேர்ந்தார். ஆனால் வீட்டு வேலைகளுக்கு மேலதிகமாக விலங்குப் பண்ணை ஒன்றில் பணியாற்ற வேண்டும் என்று எஜமானர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார். 

இப்பண்ணையில் சுமார் நூற்றுக்கணக்கான வளர்ப்புப் பிராணிகள் உள்ளன. இவர் பயங்கரமான குளிருக்குள்ளும் பண்ணையில் மிருகங்களோடு இராப் பொழுது முழுவதையும் கழிக்க வேண்டி இருந்தது. காலையில் 5.00 மணிக்கு பண்ணைக்கு செல்ல வேண்டும். விலங்குகளுக்கு வாகனம் ஒன்றில் இரை வரும். இந்த இரை முழுவதையும் தனி ஒருவராக வாகனத்தில் இருந்து இறக்க வேண்டும். 

விலங்களுக்கு இரை கொடுக்க வேண்டும். பண்ணையை துப்புரவு செய்ய வேண்டும். அதிகாலை 10.00 மணிக்குள் எஜமானரின் வீட்டுக்கு செல்ல வேண்டும். இவை இவரின் நாளாந்த கடமைகளில் பண்ணை சார்ந்தவை. அதன் பின் வீட்டில் சமைக்க வேண்டும். எஜமானர்களின் உடுப்புக்களை தோய்க்க வேண்டும். வீட்டை துப்புரவு செய்ய வேண்டும். எஜமானர்களின் குழந்தைகளை பராமரிக்க வேண்டும். இவர் இருமலுடன் இரத்த வாந்தி எடுக்க தொடங்கி இருக்கின்றார். பண்ணையில் உள்ள மிருகங்கள் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கடந்த 30 நாட்கள் சிகிச்சை பெற்று வந்து இருக்கின்றார். 

கடும் குளிருக்கு மத்தியில் திறந்த பிரதேசம் ஒன்றில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தமையால் இவர் நோய் வாய்ப்பட நேர்ந்து இருக்கின்றது என்று வைத்தியர்கள் சொல்லி இருக்கின்றனர். இவரின் கைகள், கால்கள் குளிர்க் கொடுமையால் மரத்து விட்டன. சவூதியில் உள்ள இலங்கைத் தூதுரகத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலன் பேணும் அதிகாரி சுனில் விஜேசிங்க இப்பெண்ணை நேரில் சென்று வைத்தியசாலையில் பார்வை இட்டார். 

வீட்டுப் பணிப் பெண்ணாக வந்தவரை விலங்குப் பண்ணையில் வேலைக்கு அமர்த்தியமை தொழில் சட்டத்துக்கு முரணானது என வாதாடினர். நீண்ட பிரயத்தனத்துக்கு பின் வைத்தியசாலையில் இருந்து இப்பெண்ணை தூதரகம் பொறுப்பெற்று உள்ளது. ஆயினும் பெண்ணின் உடல் நிலை திருப்திகரமாக இல்லை. இவர் தற்போது தலைநகர் ரியாத்துக்கு கொண்டு வரப்பட்டு தூதரகத்தின் நேரடி மேற்பார்வையில் வைத்தியசாலை ஒன்றில் தொடர் சிகிச்சை பெறுகின்றார்.

முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகாவுக்கு கௌரவ விருது!

நாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விருது வழங்கி நேற்று கௌரவிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்ததை முடிவுக்கு கொண்டு வருகின்றமையில் சரியான தலைமைத்துவத்தை வழங்கிச் செயல்பட்டார் என்பதற்காக ஜனரலில் யுத்த நாயகர்களுக்கான ஸ்தாபனம் என்கிற அமைப்பு இவருக்கு இவ்விருதை வழங்கியது. 

கொழும்பில் இடம்பெற்ற இவ்விழாவில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, அனுர திஸ்ஸநாயக்க, ரிரான் அலஸ் ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொன்சேகா வெலிக்கடைச் சிறையில் இருபது வருட கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மனைவி அனோமா பொன்சேகா கௌரவத்தையும், விருதையும் சுவீகரித்துக் கொண்டார்.

கிணற்றுக்குள் தவறி விழுந்த அபூர்வ சிறுத்தை பத்திரமாக மீட்பு!

மிகவும் அபூர்வ இனத்தைச் சேர்ந்த சிறுத்தைப் புலி ஒன்று கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்ட கிணறு ஒன்றுக்குள் தவறி விழுந்த நிலையில் இரு நாடகளின் பின் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. கே.லியங்கம என்பவருக்கு சொந்தமான கிணற்றுக்குள் இச்சிறுத்தைப் புலி கடந்த 12 ஆம் திகதி இரவு விழுந்து இருக்கின்றது. மறுநாள் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொலிஸாருக்கும், வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கி இருக்கின்றார் லியங்கம. 

13 ஆம் திகதி மாலை வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகள் இருவர் வந்தனர். ஆனால் சிறுத்தைப் புலியை மீட்க இவர்களால் முடியவில்லை. ஏனெனில் ஊசி மருந்து ஏற்றி சிறுத்தைப் புலியை முதலில் மயக்க வேண்டும். இந்நேரம் பல நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கிணற்றைச் சுற்றி நின்றனர். சிறுத்தைப் புலியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று கொண்டனர். இந்நிலையில் சிறுத்தையின் பாதுகாப்புக்கு ஆபத்து நேராது என்று நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாக்குறுதி வழங்கினார். 

அன்று இரவு 7.30 மணி அளவில் வன விலங்குகள் திணைக்களத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர் ஒருவர் வந்தார். ஆனால் மயக்கத்தை ஏற்படுத்தும் ஊசி மருந்தை இரவு 6.00 மணிக்கு பின்னர் ஏற்றுகின்றமை தடை செய்யப்பட்டு உள்ளது என்றார். இவர் இரவு முழுவதும் இங்கேயே தங்கினார். மறுநாள் அதிகாலை ஊசி மருந்து மூலம் சிறுத்தைப் புலியை மயங்க வைத்து கிணற்றில் இருந்து வெளியே மீட்டார். பின்னர் வன விலங்குகள் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனத்தில் சிறுத்தைப் புலியை ஏற்றிக் கொண்டு சென்றார்.


பக்கத்து வீட்டு நாய்க் குட்டி கடித்து மாணவி குரைத்துக் குரைத்து மரணம்!

பக்கத்து வீட்டு நாய்க் குட்டியுடன் விளையாடிய 18 வயது மாணவிக்கு அந்த நாய்க்குட்டி கடித்து விட்டது, மாணவி மரணமானார்.இச்சம்பவம் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம் பெற்று உள்ளது.இம்மாணவிக்கு நாய் கடித்ததை பெற்றோர் அறிந்து இருந்தனர். இருப்பினும் சரியான சிகிச்சையை பெற்றுக் கொடுக்கத் தவறி விட்டனர். சில நாட்களில் மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கின்றது.அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.மாணவி திடீரென நாய்போல குரைத்துக் குரைத்து மரணம் ஆனார்.மாணவிக்கு கடித்த நாய் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டது.மாத்தறை மரண விசாரணை அதிகாரி லலித் டீ சில்வா மரண விசாரணை நடத்தினார்.விசர் நாய் கடித்ததால் மரணம் சம்பவித்தது என தீர்ப்பு வழங்கினார்.


மரமேறும் ஆடுகள்.
மரத்தில் உள்ள ஆடுகளை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆடுகள் எங்கே மரம் ஏறப் போகின்றது என்று யோசிக்கின்றீர்களா. அதையும் தான் பாருங்களேன்!ஆடு புல் மேயும். அதே ஆடு மரத்தின் மேல் ஏறி மேயும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை போலும்.மொரோக்கோவில் உள்ள ஆடுகள் இவ்வாறு மரத்தின் மீது ஏறி உணவு உண்கிறன. ஆர்கன் எனும் மரங்களில் இலைகளை சாப்பிடுகிறது. அத்துடன் அதிலுள்ள பழங்களையும் இவை உண்கின்றன.



கபிலவஸ்து சின்னம் என்னும் புத்தரின் எலும்பு: சிறிலங்காவுக்கு கடனாக வழங்கும் இந்தியா.

சிறிலங்காவில் இடம்பெறவுள்ள புத்தரின் 2600வது ஆண்டு ஞானோதய நிகழ்வுக்காக 'கபிலவஸ்து சின்னம்' [Kapilavastu relics] என அறியப்பட்ட புத்தருடைய எலும்புகளின் உடைந்த துண்டுகளை தற்காலிகமாக சிறிலங்காவிற்கு வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருக்கிறது. 
இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுவரும் இந்த கபிலவஸ்து சின்னம் இந்தியாவிற்கு வெளியே எடுத்துச்செல்லப்படுவது கடந்த பத்தாண்டுகளில் இதுதான் முதல்முறை.

சிறிலங்கா நடாத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் இந்த நிகழ்வானது சிறிலங்காவில் அமைதி நிலைப்பதற்கு வழிசெய்யவேண்டும் என்றும் அது 'வன்முறைசாராத வழிமுறை' என்ற சொற்பதம் இந்தப் பிராந்தியத்தில் பரவுவதற்கு வழிசெய்யும் என்றும் சிறிலங்காவிற்கு பயணம் செய்திருக்கும் இந்தியாவினது மக்களவையினது சபாநாயகர் மெறியா குமார் [Meira Kumar] கூறுகிறார். கடந்த ஆண்டு யூன் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச மன்மோகன் சிங்கிடம் விடுத்த வேண்டுகையின் அடிப்படையிலேயே கபிலவஸ்து சின்னத்தினை கடனாகக் கொடுப்பது என்ற முடிவினை இந்திய அரசாங்கம் எடுத்திருந்தது.

சிறிலங்காவில் இடம்பெறவுள்ள புத்தரின் ஞானோதய நிகழ்வின் போது காட்சிப்படுத்துவதற்காக இந்தியா கபிலவஸ்து சின்னத்தினை அனுப்பும் என கடந்த சனியன்று அதிபர் ராஜபக்சவினைச் சந்தித்த இந்திய மக்களவையின் சபாநாயகர் உறுதியளித்திருந்தார். பௌத்தம் பிரதான மதமாகவுள்ள சிறிலங்காவில் ஞானோதய நிகழ்வு அல்லது சம்புத்தவ ஜெயந்தி [Sambuddhatva Jayanti] என அறியப்பட்ட இந்த நிகழ்வினை பிரமாண்டமான அளவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

19ம் நூற்றாண்டில் இந்தியாவின் முதலாவது அகழ்வாராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அலெக்ஸ்சாண்டர் கனிங்கம் [Alexander Cunningham] என்பவரால் இந்தியாவின் இன்றைய பீகார் மாநிலத்தில், இந்திய வரலாற்றில் குறிப்பிடப்படும் கபிலவஸ்து என்னுமிடத்தில் இவ்வெலும்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. கபிலவஸ்து சின்னத்தினை சிறிலங்காவிற்குக் கொண்டுசெல்வது, அதற்கான காப்புறுதி, பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இது தொடர்பான உடன்பாட்டில் இரு நாடுகளும் கைச்சாத்திட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

கபிலவஸ்து சின்னம் எனப்படும் புத்தருடைய எலும்பினது எஞ்சிய பாகங்களைச் சிறிலங்காவிற்குக் கடனாக வழங்குவதற்கு அப்பால் எதிர்வரும் மார்ச் மாதம் கண்டியில் பௌத்தம் தொடர்பான அனைத்துலக மாநாடு ஒன்றையும் சிறிலங்கா ஒழுங்குசெய்திருக்கிறது. ஏற்படாகியிருக்கும் இந்த மாநாடு, கண்டியிலுள்ள அனைத்துலக பௌத்த அருங்காட்சியகத்தில் 16 அடி உயரமான புத்தரின் உருவச்சிலையை இந்தியா திறந்துவைத்தல் போன்ற பல அம்சங்கள் இந்திய மக்களவையின் சபாநாயகருக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.



நல்ல சுகதேகியாக இருந்து உடல் பயிற்சி செய்யும் மஹிந்தர்! திவயின பத்திரிகை தகவல்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகவும் ஆரோக்கியம் ஆக உள்ளார் என்று தகவல் வெளியிட்டு உள்ளது 'திவயின' சிங்கள பத்திரிகை.கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சென்று இருந்தார். 

இவர் அங்கு புற்று நோய் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் வெளியாகின.இவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இருக்கின்றார் என்று பரவலாக கதைகள் அடிபடுகின்றன. இந்நிலையில் திவயின பத்திரிகையாளர்களில் ஒருவரான காமினி சுமனதேர அலரி மாளிகைக்கு இரு தினங்களுக்கு முன் அதிகாலை 4.00 மணி அளவில் சென்று இருக்கின்றார்.

அங்கு ஜனாதிபதி தீவிரமாக உடல் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையை நேரில் கண்டு இருக்கின்றார். ஜனாதிபதி சுமார் ஒரு மணித்தியாலங்கள் உடல் பயிற்சிகள் செய்து இருக்கின்றார்.இந்நிலையில் நல்ல சுகதேகியாக இருந்து உடல் பயிற்சி செய்கின்றார் என்கிற தலைப்பில் பத்தி ஒன்றை எழுதி உள்ளார் மேற்படி பத்திரிகையாளர். ஜனாதிபதி உடல் பயிற்சி செய்கின்றமையை காட்டும் புகைப்படங்களையும் பிரசுரித்து உள்ளார்.



நிதி பற்றாக்குறையைக் குறைக்க ஒபாமாவின் புதிய திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நிதி பற்றாக்குறையை குறைக்கும் விதமாக புதிய பட்ஜெட் ஒன்றை வெளியிட்டார்.இந்த பட்ஜெட் அம்சங்களால் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவின் பற்றாக்குறை பாதியாக குறைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் கட்டுப்பாடு மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராணுவம் சாராத நிதிகளை குறைத்தல் மூலம் பற்றாக்குறை குறைக்கப்படுகிறது.
அதே போன்று அமெரிக்காவின் ஏழை மக்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களில் குறைப்பு நடவடிக்கையும் ஒபாமா பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு கடுமையான தேர்வாக உள்ளது என ஒபாமா தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையை குறைப்பதற்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வசதியான மக்கள் அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் வரிக்கு, விலக்கு பெறுவது என்பது கடுமையாகவே இருக்கும். எண்ணெய், எரிவாயு, கரி உற்பத்தியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க கருவூலத்திற்க்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டிய சுழலும் ஒபாமா பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் முடக்க வேண்டும்: புதிய அரசு கோரிக்கை.
கடந்த 1981 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.ஜனவரி 25 ம் திகதி முதல் 18 நாட்களில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முபாரக்கின் ஆட்சி பறிபோனது.
தற்போது எகிப்தில் புதிய இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிர்வாகத்தினர் தங்களது எகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் முடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.பிரான்ஸில் உள்ள எகிப்து தலைவர்களின் சொத்துக்கள் முடக்கம் குறித்து புதிய நிர்வாகம் உறுதியாக உள்ளது. சொத்து முடக்கத்தில் முபாரக் சொத்து விவரங்கள் குறித்து குறிப்பிடவில்லை. இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பெர்னார்டு வாலரோ கூறுகையில்,"எகிப்து நிர்வாகத்தினருக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.
ஜரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் காதரின் ஆஷ்டன் முன்னாள் தெரிவித்த கருத்தில், முபாரக் சொத்து முடுக்கம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை பிரதிபலிக்கும் வகையில் பிரான்ஸ் வெளியுறவு செய்தி தொடர்பாளர் பெர்னார்டு வாலரோ கூறியுள்ளார்.

கனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்: விசா எண்ணிக்கை குறைப்பு.
கனடாவில் குடியேறியவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை அழைப்பதற்கான விசா எண்ணிக்கையை குறைப்பது என கனடா தேசிய அரசு முடிவு செய்துள்ளது.அரசின் இந்த முடிவால் கனடாவில் குடியேறியவர்கள், தங்களது பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது குறித்த விசாக்கள் 16 ஆயிரம் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு 11 ஆயிரம் விசாக்களை மட்டும் அனுமதிப்பது என கனடா குடியரசு முடிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டை விட காட்டிலும் 5 ஆயிரம் விசாக்கள் குறைக்கப்படுவதால் தங்களது பிள்ளைகளுடன் பெற்றோர் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் ஒரு நபர் அஸ்மத்கான். கான் கடந்த 1994 ம் ஆண்டு கனடாவுக்கு குடியேறினார். இவரது பெற்றோர் கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் வசித்து வருகிறார்கள். அவர்களை கடந்த 7 வருடமாக கனடாவுக்கு அழைத்துவர அஸ்மத்கான் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கனடா அரசின் புதிய சட்டத்தால் தமது பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அழைத்து வர முடியாத நிலை உள்ளது என அஸ்மத்கான் வேதனையுடன் தெரிவித்தார். கனடாவில் வசிக்கும் தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ இதுவரையிலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெற்றோரை கனடாவுக்கு அழைத்தவர இன்று விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்கள் கனடாவுக்கு வர 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கொடிய வைரஸால் நன்மையும் உண்டு.
மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான வைரஸானது புற்றுநோய்க்கு மருந்துதாக பயன்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.மனிதர்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களில் மிக முக்கியமானது "மீசல்ஸ்" வைரஸ்கள். எளிதாகத் தொற்றும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் ஊடுருவினால் கடுமையான வலியுடன், உடம்பில் சிவப்பு சிவப்பான புள்ளிகள் தோன்றும்.
ஆனால் தற்போது இந்த வைரஸைத்தான் நன்மை புரியும் மருந்தாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வைரஸை புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேயோ கிளினிக் ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மீசல்ஸ் வைரஸ்கள் தாங்கள் தாக்கும் செல்லுக்குள் எப்படி நுழைகின்றன, வெளியேறுகின்றன என்பது தான் தங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்கின்றனர்.
குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மீசல்ஸ் வைரஸ்களை கொண்டு தாக்கி அழிக்க முயன்று வருகிறார்கள். அதற்காக இந்த வைரஸ்கள் செயல்படும் விதத்தை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த வைரஸ்கள் ஒரு செல்லுக்குள் ஊடுருவுவதில் இரண்டு புரதங்கள் முக்கியமாகச் செயலாற்றுகின்றன என்று ஆரம்பகட்டமாகத் தெரியவந்திருக்கிறது. அவை குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. அந்த ஆய்வு முடியும்போது புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு முக்கியமான ஆயுதம் பிறந்திருக்கும் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF