புதிதாக பிறக்கும் பாலூட்டிகளின் இதயத்தை வெட்டினால் அது மீண்டும் வளரும் தன்மை கொண்டதாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.சுண்டெலி பிறந்த ஒரு நாளில் அதன் இதயத்தின் பெரும் பகுதி வெட்டப்பட்டது. இந்த வெட்டப்பட்ட இதயப்பகுதி 3 வாரத்தில் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. மீன் மற்றும் நீர் நிலம் என இரண்டிலும் வாழும் உயிரினங்கள் தங்களது இதயத் திசுக்களை மீண்டும் வளர்க்கும் திறன் கொண்டவை ஆகும்.
தற்போதைய ஆய்வு மூலம் பாலூட்டிகளிலும் இதயத் திசு வளரும் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில்,"இந்த புதிய செயல்பாடு மனித இதய நலன் விடயத்தில் வெகுவாக உதவும்" என்றனர்.
டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் தென்மேற்கு மருத்துவமைய ஆய்வாளர்கள் சுண்டெலியின் இதயத்தின் கீழ் அறைப்பகுதியில் இதயத் தசையின் 15 சதவீதத்தை அகற்றினர். சுண்டெலி பிறந்து ஒரு நாள் ஆன நிலையில் இது வெட்டி எடுக்கப்பட்டது. இந்த பகுதி 21 நாளில் மீண்டும் முழுவளர்ச்சி அடைந்தது.பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் சுண்டெலிக்கு இதே சோதனை செய்த போது அது பலன் அளிக்கவில்லை. தங்களது சோதனை எதிர்காலத்தில் மிகுந்த பலனை அளிக்கும் என பேராசிரியர் எரிக் ஓல்சன் கூறினார்.