Monday, February 14, 2011

இன்றைய செய்திகள் 14/02/2011

தண்ணீர் மூலம் இயங்கும் கார்: வாலிபரின் சாதனை.
பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் இந்நிலையில் இலங்கை வாலிபரான "துஷார ஹெதிரிசிங்க" சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.
இவர் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே.
வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.



இஸ்லாமியப் பெண்கள் தேர்தலில் முகமூடி அணிந்து வாக்களிக்க தடை: கனடா.

பொதுத் தேர்தலில் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, முகத்தை மூடி இருக்க கூடாது என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
பழமைவாத கட்சியினர் இந்த சட்ட மசோதாவை ஆதரித்த போதும், பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டம், கலாச்சாரம், சுதந்திர உணர்வு வெளிப்பாடு மற்றும் மத விடயங்களில் மோசமாக விவாதத்ததை ஏற்படுத்துவதாக எதிர் கட்சியினர் கூறினர்.
இதே போன்ற சட்டம் பிரான்ஸில் அமல்படுத்தப்பட்டது. இஸ்லாமிய மத கோட்பாடு படி பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு பொது இடங்களில் வரக்கூடாது என அதில் கூறப்பட்டிருந்தது. அதே போன்ற சட்டத்தால் கியூபெக் மாகாணம் பொதுவிவாதத்தை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.
குடியேற்ற துறை அமைச்சர் ஜான் கென்னி கூறுகையில்,"முகத்தை மூடாமல் வாக்களிக்க வேண்டும் என்ற பழமைவாத கட்சியினரின் கருத்து நியாயமானது என்றார். மக்கள் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என கூற அரசு விரும்பவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடாமல் வாக்களிப்பது தொடர்பான சட்ட மசோதாவை கியூபெக் எம்.பி.ஸ்டீவன் பிளானி வெள்ளியன்று அவையில் தாக்கல் செய்தார். கனடா தேர்தலில் முகத்தை மூடிக் கொண்டு வாக்களிப்பதால் தேர்தல் ஊழியர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்த விவரங்களை அவர் தரவில்லை.
கியூபெக்கில் சிறுபான்மையினர் பெரும் விவாதம் செய்யும் வகையில் புதிய சட்ட மசோதா உள்ளது என என்.டி.பி மற்றும் லிபரல் கட்சியினர் தெரிவித்தனர். இது வரையிலான தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களது முகத்தை காட்ட வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை.

இரவு நேரத்தில் திருமணம் செய்யலாம்: இங்கிலாந்து அரசு.
இங்கிலாந்து நாட்டில் இரவு நேர திருமணங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இரவு நேரத்தில் திருமணம் செய்து கொள்வது என்பது அந்நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் பிளாக்பூல்கோபுரம், டவர் பிரிட்ஜ், ரேஸ் கோர்ஸ் போன்ற இடங்களில் திருணம் செய்து கொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசு அனுமதியை தற்போது வழங்கியுள்ளது. அரசின் இந்த முடிவை இங்கிலாந்து மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த அனுமதி அரசின் பரிசீலனையில் உள்ளது.
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு ஐயர்லாந்து போன்ற பகுதிகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்ச் ஆப்,"இங்கிலாந்து திருமண நேரத்தை மாற்றியமைத்தல் மற்றும் சர்ச்களின் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்தும் ஆராயப்படும்" என தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற கோடை காலங்களில் மாலைநேரங்களில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002 ம் ஆண்டு முதல் சர்ச்சுகள், திருமண பதிவு மையங்கள் போன்றவை இரவுநேர திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பல்கலைகழகம் செய்த மோசடியால் மாணவர்கள் தவிப்பு.
அமெரிக்காவின் டிரிவேலி பல்கலைக்கழகம் செய்த விசா மோசடி பிரச்னையில், பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக தீர்வு எதுவும் கிடைக்காமல் தவிக்கின்றனர். "இப்பிரச்னை தீர இன்னும் எட்டு மாதங்கள் கூட ஆகலாம்" என தெரிவித்துள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. அதே நேரத்தில் இப்பிரச்னையை உயர்மட்ட அளவில் எடுத்துச் செல்ல இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக்கழகம் விசா மோசடியால் இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியானது. அமெரிக்கக் குடியேற்றத் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றவர்களின் விசாக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 16 பேர்களின் கால்களில் "எலக்ட்ரானிக் டேக்" என்னும் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட ஓர் இந்திய மாணவர், "எங்களுக்கான உதவியை நாங்களே தான் தேடிக் கொள்கிறோம். இந்திய அரசு சார்பில் எந்த உதவியும் கிட்டவில்லை. எங்கள் சார்பில் வாதாட நாங்களே தான் அதிக பொருட்செலவில் வக்கீலை நியமித்துக் கொள்ள வேண்டியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
நியூயார்க் வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இது தொடர்பாக நேற்று முன்தினம் கூறுகையில்,"இந்திய மாணவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பிற பல்கலைக் கழகங்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமான விசா மூலம் தான் வந்துள்ளனர். போலி கல்வி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ளனர். அமெரிக்க அரசு இதுபோன்ற மோசடி கல்வி நிறுவனங்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
இந் நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதர் சுஷ்மிதா கங்குலி தாமஸ் கூறுகையில்,"இப்பிரச்னை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்து விடும் என்று கூற முடியாது. ஆறு, ஏழு அல்லது எட்டு மாதங்கள் வரை கூட ஆகலாம் என உறுதியாகச் சொல்கிறேன். அதே நேரம் மாணவர்கள் இங்கேயே தங்கள் படிப்பைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
ஜேர்மனியில் 3 கி.மீ தூரத்திற்கு மக்கள் பேரணி.
இரண்டாம் உலகப் போரின் போது, டிரஸ்டன் நகரில் கொடூர தீக்குண்டு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலின் 66 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கிழக்கு ஜேர்மனியின் டிரஸ்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மனித சங்கிலி அமைத்தனர். கடுமையான பனிப்பொழிவைக் கூட பொருட்படுத்தாமல் 17 ஆயிரம் மக்கள் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு மனித சங்கிலி அமைத்தனர்.
தீக்குண்டுகளில் இறந்த ஆயிரக்கணக்கானோருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பேரணி அமைந்திருந்தது. நாஜியாளர்கள் ஆட்சிக்கு எதிராக பேரணி நடத்தியவர்கள் மீது புதிய நாஜிக்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்க ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இதனால் பேரணி எந்தவித விபரீத நிகழ்வும் இல்லாமல் நேற்று மாலை முடிந்தது. டிரஸ்டன் நகரின் துணைமேயர் டெட்லப் சிடெல் கூறுகையில்,"தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பல மக்கள் இங்கு கூடியுள்ளனர். டிரஸ்டன் நகரம் சகிப்பு தன்மை கொண்டதாக உள்ளது" என்றார்.
டிரஸ்டன் தீக்குண்டு வெடிப்பு நிகழ்வானது, நாஜி வன்முறையின் போது நடத்தப்பட்டது. இதனை மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். குண்டு வெடிப்பில் மரணம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் புதைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜெர்மனிக்கான பிரிட்டிஷ் தூதர் ஸ்டானிஸ்லா டிலிச் கலந்து கொண்டார்.
அல்ஜீரியாவிலும் போராட்டம் வெடித்தது.

எகிப்தின் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, அல்ஜீரியாவிலும் நேற்று போராட்டம் வெடித்தது. இதனால் பொலிஸீக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலவரத்தில் 400 பேர் கைது செய்யப்பட்டனர். வட ஆப்ரிக்க நாடான டுனீசியாவில் உருவான அரசுக்கு எதிரான போராட்டம், எகிப்தில் நிலை கொண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு தற்போது அல்ஜீரியாவில் குடிபுகுந்துள்ளது.
அல்ஜீரியாவில் 1999 முதல் அப்துல் அஜீஸ் புட்டாபிளிக்கா அதிபராக இருக்கிறார். எகிப்தை போலவே அங்கும் 20 ஆண்டுகளாக அவசரநிலை சட்டம் அமலில் இருக்கிறது. இதனால் தலைநகர் அல்ஜெய்ர்ஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலையில்லாத்திண்டாட்டம், வறுமை, அரசியல், சுதந்திரம் மறுப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளிலும் அல்ஜீரியா எகிப்தை போன்று தான் உள்ளது. எகிப்தில் போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன்பே, கடந்த ஜனவரியில் அல்ஜீரியாவில் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் எகிப்து மக்கள் வெற்றியை சந்தித்தது, அல்ஜீரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்று தலைநகர் அல்ஜெய்ர்சில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி அதிபரை பதவி விலகக் கோரியும், அவசரநிலை சட்டத்தை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகருக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழையும் வழிகளை பொலிசார் அடைத்து விட்ட போதிலும், அதையும் மீறி மக்கள் குவிந்து விட்டனர். இதனால் பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இதை போன்று மிகப் பெரிய அளவில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதால் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முஷாரப்பை நாடு கடத்த வேண்டும்: பாகிஸ்தான் தீவிரம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்ளுக்காக, முன்னாள் அதிபர் முஷாரப்பை நாடு கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுத் துறை ஈடுபட்டுள்ளது.
பெனாசிர் கொலை வழக்கில் ராவல்பிண்டி கோர்ட், அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
முஷாரப் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இதுகுறித்து பேட்டியளித்த அவரது வக்கீல் முகமது அலி சயீப் கூறுகையில்,"அவர் இந்த வாரன்டுக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை வழக்கு விசாரணைக்காக முஷாரப்பை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சட்டரீதியில் நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் இருப்பதால் இதுகுறித்து பிரிட்டனும், பாகிஸ்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால் பாகிஸ்தான் உளவுத் துறை முஷாரப்பை நாடு கடத்தும் படி பிரிட்டனிடம் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், பிரிட்டன் அரசானது தனது சட்டப்படி தான் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
எகிப்து போராட்டம் முடிவுற்ற நிலையில் ஏமனில் போராட்டம் தொடங்கியது.
எகிப்தில் மக்கள் புரட்சி எதிரொலி:   அல்ஜீரியா, ஏமன் நாடுகளிலும்   அதிபருக்கு எதிராக போராட்டம்
துனிசியா நாட்டில் மக்கள் புரட்சியால் அதிபர் நாட்டை விட்டு ஓடினார். இதை தொடர்ந்து பக்கத்து நாடானா எகிப்திலும் மக்கள் புரட்சி வெடித்ததால் 30 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வந்த அதிபர் முபாரக்கை விரட்ட 18 நாட்களாக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதனால் முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.  இந்த செய்தி வெளியானதை அடுத்து பக்கத்து நாடுகளான அல்ஜீரியா, ஏமன் நாடுகளிலும் அந்த நாட்டு அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
அல்ஜீரியா நாட்டில் அதிபராக அப்தல் அஜிஸ் இருக்கிறார். இவர் 11 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். பதவிக்கு வந்ததில் இருந்தே சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். எகிப்து புரட்சி வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் இவருக்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
எகிப்து அதிபர் பதவி விலகிவிட்டார் என்று அறிந்ததும் தலைநகரம் அல்ஜீரியாவில் ஆயிரக்கணக்காக மக்கள் தெருக்களில் குவிந்து அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். மக்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என முன் கூட்டியே தெரிந்து கொண்ட அதிபர் தலைநகரம் முழுவதும் 30 ஆயிரம் போலீசாரை குவித்தார்.
இவர்கள் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினார்கள். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. போலீசார் தடியடி நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதே போல நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டம் நடந்தது. அனைத்து இடங்களிலும் மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.  
ஏமன் நாட்டில் அலி அப்துல்லா சலே அதிபராக இருக்கிறார். இவர் 32 ஆண்டுகளாக இந்த பதவியில் உள்ளார். இவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். எகிப்து அதிபர் முபாரக் பதவி விலகிவிட்ட தகவல் வந்ததும் ஏமன் தலைநகரம் சனாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எகிப்து தூதரகத்துக்கு சென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
திடீரென அவர்கள் ஏமன் அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டமும் செய்தனர். அப்போது அதிபரின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவர்களை தாக்கினார்கள்.
இதனால் அவர்கள் கலைந்து ஓடினார்கள். ஏமன் அதிபரின் பதவி காலம் 2013-ம் ஆண்டு வரை உள்ளது. அது முடிந்ததும் பதவி விலகி விடுவேன் என்று அதிபர் அலி அப்துல்லா சலே அறிவித்து உள்ளார்.

குழந்தைகளை நான் கொலை செய்து விட்டேன்: தந்தை கடிதம்.
அலிசியா மற்றும் லிண்டா  என்ற இரட்டை குழந்தைகளை தான் கொலை செய்துவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பிப்ரவரி மூன்றாம் திகதி தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிப்ரவரி மூன்றாம் திகதியே இவர் தொடருந்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்திருந்தார். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த பொலிசார்கள் இணைந்து கடந்த பெப்பிரவரி மூன்றாம் திகதி முதல் தந்தை தற்கொலை செய்து கொண்ட பின்னர் காணாமற்போன இந்த இரட்டைக் குழந்தைகளையும் இரவு பகலாகத் தேடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கனடாவினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த பிப்ரவரி முதலாம் திகதி சுவிட்சர்லாந்தில் மனைவியுடன் வசித்து வந்த பிள்கைளைக் கடத்திச் சென்றிருந்தார். தனது அலுவலகக் கணனியினைப் பயன்படுத்தி, கொலை செய்வதற்குப் பயன்படும் நஞ்சு மற்றும் தற்கொலை செய்யும் முறை ஆகியன பற்றி இணையத்தில் தேடியிருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
தனது இரட்டைப் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிட்டதாக தந்தையே கடிதத்தில் எழுதியிருக்கும் நிலையில் குழந்தைகள் திரும்பி வருவார்கள் என எனக்கிருந்த சிறிய நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது என இந்தச் சிறுமிகளின் தாயாரது மைத்துனன் கூறுகிறார்.
6 மாதத்தில் அதிபர் தேர்தல்; எகிப்தில் நாடாளுமன்றம் கலைப்பு; அரசியல் சட்டம் முடக்கம்; அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள இராணுவம்.
எகிப்தில் பாராளு மன்றத்தை கலைத்தும், அரசியல் சட்டத்தை முடக்கியும் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக 18 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 
இதனால் அங்கு முபாரக்கின் 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. அதிபர் முபாரக் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இருந்தும் இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. போராட்டம் நடைபெற்ற கெய்ரோவின் தக்ரீர் சதுக்கத்தில் மக்கள் கூடியுள்ளனர். எகிப்து போன்ற நாடுகளில் அதிபர் இல்லாமல் ஆட்சி நடத்துவது மிகவும் கடினம். எனவே, உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக கவுன்சில் அமைக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். 


மேலும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். எனவே, கலைந்து செல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தக்ரீர் சதுக்கத்தில் கூடி நின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி ராணுவ வீரர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு மக்கள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஆளும் ராணுவ கவுன்சில் ஏற்றுக் கொண்டது. 


இதையடுத்து, பாராளுமன்றத்தின் மேல்சபை, கீழ்சபை என இரு அவைகளையும் உடனடியாக கலைத்து உத்தரவிட்டது. மேலும் தற்போதுள்ள அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் தேவைப்படுவதால் அது தற்காலிகமாக முடங்கி (சஸ்பெண்டு) வைக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி இன்னும் 6 மாதத்தில் அதாவது செப்டம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசின் அதிகாரபூர்வ டெலிவிஷனில் ஒளிபரப்பானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


ஆனால் போலீசாரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. தங்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.தங்கள் துப்பாக்கிகளை உயர்த்தி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF