Wednesday, February 9, 2011

இன்றைய செய்திகள் 09/02/2011

பிரிட்டனில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஐரோப்பாவின் உயரமான கட்டிடம்!
பிரிட்டனின் மிகவும் உயரமான கட்டிடம் இப்போதைக்கு இதுதான். உயரம் சுமார் 900 அடிகள். உயரங்களில் ஏற அச்சம் உள்ளவர்கள் இந்த இடத்தை நினைத்துக் கூடப் பார்க்கக்கூடாது.
மேலே இருந்து பார்த்தால் எல்லா திசைகளிலும் 50 மைல் தூரத்துக்குத் தெரியும். லண்டனில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் சார்ட் என்று அழைக்கப்படுகின்றது.

இந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தில் தொடர்ந்து நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில் இந்தப் பணிகள் யாவும் பூர்த்தியடைகின்ற போது இதன் மொத்த உயரம் 1016 அடிகளைத் தொட்டு விடும்.

அதுமட்டுமன்றி ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெயரையும் பெற்றுவிடும்.1.3பில்லியன் பவுண் செலவில் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பணிகள் பூர்த்தியடைந்ததும் இது ஒரு கண்ணாடி பிரமிட் போல் காட்சியளிக்கும். இது பொது மக்களுக்கான ஒரு கட்டிடமாக அமையவுள்ளமையும், கட்டிடத்தின் உச்சியில் 72வது மாடியில் பார்வையாளர் களரி ஒன்று அமையவுள்ளமையும், இதன் சிறப்பம்சமாகும்.

இதன் 12 மாடிகளில் விடுகள் அமையவுள்ளன. இந்த வீடுகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 10 மில்லியன் பவுணகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் அலுவலகங்கள் என்பனவும் இங்கு அமையவுள்ளன. இத்தாலிய கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் பிரதான உரிமையாளர் கத்தாரைச் சேர்ந்தவர்.





கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து உடைப்பெடுக்கும் அபாயக்கட்டத்தில்.


கிளிநொச்சியில் பெய்துவரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் உயர்வடைந்து உடைப்பெடுக்கும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தகவல்களின்படி,
இரணைமடுக்குளம் 31 அடி 8 அங்குலமாகவும்,
அக்கராயன் குளம் 23 அடி 5 அங்குலமாகவும்,
புதுமுறிப்புக் குளம் 16 அடி 10 அங்குலமாகவும்,
கரியாலை நாகபடுவான் குளம் 10 அடி 4 அங்குலமாகவும்,
கனகாம்பிகைக் குளம் 10 அடி 3 அங்குலமாகவும்,
வன்னேரிக்குளம் 9 அடி 10 அங்குலமாகவும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளால் கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய இரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 7,401 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன், உமையாள்புரம், குமரபுரம், கோரக்கன்கட்டு, ஊரியான், முரசுமோட்டை, கண்டாவளை, பெரியகுளம், புளியம்பொக்கணை, கல்மடு, தருமபுரம் மேற்கு, தருமபுரம் கிழக்கு, புன்னைநீராவி, பிரமந்தனாறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 3,668 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிருள்ள நாய்க்குட்டியை 1100 மைல் தூரம் தபாலில் அனுப்ப முயன்ற பெண்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரோடு உள்ள நாய்க்குட்டியொன்றை பெட்டியொன்றில் அடைத்து தபால் சேவை மூலம் 1,100 மைல்களுக்கு அப்பால் உள்ள தனது உறவினருக்கு அனுப்ப முயன்றுள்ளார்.
தற்போது இப்பெண் மீது மிருகவதைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்டேசி சம்பியன் எனும் 39 வயதான இப்பெண் மினியோ பொலிஸ் நகரிலிருந்து ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் வசிக்கும் தனது உறவினரின் குழந்தைக்காக அந்நாய்க்குட்டியை அவர் பொதிசெய்து விமானத் தபால் மூலமாக அனுப்ப முயன்றார். அவரது அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்கள் அந்தப் பொதி நகர்வதையும் அந்தப் பொதியிலிருந்து குழைக்கும் சத்தம் வருவதையும் கேட்டு திகைப்படைந்தனர்.
இறுக்கமாக பொதியிடப்பட்ட தபால் பொதியை தபால் ஊழியர்கள் பிரித்துப் பார்த்தபோது அந்தப் பொதியிலிருந்து 4 மாதங்கள் நிறைந்த நாய்க்குட்டியை மீட்டுள்ளனர்.
பொலிஸ் சார்ஜன்ட் ஏஞ்சலா டோஜ் இது குறித்து தெரிவிக்கையில் அந்த பெட்டி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு 2 நாட்கள் சென்றிருக்கும். அப்பெட்டியில் காற்றுத்துவாரங்கள் உள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக அவை டேப்பினால் ஒட்டப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.
'அது உண்மையில் முட்டாள்தனமான வேலை. அந்த நாய்க்குட்டி குடும்ப நண்பருக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பப்படவிருந்தது. ஆனால் இறந்த நிலையில் அந்த நாய்க்குட்டி சென்றடைந்திருந்தால் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்கள்.
பொதியிலுள்ள பொருளை இனங்காணாமல் இருந்தால் அதனை முறையாக கையாள முடியாது. அந்நாய்குட்டி விமான சரக்குப் பொதியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதற்கு உணவும் நீரும் கிடைத்திருக்காது. நாய்க்குட்டியொன்றினால் அவ்வளவு நீண்ட நேரத்திற்கு உணவும் நீரும் இல்லாமல் வாழ முடியாது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தபால் நிலைய ஊழியர்களிடம் பொதியை ஒப்படைத்த ஸ்டேசி சம்பியன், கவனம் கவனம் எனக் கூறிக்கொண்டிருந்தாராம். பெறுமதியான பொருளொன்று அதில் இருப்பதாக தெரிவித்த அவர், பெட்டியிலிருந்து சத்தம் வந்தால் வியப்படைய வேண்டாம். அதில் விளையாட்டு ரோபோவொன்று இருக்கிறது எனவும் கூறினாராம்.

தாய்லாந்து கம்போடிய எல்லைச் சண்டையில் அமைதி.
தாய்லாந்து கம்போடிய எல்லையில் உள்ள 11-ம் நூற்றாண்டு ப்ரேயா விஹர் கோவில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைச் சண்டையில் அமைதி ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று நடந்த துப்பாக்கி சண்டைக்குப் பின்னர் இரண்டு நாட்களாக அமைதி நிலவுவதாகவும், பொதுவாக நிலைமை அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தாங்கள் அதிக எச்சரிக்கையுடனே இருப்பதாகவும் அவர் கூறினார்.
இருதரப்பு பேச்சு வர்த்தைகளால் மட்டுமே இப்பிரச்சனை தீர்க்க முடியும் என்று ப்னாம்பென் மற்றும் ஹாங்காங்-ற்கு சென்று வந்த இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர் கூறினார். வெள்ளியன்று எல்லைத் தகராறில் ஐந்து நபர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ அமைப்பு கூறியது.
தாய்லாந்து அதிகாரபூர்வ செய்தி அமைப்பு கூறுகையில்,"சண்டை தொடங்கிய பின் ஒரு ராணுவ வீரரும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்" என்றார். மேலும் கம்போடிய எல்லை தாண்டிய சண்டையில் பிடிபட்ட ஒரு ராணுவ வீரர் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
கம்போடிய பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையிடம் இரு நாடுகளுக்கு இடையில்,"யாருக்கும் சொந்தமற்ற பப்பர் ஜோன்" ஒன்றை அமைக்க கேட்டுக்கொண்டார். இதனால் சண்டை மற்ற இடங்களுக்கும் பரவாமலிருக்கும் எனக் கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு அமைப்பும், கம்போடியாவின் வேண்டுகோளுக்கிணங்க, அவசரக் கூட்டத்தைக் கூட்ட ஒப்புக்கொண்டாலும் பிராந்தியா சமரசத்திற்கு இணங்குமாறு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும், எல்லையில் சிறு சண்டைகள் நீடிக்கவே செய்கின்றது.
இந்த எல்லைச் சண்டையானது பல்லாண்டுகளாக நீடிக்கின்றது. மலையுச்சியில் அமைந்த ப்ரேயா விஹார் கோவிலுள்ள இடம் கம்போடிய எல்லைக்குள்ளும், அங்குச் செல்ல உதவும் பாதை தாய்லாந்து பகுதியிலும் அமைந்துள்ளதால் இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன.
1962ல் ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றம், கோவிலிருக்கும் இடம் கம்போடியாவிலிருப்பதால், அது கம்போடியாவிற்கே சொந்தம்" என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் தாய்லாந்து, எல்லை கோவிலைச் சுற்றியுள்ள 1.8 சதுர கி.மீகள் சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும், 20 - நூற்றாண்டில் பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தில் கம்போடியா இருந்தபோது வரையறுக்கப்பட்ட எல்லை தான் அது" என்றும் கருத்து தெரிவித்தது.
ஜுலை 2008 இல் ஐ.நாவும், கம்போடியா உரிமையை அங்கீகரித்து மேற்படி கோவிலை சர்வதேச வரலாற்று சின்னமாக அறிவித்தது.

பிக்காஸோவின் ஓவியம் 40 மில்லியன் டொலருக்கு ஏலம் போனது.
பிக்காஸோவின் இரகசியக் காதலி மேரி தெரஸ் வால்டரை மாடலாகக் கொண்ட லா லெக்சர் என்ற ஓவியம் லண்டன் சோத்பி ஏல மையத்தில் 40 மில்லியன் யு.எஸ் டொலருக்கு ஏலம் போனது.
ஏலம் ஆரம்பித்த ஆறே நிமிடங்களில், தொலைபேசி மூலம் ஏலத்தில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர் அவ்வோவியத்தை வாங்கினர். மேரி தெரஸ் வால்டர் இவ்வோமியம் தவிர கிரீன் லீவ்ஸ், பஸ்ட் போன்ற ஓவியங்களுக்கும் இன்னும் பல பிகாஸோவின் ஓவியங்களுக்கும் உணர்வுக்க காரணியாக இருந்துள்ளார்.
பிக்காஸோ தன் 45 வயதில் பாரீஸில் மேரி தெரஸ் வால்டரை முதன்முதலாக சந்தித்துள்ளர். பிக்காஸோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும், மேரிக்கு வயதில் சிறியவர் என்பதாலும், அவர்கள் காதல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 
லாலெக்சர் வரையப்படும் வரை, மேரி வால்டர் நேரடியாக பிக்காஸோவின் ஓவியங்களில் உருவகப்படுத்தவில்லை. லா லெக்சர், பார்வைக்கு வைக்கப்பட்ட போது தான், பிக்காஸோவின் மனைவி தன் கணவரின் இன்னொரு பெண்ணைப் பற்றி அறிந்தார்.
அதன்பின் இருவரின் திருமண உறவும் முறிந்தது. மேரிவால்டருக்கும், பிக்காஸாவிற்கும் மாயா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

எகிப்து கலவரங்கள்: முபாரக்கிற்கு அமெரிக்காவின் அழைப்புகள்.
Hosni Mubarak Egyptian President Hosni Mubarak (R) shakes hands with his US counterpart Barack Obama at Qubba Palace on June 4, 2009 in Cairo, Egypt. Mubarak and Obama discussed bilateral relations and issues of common interest including Arab-Israeli conflict. (Photo by Moataz El Hamalawi - Pool/MENA/Getty Images) *** Local Caption *** Barack Obama;Hosni Mubarak
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் எகிப்திய துணை அதிபர் ஓமர் சுலைமானிற்கு விடுத்த அழைப்பில் முப்பதாண்டுகளாக எகிப்தில் உள்ள அவசரகால சட்டங்களை நீக்குமாறு கூறியுள்ளார்.
கெய்ரோ மற்றுமுள்ள பல நகரங்களில் கலவரம் மீண்டும் துவங்கிய நிலையிலும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கான எகிப்து அரசின் அறிவிப்பிற்குப் பின் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஜனவரி 25 லிருந்து தொடங்கிய கலவரங்களில் தற்போது நடக்கும் போராட்டங்களில் மத்திய கெய்ரோவில் நடக்கும் கலவரங்களே மிகப்பெரிய அளவிலானவை என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்து அதிபர் தாம் செப்டம்பர் வரை பதவியில் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். வெள்ளை மாளிகை அறிக்கையில் பிடேன் மற்றும் சுலைமானுக்கு கூறியிருப்பதாவது: ஆட்சி மாற்றம் என்பது அதிக அதிகாரங்களை மக்களுக்கு வழங்குவதோடு, உடனடியாக மாற்ற இயலாத முன்னேற்றங்களுக்கு வழி வகுப்பதாக இருக்க வேண்டும்.
எகிப்து உள்துறை அமைச்சகம் பத்திரிக்கையாளர்களையும், போராட்டக்காரர்களையும் துன்புறுத்துவது அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது மற்றும் பாராளுமன்ற சுதந்திரம், கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டாமல் காத்தல் அவசியம்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அரசும் தான் எகிப்தின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வதுபோலும், எகிப்திற்கு உத்தரவிடுவது போலும் ஒரு தோற்றம் உருவாவதை விரும்பவில்லை. கெய்ரோவின் தாஹீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மூன்றாவது வாரமாக இன்று கூடிய போது, ராணுவம் அவர்களின் அட்டைகளை சோதனை செய்ய முயற்சி எடுத்தும் உடனடியாக கைவிடப்பட்டது.
கூகுள் நிறுவன வோல் கோனிம், பேஸ்புக்கில் கலவரம் பற்றிய தனிப்பக்கம் உருவாக்கியவர். இவர் தாஹிம் சதுக்கத்திற்கு வந்த போது உற்சாகமாக வரவேற்கப்பட்டார். இவரால் தான் போராட்டக்காரர்களின் ஒருங்கிணைப்பு நடந்தது. நாங்கள் எங்கள் கோரிக்கைகளை கைவிடப்போவதில்லை. இதுவே இந்த ஆட்சியின் முடிவு என பலத்த கைதட்டல்களுக்கியையே அறிவித்தார்.
போராட்டங்கள் தொடரும் இந்த வேளையில் முபாரக் ஒரு குழுவை அமைத்துள்ளார். இவ்வமைப்பு அரசியலமைப்பில் மாற்றங்களையும், அதனை செயல்படுத்துவதிலும் ஈடுபடும். மூன்றாவது குழு அரசு ஆதரவு எதிர்ப்புக் குழுக்களிடையே ஏற்பட்ட கலவரம் பற்றி ஆராய்ந்து விசாரணை அமைப்பிடம் தன் கண்டுபிடிப்புகளை வெளியிடும் என்று துணை அதிபர் கூறினார்.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கணிப்புப்படி ஜனவரி 28 லிருந்து சாவு எண்ணிக்கை  297 ஆகும். பொருளாதார நடவடிக்கைகள் சிறிது துவங்கினாலும் பங்குச்சந்தை ஞாயிறு வரை திறக்கப்படவில்லை. ஒட்டுமொத்த பொருளாதார இழப்பு 310 மில்லியன் டொலர் ஆகும். எகிப்திய உளவு அமைப்பின் தலைவரான ஹமாஸ் தீவிரவாதிகளைப்பற்றி தினமும் இஸ்ரேல் பிரதமரிடம் ஒரு ரகசிய ஹாட்லைன் மூலம் பேசுவதாகவும் கூறியுள்ளது.

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு தொடர்பு.
கடந்த 2007 ல் நடந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில், முஷாரப்பை தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில், அரசு தரப்பு கோரியுள்ளது.
பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில், பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் நேற்று அந்நாட்டு புலனாய்வு துறையால் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: புட்டோ கொலை நடந்த போது அதிபராக இருந்த முஷாரப் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தர மறுக்கிறார். இவ்வழக்கில் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள ராவல்பிண்டி நகர முன்னாள் போலீஸ் தலைவர் சவுத் அஜீஸ் மற்றும் முன்னாள் சூப்பரின்டெண்டென்ட் குர்ரம் ஷாஜத் இருவரும் முஷாரப்பின் உத்தரவுப்படி செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துறை வக்கீல் சவுத்ரி ஜூல்பிகர், முஷாரப் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவரை தலைமறைவான குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முஷாரப் ஒத்துழைக்க மறுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போட்டியில் சேவல் தாக்கி வாலிபர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சேவல் சண்டை பிரசித்திப் பெற்றது. இங்கு சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி வைத்து சண்டையிட விடுவார்கள். இதில் எந்த சேவல் வெற்றி பெறும் என பணம் கட்டி சூதாட்டம் நடத்தப்படுகிறது. அது போன்று கலிபோர்னியாவில் உள்ள துலார் என்ற இடத்தில் நடந்த சேவல் சண்டையை ஜோஸ்லூயிஸ் ஒகாவோ (35) என்ற வாலிபர் பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது, ஆக்ரோஷமாக சண்டையிட்ட ஒரு சேவல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒகாவோவின் பின்புற காலில் தாக்கியது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி தாக்கி நரம்பு துண்டானது. இதனால் ரத்தம் கொட்டியது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் கலிபோர்னியாவில் உள்ள லாமந்த் என்ற இடத்த சேர்ந்தவர்.

கால்களுடன் பாம்பு! லெபனானில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு.

கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். 

சுமார் 19 “இஞ்ச்” நீள முள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன. 

அந்த எலும்புகள் “1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.








பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF