இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.
மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.