Thursday, February 24, 2011

இன்றைய செய்திகள்.

தெருக்களில் சிதறி கிடக்கும் பிணங்கள்; பதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு.

லிபியா கலவரத்தில் 2 ஆயிரம் பேர் பலியானதை தொடர்ந்து தெருக்களில் பிணங்கள் சிதறி கிடக்கின்றன. லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்படி ராணுவத்துக்கும், போலீசுக்கும் கடாபி உத்தரவிட்டுள்ளார்.


இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடக்கத்தில் பென்காஷி, டிரிபோலி ஆகிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பென்காஷியில் போராட்டத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் பலியாகினர்.


அதை தொடர்ந்து டிரிபோலியில் போராட்டக்காரர்கள் மீது போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டு வீசப்பட்டது. இதிலும் எராளமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதில் ராணுவமும், போலீசும் தீவிரமாக உள்ளது. ரோட்டில் கூடுபவர்களை அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்டும் வருகின்றனர். எனவே ரோட்டில் கிடக்கும் பிணங்களை தூக்கி சென்று இறுதி காரியங்கள் நடத்த மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் தெருக்களில் கேட்பாரற்று பிணங்கள் சிதறி கிடந்தன. இருந்தும் போராட்டம் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.

இதற்கிடையே அதிபர் கடாபி வென்சுலாவிற்கு தப்பி ஓடி விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இதை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில் அதிபர் கடாபி டெலிவிஷனில் தோன்றி பேசினார். அப்போது நான் எங்கும் தப்பி ஓடவில்லை. லிபியாவில் தான் இருப்பேன். எனக்கு எதிராக சிலர் வதந்தியை பரப்புகின்றனர். அதை மக்கள் நம்ப வேண்டாம். போராட்டத்தைகை விட வேண்டும். இல்லாவிடில் லிபியா தெருக்களில் மேலும் ஏராளமானவர்களின் பிணங்களை சேகரிக்க வேண்டியது இருக்கும். நாட்டுக்காக உயிர் துறக்கும் தியாகியாக இருப்பேனே தவிர பதவி விலகவோ நாட்டை விட்டோ ஓட மாட்டேன் என்று பேசினார்.







தம்புள்ளை சந்தையில் குவிந்த யாழ்ப்பாண மரக்கறிகள் � எகிறிய விலைகள் சரிந்தன.

தம்புள்ளை சந்தையில் குவிந்த யாழ்ப்பாண மரக்கறிகளால் சிறிலங்காவின் தென்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரெனச் சரிவடைந்துள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சீரற்ற காலநிலையால் சிறிலங்காவில் மரக்கறிகளின் விலை எகிறி வந்தது.

இந்தநிலையில் நேற்று தம்புள்ளை மரக்கறிச் சந்தைக்கு பெருமளவு யாழ்ப்பாண மரக்கறிகள் எடுத்து வரப்பட்டன. ஒரு இலட்சம் கிலோ பீற்ரூட், 50,000 கிலோவுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு, ஒரு இலட்சம் கிலோ வெங்காயம் உள்ளிட்ட பெருமளவு யாழ்ப்பாண மரக்கறிகள் தம்புள்ளைச் சந்தைக்கு எடுத்து வரப்பட்டன.

இதன்காரணமாக தம்புள்ளை சந்தையில் 120 ரூபாவுக்கு விற்கப்பட்ட பீற்ரூட் 45 ரூபாவாகவும், 300 ரூபாவுக்கு விற்கப்பட்ட வெங்காயம் 100 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு 55 ரூபாவாகவும் சரிந்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவு பச்சைமிளகாய் வந்ததால் அதன் விலையும் 200 - 250 ரூபா வரை குறைந்தது.

தம்புள்ளை சந்தையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறிகள் முன்னர் எடுத்து வரப்பட்டன. ஆனால் இப்போது யாழ்ப்பாண உருளைக்கிழக்கு போன்ற மரக்கறிகள் தம்புள்ளை சந்தையின் விலையை குறைக்கும் அளவுக்கு தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன.



கொலைக் குற்றவாளியை விடுவிக்க வேண்டும்: அமெரிக்காவிடம் ஜேர்மனி நிபந்தனை.

கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையை பெற்றுள்ள தமது நாட்டு நபரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்தை ஜேர்மனி வலியுறுத்தி வருகிறது.ஜேர்மனியைச் சேர்ந்த நபர் ஜென்ஸ் சோரிங். இவர் கடந்த 1985 ம் ஆண்டு தமது அமெரிக்க பெண் நண்பிக்கு அவளது பெற்றோரை கொலை செய்ய உதவினார் என குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது ஆகும்.
ஜென்ஸ் சோரிங் மீதான குற்றச்சாற்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விர்ஜினியா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மனித உரிமை ஆணையம் மார்கஸ் லோனிங் சென்று பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,"முன்னாள் ராஜிய அதிகாரியின் 44 வயது மகன் ஜென் சோரிங்கை சந்தித்தேன். அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் கூறினார். அமெரிக்க பெண் நண்பியின் பெற்றோர் கொலை வழக்கில் தாம் நிரபராதி என ஜென்ஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஜென்ஸ் சோரிங்கிற்கு மன்னிப்பு அளிக்கவோ அல்லது அவரது தண்டனையை ரத்து செய்யவோ அமெரிக்க நிர்வாகம் மறுத்து வருகிறது. ஜென்ஸ் சோரிங் விடயத்தில் எங்களால் சிறிய அளவே செயல்பட முடிந்துள்ளது.கடந்த 25 ஆண்டுகளாக சோரிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தரப்பட்ட தண்டனையை நீண்ட காலம் அனுபவித்துள்ளார் என்றும் லோனிங் கூறினார்.
லிபியாவுக்கு தடை விதிக்க வேண்டும்: சர்கோசி.
மக்கள் போராட்டம் வெடித்துள்ள லிபியாவுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் ஜரோப்பிய ஒன்றியம் ரத்து செய்ய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி கூறியுள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக மோமர் கடாபி சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. கடாபியின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயரிழந்துள்ளனர்.
ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உறுப்பினர் நாடுகள் கண்டிப்பதுடன் லிபியா மீது தடைவிதிக்க வேண்டும் என சர்கோசி வலியுறுத்தியுள்ளார். லிபியாவில் கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக உறுதியான தடை நடவடிக்கையை ஜரோப்பிய நாடுகள் விரைவாக எடுக்க வேண்டும் எனவும் சர்கோசி தமது கேபினட் கூட்டத்தில் தெரிவித்தார்.
லிபியாவில் நடைபெறும் தாக்குதலை சர்வதேச சமூகம் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. லிபியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என சர்கோசி கூறினார். எண்ணெய் வளம் மிக்க வடக்கு ஆப்பரிக்க தேசமான லிபியாவில் பெப்ரவரி 15 ம் திகதி முதல் மக்கள் ஜனநாயகம் கோரி போராட்டம் நடத்துகிறார்கள்.கடந்த 10 நாட்களில் 111 வீர்ர்கள் உள்பட 300 பேர் இறந்துள்ளதாக லிபியா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாய்: தனது பலத்தைக் காட்டுவதாக ஈரான்.
தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.
ஈரானின் இரு போர் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து மத்தியத் தரைக் கடல் வழியாக சிரியா சென்றது. ஈரானின் போர் கப்பல்கள் 1979 ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு குறைந்த காலம் கடந்து செல்ல எகிப்து அனுமதியளித்து உள்ளதாக ஈரானின் தூதரக பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இதனைக் குறித்து தனது கேபினட் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன், ஈரானின் இச்செயல் கோபத்தை தூண்டுவதாகும் என தெரிவித்துள்ளார். எகிப்தில் சமீபத்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பெரும் பங்கு வகித்தது.
இவ்வியக்கம் ஈரானுடன் நெருக்கமானது. எனவே இது நிகழ்ந்திருக்கலாம் என இஸ்ரேலிய அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி‌த்தொடர்பாளர் பிலிப் குரோவ்லே கூறுகையில்,"இதை அத்து மீறிய செயலாகவே கருதுகிறோம். இதனால் அக்கப்பல்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை எச்சரிக்கையோடு கவனித்து வருகிறோம்" என்றார்.
புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு: பஹ்ரைன் மன்னர்.
பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் அறிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள வளமான பஹ்ரைனில் மன்னருக்கு எதிரான போராட்டத்தைக் குறைக்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கடந்தாண்டு அக்டோபரில் சட்ட விரோத அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து தவறான தகவலை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 25 ஷியா பிரிவினரும் அடங்குவர்.
தொடர்ந்து "அல் ஹக்" என்ற எதிர்க்கட்சியின் தலைவர்களான ஹசன் முஷைமா மற்றும் ஷியா முஸ்லிம் அறிஞர் முகமது அல் மொக்தாத் இருவருக்கும் மன்னர் மன்னிப்பு அளித்துள்ளார். இவர்களில் முஷைமா தற்போது லண்டனில் உள்ளார். நேற்று முன்தினம் இவர் நாடு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் அவர் இன்னும் லண்டனில் இருந்து பஹ்ரைனுக்கு வரவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
பஹ்ரைனின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி,"பஹ்ரைனில் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு சாதகமானவை" என்று கூறியுள்ளார்.
எனினும் அல் வெபாக் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம் மட்டார் இது பற்றி கூறுகையில்,"இது ஒரு நல்ல நடவடிக்கை தான். எனினும் இன்னும் பலர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும். மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். முக்கியமாக உண்மையான அரசியல் சீர்திருத்தமான மன்னர் தலைமையிலான அரசியல் சாசன ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன் பின் தான் பேச்சுவார்த்தை சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.
பாப் பாடகிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய கடாபி மகன்.
லிபியாவில் போராட்டங்கள் வலுத்து வரும் இந்நிலையில், கடாபி மகன் பாப் பாடகிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விவகாரம் அம்பலமாகியுள்ளது.
லிபியாவில் 41 ஆண்டுகள் அதிபராக இருந்த மும்மர் கடாபி பதவி விலக கோரி நாடு முழுவதும் பொது மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி தீவீரம் அடைந்து வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அரசு கருவூலத்தில் மோசடி செய்திருப்பதும், அரசு கஜானா‌வை ஊதாரித்தனமாக செலவு செய்திருப்பதும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதில் கடாபியின் மகன்களில் ஒருவரான சையீப் கடாபி தனது பிறந்த நாளன்று அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் மரியாக் கேரியினை அணுகி பாப் பாடல் இசைகேட்டுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் பரிசாக வாரி வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணம் ‌வெளியிட்டுள்ளது.
இது குறித்த நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடாபியின் 41 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியில் அவரது குடும்பத்தினர் அரசு பண‌த்தை ஊதாரித்தனமாக செலவழித்துள்ளனர். கடந்த ஆண்டு ‌ஹெய்டி பூம்பம் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டிற்கு நிதி வழங்குவதாக அறிவித்தார் கடாபி. அதற்காக சர்வதேச கடாபி அறக்கட்டளை மேம்பாடு நிதியகம் ஒன்று அமைத்து கோடிக்கணக்கில் வசூலித்தார்.
ஆனால் நிதியினை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில் இவரது இளைய மகன் சையீப் கடாபி தனது பிறந்த நாளன்று கரீபியன் தீவில் நடந்த ஆடம்பர விழாவில் பிரபல அமெரிக்க பாப்பாடகி மரியாக் கேரியினை வரவ‌ழைத்து பாடச்சொல்லி மொத்தம் 4 பாடல்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வாரி வழங்கியுள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணம் குறித்து அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை வரவேற்கும் இலங்கை மக்கள்!

இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு வருகின்றமையை நாட்டு மக்களில் 88 சதவீதமானவர்கள் விரும்புகின்றனர் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்து உள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது என்று இவ்வூடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மரண தண்டனை அமுல்படுத்தப்படாமல் இருப்பதால் 334 மரண தண்டனைக் கைதிகள் பல்லாண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் சிலர் ஆயுள் காலம் முழுவதும் சிறை வைக்கப்படுகின்றனர். படுகொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களைப் புரிந்தவர்கள். 1815 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் இலங்கைக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. 

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க மரண தண்டனையை 1956 ஆம் ஆண்டு இல்லாமல் செய்தார். இவர் 1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. .இறுதியாக 1976 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லிபியாவின் 2 முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. தலைநகரம் திரிபோலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு நின்று போராடி வருகின்றனர். அவர்கள் மீது அதிபர் கடாபி ராணுவத்தை ஏவிவிட்டு உள்ளார். ஆனாலும் பொது மக்கள் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இதை தவிர முக்கிய நகரமான மிஸ்ரதா, சப்ரதா, பென்காசி ஆகிய நகரங்களிலும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.இதில் மிஸ்ரதா நகரை போராட்டக்காரர்கள் தங்கள் பிடியில் கொண்டு வந்து உள்ளனர். அங்கிருந்த அரசு படைகள், மற்றும் போலீசார் வெளியேறி விட்டனர். 

அரசு அலுவலகங்கள் அனைத்தும் பொது மக்கள் கட்டுப் பாட்டில் உள்ளது. இதே போல இன்னொரு முக்கிய நகரமான பென்காசியையும் பொது மக்கள் பிடித்தனர். அவர்கள் மீது ராணுவம் விமானத்தில் பறந்தபடி குண்டுகளை வீசி வருகிறது.பதவி விலக மறுக்கும் அதிபர் கடாபி ராணுவ அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறார். எனவே சொந்த நாட்டு மக்கள் என்றும் பாராமல் அவர்களை ராணுவம் மூலம் கொன்று குவித்து வருகிறார். 

இதனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் இப்போது பல இடங்களில் பொது மக்ககள் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.விமானப் படையினரும் குண்டு வீச மறுக்கின்றனர். பென்காசி நகரில் போராட்டக்காரர்கள் மீது குண்டு வீசுவதற்கு 2 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இந்த விமானத்தை ஓட்டிய 2 பைலட்டுகளும் குண்டு வீச மறுத்து விட்டனர். 

மேலும் அவர்கள் இருவரும் நடுவானில் பறந்த போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்துவிட்டு விமானத்தை கீழே விழ செய்தனர். இதில் 2 விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கின. அந்த பைலட்டுகளில் ஒருவர் பெயர் அலி ஏமர் கடாபி. 

இவர் அதிபர் கடாபியின் பழங்குடியின ஜாதியை சேர்ந்தவர். ஆனாலும் கூட அவர் கடாபிக்கு எதிராக நடந்து கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது. ராணுவத்திலும் கடாபிக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கடாபி அரசு வீழ்ந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா பொது மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

அதிபர் கடாபி போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்ற அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி கடாபி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

லிபியாவில் கலவரம் உச்ச கட்டத்தில் இருப்பதால் உயிருக்கு பயந்த மக்கள் பக்கத்து நாடான இத்தாலிக்கு அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். 3 லட்சம் பேர் இத்தாலிக்கு செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலிக்கு அகதிகள் வந்தால் அந்த நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இத்தாலி வெளியுறவு மந்திரி பிராத்தினி கூறியுள்ளார்.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF