ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்வது மற்றும் புகைப்பழக்கம் இல்லாமை ஆகிய நான்கினையும் பின்பற்றினால், ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்டலாம் என்று இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்ட மருத்துவ ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
45 வயது முதல் 79 வயது வரையிலான 20 ஆயிரம் பேர்களைக் கொண்டு, இந்த ஆய்வு 1993-ல் இருந்து 2006 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த மருத்துவ ஆய்வில் நம்பகத்தன்மை மிகுந்து காணப்படுவதாக மருத்துவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்