தொடர் மழையினால் இராணுவ முகாம்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. |
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இராணுவ முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் சிற்றூர் படைமுகாம், அநுராதபுர மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை படைமுகாம், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிக்கல மற்றும் வாகரைப் பிரதேசங்களில் அமைந்திருந்த படைமுகாம்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த முகாம்களில் உள்ள இருந்த படையினர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இந்த முகாம்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் படைத்தரப்பைச் சேர்ந்த 200 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மன்னம்பிட்டி வீதியில் ஏழு அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்வதால் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளதாகவும், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா தெரிவித்தார். மரக்கறிகளின் விலைகள் தங்கத்தின் விலையைப் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன . நாட்டில் நீடித்து இருக்கும் மழை காரணமாக மரக்கறிகளின் விலைகள் பெரிதும் அதிகரித்து உள்ளன என்று வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் தெரிவிக்கின்றார்கள் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது விலைகள் தற்போது பன்மடங்குகள் ஆகி உள்ளன. தென்னிலங்கையில் பொதுவாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் 440 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிலோ கறி மிளகாய் 300-400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த டிசம்பர் மாதத்தை விட மூன்று மடங்குகளால் அதிகரித்து உள்ளது. அதேவேளை போஞ்சி 200-250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரி ஒருவர் கருத்துக் கூறுகையில் மரக்கறிகளின் விலைகள் தங்கத்தின் விலையைப் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்றார். பொதுமக்களில் ஒருவர் கருத்து வழங்குகையில் மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றமையை விட இறைச்சியை கொள்வனவு செய்யலாம் என்றார். பழங்களை விட சாக்லேட்டுகளில்தான் அதிக அளவு சத்து உள்ளது. பழங்களில் அதிக சத்து இருப்பதால் அது உடலுக்கு உகந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பழங்களை விட சாக்லேட்டுகளில்தான் அதிக அளவு சத்து உள்ளது. எனவே, அதுதான் சிறந்த உணவு, ஆகவே பழங்களை விட சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிடலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக சாக்லேட்டுகள் தயாரிக்க அதிக அளவில் “கோ-கோ” பவுடர் சேர்க்கப்படுகிறது. இது சத்துமிக்கது. அவை தவிர மற்ற மூலப்பொருள் பவுடர்கள் மாதுளம் பழம் உள்ளிட்ட பல பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாகும். இருந்தும் சாக்லேட்டுகளை அளவாக சாப்பிட வேண்டும். அதில் கொழுப்பு, சர்க்கரை சத்துக்கள் அதிகம் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மது போதையில் குதி உயர காலணியால் தாயை கொடூரமாகத் தாக்கிய மகள். தனது உயரமான அடிப்பகுதி கொண்ட காலணியால் தாயின் முகத்தில் தாக்கி அவரின் ஒரு கண்ணை நிரந்தரமாகக் குருடாக்கிய மகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 17 வயதான லீஸ்மித் என்ற பெண் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட தாயின் பெயர் ஜோன்பிரவுன் வயது 34. இவர் ஒரு மனநல சேவையாளர். தாக்குதலை நடத்திய மகள் மது போதையில் தான் தனது தாயைத் தாக்கியுள்ளார். ஒரு இரவு விடுதியில் வைத்து தான் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரவு விடுதியில் வைத்து தாய்க்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தான் இந்தத் தாக்குதலில் முடிவடைந்துள்ளது. மகளின் தாக்குதலால் தனது பார்வை, தோற்றம், தனது காதலனுடனான உறவு, எதிர்காலக் கனவு என எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எல்லாமே இப்போது வித்தியாசமாகத் தெரிவதாகவும் கூறுகின்றார் தாய். அளவுக்கு அதிகமான போதையில் தனது மகள் ஒரு மிருகமாகவே மாறிவிட்டார் என்றும் இவர் குற்றம் சாட்டுகின்றார்.மூன்று அங்குல உயரமான காலணியால் தாயின் முகத்தில் திருப்பித் திருப்பித் தாக்கியதாக மகள் ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு 33 மாத தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.தாக்கப்பட்ட தாய்க்கு கண்பார்வையில் மட்டுமன்றி மண்டைஓடு மற்றும் தாடைப் பகுதி என்பனவற்றிலும் காயங்கள் ஏற்பட்டன. இரட்டைத் தலைக் குழந்தை! மருத்துவ ஆச்சர்யம். இந்தானேஷியாவின் பக்திஆஷ் ஆஸ்பத்திரியில் அண்மையில் பிறந்த ஒரு குழந்தை இரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்துள்ளது.டிமான் வயது 40, டானிரோ வயது 35 ஆகிய தம்பதியினரின் நான்காவது பிள்ளையாக இந்தக் குழந்தைப் பிறந்துள்ளது. இன்கியுபேடர் கருவியில் இந்தக் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கை கால்கள், இரண்டு முதுகெலும்பு, ஒரு மார்பு, ஒரு வயிறு என்பனவற்றுடன் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. வெளிநாட்டு தூதரகங்கள் மீது குற்றம் சாட்டும் எகிப்து. எகிப்தில் நடைபெறும் உள்நாட்டுக் கலவரத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு வெளிநாட்டு தூதர்கள் ஆயுதங்கள், தொலைத் தொடர்பு சாதனங்களைக் கொண்டு வருவதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் அலுவலகங்கள், கடைகள் சூறையாடப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தில் ஆயுதங்களையும், தொலைத் தொடர்பு சாதனங்களையும் எடுத்து வருகின்றனர். தூதர்களுக்கான பைகளில் இவற்றை எடுத்து வருவதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு தூதர்கள் எகிப்திற்குள் நுழைவதற்கு முன் ஆயுதங்கள், தொலைத் தொடர்பு கருவிகளைக் கொண்டு வருவதற்கு அனுமதி பெற்றாக வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதம் ஆயுதங்கள், தொலைத் தொடர்பு சாதனங்களை எகிப்திற்குள் கொண்டு வந்தது எந்த நாட்டு தூதரக அதிகாரிகள் என்பதை வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. மாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு நானே பொறுப்பு: தீவிரவாத தலைவர் டோகு உமரோவ். மாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு நானே பொறுப்பு ஏற்கின்றேன் என்று செசேனிய தீவிரமாத தலைவர் டோகு உமரோவ் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 24 ம் திகதியன்று மாஸ்கோ டோமோடி வோடோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 36 பேர் இறந்தனர். 180 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தான் பொறுப்பேற்பதாக செசேனிய தீவிரவாத அமைப்பான காக்சஸ் எமிரேட்டன் தலைவர் டோகு உமரோவ் கூறியுள்ளார். இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட வீடியோவில் காகடஸிக்கு எதிரான ருஷ்யக் குற்றங்களுக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உமரோவ் கூறியுள்ளார். டோகு உமரோவ் காகசஸ் எமிரேட் எனும் இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், 1996-99 வரை செயல்பட்ட செசேனிய தனிநாடு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயல்பட்டவர். வடக்கு காகசஸ் பகுதியில் இவருடைய அமைப்பு செயல்படுகின்றது. 2010 மார்ச்சில் நடந்த மாஸ்கோ மெட்ரோ தற்கொலைப்படை தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். 2009 நவம்பரில் மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்த இரயிலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு தாக்குதல்களுமே தன் உத்தரவின் பேரில் நடந்ததாக கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்று ஒளிபரப்பான ஓடியோவில் உமரோவ் இராணுவ உடையில் காட்சி தருகிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: யூத, கிறிஸ்துவ ஆட்சிகள் உலகம் எங்கும் உள்ள இஸ்லாமியர்களை அழிக்கின்றனர். சூடானிலும் இதுவே நடக்கின்றது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தாத வரை இந்த மாதிரியான தாக்குதல்கள் நடக்கும். இதைக் காட்டிலும் மிக மோசமான தாக்குதல்கள் நடக்கும் எனவும் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கை குளறுபாடுகளுக்காக ருஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் வட்டார போக்குவரத்து அதிகாரியையும், மாஸ்கோ காவல் துறைத் தலைவரையும் மற்றும் பலரையும் இதன் பொருட்டு பணி நீக்கம் செய்துள்ளார். |
தந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சகோதரிகள் இருவர் கைது.
ஆஸ்லே(19), ஹோலிராபின்சன்(16) ஆகிய இரு சகோதரிகளும் தன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மட்டுமில்லாமல், அவர்களின் தாயார் ஜோள்பார் மற்றும் அவர்களது ஆண் நண்பர்கள் கோர்டன் ஹார்பிஸ் மற்றும் ராபர்ட்ஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தையின் பெயர் அன்டோனி ராபின்சன்(61) கலைப்பொருட்கள் விற்பனையாளர்.
கடந்த ஆண்டு ஜீலையில் இரு பெண்களும் தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அவர்களின் தந்தையின் அறைக்குள் நுழைந்து 900 பவுண்டுகளைத் திருடியதோடு, தங்கள் நண்பர்களின் உதவியால் கொலையும் செய்ததாக மோல்ட் கிரவுன் கோர்ட் குற்றம் சாட்டியுள்ளது.
ராபர்ட்ஸ் கொடுத்த கத்தியால் ஹார்டிஸ், ராபின்சனின் கழுத்து, உடலின் மேல் பகுதி, முகப் பகுதிகள் மற்றும் உடலின் பின்புறம் நான்கு இடங்களிலும் குத்திக் கொலை செய்தார். கழுத்தின் இருபுறமும் குத்தப்பட்டு நரம்புகள் தெறிக்க ராபின்சன் சில நிமிடங்களிலேயே இறந்தார்.
இரண்டு பெண்களும் இதற்கு உதவியாக அருகில் இருந்து பார்த்துக் கொண்டதாக வழக்கறிஞர் ஆண்ட்ரூ தாமஸ் க்யூசி ஜிரிகளிடம் தெரிவித்தார். நால்வரும் பெண்களின் தாய் ஜோன்பாரிடம் நடந்த சம்பவத்தை மறைக்க தவறான விபரங்களை காவல் துறையிடம் கூறுமாறு செய்தனர்.
அதன்படி ராபின்சன் தன் பெண்ணை தாக்கியதாகவும், ஹார்பிஸ் சுய பாதுகாப்புக்காக அவரைக் கொன்றதாகவும் கூறியிருக்கின்றார். விசாரணைத்தரப்பானது, ராபின்சன் திருப்பித்தாக்கவோ, தப்பிக்கவோ இயலாததை விளக்கி நால்வருக்கும் தண்டனை வழங்கியுள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்ணும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
4000 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு மற்றும் இனிப்புகள் அவர்களின் 8 1/2 வயதில் மூளை வளர்ச்சி குறைபாட்டை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு இத்தகைய உணவுகளை அவர்கள் உண்கிறார்களோ அவ்வளவு அவர்களின் பொது அறிவுத்திறன் குறைகின்றது.
ஆனால் பழைய முறைப்படி சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள், மீன் வகைகள் அவர்களின் அறிவுச் செயல்பாட்டை அதிகரிக்கும். இந்த ஆரோக்கிய உணவு வகைகள் அறிவுத் திறனை 1.20 புள்ளிகள் அதிகரிக்கும். இந்த ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானதாக அமைகிறது. இதற்கு காரணம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்றாண்டுகளில் வேகமாக இருக்கின்றது.
இதைப்பற்றி ஆய்வு செய்த பிரிஸ்டல் பல்கலைகழக டாக்டர் கேடே நார்த்ஸ்டோன் கூறியதாவது: தற்கால பிரிட்டிஷ் குழந்தைகளின் சத்தற்ற, பதப்படுத்தப்பட்ட கொழுப்பும், இனிப்பும் அதிகமுள்ள உணவு வகையே 8 1/2 வயதில் அவர்களின் அறிவித் திறனுக்கு காரணம் என்கிறார்.
மேலும் ஆரோக்கியமான உணவு வகைகள் அதிகபட்ச மூளை வளர்ச்சிக்கு உதவும். அதே வேளையில் சிறுவயதில் ஆரோக்கியமான உணவு முறை என்பதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் சத்தான உணவுகளை உண்ணும் அதே சமயத்தில் சில விருந்து உணவுகளை உண்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான உணவு முறைகளை பிரச்சாரம் செய்யும் அமைப்பினர் இந்த ஆய்வு மூலம் மேலும் ஊக்கமடைந்துள்ளனர். ஆயினும் சில நிபுணர்களோ உடனடி உணவு வகைகளை சார்ந்திருக்கும் சில பெற்றோருக்கு இது எரிச்சலூட்டும் என்கிறார்கள்.
மருத்துவ சிகிச்சைக்காக முபாரக் ஜெர்மனி வருகை.
மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிற எகிப்தின் அதிபர் முபாரக் ஜெர்மனிக்கு வரவுள்ளதாக ஊர்ஜித மற்ற தகவல் அமெரிக்காவில் வெளியாகி இருந்தது.
அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் "டெர் ஸ்பைகல்" என்ற இணையதள நாளிதழில், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜெர்மனியின் தென் பிராந்தியமான பாடென்வுட்டம் பெர்க்கில் உள்ள மேக்ஸ் கிரண்டிங் மருத்துவமனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையானது அதிநவீன சொகுசு ஹோட்டல்களுக்கு இணையான வசதிகளை கொண்டதாகும். முபாரக் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவது எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சமிஞ்ஞைகளாக உள்ளன.
முபாரக் கடந்த காலத்தில் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்த அதிநவீன சொகுசு மருத்துவமனையில் உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யுஷ்சென்கோவும், ருஷ்யாவின் அமைச்சர் ஜெர்மன் கிரப்பும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
முபாரக் வருகை குறித்து தங்களுக்கு ஏதும் தகவல் இல்லை என ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.
சென்னை ஆலந்தூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
சென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் இருக்கவும், நகைகடைகள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்களை போலீசார் ரோந்து பணியின்போது கண்காணிக்கவும் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பொழிச்சலூரில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி, ஊர்க்காவல் படை போலீசார் ஒருவரும் சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த கதவு (ஷட்டர்) பாதி மூடிய நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் கீழே குனிந்து பார்த்தபோது ஏ.டிஎம். மையத்தில் 2 பேர் கொள்ளையடிக்க முயற்சி செய்வதைக் கண்டனர். உடனே போலீசார் ஏ.டி.எம். கதவை மூட முயன்றனர். இதை பார்த்த கொள்ளையர்கள் கதவை மூட விடாமல் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி ஒருவரை மடக்கி பிடித்தார். விசாரணையில் திண்டுக்கலை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விசாரணையில் இவர் போலீசாரிடம், நானும், என் நண்பர்கள் திண்டுக்கலை சேர்ந்த வர்கீஸ் (23), பிரேம்குமார் (24), ஆட்டோ டிரைவர் ஆல்வின்(23) ஆகியோர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றோம் என்பதை ஒப்புக் கொண்டார். இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஆட்டோ வேகமாகச் சென்றது. உடனே இது பற்றி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர், புறநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். ஆட்டோ பற்றி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லாவரம் அருகே ஆட்டோ வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த பிரேம்குமார், ஆட்டோ டிரைவர் ஆல்வின் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொள்ளையில் தப்பி ஓடிய வர்கீஸ் என்பவரை போலீசார் தேடினார்கள். இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் யோசனையின்பேரில், வர்கீசிடம் விக்னேஷ் செல்போனில் பேசினார். திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து செல்வதாக வர்கீஸ் சொன்னார். உடனே போலீசார் விரைந்து சென்று வர்கீசை மடக்கிப் பிடித்தனர். கைதான வர்கீஸ் போலீசாரிடம் கூறியதாவது:- நான், பிரேம்குமார், விக்னேஷ் ஆகியோர் திண்டுக்கலில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்ப்யூட்டர் என்ஜினீயருக்குப் படித்தோம். சென்னையில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். மையத்தை பழுது பார்க்கும் தனியார் நிறுவனத்தில் 4 மாதத்திற்கு முன்பு சேர்ந்தேன். இதனால் ஏ.டி.எம். மையத்தில் எங்கு பணம் வைக்கப்பட்டு இருக்கும், அதை எப்படி உடைத்து பணத்தை எடுக்கலாம் என்பது தெரியும். இதனால் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டேன். பொழிச்சலூரில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தேன். அப்போது அங்கு கேமரா மற்றும் காவலாளி (வாட்ச்மேன்) இல்லாததை கண்டேன். மேலும் இந்த ஏ.டி.எம்.மில் ரூ.25 லட்சம் பணத்தை போட்டதை அறிந்து நண்பர்களிடம் தெரிவித்தேன். விக்னேஷ் எனக்கு வெல்டிங் தெரியும் என்றார். இதையடுத்து வெல்டிங் செய்ய பெரிய சிலிண்டர் ஒன்றை வாங்கினோம். ஆட்டோ டிரைவர் ஆல்வினை பொழிச்சலூருக்கு வருமாறு கூறினோம். இதற்கு வாடகையாக ரூ.1,500 பேசினோம். ஏ.டி.எம்.மில் உள்ள பணத்தை கொள்ளையடித்து அதை பங்கு போட்டு சொகுசாக வாழ ஆசைப்பட்டோம். ஆனால் ரோந்து பணியில் இருந்த போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கொள்ளையடிக்க முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ரோந்து பணியால் ரூ.25 லட்சம் கொள்ளை போனதை தடுத்து 3 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ். ஆர். ஜாங்கிட் பாராட்டினார். மேலும் சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி, ஊர்காவல் படை போலீஸ்காரர் ஆகியோருக்கு வெகுமதி வழங்கினார். |