பீட்சா, பர்கர் யுகத்தில் காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகள் உண்டு. அப்படிப்பட்டவர்களை கவர பல வண்ணங்களில் அறிமுகமாகி உள்ளது "வானவில் காலிபிளவர்".
காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கலர் காலிபிளவரை விரும்புவார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காய்கறிகளில் ஏராளமான சத்துகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பல நாட்டு மருத்துவர்களும் அறிவுரை செய்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு ஏனோ அவற்றின் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுவதில்லை.
இதுகுறித்தும் ஒரு நீண்ட ஆய்வை மேற்கொண்டனர் ஆராய்ச்சியாளர்கள். பஞ்சு மிட்டாயைக்கூட கலர் சாறு ஊற்றி விற்றால் குழந்தைகள் குதூகலமாக வாங்கி சாப்பிடும்.
அதே தொழில்நுட்பத்தை காய்கறிகளிலும் பயன்படுத்த முடிவு செய்தனர். அதன் விளைவுதான் வண்ண வண்ண காலிபிளவர்களின் அறிமுகம்.
இங்கிலாந்து சூப்பர் மார்க்கெட்களில் இந்த வகை வானவில் காலிபிளவருக்கு கிராக்கி அதிகம். ஒரு காலத்தில் சீண்டப்படாமல் இருந்த காலிபிளவர் இப்போது அமோகமாக விற்பனையாகி வருகிறது.
இயற்கை வண்ணங்கள் மட்டுமே உள்ள இதனால் எந்த பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் பயன்பாடு குறைந்து வருவது சமீபத்திய ஆய்வு மற்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
இதையடுத்து காய்கறி விற்பனை மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயன்தான் இது.
முதல் முயற்சியாக காலிபிளவர் விற்பனையில் புதிய உத்தி அறிமுகமாகி உள்ளது. இதன் வரவேற்பை பொருத்து இதர காய்கறிகளிலும் புதுமை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.