Wednesday, August 24, 2011

இன்றைய செய்திகள்.

பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட போர் அறிக்கை அமெரிக்காவிடம் கையளிப்பு.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மனிதாபிமானப் போரின் உண்மை சார்ந்த அலசல்கள் என்ற தலைப்பிலான அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகள் கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இவ்வறிக்கையின் பிரதிகள் அனுப்பவைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கடந்தமாத இறுதியில் அறிவித்திருந்தது.
இந் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்­ஷ‌வால் கடந்த முதலாம் திகதி கொழும்பில் வைத்து வெளியிடப்பட்ட 161 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தின் சகல பிரிவினருக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க காங்கிரஸின் நூலகம்,பல்கலைக்கழகங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சகல முகவர் நிலையங்களுக்கும் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்விகளை எழுப்புகின்ற இந்திய ஊடகவியலாளர்களையும் விரைவில் சந்தித்து போருக்கு பிற்பட்ட இலங்கையில் நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா செயற்படவில்லை, அமெரிக்காவிலுள்ள சில தீவிரவாத சக்திகளே அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன என அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது! இராஜதந்திரி ஜயந்த தனபால கருத்து.

உலகரீதியில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும். அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் என்று இலங்கையின் மூத்த இராஜதந்திரியான ஜயந்த தனபால லக்பிம ஆங்கில வாரப் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார். 
இந்தியாவுடனான உறவுகளை இலங்கை பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப் பாட்டுக்குள் இலங்கை உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். என்று ஐ.நா.சபையின் ஆயுதபரிகரண விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவரான அவர் தெரிவித்தார். 
இந்தியாவுடனான உறவுகள் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. இந்தியாவுடனான உறவை புத்திசாலித்தனமான முறையில் இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009 ற்குப் பின்னர் அதாவது போர் முடிவடைந்த பின்னர் அந்தப் புத்திசாலித்தனத்தைக் காணமுடியவில்லை.
வரலாற்று ரீதியாக இந்திய வம்சாவழியினர்தான் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு விவகாரமும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அதன் ஏனைய பகுதிகளிலிலும் நேரடித் தொடர்பு உடையதாகவே இருக்கின்றது.
13 ஆவது திருத்தச்சட்டம், அதற்கு அப்பால், இரண்டாவது சபை என்று கூறியது எல்லாம் போய், இப்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்றெல்லாம் ஜனாதிபதி பேசுகின்றார்.
இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணுமாறு இந்தியா சாந்தமாகக் கோருகின்றது. ஆனால் நாம் அந்தச் செய்திக்கு காது கொடுப்பது போன்று தெரியவில்லை.
இந்திய இலங்கை உடன்படிக்கையை 1980 களில் திணித்ததிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று 100 வீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கின்றன.
உலகரீதியில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம். இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும். அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் என்றும் ஜயந்த தனபால தெரிவித்தார்.
அரசியல்வாதிகளினால் படையினரும், பொலிஸாரும் பாதிக்கப்படுகின்றனர்!– சரத் பொன்சேகா.

அரசியல்வாதிகளினால் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் பாதிக்கப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் மோதிக் கொள்ளாமல் பொறுமையுடன் செயற்பட வேண்டும். அத்துடன், மக்கள், நாடு மற்றும் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கு பொலிஸாரும், படையினரும் அர்ப்பணிப்புடன் பாடு வேண்டும்.
ஊழல் மோசடிகளை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டியது படையினரின் கடமையல்ல என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த போது அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு சீ.வீ.கே. சிவஞானம் கண்டனம்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொறுப்பான பொலிஸாரும், இராணுவத்தினரும் ஒரு முழுக்கிராமத்தையும் அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது எனத் தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதன் முலம் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நாவாந்துறையில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது விடயமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
நாவாந்துறைப் பிரதேசத்திற்க்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசியிருக்கின்றேன். அதனடிப்படையில் நாவாந்துறையில் மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்திருக்கின்றனர். இந்த பாரிய அசம்பாவிதம் தொடர்பாக ஒரு பூரண பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
பாதுகாப்புக் கருதியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர் குறிப்பிட்ட பெண் பொலிஸார் ஒருவரால் சப்பாத்துவினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த விடயமும் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
காத்தான்குடியில் படையினர் சேதமாக்கிய மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக புதியவை வழங்கப்படும்!- கோத்தபாய.

காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்கள் படையினர் மோதலின் போது பாதுகாப்பு படையினாரால் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக புதிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார் 
மர்ம மனிதன் விவகாரம் குறித்து தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை கிழக்கு மாகாண முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது, காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளன தலைவர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகளை பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கினார்.

அச்சமயம், காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அப்பாவி பொதுமக்களின் 20 மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் பாதுகாப்பு படையினாரால் சேதமாக்கப்பட்டதாக அவர்சுட்டிக்காட்டினார்.
பள்ளிவாசல் சம்மேளன தலைவர் மேற்படி சேத விபரங்களை வெளியிட்டபோது, சேதமாக்கப்பட்ட 20 மோட்டார் சைக்கிள்களையும் புதிதாக  வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதெரிவித்தார்.
கிறிஸ் பூதம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்வோர் பயங்கரவாதிகளாக கருதப்பட வேண்டும்!- கோத்தபாய.

கிறிஸ் பூதம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்வோர் பயங்கரவாதிகளாக கருதப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிறிஸ் பூதம் தொடர்பான வதந்திகளைக் கிளப்பி இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் கும்பல்களை பயங்கரவாத குழுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிறிஸ் பூதம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்துக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு சட்டத்தை மீறிச் செயற்பட்டதனால் அப்பாவி உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சியிலும் மர்ம மனிதர்! பொதுமக்கள் - இராணுவம் முறுகல் நிலை! மக்கள் பதற்றம்!

கரவெட்டி, பொலிகண்டிப் பகுதியில் நேற்றிரவு சுமார் 9.15 மணியளவில் ஒரு வீட்டில் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு இனந்தெரியாத மூவர் பிரவேசித்தனர். அவர்களைக் கண்டு வீட்டார் கத்திக் குழறியதும் அங்கிருந்து ஓடி பின்புறமாக உள்ள வளவுக்கு மதில் ஏறிப் பாய்ந்தனர் அந்த ஆசாமிகள்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களைக் கலைத்தவாறு பொதுமக்கள் பின் தொடர்ந்து ஓடினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து அனைத்து அயல்கிராமங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் பறந்தன. அயல்பகுதிகளான தேவரையாளி, சமரபாகு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும் நூற்றுக் கணக்கில் வீதிகளுக்கு வந்துவிட்டனர்.
இதேவேளை, தப்பியோடிய ஆசாமிகளைப் பின்தொடர்ந்து ஓடிய மக்கள் ஆலங்கட்டை மயானப்பகுதியை நெருங்கினர். அங்கு மயானத்தில் ஹைஏஸ் வாகனம் நின்றது. அதில் சீருடையில் இராணுவத்தினர் இருந்தனர் என்றும் அவர்களைவிட வேறு சிலர் சிவில் உடையில் இருந்தனர் என்றும் அங்கு கூடிய மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் மயானப்பக்கமாக ஓடிய ஆசாமிகள் குறித்து பின்னர் தகவல் இல்லை. மக்களுக்கு அங்கிருந்த படையினருக்கும் குறித்த வீட்டிற்குள் பிரவேசித்த அந்த இனந்தெரியாத மூவருக்கும் இடையே தொடர்புள்ளது என்ற சந்தேகம் வந்துவிட்டது.
அந்த வாகனத்தைச் சுற்றி பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடினர். எனினும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. வான் அங்கிருந்து அகன்று சென்றுவிட்டது.
கூடிய மக்கள் அகலவில்லை. அவர்கள் மத்தியில் கிலேசம், அதிர்ச்சி. இளைஞர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்தநிலையில் தேவரையாளி இந்துக்கல்லூரி வீதி, மயான வீதிப் பகுதிகளில் மக்கள் கூடிநின்ற இடத்துக்கு டிராக்டர், கன்ரர் வாகனங்களில் வந்து இறங்கினர் படையினர். பொலிஸாரும் வந்தனர்.
இதனையடுத்து மக்கள் வாக்குவாதத்தில் இறங்கவே நிலைமை மோசமடையத் தொடங்கியது. அங்கு கொந்தளிப்பு நிலை தோன்றவே படையினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.
விபரீதம் ஏதும் நிகழவில்லை. படையினரும் அங்கு தொடர்ந்து நின்றனர், மக்களும் கூடி நின்றனர். நள்ளிரவு 11.30 மணிவரையில் நிலைமை பதற்றமாக இருந்தது.
பின்னர் மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். வித்தியாசமான எவரும் கிராமங்களுக்கு, வீடுகளுக்கு வந்தால் அவர்களைப் பிடித்து பொலிஸில் ஒப்படைக்குமாறு பொலிஸார் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
மர்ம மனிதர் பிரச்சினைகளை தடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் விசேட குழுக்கள்.

மர்ம மனிதர் பதற்றத்தை தணிப்பதற்காக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நாட்டின் சகல பாகங்களிலும் விசேட குழுக்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட குழு நிறுவப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், பொலிஸாருடன் இணைந்து மர்ம மனிதர் அச்சுறுத்தல்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் சில குழுக்கள் மர்ம மனிதர் பதற்றத்தை நாட்டில் ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மக்களின் ஆதரவு கிட்டாத ஓரு சில குழக்களே இந்த நாச வேலையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, மர்ம மனிதர் பற்றி நிலைமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம்  ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். 
உயிரிழந்த குழந்தையின் பெற்றோரினால் ரிசனாவிற்கு விடுதலை கிடைக்கலாம் என எதிர்பார்பபு.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோரினால் ரிசானா நாபீக்கிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோரினால் ரிசானா நாபீக்கிற்கு மன்னிப்பு வழங்க முடியும் என சவூதி அரேபிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வீட்டுப் பணிப் பெண்ணாக சவூதி அரேபிய சென்ற ரிசானா நாபீக்கிற்கு, வீட்டு எஜமானரின் குழந்தையை படுகொலை செய்த குற்றச் சாட்டுக்காக 2007 ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோருடன் இணக்கப்பாடொன்றை எட்டிக் கொள்வதன் மூலம், ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபிய றோயல் நீதிமன்ற பிரதிநிதிகளுக்கும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைவதற்கு சில மாதங்கள் அல்லது சில வாரங்கள் செல்லக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெற்றோர்க்கு இழப்பீடு ஒன்றை வழங்குவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து மீளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
குண்டு காயம் அடைந்த ஒசாமாவின் மனைவி ஓபரேஷன் செய்ய மறுப்பு.
அமெரிக்க படைகள் சுட்டதில் குண்டு காயம் அடைந்த ஒசாமா பின்லேடனின் மனைவி ஓபரேஷன் செய்து கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அப்போது ஒசாமாவை பாதுகாக்க ஓடிவந்த அவரது மனைவி அமல் அல் சதாவின் காலில் துப்பாக்கிக் கொண்டு பாய்ந்தது.
ஒசாமா கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் அமல் சிறை வைக்கப்பட்டுள்ளார். காலில் குண்டு பாய்ந்துள்ளதால் ஓபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து அமலின் சகோதரர் ஜகாரியா கூறுகையில்,"என் சகோதரியை சட்டவிரோதமாக சிறை வைத்துள்ளனர். சர்வதேச சட்டத்திட்டபடி அவரை விடுவிக்க வேண்டும். அதுவரை ஓபரேஷன் செய்து கொள்ள மாட்டேன் என்று அமல் கூறியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
கணவன்மார்களை விட செல்ல பிராணிகளுடன் அதிகம் பேசும் பெண்கள்: ஆய்வில் தகவல்.
கணவனை விட தாங்கள் வளர்க்கும் நாய்களிடம் அதிக நேரம் பரிவுடன் பெண்கள் பேசுகிறார்கள் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜந்தில் ஒரு பெண் தங்களது வளர்ப்பு பிராணிகளிடம் கணவனிடம் பேசுவதை விட அதிக நேரம் பேசுகிறார்கள்.
தங்களது வளர்ப்பு நாய்கள் சுகவீனம் அடையும் போது மிகுந்த அக்கறை எடுக்கும் பெண்கள் தொலைக்காட்சி, ரேடியோ கேட்பதை விட்டுவிட்டு நாய் அருகிலேயே அமர்ந்து கவனிக்கிறார்கள்.
சில நேரங்களில் பணிக்கு செல்லாமல் விடுமுறையும் எடுக்கிறார்கள். பிரிட்டனில் தெற்கு கிழக்கு பகுதியில் இரண்டு ஆயிரம் நாய்களின் பெண் உரிமையாளர்களின் 18 சதவீதம் பேர் தங்களது நாய்களிடம் அடிக்கடி பேசுகின்றனர்.
தங்களது கணவர் அல்லது ஆண் நண்பரிடம் பேசும் நேரத்தை விட அவர்களின் வளர்ப்பு பிராணிகளிடம் பேசி மகிழ்ச்சி அடைகின்றனர்.
நோயுற்று இருக்கும் நாய்களை கவனிக்க சர்வேயில் கலந்து கொண்ட பெண்களில் 42 சதவீதப் பெண்கள் பணிக்கு செல்லாமல் அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துவது தெரியவந்தது.
வளர்ப்பு நாய்களிடம் தொலைக்காட்சியில் பார்க்கும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என பெண் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த வாரம் பதவியை ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர்.
ஜப்பான் பிரதமர் நாடோ கான் அடுத்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் பதவியேற்பார் என அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் நாடோ கான் அடுத்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் பதவியேற்பார் என அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமராகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அதனால் உருவான சுனாமி, சுனாமியால் அணுசக்தி நிலையங்களில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்தும் அதனை கையாண்ட விதம் தொடர்பாக பிரதமர் நாடோ கான் மீது அதிருப்தி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. கருத்துக்கணிப்பில் அவருக்கு ஆதரவாக 20 சதவீதத்திற்கு குறைவானவர்களே கருத்து தெரிவித்தனர்.
ஏழு மாத போராட்டத்திற்கு பின் கடாபி அரசை வீழ்த்திய போராட்டக்காரர்கள்.
லிபியாவின் தலைநகரும், அதிபர் கடாபியின் கோட்டையுமாகக் கருதப்பட்ட திரிபோலியின் பெரும்பகுதியை அரசு எதிர்ப்பாளர்கள் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
திரிபோலிக்குள் அரசு எதிர்ப்புப்படையினர் நுழைந்ததுமே தலைநகரைக் காக்க கடாபி அமைத்திருந்த சிறப்புப் படையினர் சரணடைந்து விட்டனர். பெரும்பாலான திரிபோலி மக்களும் அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் அரசு எதிர்ப்புப் படையினர் எளிதாக முன்னேறிவ ருகின்றனர்.
இன்னும் சில மணித்துளிகளில் நகரை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்ற அவர்கள் இப்போதே கடாபிக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டதாகக் கொண்டாடி வருகின்றனர்.
திரிபோலியின் கிரீன் சதுக்கத்தில் திங்கள்கிழமை திரண்ட ஆயிரக்கணக்கான அரசு எதிர்ப்பாளர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், மூவர்ணக்கொடியை உயர்த்தி பறக்கவிட்டும் குதூகலித்தனர்.
கடாபி எங்கே? கடாபி தங்கியிருந்த இல்லத்தின் மீது எதிர்ப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இல்லம் தரைமட்டமாகிவிட்டது. ஆனால் அந்த இல்லத்துக்குள் கடாபி இல்லை. இதனால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
ஆனால் கடாபி தங்கியிருந்த இல்லத்துக்குள் ஏராளமான பதுங்கு குழிகளை அவர் ஏற்படுத்தியிருந்ததாகவும், அதற்குள்தான் அவர் பதுங்கியிருப்பார் என்றும் அரசு எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு திரிபோலியில் உள்ள இதயநோய் மருத்துவமனை ஒன்றில் கடாபி தங்கியிருந்ததாகவும், இப்போது அவர் அங்கும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தமது தலைமையிலான அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும் என்று கடாபி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை அவர் எங்கிருந்து விடுத்தார் என்பது தெரியவில்லை. இது திங்கள்கிழமை அரசு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
கடாபி பதவி விலக வேண்டும்-ஒபாமா: திரிபோலி நகர் அரசு எதிர்ப்பாளர்களின் வசம் வரப்போகிறது என்ற தகவலை கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா இப்போது லிபியா அந்நாட்டு மக்களின் கைக்கு வந்துள்ளது. நாட்டில் மேலும் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்க வேண்டுமானால் கடாபி உடனே பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லிபியாவில் அரசுப் படையினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான சண்டை உச்சக்கட்டத்தில் உள்ளதால் அந்நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. வெளியேறினாலும் அச்சமின்றி நடமாட முடியதாத சூழல் நிலவுகிறது.
புற்றுநோய் சிகிச்சைக்காக மீண்டும் கியூபா செல்ல அனுமதி கோரும் சவோஸ்.
மூன்றாவது முறையாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக மீண்டும் கியூபா செல்கிறார் வெனிசுலா அதிபர் சவோஸ்.
இதற்காக கியூபா பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் ஒப்புதலை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலா அதிபர் ஹூவே சவோஸ் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்றார்.
இதற்காக முதல்முறையாக கியூபா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். இது குறித்து நாட்டு மக்களுக்கு அவர் முதலில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
20 நாட்களுக்கு மேலாகியும் நாடு திரும்பாததால் குழப்பம் ஏற்படவே பிறகு கியூபாவில் சிகிச்சை எடுத்திருப்பது தெரியவந்தது. இரண்டாவது முறையாக கடந்த மாதம் கியூபா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர் நாடு திரும்பினார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக கியூபாவில் தங்கி புற்றுநோயை குணமாக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருந்தார்.
இது குறித்து அந்நாட்டு தேசிய பாராளுமன்றத்தி்ன் அரசு தொலைக்காட்சியில் அவர் பேசியதாவது: மூன்றாவது முறையாக கியூபா சென்று சிகிச்சை பெற அந்நாட்டு பாராளுமன்ற எம்.பி.க்களின் ஒப்புதலை கோரியுள்ளேன்.
அனுமதி கிடைத்ததும் விரைவில் கியூபா செல்ல உள்ளேன் என்றார். சவோஸின் கோரிக்கை குறித்து கியூபா பாராளுமன்றத்தில் நாளை(இன்று) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக கியூபா நாட்டு இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
யூரோ மண்டல பத்திரத்தை ஜேர்மனி ஆதரிக்கவில்லை: ஏங்கலா மார்கெல் உறுதி.
ஐரோப்பிய நாடுகள் கடன் பிரச்சனையில் தவிக்கின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொதுவான யூரோ பத்திரங்களை வெளியிட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.
இப்படி யூரோ பத்திரம் வெளியிடுவது தவறான பதில் என ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில்,"சில விடயங்களை நாங்கள் செய்ய வேண்டும் என சந்தைகள் கூறுகின்றன. அதனை நாங்கள் நிச்சயம் செய்ய முடியாது. சந்தையை தொடர்ந்து அரசியல் செல்ல முடியாது" என அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் செலவினங்களை குறைத்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய சிக்கலான இலக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பா தலைவர்கள் உரிய முடிவு எடுக்காததால் உலக பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
கடன் பிரச்சனையில் தங்கள் பிடிமானம் கை நழுவி போவதாகவும் ஐரோப்பிய தலைவர்களை கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் யூரோ கடன் பத்திரம் வெளியிடுவது சரியல்ல என்று ஏங்கலா மார்கெல் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் அவதிப்பட்ட என்.டி.பி தலைவர் மரணம்: மக்கள் அஞ்சலி.
கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின்(என்.டி.பி) தலைவர் ஜாக் லெய்டன் நேற்று மரணம் அடைந்தார்.
தனக்கு புதிய வடிவிலான புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றேன் என்றும் லெய்டன் அறிவித்த சில வாரங்களில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் எப்போதும் இல்லாத வகையில் பெடரல் பொதுத்தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை மகத்தான வெற்றி பாதைக்கு கொண்டு சென்ற தலைவர் ஜாக் லெய்டன் ஆவார். அவருக்கு வயது 61 ஆகும்.
மறைந்த தலைவர் லெய்டனின் மனைவி ஒலிவியா சோ மற்றும் குழந்தைகள் சாரா மற்றும் மைக்கேல் லெய்டன் சார்பில் நேற்று புதிய ஜனநாயக கட்சி(என்.டி.பி) அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கனடா புதிய ஜனநாயக கட்சியன் தலைவர் ஜாக் லெய்டன் திங்கள்கிழமை காலை 4.45 மணிக்கு மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவரது உயிர் இல்லத்தில் அமைதியாக பிரிந்தது. அப்போது அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் உடன் இருந்தனர். லெய்டனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி சனிக்கிழமை டொரண்டோ ராய் தாம்சன் ஹாலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்தலில் என்.டி.பி கட்சி மகத்தான வெற்றி பெற லெய்டன் பாடுபட்டார். இந்த தேர்தலில் என்.டி.பி கட்சி கனடாவின் 39 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. கியூபெக் மாகாணத்தில் 59 இடங்களும், 41 இடங்களை நாட்டின் இதர தொகுதிகளிலும் என்.டி.பி கட்சி கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது.
லெய்டனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பூங்கொத்து வைக்க வேண்டாம் அதற்கு பதிலாக சமூக ஜனநாயக கல்வி அமைப்பான பிராட்பண்ட் இன்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடை தாருங்கள் என குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்டிராஸ்கான் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கம்: மீண்டும் அரசியலுக்கு வருகிறார்.
சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மன்ஹட்டன் ஹொட்டல் ஊழியர் நபிசடோ டயலோ(33) குற்றம் சாட்டி இருந்தார்.
கடந்த மே மாதம் 14ஆம் திகதி அவர் மீது இந்த பாலியல் பலாத்கார வழக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.எம்.எப் பதவியை இழந்த ஸ்டிராஸ்கான் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 101 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பாலியல் பலாத்கார வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அவர் மீதான வழக்கை நபிசடோ விலக்கி கொள்கிறார். இது குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து ஸ்டிராஸ்கான் விடுவிக்கப்பட்டதால் அவர் மீண்டும் பிரான்ஸ் அரசியலில் தீவிரமாக ஈடுபடுகிறார். அவர் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி தலைவர் ஆவார்.
2012ஆம் ஆண்டு ஜனாபதித் தேர்தலில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில் பாலியல் பலாத்கார வழக்கு அவரை நிலை குலையச் செய்தது. அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டதுடன் இன்று மாலை அவர் சுதந்திர மனிதராக பிரான்ஸ் திரும்பி அரசியலில் ஈடுபடுவார் என அவரது கூட்டணிகள் நேற்று இரவு தெரிவித்தன.
ஸ்டிராஸ்கான் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டாலும் பிரான்சில் 2002ஆம் ஆண்டில் டிரிஸ்டனே பானன் என்ற பெண் எழுத்தாளரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளிக்க தேம்ஸ் நதியில் தயாராகும் படகு வீடுகள்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தேம்ஸ் நதிக்கரையில் படகு விடுதி ஒன்று அமைக்கப்படுகிறது. தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ராணி எலிசபெத் அரங்கத்தின் உச்சியில் இந்த படகு வடிவ ஓட்டல் அமைக்கப்படுகிறது.
இதில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கண்டு ரசிக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளையும் இங்கிருந்து பார்க்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பரில் பணிகள் முழுவதுமாக நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படகு விடுதியில் பார்வையாளர்கள் தளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து 500 டிசைன்கள் கேட்டு பெற்று அதில் ஒன்றை தேர்வு செய்து இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. கட்டிட டிசைனர்கள் டேவிட் கோன், பியானா பேனர் ஆகியோர் இதை வடிவமைத்துள்ளனர். டிசம்பருக்கு பிறகு மக்கள் பார்வையிட படகு விடுதி திறக்கப்படுகிறது.
சிரிய அதிபரின் நாட்கள் எண்ணப்படுகின்றன: போராட்டக்காரர்கள் எச்சரிக்கை.
லிபியாவில் கர்னல் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது, உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 5 மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் 2200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
சிரிய அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று வீதியில் திரண்டு அசாத் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
ஹாம்ஸ் நகரில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். வருகிற பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஒட்டிக் கொண்டு உள்ளார். இருப்பினும் பதவி விலக முடியாது என கூறுகிறார். லிபியாவைப் போன்று அயல் நாட்டுப் படைகள் சிரியாவில் ஊடுருவக் கூடாது என அசாத் எச்சரித்து உள்ளார்.
அசாத்தின் பாத் கட்சியைத் தவிர இதர அரசியல் குழுக்களை அசாத் அமைத்துள்ளார் என சிரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. சிரியாவில் ஐ.நா குழு பார்வையிட சிரிய அரசு அனுமதி அளித்துள்ளது.
சிரியாவில் நடக்கும் கொடுமைகள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என ஜெனிவாவில் இன்று நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பூமிக்கு அடியில் ஈரானின் அணு ஆராய்ச்சி மையம்: அமெரிக்கா சந்தேகம்.
எந்த நேரத்திலும் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தங்களது அணு ஆராய்ச்சி மையத்தை மலைகளுக்கு உள்ளே, பூமிக்கு அடியில் இடம் மாற்றிவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரானின் அணு ஆராய்ச்சிகளின் நோக்கம் குறித்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.
ஆனால் அணு குண்டு தயாரிக்கவே யுரேனியத்தை சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
ஈரானின் மையப் பகுதியில் உள்ள நடான்ஸ் மாகாணத்தில் தான் அந்நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் உள்ளது.
இந்த மையத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்த நேரமும் விமானத் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் உள்ளது. இந்நிலையில் ஈரான் மிக ரகசியமாக தனது அணு ஆராய்ச்சி மையத்தை புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியுள்ளது.
இத்தகவலை அந்நாட்டின் துணை அதிபரும் அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான பெரெய்தோன் அப்பாசி உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல்களில் இருந்து மையத்தைக் காப்பாற்ற மிகுந்த பாடுபட்டு இந்த மையத்தை பூமிக்கடியில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரான் தனது ஆராய்ச்சி மையத்தை பூமிக்கடியில் இடம் மாற்றியுள்ளது அந்த நாட்டின் மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
லிபிய அதிபர் கடாபி வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்.
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக நடந்த கடாபி ஆட்சிக்கு எதிராக வெகுண்டு எழுந்த மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 6 மாதமாக நடந்த இந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
மக்களின் புரட்சிப்படை தலைநகர் திரிபோலியை நேற்று முன்தினம் கைப்பற்றியது. ராணுவத்தின் முக்கிய தளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லிபியா புரட்சிபடையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் கடாபி தலை மறைவாகி விட்டார். எங்கு பதுங்கி இருக்கிறார் என தெரியவில்லை. தஜுரா இருதய ஆஸ்பத்திரியில் பதுங்கி இருக்கிறார். பால்கல் அஜீஜீயாவில் தனது மாளிகையில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று தென் ஆப்பிரிக்கா லிபியாவுக்கு 2 விமானங்களை அனுப்பியது. அதில் கடாபியும் அவரது குடும்பத்தினரும் தப்பி இருக்கலாம் என கருதப்பட்டது.
அதை தென் ஆப்பிரிக்கா வெளியுறவு மந்திரி மைட் சோனா மாசாபென் மறுத்துள்ளார். லிபியாவில் இருந்து தனது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அழைத்து வரவே அரசு விமானங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே கடாபி வெனிசுலா தப்பி சென்று அங்கு தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியானது. அதுவும் பொய் என்று பின்னர் நிரூபனமானது. அங்கோலா, கினியா, ஜிம்பாப்வே, துனிசியா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு அவர் தப்பி சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே அவர் லிபியாவில் பதுங்கியிருக்கிறாரா? என்று புரட்சிபடை தீவிரமாக தேடி வருகிறது. கடாபி எங்கு இருந்தாலும் அவர் சரண் அடைய வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடாபியின் ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து லிபியாவுக்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
லிபியாவின் சொத்துக்களை இங்கிலாந்து அரசு முடக்கி வைத்திருந்தது. கடாபி ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து அவற்றை மீண்டும் புரட்சி படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி விவாதித்து அடுத்த கட்ட திட்டத்தை அறிவிக்க பிரான்ஸ் முடிவெடுத்துள்ளது. பெங்காசிக்கு ஒரு நிபுணர் குழுவை அனுப்ப இத்தாலி முடிவு செய்துள்ளது.
போரின் போது சீரழிந்த எண்ணை மற்றும் இயற்கை வாயு தயாரிப்பு நிறுவனங்களை புனரமைக்க உதவி செய்ய முடிவெடுத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனுடன் டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் கத்தார், அரபு ஐக்கிய நாடுகளின் தலைவர்களுடன் பேசினார்.
எண்ணை வள நாடுகளில் லிபிபாவும் ஒன்றாக திகழ்கிறது. போருக்கு முன்பு நாள் ஒன்றுக்கு இங்கிருந்து 1 கோடியே 60 லட்சம் பேரல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. போருக்கு பின் அது 1 கோடி பேரலாக குறைந்து விட்டது.
இதனால் எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 106 அமெரிக்க டொலராக உயர்ந்தது. போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து எண்ணை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு சூடான் மோதலில் 600 பேர் மரணம்: பேச்சு வார்த்தைக்கு ஐ.நா அழைப்பு.
தெற்கு சூடான் நாடு தற்போது புதியதாக உருவாகியுள்ளது. இங்கு நடந்த மோதலில் 600 பேர் கொல்லப்பட்டனர். 26 ஆயிரம் கால்நடைகளும் திருடப்பட்டன.
இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்பு பிரதிநிதி ஹில்டே எப்.ஜான்சன் முர்லே மற்றும் லோ நுயர் சமூகத்தினர் ஜோங்ளய் மாநிலத்தில் மோதிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்த மாநிலத்தில் நடந்த வன்முறை மோதலில் 600 பேர் கொல்லப்பட்டதுடன் 750 பேர் காயம் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை காலை முதல் ஏற்பட்ட மோதல் நாள் முழுவதும் நீடித்தது என்று தெற்கு சூடான் தெரிவித்தது.
இரு பகுதி மோதல்களில் ஏற்பட்ட விளைவு குறித்து மதிப்பீடு செய்ய ஐ.நா கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குழுவை அனுப்பியது. முர்லே பழங்குடியினர் லோ நுயர் கிராம மக்களை தாக்கிய போது மோதல் வெடித்தது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 2011 வரை 2400 பேர் 330 மோதல்களில் தெற்கு சூடானில் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தெற்கு சூடானில் உள்ள பசுக்கள் அந்த பகுதியின் சொத்து வளத்தை காட்டுவதாக உள்ளது. அவை திருமணத்தின் போது வரதட்சணையாக தரப்படுகின்றன.
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கடாபியின் மகன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் தோன்றினார்.
லிபிய கர்னல் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் போராட்டக்காரர்களால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது.
இந்த நிலையில் அவர் தலைநகர் திரிபோலியில் தனது ஆதரவாளர்கள் முன்பாக மீண்டும் தோன்றினார். அப்போது போராட்டக்காரர்களின் முதுகு எலும்புகளை அரசு உடைத்துவிட்டது என்றும் கொக்கரித்தார்.
செய்பை கைது செய்து காவலில் வைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்த மறுநாள் செய்ப் தனது ஆதரவாளர்களுடன் அரசு வாகனத்தில் ஹொட்டலுக்கு வந்தார்.
நேற்று போராட்டக்காரர்கள் லிபியா ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர். இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) செய்ப் அல் இஸ்லாம் தனது ஆதரவாளர்களுடன் அதிகாலையில் ஹொட்டல் சிக்சோஸ் வந்தார்.
தந்தை கர்னல் கடாபிக்கு பின்னர் ஆட்சிக்கு வரக்கூடியவர் என்று 39 வயது செய்ப் கருதப்பட்டு வந்தார். மனித இனத்திற்கு எதிராக குற்ற நிகழ்வுகள் மேற்கொள்வதாக தமக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை பற்றியும் கவலைப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
தலைநகர் திரிபோலி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



கடாபி ஆட்சிக்கு பின்னர் லிபிய முன்னேற்றத்திற்கு பிரிட்டன் உதவும்: கமரூன் உறுதி.
லிபியாவில் கர்னல் கடாபி ஆட்சிக்கு பின்னர் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பிரிட்டன் உதவும். அங்கு ஜனநாயக மலர்ச்சி ஏற்பட உலக நாடுகளும் உதவ வேண்டும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் கூறினார்.
லிபியாவில் கடந்த 7 மாதமாக கடாபிக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் முடிவு நிலையை எட்டியுள்ளது. லிபியா தலைநகர் திரிபோலியில் பல ஆயிரம் போராட்டக்காரர்கள் குவிந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் திரண்டார்கள்.
லிபியாவின் 95 சதவீதப்பகுதி போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் 42 ஆண்டு கால கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகிறது. லிபியாவில் ஜனநாயக மாற்றம் ஏற்படவும், வளர்ச்சி ஏற்படவும் பிரிட்டன் உதவும்.
அதே நேரத்தில் உலக நாடுகளின் உதவியும் தேவை என பிரிட்டன் பிரதமர் கமரூன் வலியுறுத்தினார். லிபியாவில் இருந்து சர்வாதிகாரிகள் இன்னும் வெளியேறவில்லை என அமெரிக்கா எச்சரித்தது.
லிபியா போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்டெல் ஜலீல் கூறுகையில்,"நாம் இன்னும் முழுமையான வெற்றியை எட்டவில்லை" என்றார்.
சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை.
சிரியாவில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையால் எனது ஆட்சி கவிழாது என ஜனாதிபதி பஷார் அல் அசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிரியா அரசு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் பாதுகாப்பு படையினரால் ஒடுக்கப்படும். சிரியாவில் பல கட்சிகள் ஆட்சி முறைக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் அயல் நாட்டு படைகள் ஊடுருவினால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். முன்னதாக சிரியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழு வந்து அங்கு நிலவும் மனித உரிமை நிலை குறித்து ஆய்வு செய்தது.
சிரியா பாதுகாப்பு படையினர் போராட்டத்தை ஒடுக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டார்கள். அசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் அசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதுவரை அங்கு 2 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF