Thursday, August 25, 2011

இன்றைய செய்திகள்.

கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்.

கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார். 
மேற்கண்டவாறு தினக்குரல்; பத்திரிகை நிறுவனத்திற்க்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில். நேற்று(புதன்கிழமை) காலை 8மணிதொடக்கம் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளிற்க்குள் நுழைந்த படையினர் கிறீஸ் மனிதன் வந்தால் அது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குத் தெரியப்படுத்துங்கள்,
நீங்களாக அவர்களைப் பிடித்து அடிக்கவேண்டாம். அப்படி எதுவும் நடந்தால் உங்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தினர்.
எமது பகுதியில் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவித்தல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
காலை தொடக்கம் ஒவ்வொரு வீடுகளிற்க்கும் சுமார் 5வரையான இராணுவத்தினர் வந்து மேற்படி அறிவித்தலைக் கொடுத்துள்ளனர். இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்தபோது எங்களுடைய பாதுகாப்புக்காக நாங்கள் கிறீஸ் மனிதர்களைத் திருப்பித்தாக்கவேண்டும்தானே என சிலர் வினவியதற்க்கு அவ்வாறு சம்பவம் நடந்தால் உடனடியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்படும் என இராணுவத்தினர் பதிலளித்தனர்.
வடமராட்சி கிழக்கில் தாளையடிப்பிரதேசத்தில் மட்டுமே பொலிஸார் உள்ளனர். எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்ளது.
இதனால் இராணுவத்தினரின் கட்டுப்பாடு அதிகம் காணப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தைத் தோற்று வித்திருக்கின்றது.
இந்நிலையில் உடுத்துறைப் பிரதேசத்தில் நேற்று மாலை 5.45மணியளவில் பிக்கப் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் பூவரசம் மரத்திலிருந்து பொல்லுக்கள் உருவாக்கக்கூடிய தடிகளை வெட்டிச் சென்றதை பிரதேச இளைஞர்கள் சிலர் நேரடியாக கண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள மக்கள் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது! : ஜனாதிபதி.

கடந்த 3 தசாப்த காலங்களாக நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான பிரேரணை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்றும் நாட்டில் முழுமையாக ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முழு காரணமாக இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் அதன்போது, அர்ப்பணிப்பை மேற்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்க நடவடிக்கை எடுத்தமையானது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதன் மூலம் மாத்திரம் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியாது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய சட்ட திட்டங்கள் அநேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
1971 ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டதனாலும், இலங்கையில் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்பு மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.
இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காதவிடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.
இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.


இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபடுகின்ற இந்திய பிரஜைகள் சிலர் கினிகத்தேன அம்பகமுவ பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
இந்தச்சம்பவத்தில் பாதிப்படைந்த இருவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்குப் பின்பு தமது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்காக இந்தியாவிலிருந்து பொறியியலாளர்களும் திட்ட ஆலோசகர்களும் ஏனைய பணியாளர்களும் வருகைதந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களில் 5 பேர் நேற்று நிர்மாணப் பணிகளுக்கான செங்கற்களைப் பார்வையிடுவதற்காக கண்டி பகுதிக்குச் சென்று ஹட்டன் நோக்கி கார் ஒன்றில் திரும்பியுள்ளனர்.

இதன் போது இவர்களில் இஸ்லாமிர் ஒருவர் நோன்பு திறப்பதற்காக கினிகத்தேன அம்பகமுவ நகரில் காரை நிறுத்தி விட்டு கடையொன்றில் சிற்றுண்டிகளைக் கொள்வனவு செய்துள்ளார். இந்த நிலையில் அவ்விடத்தில் கூடிய சிலர் இவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு சுமார் 30 க்கும் மேற்பட்டோர் இந்தியப் பிரஜைகள் இருவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.தாக்குதல் சம்பவத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊனமுற்ற ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்திய பிரஜைகள் தப்பினோம் பிழைத்தோம் என்ற நிலையில் காரில் ஏறி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைக்காக அனுமதிபெற்றுள்ளனர்.

சம்பவத்தில் சவுக்கத்தலி, பிஸ்வஜித் மவுண்டர்(கல்கத்தா), தெய்வநாயகம், சரவணன் ஆகிய இந்தியப் பிரஜைகளே தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் 120 பேர் இன்று தமது பணியைப் புறக்கணித்தனர். சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியப் பிரஜைகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரே’ட தொழிலுறவு நிர்வாக ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்பொன்னையா கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு தனது கவலையையும் தெரிவித்துக்கொண்டார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: அரசாங்கம்.

நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம், உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலிலேயே இருக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாதுகாப்புத் தடைச் சட்டமானது தனியாக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்தியாவினதோ அல்லது எந்தவொரு சர்வதேச நாட்டினதோ அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படவில்லை. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டும் மக்களின் நலன் கருதியுமே அரசாங்கத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா மேலும் கூறினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் - ரில்வின் சில்வா
அவசரகாலச் சட்டத்தைப் போன்றே பயங்கரவாதத் தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் இவ்வாறான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
காலம் தாழ்த்தியேனும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.
அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு தமது கட்சி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்ட நீக்கம் இந்திய சர்வதேச அழுத்தமே காரணம்.

இந்தியா மற்றும் சர்வதேசம் விடுத்த அழுத்தமே அவசரகாலச் சட்டத்தை 30 ஆண்டுகளின் பின்னர் நீக்குவதற்கான காரணமாக அமைந்துள்ளது என நம்பகமாகத் தெரியவருகிறது.
குறிப்பாக இந்தியா இந்தச் சட்டத்தை நீக்கக் கடும் அழுத்தமொன்றை நேற்று இராஜதந்திர ரீதியில் விடுத்திருந்தது. இது தொடர்பான இன்று காலை ஊடகவியலாளர்களிடம் கூட இந்திய உயர்மட்டம் தெரிவித்திருந்தது.
இந் நிலையிலேயே இலங்கை அதிபர் இன்று பாராளுமன்றத்தில் இச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பான தகவலைத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக புலிகளுடனான போர் முடிவுற்று 28 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மே 19ம் திகதி, 2009 ஆண்டிற்கு பின்னர் புலிகளின் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதோடு இலங்கைத் தீவு முழுவதும் மக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான ஏதுநிலையும் ஏற்பட்டதையடுத்தே இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் இன்னமும் செயற்பாட்டில் இருக்கிறார்கள் என்ற அழுத்தம் சிறீலங்கா அரசால் கொடுக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா புலிகள் தொடர்பான காட்டமான அறிக்கையொன்றை விடுத்ததோடு அவர்கள் மீதான தடையையும் நீடித்துள்ளது.
அதுபோலவே புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகளின் அமைப்புக்களைக் கவனிக்கும் செயற்பாடுகளையும் விஸ்தரித்துள்ளது.
இதேபோன்று ஐரோப்பாவிலும் புலிகளின் தடைநீக்க வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது அதனை எதிர்த்து போராட பிரத்தானியாவும், நெதர்லாந்தும் மனுச் செய்ததானது இவற்றிக்கு மேற்குலக ஆசீர்வாதம் இருப்பதைக் காட்டி நின்றது.
அதுபோலவே தாருஸ்மன் குழுவெனப்படும் ஐ.நா.வின் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணைக் குழுவும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டு அவர்களிடம் உள்ள சொத்துக்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களிற்குச் சென்றடைய வெண்டுமென பரிந்துரைத்தது.
இவ்வாறு புலம்பெயர்ந்த புலிகளைக் கட்டுப்படுத்தச் செயற்படும் மேற்குலகம் இலங்கையில் சகஜநிலையைக் கொண்டுவந்து தீர்விற்கு வழி சேர்க்கவே இத்தகையதொரு கடுமையான அழுத்தத்தை இந்தியாவினூடாகப் பிரயோகித்துள்ளன என நம்பப்படுகிறது.
போரை வழிநடத்தியதாக மார்தட்டுவோரினால்,கிறிஸ் பூதப் பிரச்சினையிலிருந்து மக்களை பாதுகாக்க முடியவில்லை!– சரத் பொன்சேகா.

போரை வழி நடத்தியதாக மார்தட்டிக் கொள்ளும் நபர்களினால் ஒரு சில கிறிஸ் பூத அச்சத்திலிருந்து மக்களை  பாதுகாக்க முடியவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினை வழிநடத்தியதாகக் கூறிக்கொள்வோரினால் கிறிஸ் பூதப் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியவில்லை.
போரில் பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட அனைவரும் என்னுடன் இணைந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் பாரியளவில் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும்.
வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி ரொபர்ட் ஓ பிளெக் இலங்கை விஜயம்.

எதிர்வரும் 29ம் திகதி மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்திய வலய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர் ஓ பிளெக் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிளெக் இலங்கைக்கு விஜயம் செய்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் ரொபர்ட் ஓ பிளெக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியையோ அல்லது வெளிவிவகார அமைச்சரையோ சந்திப்பாரா என்பது குறித்து இராஜாங்கத் திணைக்களம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பசில் ராஜபக்ச கலந்துகொண்ட யாழ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் செய்தியாளர்கள் விரட்டியடிப்பு.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை சேட்டில் பிடித்து இழுத்து வெளியேறுமாறு பணித்துள்ளதால் யாழ். ஊடகவியலாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழ். பொதுநூலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்விற்கு உள்ளூர் ஊடகவியலாளர்களும் செய்தி சேகரிப்பிற்காகச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் நிகழ்வு தொடங்கியவுடன் மேடையின் அருகில் வைத்து சில காடையர்கள் சேட்டில் பிடித்து இழுத்து வந்து வெளியில் விட்டுள்ளனர்.
இந்த நிகழ்விற்க்கு பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எனினும் அவர்கள் எதுவும் செய்யாத நிலையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதே நிகழ்வில் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றியீட்டிய அரசசார்பு உறுப்பினர்கள் பதவியேற்பும் இடம்பெற்றிருந்தது.
இதனால் ஊடகவியலாளர்கள் தமது பணியை மேற்கொள்ளத் தடை செய்யப்பட்டதுடன் அவர்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்தது.
அத்துடன் அவர்களின் மனதைப் புண்படுத்தியதாகவும் ஊடகவியலாளர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இக்கூட்டத்திற்கு அரச சார்பு ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் தமது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ் பூதங்கள் பற்றி இராணுவத்திற்கு அறிவிக்க முடியும் : நிஹால் அப்புவாரச்சி.

கிறிஸ் பூதங்கள் பற்றிய தகவல்களை இராணுவத்திடம் வழங்குமாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் அப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களில் கிறிஸ் பூதங்கள் அடைக்கலம் பெறவில்லை.
படை முகாம்களில் கிறிஸ் பூதங்கள் இருப்பதாகத் தெரிவித்து அப்பாவி மக்களை கொலை செய்த திட்டமிட்ட குழுவினரால் இருவரையில் ஒரு கிறிஸ் பூதத்தையேனும் பிடிக்க முடியாமை நகைப்புக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் கிறிஸ் பூதங்கள் இராணுவ முகாம் நோக்கி ஓடிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சோதனை நடத்திய போது அவ்வாறு எந்தவொரு பூதத்தையும் காண முடியவில்லை.
கிறிஸ் பூதம் என்று எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனநோயாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் சில சதிகாரர்களின் தேவைகளுக்காக இவ்வாறு கிறிஸ் பூதங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடாபியின் பதுங்கு குழியில் பிரேசில் மருத்துவர்.
லிபியாவில் கடாபி தற்போது எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. இந்நிலையில் கடாபிக்கு சொந்தமான சொகுசான பதுங்கு குழி விவரத்தை பிரேசில் முக அறுவை சிகிச்சை நிபுணர் லயாசிர் ரிபேரோ தெரிவித்து உள்ளார்.
இவர் கடந்த 1994ம் ஆண்டு கடாபிக்கு அறுவை சிகிச்சை செய்தார். இந்த சிகிச்சை பதுங்கு குழியில் நடந்தது. மருத்துவர் ரிபேரோவுக்கு பிரேசில் ரியோடி ஜெனிரோவில் பல அலுவலகங்கள் உள்ளன.
இவர் திரிபோலியில் மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட போது லிபியா சுகாதாரத்துறை அமைச்சர் தனக்கு வேண்டியவருக்கு சிகிச்சை தர வேண்டும் என்றார்.
இதன்படி 70 வயது மருத்துவர் ரிபேரோ சென்ற போது பல சிக்கலான வடிவமைப்பு கொண்ட பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த பாதாள அறை மிக சொகுசாக இருந்தது என்றும் ரிபேரோ தெரிவித்தார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் கடாபி சர்வாதிகாரியாக இல்லை.
மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாகவே இருந்தால் என்னுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார் என ரிபேரோ கூறினார்.
ஒபாமா சராசரி அதிபர் பட்டியலில் மட்டுமே இடம்பெறுவார்: ஆய்வில் தகவல்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் சராசரி அதிபர் என்ற பட்டியலில் மட்டுமே இடம் பெறுவார் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல், சி&ஸ்பேன் மற்றும் தி சீனா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவை சார்பில் பேலர் யுனிவர்சிட்டியின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கர்ட் நிக்கோல்ஸ் தலைமையிலான குழுவினர் அதிபர்களுக்கான ரேங்க் பற்றி ஒரு ஆய்வு நடத்தினர்.
இப்போதைய அதிபர் பாரக் ஒபாமா அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் சராசரி அதிபர் என்ற பட்டியலில் மட்டுமே இடம் பெறுவார் என ஆய்வு கூறுகிறது.
2வது முறை அதிபராகி விட்டால் சிறந்த அதிபர்கள் பட்டியலில் 4ம் இடம் கிடைக்கும் என நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
அதாவது முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்த இடம் கிடைக்கும்.
லிபிய போரில் வெற்றி அல்லது வீர மரணம் எய்துவேன்: கடாபி ஆவேசம்.
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் குடியிருப்பு வளாகம் நேற்று எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது.
ரகசிய இடம் ஒன்றிலிருந்து நேற்று அறிக்கை விடுத்த கடாபி "வெற்றி அல்லது வீர மரணம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
திரிபோலியில் உள்ள ரிக்சாஸ் ஓட்டலில் இந்திய எம்.பி ஒருவர் உட்பட வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் பலர் கடாபி ராணுவத்தின் வசம் சிக்கியுள்ளனர்.
திரிபோலியின் பெரும் பகுதியை கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள் நேற்று கடாபியின் குடியிருப்பு வளாகமான பாப் அல் அஜீசியாவை முற்றுகையிட்டனர். வளாகத்தினுள் இருந்த ராணுவத்துக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஐந்து மணி நேரம் கடும் சண்டை நடந்தது.
இறுதியில் வளாகத்தின் ஒரு நுழைவாயில் வழியாக எதிர்ப்பாளர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு கடாபியின் வீடு, கூடாரம், ராணுவ அலுவலகங்கள் என அனைத்தையும் சூறையாடினர். நேற்று கடாபியின் வீட்டில் நடத்திய தேடுதல் வேட்டையில் அவரோ அவரது குடும்பமோ அங்கிருப்பதாகத் தெரியவரவில்லை.
கடாபியின் ஆட்சிக்கு அடையாளமாக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களையும், கட்டடங்களையும் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர். கடாபியின் சிலை ஒன்றை சிதைத்த அவர்கள் அதன் தலையைத் தரையில் போட்டு காலால் மிதித்தும், துப்பாக்கி முனையால் குத்தியும் அவமதித்தனர்.
இதற்கிடையில் கடாபியின் பதிவு செய்யப்பட்ட வானொலி சிற்றுரை ஒன்றை லிபிய தொலைக்காட்சி ஒன்று நேற்று ஒளிபரப்பியது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: எதிர்ப்பாளர்கள் மற்றும் நேட்டோவுக்கு எதிரான இப்போரில் நான் வெற்றி அடைவேன். அல்லது வீர மரணம் எய்துவேன். எனது குடியிருப்பு வளாகம் நேட்டோ இதுவரை 64 முறை நடத்திய குண்டுவீச்சில் ஏற்கனவே அழிந்து விட்டது.
அதனால் யுத்த தந்திர நடவடிக்கையாக நான் வளாகத்தை விட்டு யார் கண்ணிலும் படாமல் வெளியேறிவிட்டேன். அனைத்து லிபிய மக்களும் திரிபோலியில் கூடி எதிர்ப்பாளர்களை விரட்ட வேண்டும். நகரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
கடாபி எங்கிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில் அவர் திரிபோலியின் ஏதாவது ஒரு பகுதியில் பூமிக்கடியில் பதுங்கியிருக்கலாம் என்று எதிர்ப்பாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அதனால் அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து பாப் அல் அஜீசியாவில் இருந்த எதிர்ப்பாளர்கள் மீது கடாபி ஆதரவாளர்கள் நேற்று கடும் தாக்குதல் தொடுத்தனர்.


ஆப்கனில் மனித வெடிகுண்டுகளாக மாறும் சிறுவர்கள்: தலிபான்கள் அட்டகாசம்.
ஆப்கானிஸ்தானில் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் தலிபான்கள் மனித வெடிகுண்டுகளாக சிறுவர்களை உருவாக்குகிறார்கள்.
தங்களது உயிரை இழக்க போகிறோம் என்று கூட தெரியாத அந்த மனித வெடிகுண்டு சிறுவர்களை ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தினர் காப்பாற்றினர்.
மீட்கப்பட்ட அந்த சிறுவர்களை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் நேற்று சந்தித்து அவர்களுடன் ஆறுதலாக பேசினார்.
பின்னர் அந்த சிறுவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பெரியவர்களை உரிய கல்வி மற்றும் சீரமைப்பு பயிற்சி அளித்து அனுப்புமாறும் அவர் கூறினார்.
குழந்தைகளுடன் குண்டுகளை இணைப்பதை விட மிகப்பெரிய குற்றம் கிடையாது. இந்த தேசத்தின் குழந்தைகளை கொல்வதற்காக அவர்கள் பொய்கள் கூறுகிறார்கள். இது இஸ்லாத்தை பற்றி தவறான கருத்தை உருவாக்கும் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி வெளிவிட்டு உள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டு உள்ளது.
சமீப மாதங்களாக ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைகள் தாக்குதல் அதிகரித்துள்ளன என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்துல் ரகீம் தெரிவித்தார்.
ஆப்ரிக்க மக்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்: ஆர்வலர்கள் வலியுறுத்தல்.
ஹார்ன் ஆப்பிரிக்கா எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.
60 ஆண்டுகளில் இல்லாத பஞ்சம் சோமாலியாவை தாக்கி உள்ளது. உரிய சத்துணவு இல்லாததால் சோமாலியாவில் பெரியவர்களும், குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
பட்டினி, பஞ்சத்தை நீக்கும் நிவாரண உதவிக்கு ஆப்பிரிக்க தலைவர்கள் 3 கோடி பவுண்ட் நிதி உதவி தர வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தினர். உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடும் சோமாலியா, கென்யா, எத்தியோப்பா மக்களின் நிவாரணப் பணிக்கு 3 கோடி பவுண்ட் தேவை என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைமையிடமான அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க தலைவர்கள் இன்று கூடுகின்றனர். இந்த கூட்டத்தின் போது ஆப்பிரிக்க தலைவர்கள் 3 கோடி பவுண்ட் நிவாரண உதவியை அளிக்க வேண்டும்.
வெறும் பேச்சுவார்த்தை மட்டும் தீர்வு காண உதவாது, செயலில் ஈடுபட வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஐ.நா கோரிய நிதி உதவியில் தற்போது 50 சதவீத அளவே உலக நாடுகளிடம் இருந்து கிடைத்து உள்ளன.
சீன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் பலி.
சீனாவில் செராமிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உடல் கருதி பலியாகினர்.
சீனாவின் தென்பகுதியில் உள்ள போஷ்சன் நகரில் ஷின்பிங் என்ற செராமிக் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலை 4 மாடி கட்டிடத்தை கொண்டது. நேற்று 4வது மாடியில் பிடித்த தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால் தொழிற்சாலை பணியாளர்கள் இங்கு அங்குமாக ஓடினர். சிலர் உயிர்பிழைக்கும் எண்ணத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் தீக்காயமடைந்த 14 பேர் பலியாகினர். மேலும் மாடியில் இருந்து குதித்த ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்களில் பலர் உயிர் பிழைக்க மாடியில் இருந்து குதித்தவர்கள் என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார்.
லேசான தீக்காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை தகுந்த தீத்தடுப்பு வசதிகள் செய்யாமல் விட்டதே தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. தொழிற்சாலையின் உரிமையாளரை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுமதியில்லாத கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ரஷ்ய விண்கலம் வெடித்து சிதறியது: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளி நிலையத்தில் தற்போது 6 விஞ்ஞானிகள் தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும் எரிபொருள், ஆக்சிஜன் போன்றவை 2 மாதங்களுக்கு ஒருமுறை விண்கலம் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக சரக்கு விண்கலத்தை ரஷியா இயக்கி வருகிறது. விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை கொண்டு சேர்க்கும் பணிகளை ரஷியா 1978ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று எம்-12 எம் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்று பல டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிக் கொண்டு விண்வெளி நிலையத்துக்கு புறப்பட தயாரானது.
ரஷியாவின் கஜகஸ்தான் மாநிலத்தில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தும் முன்பு பூமியை நோக்கி திரும்பியது. சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவம் ரஷிய விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த விபத்தால் விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் விஞ்ஞானிகளின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன ராணுவ விரிவாக்கம் பதட்டத்தை ஏற்படுத்தும்: பென்டகன் எச்சரிக்கை.
சீன ராணுவம் தனது படை பலத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த ஆயுத குவிப்பால் தவறான புரிந்துணர்வும் பதட்டமும் ஏற்படும் என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் எச்சரித்துள்ளது.
இது குறித்து கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு துணை உதவி செயலாளர் மைக்கேல் ஷிபர் கூறுகையில்,"சீனா ஆயுத குவிப்பு செய்வதால் பிராந்தியத்தில் ராணுவ சமச்சீரற்ற நிலை ஏற்படும். இதனால் தவறான புரிந்துணர்வுகளும் பதட்டமும் ஏற்படும்" என அவர் எச்சரித்துள்ளார்.
ராஜிய சாதக நிலையை பெற சீனா தனது ராணுவ அதிகரிப்பு திறனை பயன்படுத்தி கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு பசிபிக் பகுதியை பயன்படுத்த முடியாத படி சீனாவின் படை பலம் அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல சீனாவுக்கு அருகாமையில் உள்ள நாடுகளுக்கும் நெருக்கடியை தரும் என்றும் அமெரிக்கா தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடாபியை பிடித்து கொடுத்தால் 17 லட்சம் டொலர் பரிசு: புரட்சியாளர்கள் அறிவிப்பு.
லிபியாவில் புரட்சியாளர்கள் தலைநகர் திரிபோலியை கைப்பற்றினர். அவர்கள் கடாபியின் வளாகத்தை சோதனை செய்த போது கடாபியை காணவில்லை.
அவர் திரிபோலிக்குள்ளே தான் இருக்க வேண்டும் என புரட்சியாளர்கள் கருதுகின்றனர். கடாபியை உயிருடன் பிடித்து கொடுத்தாலோ, கொலை செய்தாலோ அதனை செய்தவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் புரட்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபியை பிடித்து கொடுப்பவர்களுக்கு 17 லட்சம் டொலர் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரை புரட்சியாளர்கள் முற்றுகையிட்ட போதும் கடாபி ராணுவத்தின் எதிர்ப்பு காணப்பட்டது.
கடாபியின் சொந்த இடம் கடலோர நகரமான சிர்தே ஆகும். அங்கு இப்போது கடாபி ராணுவத்தின் கட்டுப்பாடுதான் உள்ளது. கடாபி பிடிபடும் வரையிலும் அல்லது கொல்லப்படும் வரை அவரது ஆதரவாளர்கள் எதிர்த்து கொண்டு தான் இருப்பார்கள் என புரட்சியாளர்களின் தேசிய மாற்ற கவுன்சிலின் தலைவர் முஸ்தபா அப்டெல் ஜலீல் தெரிவித்தார்.
கடாபியை உயிருடனோ அல்லது கொன்று தருபவர்களுக்கு புரட்சி ஆதரவு தொழிலதிபர்கள் 17 லட்சம் டொலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு புரட்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
கடாபி ராணுவம் பிடித்து வைத்த பத்திரிக்கையாளர்கள் விடுதலை.
லிபியாவில் கடாபி ராணுவம் தங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என சில பிரிட்டன் பத்திரிகையாளர்களையும், பிரிட்டன் மக்களையும் பிடித்து திரிபோலி ஹொட்டலில் அடைத்து வைத்தது.
கடாபி வீரர்களால் கைது செய்யப்பட்டு இருந்த 35 பிரிட்டன் நபர்கள் திரிபோலியின் ரிக்சோஸ் ஹொட்டலில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தப்பி ஓடி விடாதபடி துப்பாக்கி எந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
தற்போது புரட்சியாளர்கள் லிபியா முழுவதையும் கைப்பற்றி உள்ள நிலையில் பிரிட்டனின் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களைவிட்டு கடாபி ராணுவத்தினர் விலகினர். பாதுகாப்புக்கு இருந்த கடாபி வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள்.
ஹொட்டலில் அடைக்கப்பட்டு இருந்த பிரிட்டன் மக்களை அவர்கள் காயப்படுத்தவில்லை. பிரிட்டன் மக்கள் இருந்த ஹொட்டலுக்கு கடாபியின் மகன்களில் ஒருவரான செய்ப் அல் இஸ்லாம் திடீரென இந்த வாரத்தில் தோன்றினார்.
கடாபி ராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் மோதல் தீவிரம் ஆன போது அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களை ரிக்சொஸ் ஹொட்டலில் கடாபி இருக்குமாறு நிர்பந்தித்தார்.
லிபியாவில் பிரான்ஸ் ராணுவ வீரர்களின் நடவடிக்கை தொடரும்: ஜனாதிபதி சர்கோசி உறுதி.
லிபியாவில் முகாமிட்டுள்ள நேட்டோ கூட்டுப்படைகளில் உள்ள பிரான்ஸ் ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி திட்டவட்டமாக தெரிவித்தார்.
லிபியாவில் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் கூட்டுபடையில் உள்ள பிரான்ஸ் லிபியாவில் தேவைப்படும் வரை இருக்கும் என சர்கோசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து லிபியா தேசிய மாற்ற கவுன்சில் தலைவர் முகமது ஜிப்ரிலுடன் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். லிபியாவில் புரட்சியாளர்கள் அரசை அங்கீகரித்த முதல் மேற்கத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.
லிபியாவில் ஜனநாயகம் மலர விரும்பிய உலக தலைவர்களின் கூட்டம் பாரிசில் செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெறுகிறது. அப்போது லிபியா மேம்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்படாத நிலையில் பிரான்ஸ் ராணுவம் நாடு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள் முகாமிட்டு பொது மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
லிபியா கர்னல் கடாபி நேற்று விடுத்த ஆவேச முழக்கத்தில் மரணம் வரை போராடுவேன் என கூறினார். அவர் தலைநகர் திரிபோலியை விட்டு வெளியேறி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
2012ஆம் ஆண்டு தென் கொரியா உலக கண்காட்சியில் கனடா பங்கேற்க மறுப்பு.
பல கோடி மக்கள் வந்து செல்லும் நிகழ்வாக உலக கண்காட்சி உள்ளது. வருகிற 2012ஆம் ஆண்டு தென் கொரியாவில் உலக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்கபோவது இல்லை என கனடா தெரிவித்துள்ளது.
பொருளாதார காரணங்களுக்காக கனடாவும் கிறீசும் உலக கண்காட்சியில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கடன் சுமையில் தத்தளிக்கும் நாடாக உள்ள கிறீஸ் உலக கண்காட்சியில் பங்கேற்காத போதும் கனடா பங்களிப்பு இல்லாததால் நிகழ்ச்சியை நடத்தும் தென் கொரியா வருத்தம் அடைந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு உலக கண்காட்சியின் போது 246 நாடுகள் கண்காட்சியில் கலந்து கொண்டன. அந்த கண்காட்சியின் போது 246 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டன. அந்த வர்த்தக கண்காட்சியின் போது 7 கோடியே 30 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
கனடா பங்கேற்கபோவது இல்லை என்ற தகவலை ஒட்டாவாவில் உள்ள தென் கொரிய தூதரகம் உறுதிப்படுத்தியது. கனடா பாரம்பரியத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தென் கொரிய அரசுக்கு உலக வர்த்தக கண்காட்சியில் கனடா பங்கேற்க முடியாத நிலை குறித்து ஜூலை 14ஆம் திகதி கடிதம் எழுதியுள்ளார்.
கொரிய தூதரகத்தின் செய்தித் தொடாபாளர் ஹியான் ஜன் கிம் கூறுகையில்,"கொரிய குடியரசு கனடாவை சமரசம் செய்து கண்காட்சியில் பங்கேற்க தீவிரமாக முயன்றது. இருப்பினும் உரிய பலன் கிடைக்கவில்லை" என்றார்.
மூர் எழுதியுள்ள கடிதத்தில் 2018ஆம் ஆண்டு தென் கொரியாவின் பியாங்க் சாங்க் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்து இருப்பது குறித்தும் கனடாவின் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்.
பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
லத்தீன் அமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகர் லிம்பா நகரிலிருந்து வடகிழக்கே 79 கி.மீ தொலைவில் உள்ள புக்காப்லா பகுதியில் நேற்று இரவு 12.45 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாடடு புவியியல் ஆய்வு ‌மையம்(ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவானது. பெரு நாட்டின் சில மாகாணங்களிலும் பக்கத்து நாடான பிரேசில் உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், சுமார் 5 முதல் 10 வினாடி வரை நீடித்தது எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் தொலைபேசி மற்றும் செல்போன் ‌சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கட்டடங்கள் குலுங்கியதால் பீதியில் மக்கள் வீட்டைவிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
உலகின் சக்தி வாய்ந்த பெண் அரசியல் தலைவராக மார்க்கெல் தெரிவு.
உலகின் சக்தி பெண் அரசியல் தலைவராக ‌ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்‌க்கெல் உள்ளார் என போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகையான போர்பஸ் உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ‌சக்திமிக்க பெண் தலைவர்கள் 100 பேரினை பட்டியலிட்டுள்ளது.
இதில் ஜேர்மன் நாட்டின் சான்சலராக உள்ள ஏஞ்சலா மார்க்கெல் உலகின் சக்திவாய்ந்த பெண் அரசியல் தலைவர் மட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே வெல்ல முடியாத சிறந்த பெண் தலைவர் என பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியின் பொருளாதரா வளர்ச்சி தற்போது சிறிது தள்ளாட்டத்தில் உள்ள போதும் இவரது அரசியல் நடவடிக்கைள் மற்றும் நாட்டில் இவருக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த 2005ம் ஆண்டிலிருந்து இவர் சான்சலராக பொறுப்பேற்றது முதல் ஐரோப்பிய யூனியனில் செல்வாக்குமிக்க பெண் தலைவராக உள்ளார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மூன்றாவது இடத்தில் பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபர் தில்மாரூசெப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இவர்களைத்தவிர இங்கிலாந்து ராணி எலிச‌பெத்(85), ஐ.எம்.எப் தலைவர் கிறிஸ்டினாலகார்டே, மிட்செல் ஒபாமா, 25 வயதான பிரபல பொப் பாடகி லேடிககா உள்ளிட்டோர் போர்பஸ் பத்தரிகையில் இடம் பிடித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF